ஞாயிறு, 10 அக்டோபர், 2010

தூங்க மூஞ்சி மடம் - பாகம் இரண்டு

அமைதி. இது வரை உணர்ந்திடாத ஒரு அமைதி மனதில். மூடி கிடந்த குகையில் புதையலாய் சிறு புன்னகை பூக்க தொடங்கியது. வெகு நாட்கள் பிறகு மனிதர்கள் பேசியது காதில் விழுந்தது. கைத் தடிகள் , கறை படிந்த கரை வேட்டிகள், தன்னை போலவே நரையில் உயிரை பிடித்துக் கொண்டிருக்கும் சிலர். சொந்தமாய் முதல் வீடு கட்டிய போது கூட இவ்வளவு சொந்தமாய் உணரவில்லை தேவர் . "என்னாப்பா, முடியலையா? இந்தா, கொஞ்சம் இந்த சில்லுத் தன்னியக் குடி, வெயிலுக்கு நல்லா இருக்கும்." குரல் வந்த திசையில் தெரிந்தது வெறும் தண்ணீர் டம்ளர் மட்டும் தான். சிறு பிராயத்தில் கூட நிறைய நண்பர்கள் இருந்ததில்லை தேவருக்கு. விளையாட்டில் கூட கட்டளை இடும் தலைவனாகவே இருந்து பழகியவர். நண்பன் சொல்லுக்கு அடி பணியும் சுகம் அறிந்ததில்லை இதற்க்கு முன்னர். ஒரு கோப்பை தண்ணீரில் உலகின் அத்தனை சுகங்களும் அடங்கி உள்ளது தாகத்தின் போது தான் தெரியும். சக பெரியவர் ஒருவர் மண்பானையில் இருந்து மொந்து கொடுத்த திரவத்தை எந்த மறுப்பும் இன்றி அமிர்தம் போல் வாங்கி குடித்தார் தேவர். மீசை விறைப்பாய் இருந்த காலத்தில் சாதி பார்த்துத் தான் அன்னந்தண்ணி புலங்குவார். இந்த ஒரு கோப்பை தண்ணீரில் இருந்து தான் சமத்துவத்திற்கு தயார் ஆனார் தேவர். வந்தமரும் பறவையின் சாதி கேட்பதில்லை எந்த மரமும். தூங்க மூஞ்சி மடம் கூட ஒரு சமத்துவ மரம் தான்.  பசிப் பிணி கூட பணமிருப்பவரிடம் பேதம் பார்பதுண்டு . இந்த மடத்தில் வேதம் சொல்லித் தந்த எந்த பேதத்திற்கும் இடமில்லை.

கண்ணின் மூட்டம் மறைந்து தெளிவாய் கொஞ்கம் வெளிச்சம் தெரிந்தது. அன்னத்தின் மறைவன்று கண்களில் அணைந்து போன சுடர் லேசாய் துளிர் விட தொடங்கியது. மெதுவாய் எழுந்து நடக்க முனைந்தார். "நீங்க நம்ம துரராசு மச்சினர்தான? உங்கள நான் மேக்கால பாத்திருக்கேன் " என்று ஒருவர் சொன்னதை கேட்டு துண்டை கீழே போட்டு அமர்ந்தார். முடிந்து விட்டது என்று நினைத்த வாழ்கையின் முற்றுப்புள்ளி மறைய தொடங்கியது.

அன்றிலிருந்து பகற்பொழுதுகள் தூங்க மூஞ்சி மடத்தில் இனிதே கழிந்தன. புதிய நட்புகள் புதிய பாடங்கள் என்று நாட்கள் நகர்ந்தன . இப்பொழுதெல்லாம் மதிய உணவுக்கு கூட வீட்டிற்கு செல்வதில்லை தேவர். வீட்டில் இதை யாரும் கவனித்தது போல கூட தெரியவில்லை. எந்நேரமும் அமைதியாய் வீசும் மெல்லிய காற்று, துக்கம் துடைத்து தூக்கம் கொடுக்கும் காற்று. " எங்காத்தா என்ன தொட்டி கட்டி இப்படித்தேன் தூங்க வச்சிருக்கும் ", பல நேரங்களில் தேவர் இப்படி நினைத்ததுண்டு.  பல புதிய விளையாட்டுக்கள் கூட கற்றுக் கொண்டார் தேவர். "ஆடுபுலி ஆட்டம் தெரியுமா ?" என்று நண்பர் ஒருவர் கேட்டார். "ஏம்ப்பா, நானே ஆடிப் போய்த்தான் இருக்குறேன். என்னத்த நான் ஆடுபுலி ஆட்டம் ஆடறது" என்று சொல்லி சிரித்த போது, தோளில் துண்டு போட்ட போதிலிருந்து முகத்தில் படர்ந்திருந்த அந்த இறுக்கம் எத்தனை அர்த்தமற்றது என்று விளங்கியது.வீராப்பாய் வாழ்ந்த வாழ்கை வெறுமையாய் தெரிந்தது. ஹாஸ்யம் என்பது தேவருக்கு புதிதாய் இருந்தது, பிடித்தாய் இருந்தது. எத்தனை துயரத்தையும் காலம் மறக்கடிக்கும் என்று சொல்லுவார்கள். தூங்க மூஞ்சி மடமும் கூட காலத்தின் தோழன்தான்.

தூங்க மூஞ்சி மடம் பரிச்சயமான முதல், நாட்களுக்கு புதியதாய் சக்கரம் முளைத்தது போல் இருந்தது தேவருக்கு. அன்றும் வழக்கம் போல் சேவலுக்காக காத்திருந்து விழித்தது விடியல். மருமகள் ஊற்றி வைத்த  கஞ்சியை குடித்துவிட்டு மடி தேடி ஓடும் கன்று போல் உற்சாகமாய் கிளம்பினார் தேவர். வழக்கமாக ஆடுபுலி ஆட்டத்தில் தன்னை  எளிதில் வென்று விடும் சுடலைமுத்துவை இன்று எப்படியும் வென்று விட வேண்டும் என்று நினைத்து கொண்டே நடந்தார். ( சுடலைமுத்து அரசாங்க அலுவலகம் ஒன்றில் பியூனாய் வேலை பார்த்தவர். சொற்ப பென்ஷன் வருவதால் இன்னும் ரேஷன் கார்டில் இடம் பிடித்திருக்கும் மானஸ்தர் ). சற்று தூரத்திலேயே மடத்திற்கு அருகில் ஏதோ அமளி தெரிந்தது. திடீரென்று தன்னையும் அறியாது இதயம் வேகமாய் துடிப்பதை தேவர் கவனிக்கவில்லை. வேகமாய் நடக்க தொடங்கியவருக்கு கண்ணில் பட்டது ஈட்டியால் குத்தியது போல் இருந்தது."கண்களில் ஏதும் பழுது இருக்குமோ!!" என்று மனம் சொல்லியது.

நெருங்க நெருங்க கண்ணில் ஏன் பழுதில்லை என்று முதன் முறையாக தேவர் கலங்கினார். ஆஜானுபாஹுவாக மடத்தின் முன்னால் நின்று இருந்தது ஒரு புல்ல்டோசர்.  ஓரிரு கார்களும் பக்கத்தில் சில வெள்ளை சட்டைகளும் தெளிவாய் தெரிந்தது. இப்போது நிச்சயாமாய் ஏதோ விபரீதம் என்று மட்டும் மண்டைக்குள் மணி அடித்தது. தவறாய் எதுவும் இருக்காது என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு அருகில் விரைந்தார் தேவர். வெள்ளை சட்டை ஒரு பெரியவரிடம் உரைத்து பேசிக் கொண்டிருந்தது. சுடலைமுத்துவும் கண் கலங்கி நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் தேவர் சென்றதும், "ஏதோ வக்கீல் ரங்கராஜனோட இடமாம் இது. அவுக சும்மா அவுங்க சாதி சங்கத்துக்கு கொடுத்த மடமாம். இது நம்மள மாதிரி சோம்பேறிகள் எல்லாம் சேர்ந்து தூங்கி பொழுத களிக்கிற இடமா ஆயிடுச்சாம் . அதனால இப்ப இத இடிச்சுபுட்டு ஏதோ கல்யாண மண்டபம் கட்ட போறாகளாம். பத்திரம் எல்லாம் கொண்டு வந்து பேசிட்டு இருக்காங்க ". இதை கேட்டதும் திடீரென்று நாவில் ஈரம் மறைந்து போனது. அதே ஈரம் கண்களில் ஒட்டிக் கொண்டது. தலையில் யாரோ சுத்தியால் அடித்தது போல் ஒரு வலி. செவிகள் வேலை நிறுத்தம் செய்து விட்டன. கண்கள் இருட்டியது. காலுக்கு கீழே ஏதோ பூகம்பம் வந்தது போல இருந்தது. நெஞ்சாங்கூட்டை பிய்த்துக் கொண்டு வருவது போல் இதயம் கனத்தது. உயிரின் பாரம் மீண்டும் தெரிந்தது. அப்படியே ஓரமாய் உட்கார்ந்தார் தேவர். முதல் முறை தூங்க மூஞ்சி மடத்துக்குள் நுழைந்த போது இருந்ததை விட நூறு மடங்கு அயர்வு. கண்கள் அனிச்சையாய் மண்பானையை தேடியது. டம்ளர் மட்டும் அங்கே விழுந்து கிடக்க , சற்று தூரத்தில் மண்பானை சல்லி சல்லியாய் தெரிந்தது. போதும், இந்த பூமி இதற்க்கு மேல் சுற்ற வேண்டாம். வானம் இடிந்து தலையில் விழுந்தால் என்ன என்பது போல்தான் இருந்தது. "இடிக்க போகிறார்களே!!!!" - எல்லா பக்கமும் இது மட்டும்தான் கேட்டது. மடத்தை இடித்தால் நொறுங்க போவது ஆயிரம் சிரிப்புகள் அல்லவா !! தாலாட்டு, தூக்கம் என்ற வார்த்தைகள் தாய்மொழியில் இருந்து தவறி அல்லவா போய் விடும்!!! உடலின் எல்லா பக்கமும் வேதனை. அப்படியே எழுந்து எங்கோ நடக்க தொடங்கினார் தேவர். சற்று தூரம் நடந்ததும் "ன்னங்" என்று கடப்பாரை தூணோடு மோதும் ஒரு சத்தம் கேட்டது. இதை விட கொடுமையான மரண ஓலம் இதுவரை தேவர் கேட்டதில்லை. அதற்கு பிறகு அவருக்கு எதுவும் தெரியவில்லை , எதுவும் புரியவில்லை. எல்லாம் ஒரே இருளாய் இருந்தது. எப்படி நடந்தார் என்று கூட தெரிய வில்லை. தானாக வீட்டுக்கு வந்து விட்டார். "என்னாடி இது அதிசயம். மேய போன மாடு உடனே பட்டிக்கு திரும்பிடுச்சு", மருமகள் சொன்னது எப்படி கேட்டிருக்கும் தேவருக்கு . திண்ணையில் வந்து அமர்ந்தவர் எதையோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார். அன்னத்தை பாடையில் வைத்திருந்தபோது ஏற்பட்ட அதே வலி, அதே வெறுமை. அவரும் அறியாது, கண்களின் ஓரம் ஒரு நதி பிரவாகம் எடுக்க தொடங்கி இருந்தது. மெல்ல திண்ணையில் சாய்ந்தார் தேவர். கண்கள் மெதுவாக மூடியது. மீண்டும் அதைத் திறக்க எந்த ஆசையும் இருநததாய் தெரிய வில்லை !!!!!!

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...