ஞாயிறு, 16 நவம்பர், 2008

கண்ணீருடன்....

நாற்புற நீரும் காயாதிருக்கவோ எம்மக்கள் இங்கே கண்ணீர் நிரப்புகின்றனர். அனுமன் அன்று வைத்த தீயோ இன்றும் எரிகிறது... இருக்காது, சீதைகள் அல்லவா இங்கே எரிகின்றனர். உரிமைக்காக தொடங்கிய யுத்தம், உணவு உடை உயிர் என அனைத்தையும் தின்று கொண்டிருக்கிறது. காந்தி கூட இங்கே கத்தியோடு தான் வாழ்ந்திருக்க வேண்டும். நீர் சூழ்ந்த தீவில் ஈரப் பஞ்சம் . நூறு மாடி கட்டிடம் நொறுங்கிப் போனதை ஆண்டு தோறும் நினைவு கூருகிறோம். இங்கே இறந்தவருக்கு அஞ்சலி செலுத்த முனைந்தால் ஆண்டு முழுவதும் கருப்பு தினம் தான். துணை கண்டமே இதை குனிந்து பார்க்காத போது உலகம் இங்கே எட்டிப் பார்க்காததில் வேடிக்கை என்ன இருக்கிறது.

அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது , அதிலும் கூன் குருடு செவிடு இன்றி பிறப்பதரிது., இங்கே மரணம் வரை அப்படியே இருப்பதும் அரிது. இழந்த கைகளையும் கால்களையும் இணைத்துப் பார்த்தால் நிலவை கூட எட்டிப் பிடித்திருக்கலாம். தீப்பெட்டி கூட விலை உயர்ந்து போனதில், கற்பு மிகவும் மலிந்து போனது. எங்கள் பெண்களை தொட்டவன் கைகள் அடுப்பிற்கு விரகாகட்டும் , கவிஞன் ஒருவன் சொன்னது. அப்படி மட்டும் எரித்து இருந்தால் வானம் கூட கருகி போய் இருக்கும் . பிணங்கள் தானே குழியில் இருக்க வேண்டும். எங்கள் நண்பர் கூட்டம் பதுங்கு குழிகளில் உயிருள்ள பிணமாய் அல்லவா உறங்கி கொண்டிருக்கிறது.

நாட்கள் நகருவதை இறந்தவர் எண்ணிக்கை கொண்டா கணக்கிட வேண்டும்!! ஆங்கிலேய காலத்து அடிமைத்தனம் கூட இவ்வளவு வலித்து இருக்காது. இறந்த உடல் மண்ணிற்கு நல்ல உறமாகுமாம். இங்கே விவசாயம் செய்தால் உலகம் முழுவதற்கும் படியளக்கும் அளவு உரம் போட்டாயிற்று. உரமாகவும் உணர்வற்ற மரமாகவும் தானே எம் மக்கள் இங்கே வாழுகின்றனர். பணம் சேர்க்க வேறு நாடு தேடிப் போவதை தானே உலகம் அறியும். இங்கே உயிர் காக்க அல்லவா வேறிடம் போக வேண்டி உள்ளது. தாய் நாடு பார்த்து கை அசைத்து கிளம்பும் போது கனக்கும் இதயம் கடலிலே மூழ்க, கரை சேர்வது வெறும் உடல் தானே.

பேரிழப்பும் பெருந்துயரமும் இல்லாத வாசல்கள் உண்டா இங்கே?? பொறுமையாய் இருந்தாலும் போர்க்கொடி பிடித்தாலும் சாகும் வழியில் மட்டும் தான் வித்தியாசம், வலியில் இல்லை. வீட்டுக்குள் எரியாத விளக்குகள் எல்லோர் வயிற்றிலும் நன்றாகவே எரிகிறது. நிலவும் நட்சத்திரமும் போதாதேனவோ வெடிகுண்டு வீசி வெளிச்சம் காட்டுகின்றனர்?? இக்கரைக்கு அக்கரை எப்பொழுதும் இங்கே சிகப்புதான். கையில் புத்தகமும், தோளில் பையும் உதட்டில் புன்னகையும் இருக்க வேண்டிய பால்யத்தில் கையில் துப்பாக்கியும் தோளில் தன் இனத்துக்கான சுமையையும் வைத்துக் கொண்டு புன்னகை மறந்தவரின் சோகம் அறியுமா இந்த உலகம். ஒவ்வொரு விடியலிலும் தனது அஸ்தமனத்தையும் பார்க்கும் ஒரு போராளியின் வீரம் தெரியுமா இந்த உலகிற்கு?? உலகம் முழுதிலும் இருக்கும் என் மக்களை இணைக்கும் தொலைக்காட்சிகள் கூட இவர்கள் கண்ணீரை காசாக்க மட்டுமே பயன் படுத்துகின்றனர். அப்படி எதை கேட்டு இந்த போராட்டம்?? காலையில் எழுந்து, பகலிலே உழைத்து இரவிலே களைத்து குழந்தை குடும்பமென ஒரு இயல்பான வாழ்கையை. மனிதனாய் பிறந்த ஒருவன் சக மனிதனோடு சமமாய் வாழ நினைப்பது ஒரு பாவமா என்ன???

இத்தனை தலைகளை வெட்டி வீழ்த்தியதில் அதிகார வர்க்கம் சாதித்தது எதனை?? பிள்ளைகளை கொள்ளுவதை எந்த புத்தன் சொல்லிக் கொடுத்தான்?? வன்முறை வயலில் விஷம் வளர்ப்பதில் யாருக்குக் லாபம்?? நெருப்பு பூக்கள் யார் தலையை அலங்கரிக்க போகின்றன?? முடிவொன்று தாருங்கள்,, எங்கள் மழலைகள் மண்ணில் விளையாட முடிவொன்று தாருங்கள்...எங்கள் பெண்கள் இங்கே பாண்டி ஆடிட முடிவொன்று தாருங்கள். உயிர்க்கான ஓட்டம் மாற முடிவொன்று தாருங்கள். வெடி சத்தம் மட்டுமே நிறைந்த எங்கள் வானில் கொஞ்சம் வெளிச்சத்தையும் காண முடிவொன்று தாருங்கள். எங்கள் நிலங்களில் இரத்தம் பாய்ச்சியது போதும். இதோ இன்றைய இரவின் மரணத்தில் அமைதி இங்கே ஜனிக்குமோ!!!!

-ஒரு துளி கண்ணீருடன் நான்...

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...