ஞாயிறு, 29 ஜூன், 2008

தமிழ்

தமிழ்.. உலகோடு என்னை இணைத்துக்கொள்ள உதவிய முதல் பாலம். என்னை சேர்ந்த மனிதர்கள் தவிர நான் ஆழமாய் நேசிப்பதாய் உணர்ந்த முதல் உறவு.. ஆங்கிலம் வந்து அழுத்திய போதும், அதில் இருந்து பல சொற்களை தனக்குள் இழுத்துக் கொண்டு, டார்வினின் தத்துவத்தை எனக்கு உணர்த்திய ஓர் இயற்கை நிகழ்வு. இளம் வயதில் இருந்து உருவான முதல் காதல். செடிகளை பிடுங்கி நடும் போது ,அதனோடு சிறிது பழைய மண்ணையும் சேர்த்து நடுவது போல், நான் எத்தனை முறை இடம் பெயர்ந்தாலும் என் வேரோடு ஒட்டிக் கொண்டிருக்கும் முதல் ஈரம்.

கௌரவ டாக்டர் பட்டத்தைக் கூட மருத்துவர் என்று சொல்லிக் கொள்வது போல், திரைப் படம் மோசமாகவே இருந்தாலும் தலைப்பு தமிழில் தான் இருக்க வேண்டும் என்பது போல, அரசியல் கேலிக் கூத்தாக இதை நான் எழுதவில்லை . சபையில் இருந்து ஒதுக்கி வைக்கப் பட்டு, தன்மானக் காயங்களுடன் நின்று இருக்கும் என் தமிழுக்கு நான் போட முயற்சிக்கும் ஆறுதல் மருந்து. தாமதமாய் பேசும் குழந்தை போல, இணைய தளத்தில் என்னை இணைத்துக் கொள்ள இத்தனை நாளானாலும், என்னைப் பேச வைத்த தமிழைப் பற்றி என் முதல் கட்டுரை எழுதுவது, தூரத்தில் இருந்து மலர் தூவி மகிழ்ந்து போகும் ஒரு தொண்டனின் முயற்சி.

சிறு வயதின் மழலை மாறாதிருந்த போது " இங்கிலீஷ் நல்லா வரும், தமிழ் தான் தடுமாறும், இங்கிலீஷ் மீடியம் ல படிக்கிறான் ல " என்று புழங்காதிதம் அடையும் சராசரி நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் தான் நானும் . பயிற்சியைத் தாண்டி, பெருமை வேண்டி படித்த சொந்தக்காரர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதும் அற்ப கூட்டத்தில் நானும் ஒருவனாய் இருந்து இருக்கிறேன் .ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைக்கும் ஒரு சமுதாயத்தில் தன் மகனை சான்றோன் எனக் கேட்க விரும்பும் தாய் தானே எனக்கும்.

ஆங்கில மோகம் ..... இத்தனை ஆண்டுகளில், தமிழ் எழுதிப் படிக்க தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கிக் இருக்கிறோம். நகரங்களில் நாகரிகம் காக்க தமிழர் இருவர் பேசும் போது தமிழைத் தவிர்க்கும் நிலை... இங்கு யாரும் ஆங்கிலத்தில் பேசுவதில் ஆட்சேபனை இல்லை. தமிழில் பேசுவதை தரைக்குறைவாக நினைக்கும் நாகரிக சமுதாயம், அடிமை காலத்தின் வேதனையை சற்று நினைவு படுத்துகிறது . எனக்கு தெரிந்த வெள்ளைக் கார நண்பர்கள் கூட ஆங்கிலம் பேசாதவனை அற்பமாய் பார்ப்பதில்லை . ஆனால் இங்கே தமிழில் பேசுபவனை ,காலத்தில் பின் தங்கியவனாக பார்க்கும் கூட்டம் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது. நண்பரின் பெற்றோருக்கு இரு கரம் கூப்பி வணக்கம் சொன்னேன். தன்னை பழமைவாதிகள் என நான் நினைத்து விட்டதாக கருதி பதிலுக்கு ஹலோ என்று கை குலுக்கி சென்றார்கள். ' வணக்கம் ' சொல்பவன் இங்கே பழமைவாதி!!!! திரைப் படங்களில் கூட, 'அன்பே சிவம்' வெறும் வசனம் நிறைந்து மெதுவாக நகரும் படம் என்று சொல்லிய சில நண்பர் கூட்டம் சிக்ஸ்த் சென்ஸ்ஐ அபாரமாக பாராட்டினார்கள். நல்ல படைப்புக்கு கூட ஆங்கில கவர்ச்சி தேவைப் படுகிறது .

சில நூறு வருடங்களில் தமிழ் மொழிக்கு எழுத்து வடிவம் இருந்தது என்று யாரேனும் தோண்டித் தான் எடுக்க வேண்டும் . பள்ளிகளில் முதல் மொழியில் இருந்து இரண்டாம் மொழிக்கு தள்ளப் பட்டு , "ஜெர்மன் , பிரெஞ்சு படிச்சா மார்க்கும் வரும் அறிவும் வளரும் , தமிழ் படிச்சா என்ன வரும்?' " என்ற மதிப்பெண் கணக்குகளிலும் அவமானக் குறிப்புகளிலும் தலை தொங்கித்தான் கிடக்கிறது எங்கள் தங்கத் தமிழ். எதை செய்தாலும் பலன் கேட்கும் இந்த வியாபார சமுதாயத்தில் மொழி உணர்வுப் பற்றி பேசுவதில் எந்த பயனும் இல்லை. பிள்ளைகள் வந்து பாராத முதியோர் இல்ல வாசிககள் போல தான் தமிழ் புத்தகங்கள் தவங்கிடக்கின்றன. சிட்னி ஷெல்டன் , ஜெபிரி ஆர்ச்சர் மத்தியில் கல்கியும் சாண்டில்யனும் பாவம் தொலைந்துதான் போனார்கள். தனது கற்பனை வளங்களை தமிழ் வடிவத்தில் உலகுக்கு கொடுத்ததில் அவர்கள் தவறு தான் என்ன???

நான் வேற்று மொழிகளை எதிர்க்கவில்லை . நடைமுறை தேவைகளுக்கு வேறு மொழி கற்றாலும் , தமிழ் மொழியைத் திரும்பியாவது பாருங்கள். 'டாட் , மாம் ' என்று சொல்ல வெள்ளைக்கார குழந்தைகள் கோடி இருக்கின்றன. 'அப்பா, அம்மா' என்று அழகிய தமிழில் சொல்லுவதால் உங்கள் குழந்தைகள் அறிவில் ஒரு துளி கூட சிதறி விடாது. அப்படி ஒன்றும் தமிழ் நாட்டில் தமிழ் கற்பதோ, தமிழ் தெரிந்தவரிடம் தமிழில் பேசுவதோ பெரிய குற்றம் இல்லை. ஆங்கிலம் நிச்சயம் உங்களை கோபிக்காது.



காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...