மூன்று வருடத்திற்கு முன் வடுகபட்டியில் நடந்த விசேசத்திற்கு சைக்கிள் மிதித்து சென்றவருக்கு ஓரிரு வருடமாகத்தான் முதுமை காலுக்கு இறங்கி இருந்தது. தூங்க மூஞ்சி மடத்தில், " நம்ம உடம்பு நமக்கே பாரமாகி போச்சேப்பா..அப்புறம் மகன என்ன தப்பு சொல்றது? " என்று சொன்ன போது வந்த சிரிப்பில் தான் கண் கலங்கியது என்று மற்றவர் நினைத்ததாக மொக்கத்தேவர் நினைத்திருந்தார்.
தூங்க மூஞ்சி மடம் இது போன்ற சிரிப்பும் கண்ணீரும் கலந்து போன இடம். நாற்பதுகளில் தொலைந்து போன அரியணைகளை தூசு தட்டி அறுபதில் திரும்ப கொடுத்த இடம். என்றும் வற்றாத வராக நதியின் வடக்கே, கேரளத்தை குட்டியாய் வெட்டி எடுத்து வந்த தென்னந்தோப்புகளை தாண்டி, ரோடோரமாய் ஆழமாய் வேர் விட்டு வளர்ந்த புளிய மரத்தின் அடியில் அமைந்திருக்கும் சிறிய மடம். எந்நேரமும் சில முதியவர்கள் ( பேச்சு வழக்கில் பெருசுகள் ) உறங்கி கொண்டும், பேசிக் கொண்டும் இருப்பதால் ஊரோர்களால் சோம்பேறி புளிய மரம் என்றும் அழைக்க படும் இடம்.தூக்கம் மறந்த மனிதனுக்கு இளைப்பாறுதல் கூட சோம்பேறித் தனம் தான். மொக்கத்தேவர் போன்ற இரவல் முகவரியாளர்களுக்கான இலவச முகவரி "தூங்க மூஞ்சி மடம்".
மொக்கத்தேவர் பிறந்ததில் இருந்தது பெரியகுளம் தான். இளமையில் மேல் நோக்கி வளர்ந்த மீசையும், ஏர் பிடித்து வலு சேர்ந்த தோள்களும் கூடி கட்டபொம்மன் படத்தில் வரும் சிவாஜி கணேசன் போல் கம்பீரமான தோற்றம் கொண்டவர். இருபது வயதிலேயே விவசாயத்தில் கை நிறைய பணம் புரண்டதில் பெண் கொடுக்க மாமன்கள் மோதிக் கொண்டனர். அன்னத்தை கை பிடித்த பொது ஆணாய் பிறந்த ஆணவம் இல்லாமல் இல்லை தேவருக்கு. அன்னம் கண்ணகி தான். தேவர் மாதவிகளை கண்டு வந்த போதும் கணவனை தொழுத கண்ணகி.
அன்னம் இருந்த வரை தோளில் துண்டின்றி கிளம்பியதில்லை மொக்கத்தேவர். அந்த நாற்பது வருடங்களில் பெரிய தேவரும், பெரிய கிழவியும் மறைந்த நாட்களில் இரு வேளை மட்டுமே பட்டினி கிடந்ததாய் ஞாபகம். உயிருடன் இருக்கும் வரை காலை சுற்றி வரும் கன்றென்று தான் நினைத்திருந்தார். அன்னம் மறைந்த அன்று திண்ணையில் தனியாய் இருந்த போதுதான் தன்னை தூக்கிச் சுமந்த தேர் நொறுங்கிப் போனதை உணர்த்தார் மொக்கத்தேவர். அது நடந்து ஆறேழு வருடம் இருக்கும். அப்போது வழித்த முறுக்கு மீசை இன்னும் மேல் நோக்கி வளர வில்லை. மாமனார் மறைந்த போது தனக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்க வில்லை என்று அன்னத்தை அடித்து உதைத்ததில் அவளது காலெலும்பு கிட்டத்தட்ட முறிந்து விட்டிருந்தது. ஒரு காலில் விந்தி விந்தி வந்து அவள் சோறு போட்டது, பட்டினி கிடக்கும் அத்தனை வேளைகளிலும் நெறிஞ்சி முள்ளாய் புத்தியில் வலித்தது.
அன்னம் மறைந்து ஒரு வருடம் இருந்திருக்கும். தினமும் காலையில் பெரிய கோயில் போய் வருவது அப்போது பழக்கம் ஆகி இருந்தது. மனைவி போன பிறகு அழுவதற்கு தோல் கொடுக்கும் பாக்கியம் தெய்வத்திற்கு. நாற்பது ஐம்பது வருட விவசாயத்தில் வலுவேறி இருந்த கால்களுக்கு கைத்தடி தேவைப் படவில்லை. ஆனால் இதே ரோட்டில் சிங்கம் போல் நடந்து போன பல வருட நினைவுகள் மனதை தடுமாறத்தான் செய்தன. வெயிலின் வேகம் இதுவரை உரைத்ததில்லை தேவருக்கு. ஒரு சோடா குடித்தால் தேறும் என்ற எண்ணம் சட்டைப் பையில் தன்னை விட நைந்து போன ஐந்து ருபாய் நோட்டை பார்த்ததும் மறைந்து போனது. கால்களில் லேசான நடுக்கம் தெரிந்தது. தன் மனைவி நொண்டி நொண்டி நடந்தது நினைவுக்கு வர நெஞ்சு கனத்தது. கடலை விட ஒரு கண்ணீர் துளி கனமானதென அன்று தான் தேவருக்கு விளங்கியது. கண்கள் பசி நிறைந்த பிச்சைக் காரனை போல் எதையோ யாசித்துக் கிடந்தன. தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் போல், கர்ணன் வலி தீர்த்த கண்ணன் போல் தூங்க மூசி மரம் கண்களில் பட்டது. அன்று இளைப்பாறிய பத்து நிமிடங்கள், பத்து மாதம் கருவில் கிடைத்ததை மீட்டுத் தந்த பத்து நிமிடங்கள். தொப்புள் கோடிக்கும், தாலிக் கோடிக்கும் அடுத்து உயிரைத் தொட்டு வருடிய ஒரு உறவு கிடைத்தது அன்றுதான்.
..... தொடரும் ....
..... தொடரும் ....