இரவிற்கும் இதயத்திற்க்கும் ஒரு நெருங்கிய ஒற்றுமை உள்ளது. மனதின் ஆர்ப்பரிப்புகள் எல்லாமே இதயம் வெளி சொல்வதில்லை. பகலின் அத்தனை அநர்த்தனங்களின் நர்த்தனங்களை தனக்குள் புதைத்துக் கொண்டு மௌனத்தின் அடையாளமாய் அலட்டிக் கொள்ளாதது இரவு. சில தினங்களாய் தமிழகத்தில், பிறந்த குழந்தை போல இரவுகளும் விழித்துக்கொண்டு சத்தமிட்டுக் கொண்டிருந்தன. மாநில அரசு, மறைந்த முதல்வரின் பணக்கார அனாதைப் பிள்ளையாய் தவித்ததில், அதை தன் வசப் படுத்த பல பக்கங்களில் இருந்தும் போட்டி நிலவியது. நெருக்கமான தோழியின் கூட்டம், நம்பகமான தொண்டரின் கூட்டம், தமையன் மகள் கூட்டம் என எங்கெங்கிருந்தோ பருந்துகளும் , வல்லாருகளும் தமிழகத்தின் மீது வட்டமிட்டு, ஒன்றை ஓன்று அடித்துக் கொண்டிருந்தன. தினமும் திருப்பங்கள், மக்கள் பிரதிநிதிகளின் முட்டாள்தன உரைகள், அறிவழிந்த மக்களின் இயலாமை கோபங்கள், கட்சி சார்ந்த ஊடகங்கள் உண்மையின் மீது நடத்திய வண்புணர்ச்சிகள், இளைய ரத்தத்தின் போர் கொடிகள், முதிர்வற்ற முதுமையாய் வலைத்தளங்களின் புலம்பல்கள், ஆறுதலாய் நையாண்டிகள், பால் மறவா குழந்தை கூட அரசியல் பேசும் காணொளிகள், என தினமும் உணர்வுகள் நாட்களை இயக்கிக் கொண்டிருந்தன. கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த மக்களின் உணர்ச்சிகள் உச்சத்தை தொட்டது, மக்கள் பிரதிநிதிகள் பத்து நாளாய் உல்லாச விடுதியில் இருந்து விட்டு வந்து, மக்களின் எண்ணத்திற்கு மாறாக சட்டசபையில் நம்பிக்கை வாக்களித்தது போதுதான். அலையில்லா கடல் கொந்தளிக்கும் போது நிலம் அழியும். குனிந்தே கிடந்த சராசரி மனிதனை கூட இந்த ஏமாற்றமும், இயலாமையும் கடும் கோபம் கொள்ள செய்தது. மக்களாட்சி கேலிக்கூத்தாய், அரசு மக்களுக்கு எதிரான ஆயுதமாய் மாறி இருந்ததை கண்டு, ஊமை பொது சனம் உள்ளெ பொருமிக் கொண்டிருந்தது. பகல் நேரங்கள் பரபரப்பாகவும், இரவுகள் அடுத்த பகலுக்கான திட்டமிடுதலிலும், சில நாட்களாய் தமிழகம் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது.
அனால் இன்று நள்ளிரவு புதிதாய் ஒரு புயல் கிளம்பியது. ஊர் அடங்கிய நிலையில் , குறுஞ்செய்திகளும் , வாட்ஸாப் மற்றும் ஃபேஸ்புக் பதிவுகளும் கைப்பேசிகளில் விடாது அறிவிப்பு மணியை எழுப்பி மக்களை தூக்கத்தில் இருந்து உசுப்பி விட்டுக்கொண்டிருந்தன. உண்மையா பொய்யா என்று தெரியாது வந்த செய்திகள் அப்படியே முன்னூட்டம் செய்யப் பட்டன
. தெருக்களில் காக்கிகள் அதிகமாக தென்பட்டனர். தீயணைப்பு மருத்துவ வாகனங்கள் குறுஞ்சங்கு ஒலியோடு தயார் நிலையில் இருந்தன. சட்டசபை உறுப்பினர்கள் வீடுகள் எல்லாம் இருள் விலக்கி வெளிச்சத்திற்கு வந்தன. அதுவரை மக்கள் முகத்தில் மட்டுமே இருந்த பதட்டம், அவர்கள் பிரதிநிதிகள் குடும்பங்களிலும் பற்றிக் கொண்டது. அனைத்துக் கட்சி தலைமையகங்களும் இரவிலும் உயிரூட்டப்பட்டன. தொலைப்பேசிகள் அலறிக்கொண்டிருந்தன. ஆளுங்கட்சி தொலைக்காட்சி சமையல் சமையல் நிகழ்ச்சியையும் , எதிர்க்கட்சி தொலைக்காட்சி 'இது மக்களின் எழுச்சியா' என்றும் தங்கள் வேசித்தனத்தை எப்போதும் போல் தொடர்ந்து கொண்டிருந்தன.
ஆளுங்கட்சி அலுவலகத்தில் இருந்து, முக்கிய பிரமுகர்கள் அனைவரும் உடனடியாக வரும் படி ஆணை பறந்தது. பொம்மை முதல்வர் முருகசாமியும், கட்சியை தன் கையகப்படுத்தி இருந்த சசிகரனும், முன்னிரவின் போதை முழுதாய் தெளியும் முன்பே களைந்து போக, பதட்டத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். சசிகரனின் அர்ச்னைகளை தலை குனிந்து எந்த எதிர்ப்புமின்றி வாங்கி கொண்டிருந்தார் முருகசாமி.
"ஏன்யா, இது எவ்ளோ உண்மைன்னு கூட தெரியாட்டி என்னய்யா நாம ஆளுங்கட்சி , நீ CM வேற",
"தலைவரே, இது பொய் மாதிரி தெரியல, இன்னும் 5 நிமிசத்துக்குள்ள தெரிஞ்சிடும்"
"இது பொய் மாதிரி தெரிலன்னு சொல்ல வெக்கமா இல்லையா, நீ தானயா போலீஸ் மந்திரி , அத்தன பேர் வீட்டுலயும் பாதுகாப்பு போட சொன்னியா இல்லையா ". மான அவமானங்கள் பார்க்காத அரசியல் வாழ்க்கையில் ஊறிப் போன முருகனுக்கு அது பெரியதாய் தெரியவில்லை.
"நான் வெறும் கை எழுத்து தான தலைவரே போட்டேன். நீங்க தான ஏற்பாடு எல்லாம் பண்ணீங்க". நிதானம் தவறாத கட்டுப்பாடு.
"அப்புறம் எப்புடி யா நடந்தது. இது உண்மையா இருந்து, பயத்துல நம்ம பக்கம் இருந்து பத்து பேரு வெளில போய்ட்டா என்னயா பண்றது?" எல்லாம் முடிந்தது என்று நிம்மதியா இருக்கும் வேலையில் புதிதாய் முதலில் இருந்து மீண்டும் கதை தொடங்கியது போல் இருந்தது.
"எப்புடி போவானுங்க தலைவரே, நீங்க மறுபடியும் அந்த ஹோட்டல்ல போட்டு எல்லாத்தையும் அடச்சிடா மாட்டிங்களா ?", மிட்டாய் கேக்கும் பிள்ளை போல பழையதை நினைத்து ஆசையாய் கேட்டார் முருகன்.
"வாயா வா, உங்களுக்கு நாலு வருஷமும் ஊத்தி கொடுக்கவும் கூட்டி கொடுக்கவுமா நாங்க ஆட்சி நடத்துறோம்?" .சில நேரத்தில் கோபம் குழந்தை போல் உண்மையை பேசி விடுகிறது..
"அவனுங்க வீடியோ எல்லாம் இருக்கு, எவன் போறான்னு பாத்துடலாம் தலைவரே"..
"யோவ், அது வெறும் மிரட்டல் கு தான் யா, இவ்ளோ கூட யோசிக்க மாட்டயா? அதான் உன்ன அத்தம்மா CM ஆக்கி இருக்காங்க... அந்த வீடியோ எல்லாம் வெளில வந்தது, நமக்கு தான்யா மொத பிரச்சன."
காவல் ஆணையரிடம் இருந்து வந்த அழைப்பை சத்தமின்றி துண்டித்துக் கொண்டே, முருகன் வசை வாங்குவதில் ஆர்வமாய் இருந்தார். "நானுந்தாங்க பதட்டமா இருக்கேன் . என்ன பண்றதுனு அத்தம்மா கிட்ட கேட்டுட்டு வந்துடுவோமா?"
"கரெக்ட் யா, கேட்டுட்டு வரதுக்குள்ள இங்க எல்லாம் நாசமா போய்டும், இப்போ என்ன பண்றதுனு யோசிக்காம, ஆந்திரா ஜெயில் வரைக்கும் போயிட்டு வரலாம்னு சொல்லுற. என்ன நடக்குதுன்னு மொதல்ல கேட்டியா ".
"IG போன் பண்ணிட்டே தான் இருக்கார் தலைவரே"
"அத ஏன்யா எடுக்கல? எடுத்து தொலைக்க வேண்டியது தான "
"இல்லைங்க, அத்தம்மா பேசிட்டு இருக்கும் போது குறுக்க போன் எடுத்ததுக்கு தான் அந்த கொளத்தூர் காரனுக்கு குறுக்க ஒடச்சீங்க. அதான்". பவியத்தின் உச்சம் என தன்னை காட்டிக் கொள்வதில் உறுதியாய் இருந்த முருகன் தன்னுடைய முயற்சியில் சற்றும் மனம் தளரவில்லை.
"உன்ன எல்லாம் வச்சுக்கிட்டு , எரும மாடு தான் மேய்க்கணும். போன போட்டு கேளுய்யா முதல.. speaker ல போடு "
இதற்குத்தானே ஆசை பட்டாய் முருகா! ஏவலை ஏற்றதும் கைபேசி கடமையை செய்தது.
மறுமுனையில், "சார் , கன்பார்ம் பண்ணிட்டேன் . MP அப்பாதுரை செத்துட்டார். ஆனா இது கொலைன்னு மக்கள் பேசிக்கிறது வதந்தி மாதிரி தான் தெரியுது சார்."
"அதென்னய்யா வதந்தி மாதிரி. ஒருத்தன் எப்படி செத்தான் னு கூட சொல்ல முடியாதா?"
ஒரு மாநிலத்தின் முதல்வர் மரணமே எப்படி நடந்தது என்று மக்களுக்கோ, காவல் துறைக்கோ அல்லது நாட்டில் இருக்கும் அத்தனை ரகசிய பாதுகாப்பு அமைப்புகளுக்கோ தெரியாமல் போகும் இந்த காலத்தில், பார்த்ததும் ஒருவர் மரணம் கொலையா இயற்கையா என்பதை சொல்ல முடியாதது அவ்வளவு பெரிய குற்றமாக தெரியவில்லை.
"அவுங்க வீட்ல நெஞ்சு வலி னு தான் சொல்றாங்க. எந்த விதமான அசால்ட்டும் இல்ல, வெளிப்படையா பாய்சனிங்கோட அடையாளம் ஏதும் தெரில. ஆனா போஸ்ட்-மார்ட்டம் பண்ணாம கண்பார்ம் பண்ண முடியாது சார்."
"போஸ்ட் மார்ட்டம் ஆ ..பாடிய ஆஸ்பத்திரிக்கு எடுத்து போயாச்சா?"
"உங்க கிட்ட கேட்டுட்டு பண்ணிடலாம்னு வெயிட் பண்றோம் சார்".
அதே நேரத்தில் கட்சிக்காரர்களால் செல்லமாக 'மாமா' என்றும், பொது மக்களால் "சாக்கடை எல்லாம் சாணக்கியத்தனம் பண்ணுது " என்றும் வாழ்த்தப்படுகின்ற அத்தம்மாவின் கணவர் 'தில்லை' உள்ளே நுழைந்தார். தொலைபேசி உரையாடலை கேட்டுக் கொண்டே வந்தவர்,
"ஒரு FIR பைல் பண்ணி, இது கொலை, இத நாங்க தான் பண்ணோம்னு எழுதி எங்கள உள்ள தூக்கி போட்டுடு " என்றார் கோபமாக.
"என்ன மாமா சொல்றீங்க"
"பின்ன என்னடா..நம்ம ஆளு ஒருத்தன் சாவுல சந்தேகம் இருக்குனு நாமளே ஒத்துக்கிட்டு போஸ்ட் மார்ட்டம் வேற பண்ணி , இது இயற்கையான சாவு இல்லைனு தெரிஞ்சா என்ன ஆகும்?"
முருகசாமி அவசரமாய், "எதிரணி மேல பழிய போட்டு மக்கள் கிட்ட அனுதாபம் வாங்கிடலாம் பெரிய தலைவரே".. சசிகரனுக்கு முன்னால் இன்னொருவரை பெரிய தலைவர் என்று அவசர பட்டு சொல்லி விட்டதுக்கு உள்ளுக்குளே தன்னைதிட்டி க் கொண்டாலும் முகத்தில் அதை காட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சி செய்து தோற்றுக் கொண்டிருந்தார். சசிகரன் முகத்தில் சின்ன சுருக்கமும், தில்லை முகத்தில் சின்ன சிரிப்பும் வினாடி பொழுதில் வந்து மறைந்தது. இருந்தாலும் இறுக்கத்தை குறைக்காமல் தில்லை தொடர்ந்தார். "உன்ன மாதிரி பழைய மாங்கா எல்லாம் இதுக்கு அரசியலுக்கு வரீங்க". என்னதான் அவமானங்களை சகித்துக் கொண்டாலும்,அதை அரசியல்வாதிகள் மறப்பதில்லை. முருகசாமியை ஒவ்வொரு முறையும் தூக்கி விட்டவர்கள் அவரை இப்படி எல்லாம் பேசி இருக்கிறார்கள். இன்று அவர்களில் பல பேர் அடையாளம் தெரியாமல் மறைந்து விட்டனர், சிலர் அவருக்கு அடிபணியும் இடத்தில் இருக்கின்றனர். மனதுக்குள்ளே இந்த அவமானங்களை குறித்துக் கொண்டு வெளியே ஒன்றும் காட்டாமல் பேசுவதில் முருகசாமிக்கு எந்த சிரமமும் இருந்ததில்லை.
"செத்தவனுக்கோ , நமக்கோ ஜனங்க கிட்டவும் சரி,கட்சிக்குள்ளவும் சரி , ரொம்ப நல்ல பேரா இருக்கு. கொலைன்னு சொன்னா, கொலகாரனுக்கு கோவில் கட்டி கொண்டாடிட்டு, நம்மல போட்டு தள்ள பத்து பேர் கெளம்பிடுவான். நமக்கு எவனும் உச்சு கொட்ட போறதில்ல."
"மாமா ,மறுபடியும் ஒரு கொலைய மறைக்க போறோமா?"
"யோவ் போலீஸ், லைன கட் பண்ணு,நாங்க 5 நிமிஷத்துல கூப்பிடறோம். அது வரைக்கும் உங்க ஆளுங்கள வச்சு அப்பாதுர வீட்டுக்கு எக்ஸ்ட்ரா செக்கியூரிட்டி போட்டுடுங்க. அவங்க வீட்ல இருந்து வெளில யாருக்கும் எந்த நியூஸ் உம் போக கூடாது. பத்திரிக்க காரங்க யாரும் போகாம பாத்துக்கோங்க. வெளில தெரிஞ்சா , சட்ட ஒழுங்கு பிரச்சன வந்துடும். இன்னும் வேற MLA யாருக்கும் எதாவது ஆச்சுன்னா அதுக்கு நீயும் பதில் சொல்லவேண்டி வரும். சந்தேகம், போஸ்ட் மார்ட்டம், போலீஸ் கேஸ் னு எந்த பிரச்னையும் வர கூடாது. அங்க முரளிதரன் கிட்ட பொறுப்பெல்லாம் குடுத்துடுங்க. வேற யாரையும் இன்வால்வ் பண்ணக் கூடாது. எங்க கிட்ட கேக்காம எந்த முடிவும் எடுக்காதீங்க. "
கண்டவனெல்லாம் ஒரு நிலவரத்தை எப்படி கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதில் கை தேர்ந்த தனக்கு கட்டளை இடுவதை நொந்து கொண்டு, இடப்பட்ட வேலையை செய்ய தொடங்கினார். காவல் துறையின் எல்லைகளை நன்கு அறிந்தவர் அவர்.
தொடர்பு துண்டிக்க பட்டதும், " ஏன்டா, உள்ளுக்குள்ள கூட பேச கூடாதத போன் ல உளர்ர பாரு. இன்னொரு கொலைன்னு யாராச்சும் சொல்லுவாங்களா ". இப்போது அதிகாரம் இருந்தாலும், காவல் துறையை எங்கே வைக்க வேண்டும் என்பது அவசியம். இல்லா விட்டால் பின்னால் சரியான நேரத்தில் சட்டம் எப்படி பாயும் என்பது தெரியாது என்பது தில்லை இத்தனை வருடத்தில் கற்று கொண்ட பாடங்களில் ஒன்று. இதை எல்லாம் தனக்கு தொடர்பில்லாதது போல் பார்த்து கொண்டிருந்த முதல்வரிடம் சசிகரன் எச்சரித்தான். "முருகா , இங்க பேசுற எதுவும் வெளில போக கூடாது."
"தலைவரே, நீங்க எல்லாம் என்ன சொல்றீங்களோ அத தவிர வேற எதுவும் நடக்காது."
"மாமா, இப்போ என்ன பண்றது"
"அப்பாதுர நம்ம பழைய முதல்வர் செத்ததுல இருந்தே சோர்ந்து தான் இருந்தாப்ல, இப்போ நெஞ்சு வலி வந்து செத்து போய்ட்டார். இதுதான் எல்லாரும் சொல்லணும்"
கட்சிக்குள் தனக்கு நிகரான பெரிய தலைகளில் ஒன்று குறைந்தது உள்ளுக்குள் முருகசாமிக்கு கொஞ்சம் சந்தோசமாய் தான் இருந்தது.
"மருமகனே , இப்போ இருக்குற நெலமைல, இது கொலையோ இல்லையோ, ஆனா, கொலையா இருக்குமான்னு பயம் வந்துட்டா உயிர் பயத்துல நம்ம ஆளுங்க ஒரு அஞ்சு பேராவது போயிடுவான். நம்ம ஆட்சியே கயித்து மேல தான் நடத்துறோம்"
"ஆனா, இது கொலைனா நாம அத செஞ்சவன கண்டு பிடிச்சே ஆகணும் மாமா, இல்லாட்டி இன்னும் நாம நிம்மதியா இருக்க முடியாது."
"கேஸே இல்லாம அத நாம விசாரிச்சிக்கலாம். அப்புடி எல்லாம் அரசியல் வாதிங்க மேல எவனும் கைய வைக்க மாட்டான். எதிரணி எதிர் கட்சி எல்லாம் சண்ட போட்டுக்குவோம், ஆனா எல்லாரும் நிம்மதியா பணம் பண்ணனும்னா இந்த மாதிரி கட்சிக்காரங்கல கொல பண்ற அளவுக்கு போக கூடாதுன்னு எல்லாருக்கும் தெரியும். அந்தாளு எல்லாம் அந்த காலத்துல இருந்து கண்ட கண்ட சரக்கு குடிச்சவன், லிவர் வெந்தே செத்து போய் இருப்பான். இப்போ அரசாங்கத்த கண்ட்ரோல் ல வச்சுக்கணும். அதுதான் முக்கியம். எதுக்கும் போன தடவ மாதிரியே நம்ம ஆளுங்கள அடக்கி கட்டுப்பாட்டுல வச்சுக்கிட்டா நல்லது . அந்த விஜயகுமார உடனே வர சொல்லு. அவன் ஆளுங்க போன தடவ மாதிரியே இப்பவும் தேவ படுவாங்க."
அரசியல், சதுரங்கத்தை விட சாதுர்யம் அதிகமாக தேவைப் படுகிற விளையாட்டு. ஒவ்வொரு அடி முன்னே போகும் போதும் அடுத்த நூறு நகர்வுகளுக்கான வியூகங்களை சரியாக கணக்கிட்டு முன்னே போய் கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் புதிதாக எதிர் பார்க்கா தடைகள் முளைக்கும், அதை எல்லாம் சலிக்காமல் வெட்டி சாய்த்து நடப்பவனே இங்கே நிலைத்து நிற்க முடியும். நடந்ததை எப்படி சமாளிப்பது என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, காவல் ஆணையரிடம் இருந்து மீண்டும் அழைப்பு வந்த்து.
"ஸ்பீக்கர் ல போடு"
முருகசாமி மனதுக்குள் " ஆடுங்கடா, உங்களுக்கும் ஒரு நாள் வைக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே "போட்டுடறேன் தலைவரே" என்றார்.
"நாங்க தான் கூப்பிடறோம்னு சொன்னேனே, அதுக்குள்ளே என்னையா அவசரம்.?"
"சாரி சார், எமெர்ஜெண்சி "
பணமும் படையும் தரும் போதையை விட உலகில் பெரியது எதுவும் இல்லை. சுற்றி இருப்பவர்களின் தகுதிகள் எல்லாம், தனக்கு சேவகம் செய்யவே என்று தோன்றும் பொழுது கடவுள் போல் உணர முடியும். மாமா கடவுளானார்.
"எல்லா எமர்ஜென்சியும் பாத்துட்டு தான் இங்க இருக்கோம்.மொதல்ல நான் சொல்றத கேளு. அமைச்சர் ஆவடி விஜயகுமார உனக்கு கொஞ்ச நேரத்துல போன் போட சொல்றேன். அவுங்க ஆளுங்க கொஞ்ச பேர் MP அப்பாதுர வீட்டுக்கு வருவாங்க.அவுங்கள அங்க உள்ள விட்டு, பாதுகாப்பு வேலைய பாத்துக்கோங்க. நான் விஜயகுமார் கிட்ட இப்போ பேசிட்டு சொல்றேன்."
தனது அவமானங்களுக்கு ஒரு சிறிய மருந்து கிடைத்தது போல் மனதுக்குள் சிரித்துக் கொண்டே, "அது முடியாது சார்" என்றார்.
முருகசாமிக்கு கோபம் பொங்கியது போல் காட்ட வேண்டியது அந்த நிமிடத்தின் கட்டாயம்.
"முடியாதா, அவளவு திமிரா. தலைவர் சொல்றத கேக்க முடியாதா?" . பெருசாக இருந்தாலும் பொம்மைகள் அசைவது, கண்ணுக்கு தெரியாத நூலின் இழுப்புகளிலேயே.
"அப்டி மீன் பண்ணல சார். நான் சொன்ன எமர்ஜெண்சி விஜயகுமார் சார் பத்திதான். நீங்க அவர் கிட்ட பேச முடியாது. சாரி சார், ஹி இஸ் நோ மோர். "
தூக்கி வாரி போட்டது மாமா கூட்டணிக்கு. "யாரு சொன்னாங்க. இதுவும் ரூமரா?"
"இல்ல சார் , இது யாருக்கும் தெரியாது. அவர் வீட்ல செக்யூரிட்டி இருக்க போலீஸ் காரங்க இப்போதான் கால் பண்ணாங்க. சொந்த காரங்களுக்கு கூட தெரியக்கூடாது னு சொல்லி வச்சிருக்கேன். "
அந்த பதட்டத்திலும் சரியாக முடிவெடுத்த காவல் துறையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
"நல்ல காரியம் பண்ணீங்க. அங்க இருக்க போலீஸ் தவிர யாரும் உள்ளே போக கூடாது. அங்க இருந்து வேற எந்த தகவலும் வெளியே போக கூடாது."
எந்த முறையான பயிற்சியும் இல்லாமல் மாமாவால் வேக வேகமாக சிந்திக்க முடிந்தது, சசிகரனுக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது.
"பை த வே, ரீசன் பார் டெத்?"
"லுக்ஸ் லைக் சிமிலர் சிச்சுவேஷன் சார். நெஞ்சு வலின்னு சொல்றாங்க."
போன வாரம் குடிச்ச சர்க்குல கலப்படம் சேந்துடுச்சா, மனதுக்குள் லேசாக முருகசாமிக்கு பயம் எட்டி பார்த்தது.
"எனக்கு சந்தேகமா இருக்கு சார். நாம , இத இன்வெஸ்டிகெட் பண்ணனும். மறைக்க ட்ரை பண்ணக் கூடாது"
இப்போதைக்கு இருக்கும் அரசியல் குழப்பங்களுக்கு நடுவில், நடப்பது கொலையாக இருந்தால், அரசே கலைந்து விடும். மறுபடியும் சத்தியமாக ஆட்சியை பிடித்து விட முடியாது. அரசியல் பலம் இல்லாமல் போனால், சேர்த்து வைத்த கோடிகளை பல பூதங்கள் சேர்ந்து காவல் காக்க வேண்டிய தலை வலி வரும். சீக்கிரம் யோசி, சீக்கிரம் யோசி என்றே மாமாவின் இதயம் துடித்து கொண்டிருந்தது.
"நான் சொல்றத சரியா கேட்டுக்கோங்க. நாம விசாரிக்கலாம், ஆனா, இப்பவே இல்ல. பஸ்ட், விஜயகுமார் சாகல, உயிரோட தான் இருக்கார். அவருக்கு, ஏதோ இன்பெக்சன் அப்டினு குப்பல்லோ ல அட்மிட் பண்ணி இருக்காங்க. இப்படித்தான் எல்லாருக்கும் தெரியணும்"
"சார், இது கொஞ்சம் ரிஸ்க் ஆ தெரியுது. வெளில தெரிஞ்சா பெரிய பிரச்னை ஆகிடும்"
"உன் சைடுல பிரச்னை வராம நாங்க பாத்துக்குறோம். லா அண்ட் ஆர்டர் கெட்டாலும் உனக்கு பெரிய பிரச்னை தான் . அண்ட், இதுல லீகல் சைடு எல்லாம் நாங்க பாத்துக்குறோம். குப்பல்லோ ல அவருக்கு என்னென்ன ட்ரீட்மெண்ட் தருவாங்க னு ஒரு தப்பு இல்லாம ரெகார்ட் ரெடி ஆகிடும்."
குப்பலோ நிறுவன தலைவர் ராவுக்கு அதெல்லாம் ராவா சாப்பிடற மாதிரி என்பது ஏற்கனவே பலருக்கும் தெரிந்து தான் இருந்தது. இந்த உரையாடலின் போதே, எள்ளுக்கு எண்ணையாக சசிகரன் குப்பல்லோ ராவுக்கு கைபேசியில் கூப்பிட்டு விட்டு இருந்தார். பயத்தில் வயிற்றை குமட்டி கொண்டு வந்த முருகசாமி கழிவறை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார். முதல் கட்ட நடவடிக்கைகளை காவல் ஆணையருக்கு விளக்கி விட்டு, அடுத்து செய்ய வேண்டியதை தீவிரமாக திட்டமிட தொடங்கினர் தில்லையும் சசிகரனும்.
முதல்ல அப்பாதுர சாவுல எந்த வதந்தியும் பரவாம பாத்துக்கணும். ட்ராமா ல எந்த தப்பும் நடந்துட கூடாது. விஜயகுமார் கன்னத்துல மூணு ஓட்ட போட்டு ஒரு மாசம் கூட குப்பல்லோ ல வச்சு பாத்துக்கலாம். அவுங்க வீட்ல இருக்குறவுங்க எல்லாத்துகிட்டயும் பேசிடனும். அவரோட பொண்ணு இத போலீஸ் விசாரிச்சே ஆகணும்னு ஆடம் பிடிக்கிறதா,ஆணையர் சொன்னது கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது. இத்தனை பேருடைய வாயையும் அடக்க வேண்டும். கட்சி ஆளுங்களை விட்டு விட கூடாது, மக்களை சமாளிக்க இப்போதைக்கு தேவை இல்லை, தேர்தல் வர இன்னும் காலம் இருக்கிறது, சாமர்த்தியமாக நடந்து கொண்டால். பிதாமகன் படத்தில் சூர்யா சொல்லுவது போல், இந்த பொழப்புக்கு பண்ணி மேய்க்க போய்டலாம் என்று தோன்றியது முருகசாமிக்கு. தில்லை தெளிவான ஒரு திட்ட அமைப்பை ஏற்படுத்தினார். அப்பாதுரை யின் உடல் அடுத்த நாளே எரியூட்ட பட வேண்டும், எந்த சந்தேகமும் எழ கூடாது. விஜயகுமார் பெண்ணுக்கு கட்சியில் ஒரு பெரிய பதவியை தருவதாக வாக்களிக்க வேண்டும், மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். பிற MLA கள் அனைவரும், இன்னும் ஒரு பத்து நாளாவது ஒரே இடத்தில் கட்டுக்குள் இருக்க வேண்டும். ஒன்று, அவர்கள் எங்கும் போக முடியாது, இன்னொன்று, அவர்களுக்கு அதுவே பாதுகாப்பு. இந்த முறை, மலை பிரதேசம் தேர்ந்தெடுக்கப் பட்டது. குன்னூர் இன்னும் பத்து நாட்களில் பல கோடிகளை நேரில் பார்க்க போகிறது. அத்தம்மாவின் பேச்சாளராக பேரம் பேசுவதில் போன முறை சிறப்பாக பணியாற்றிய பொன்கோட்டையனை இந்த முறையும் உபயோகிக்க முடிவு செய்ய பட்டது. சிரிப்பு நடிகர் லொடுக்கு மூலமாக சிறப்பான பல பலான அனுபவங்களை MLA க்களுக்கு கொடுப்பது பற்றியும் பேசப் பட்டது. தரகனாக இருந்தாலும் தலைவர்கள் வீட்டில் இருக்க வேண்டும்.
திட்டம் தீட்டப்பட்டு சம்மந்தப்பட்ட பெரியவர்களுக்கு செய்தி அனுப்ப தயாராகிக் கொண்டிருந்த போது முருகசாமி வேர்க்க விறுவிறுக்க வேகமாக ஓடி வந்தார்.
"தலைவரே " என்று கதறிய அவருக்கு அடுத்து வார்த்தைகள் வரவில்லை. நாக்கு வறண்டு உளறியது, கண்கள் மயக்க நிலையில் தெரிந்தன. கைகள் நடுங்கின, மிகப் பெரிய பயங்கரத்தை பார்த்ததை போல முகம் வெளிரி ப் போய் இருந்தது. அவருடைய இந்த நிலையை கண்ட மாமா தில்லைக்கு உள்ளே பொறி தட்டியது.
"இப்ப யாருய்யா?" என்றே வெளிப்படையாக கேட்டுவிட்டார்.
கத்தி அழும் நிலையில் இருந்த முருகசாமி மிகவும் பிரயத்தினம் எடுத்து பேசினார், "நம்ம பொன்கோட்டயன் தலைவரே, எவனோ ஸ்கெட்ச் போட்டு தான் நம்ம ஆளுங்க ஒருத்தர் ஒருத்தரா தூக்குறானுங்க. இதெல்லாம் அவுங்களா செத்த மாதிரி இல்ல. நான் கொஞ்ச நாளைக்கு தலை மறைவா ஆகிடறேன்", அதிகாரமில்லாத முதல்வராலும், அப்படியெல்லாம் தலைமறைவாக போய் விட முடியாது என்று உணராமல் உளறினார்.
இது வரை தைரியமாக இருந்த தில்லைக்கும் மெல்லிய பயம் ஒட்டிக் கொண்டது. மறைந்தவர்கள் எல்லாம் கட்சியில் இருந்தவர்கள், பதவிகளில் இருப்பவர்கள். அவர்களுக்கே இப்படி என்றால், முன்னாள் முதல்வரால் கட்சியில் இருந்தே துரத்தி விடப்பட்ட தனக்கு என்ன நிலை என்ற கவலை ரேகை அவர் முகத்தை தொற்றிக் கொண்டது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், சில நேரங்களில் காலம் அவர்களை அடக்கி வைக்க தவறுவதில்லை. தில்லை அப்படியே சாய்ந்து உட்கார்ந்து விட்டார். இதற்க்கு மேல் இப்போதைக்கு எதுவும் யோசிக்க முடியாதோ என்று தோன்றியது. தோற்பது உறுதி என்றாலும் கடைசி நாள் வரை போர் செய்வதை தவிர ராவணன்களுக்கு வேறு வழி இல்லை .
"மாமா, இது கண்டிப்பா எதோ பெரிய திட்டம் மாதிரி தெரியுது. நாம மக்கள கொறச்சு எட போட்டுட்டோமோ?"
ஒரு சிகிரெட் எடுத்து பத்த வைத்துக் கொண்டு தில்லை பேசத் தொடங்கினார். விழுவதும் எழுவதும் பெரிய நிகழ்வுகளாக இருக்க வேண்டியதில்லை. ஒரு சராசரி கணத்தில் கூட அப்படி நடக்கும், கடலலைகள் போல. இப்போது தில்லை எழுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.
"உளராத சசிகரா, நம்மள எல்லாம் எதிர்த்து கோஷம் போடவே இத்தன வருஷம் கழிச்சு இப்போதான் அவுங்களுக்கு தைரியம் வந்திருக்கு, அதுவும் கூட்டமா மட்டுந்தான். அரசியல் வாதிங்கள போட்டு தளர அளவுக்கு மக்கள் வளர ரொம்ப காலம் ஆகும். இது எவனோ நடத்துற அரசியல் வெளாட்டு மாதிரி தான் தெரியுது. MLA ங்க கொஞ்ச பேர தூக்கிட்டா நம்ம பெரும்பான்ம போய்டும். இல்லாட்டி சட்ட ஒழுங்கு பிரச்னையா மாத்தி ஆட்சிய கலச்சிடலாம். ஒன்னு இது சென்டரோட வேலையா இருக்கலாம், இல்லாட்டி எதிரணி வேலையா கூட இருக்கலாம். உடனடியா எல்லா MLA வும் குன்னூருக்கு வந்தாகணும். இதுக்கு மேல நேரம் கடத்த கூடாது "
அடுத்த ஐந்து நிமிடங்கள், அந்த அலுவலகம் மாறி இருந்தது. மாறி மாறி கட்டளைகள் பறந்தன. தொலைபேசிகள், அலை பேசிகள் எல்லாம் விடாது இயங்கின. நம்பிக்கைக்கு உரிய ஒரு பத்து பேர் மட்டுமே இதில் இணைக்க பட்டனர். பொன்கோட்டையன் ஒரிசாவில் உள்ள அவரது அக்கா வீட்டிற்க்கு போய் இருக்கிறார் என்றே சொல்லப் பட்டது. அடுத்த இரண்டு நாட்களில் நெடுஞ்சாலை விபத்து ஒன்றில் அவர் வண்டி தீப்பற்றி எரிந்து அவர் உயிரிழக்க ஏற்பாடுகள் நடந்தன. அவர் குடும்பத்தினருக்கும் பதவி மற்றும் பண பேரம் பேசப் பட்டது. பல பேர்களின் பண்ணை வீடுகளில் குப்பை வண்டிகள் யாருக்கும் தெரியாமல் பல சாக்கு பைகளை மாற்றி கொண்டிருந்தன. சிறப்பு பாதுகாப்போடு அத்தனை MLAக்களும் அழைக்க பட்டு வந்தனர். தேவைப்பட்டால் வேண்டுமென்று இரண்டாம் நிலை திட்டத்திற்காக, வேறொரு கட்சியின் இரண்டு MLA க்கள் கட்சி தாவ தயார் நிலையில் வைக்கப் பட்டனர். தன்னுடைய கட்டப் பஞ்சாயத்துக்கள், போக்கிரித்தனங்கள் எல்லாவற்றிற்கும் பல தளங்கள் மேலே இயங்கி கொண்டிருந்தவர்கள் தில்லை கூட்டத்தினர் என்பது முருகசாமிக்கு தெளிவாக விளங்கியது. அவர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டதாகவே பட்டது. இத்தனை பயங்கரமானவர்கள் பக்கம் நின்று இருப்பது, கத்தியை கையில் பற்றி இழுத்து விளையாடும் ஆபத்தான விளையாட்டு என்று மிக தாமதமாக அவருக்கு புரிந்தது. உண்மையாகவே கொஞ்சம் நெஞ்சு வலித்தது.
அடுத்த நாள் காலை எப்போதும் போல் சோம்பல் முறித்து விடிந்தது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இயற்கையாக மறைந்தது குறித்த துக்க செய்தி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது. மாநில அமைச்சர் விஜயகுமார் சிறிய உடல் உபாதையால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டது பெட்டிச் செய்தியாக வெளிவந்தது. கட்சியின் மக்கள் தொடர்பாளர்கள் அமைச்சரின் உடல்நிலை குறித்து, பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்றும், அவர் காலையில் பாயாசம் குடித்து விட்டு மீண்டும் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதாகவும், தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்தனர். குப்பல்லோவில் வழக்கம் போல், பாதுகாப்பு கருவிகள் சரியாக வேலை செய்யாமல் இருந்தன. மற்ற ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் மிகவும் மனச்சோர்வில் இருப்பதால், குன்னூருக்கு ஒரு வார பயணம் மேற்கொண்டனர்.
ஊடகங்களும் வலைத்தளங்களும் பல விதமாக நடப்பனவற்றை அலசிக் கொண்டிருந்தன. எல்லோரும் பார்த்தும் வெளியில் அதை ஒத்துக்கொள்ள முடியாத நிர்வாண படங்களாக அரசியல் உண்மைகள் எல்லோருக்கும் தெரிந்தும் தெரியாமல் இருக்கும். அடுத்த இரண்டு நாட்களில் திட்டமிட்ட படி பொன்கோட்டயன் விபத்தில் பலியானதாக தகவல் வந்தது. பலருக்கும் சந்தேகம் இருந்தும் சாட்சிகள் எதுவும் இல்லாததால் உண்மை ஒளிந்து கொண்டது. கடந்த சில மாதங்களில் இதை போன்று வெளிப்படையான உண்மைகள் மறைக்க படுவதும் மறுக்க படுவதும் தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் நிகழ்வாகி போனது. அரசியல் வாதிகளோடு சேர்ந்து மக்களுக்கும் இந்நிலை பழகி விட்டிருந்தது. தனது தொழிற்சாலையில் இருந்து தாராளமாக மதுபோத்தல்களை குன்னூருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்திருந்தார் சசிகரன். நடிகர் லொடுக்கின் சிவப்பு விளக்கு மகிழுந்து தனது கடமையை சீரும் செம்மையாக செய்து வந்தது. வழக்கம் போல எவன் தாலி அருந்தால் என்ன என்று மக்கள் பிரதிநிதிகள் உல்லாசமாக கூத்தாடிக் கொண்டிருந்தனர். சசிகரனுக்கு சாதகமாக மறைந்த மூன்று பேரின் மகள்களும் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து இருந்தது கூடுதல் மகிழ்ச்சியை தந்தது. ஆறாவது நாளில் சிகிச்சை பலனின்றி விஜயகுமார் மருத்துவமனையில் காலமானார் என்ற அறிவிப்பு குப்பல்லோவில் இருந்து வந்தது. மூன்று சம்பவங்களும் சந்தேகிக்கும் படி இருந்தாலும், ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவைகளாகவே அதிகாரபூர்வ வட்டங்கள் சித்தரித்தன. துக்கம் அனுசரிக்க அத்தம்மா சிறையில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார், கட்சிக்காரர்கள் அவருக்கு ஆதரவாக அழுதுகொண்டே ஊடகங்களின் செவிக்கு பசியாற்றிக் கொண்டிருந்தனர். சுவர்களில் கட்சி சின்னத்தை கடவுளாக வரைந்து , வீட்டில் பிள்ளைகளின் பள்ளிக்கூட புத்தகங்களுக்கு கூட அட்டை போட நேரமில்லாமல் கட்சியின் விளம்பர படங்களை தெருவெங்கும் ஒட்டி ஒட்டி அழகு பார்த்த தொண்டர்கள் மூணு பேர் தற்கொலை செய்து கொண்டனர். நடப்பதை எல்லாம் வயலும் வாழ்வும் பார்ப்பது போல் எந்த உணர்வும் இன்றி ஆளுநரும், மத்திய அரசும் பார்த்துக் கொண்டிருந்தனர். 'கட்டி கொடுத்ததோட கடம முடிஞ்சு போச்சு, இனி மேல உம்புருஷன் உன்ன அடிச்சாலும் கொன்னாலும் நாங்க கேக்க மாட்டோம்' என்ற பழைய அம்மா அப்பாவின் மன நிலையில் தேர்தல் ஆணையம் தள்ளியே நின்றது. இந்திய அரசியலமைப்பின் மிக முக்கிய தூணான நீதிமன்றம், அரசாள்பவரின் சித்திரக் கூடமாக அவர்கள் விருப்பப் படி நிறங்களை ஏற்றுக் கொண்டன. வழக்கம் போல மக்கள் அங்கும் இங்கும் சின்னதாகவும் பெரியதுவாகவும் கூச்சல் செய்து கொண்டிருந்தனர். எத்தனை விசயத்திற்குத் தான் போராடுவார்கள் பாவம்!
விஜயகுமார் மிக நூதனமான விஷம் கொடுத்து கொல்லப் பட்டிருக்கிறார் என்ற குப்பல்லோவின் ரகசிய அறிக்கை வந்தது. எதோ தாலியம் அது இது என்று புரியாத பெயராக இருந்தது, அவர் கூட்டத்துக்கும் ஒரு பக்கம் கவலை கொடுத்தது, அதை எந்த சத்தமும் இன்றி விசாரிக்க தனியாக ஒரு குழு அமைக்க பட்டது. முருகசாமிக்குக் கூட தெரியாமல் மிகவும் ரகசியமாக பார்த்துக் கொண்டனர் சசிகரன் கூட்டத்தினர். அதே நேரம், மறைந்த மூவரின் பெண்களையும் கட்சியில் அதிகார பூர்வமாக இணைத்து கொள்ள ஏற்பாடுகள் செய்ய பட்டன. பெண்களை தனிப்பட்ட முறையில் எப்படி வைத்திருந்தாலும், பொது தளங்களில் அவர்களை மேல் நிறுத்தி உயர்வாக பேசுவதையே சமூகம் அங்கீகரிக்கிறது. இதில் மூன்று படித்த பெண்கள் அரசியலுக்கு வருவது மக்களிடம் நல்ல அபிமானம் கிடைக்க ஒரு வாய்ப்பை கொடுக்கும் என்றே சசிகரனின் கூட்டம் நம்பியது. இடைத்தேர்தலுக்கு இது நல்ல வரவேற்பை கொடுக்கும் என்று கணிக்கப் பட்டது. எளிமையான ஆடைகளில் அந்த மூன்று பெண்களும் அழுது கிடந்த படங்கள் வலைத்தளங்களிலும் சம்பந்த பட்ட தொகுதிகளிலும் ஏற்கனவே வளம் வர தொடங்கி இருந்தன. என்னதான் அந்த அரசியல்வாதிகள் மேல் கோபம் இருந்தாலும், மக்களில் சிலர் இந்த பெண்களை பார்த்து பரிதாபப் பட்டனர். ஒன்பதாவது நாள் குன்னூரிலிருந்து கூட்டம் வெளிவந்தது. அன்றைக்கே கோயமுத்தூரில் 3 பெண்களும் கட்சியில் இணையும் விழா ஏற்பாடுகள் செய்ய பட்டன. பத்திரிக்கைகள் கும்பல் கும்பலாக பெரிய அரசியல் மாற்றத்தை படம் பிடிக்கும் பகட்டுடன் படை எடுத்தன. பல கேலிக் கூத்துகளை பார்த்து சோர்ந்து போய் இருந்த பெரும்பாலான மக்கள், இதையும் சகித்துக் கொண்டனர்.
மாலை நேரம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் விரிந்தது. மூன்று பெண்களும் தத்தம் தந்தையின் படங்களுக்கு மாலை அணிவித்து மேடைக்கு வந்தமர்ந்தனர். சசிகரனும் கட்சியின் மற்ற மூத்த தலைவர்களும், மறைந்தவர்கள் உயிருடன் இருந்த போது அவர்களைப் பற்றி பேசாத பல உயர்குடி பண்புகளை சொல்லி கண் கலங்கினர். தந்தையின் மரணத்திலும் தயங்காமல் மக்கள் சேவைக்காக தங்களை அர்ப்பணிக்க தயாரான மாதர் குல திலகங்கள் என அந்த மூவரையும் போற்றி புளங்காகிதம் அடைந்தனர். சசிகரன் அத்தம்மா சிறையில் இருந்து எழுத்துப் பிழைகளுடன் அனுப்பிய கடிதத்தை ஒரு வழியாக உணர்ச்சி வசப்பட்டு வாசித்துக் முடித்தார். அடிமைகள் எல்லோரும் ஒவ்வொரு வரியிலும் வான்தொடும் வகையில் ஆர்ப்பரித்தனர். பக்கம் இருந்து பிரியாணி வாசனை வரத் தொடங்கிய நிலையில், அப்பாத்துரையின் மகள் ரேவதி பேசத் தொடங்கினார். வணக்கம் சொன்ன விதத்தில் சிறப்பான மொழி ஆளுமை தெரிந்தது. அரசியலுக்கு மிக முக்கியமான தகுதி உடையவள் என்று நினைத்து சசிகரன் மனதிற்குள் அடுத்த திட்டத்தை வரைய தொடங்கினார்.
"எங்கள் அரசியல் நுழைவு பற்றி குறை சொல்பவர்களுக்கெல்லாம் சொல்லுகிறோம், இது அரசியல் பிரவேசம் அல்ல, அக்னி பிரவேசம்."
குடிக்காதவன் கூட புல்லரித்து கை தட்டினான்.
"எங்கள் தந்தைகள் இறக்க வில்லை ", உணர்ச்சி வசப்பட்ட மகளிரணி கண்ணீர் மல்க, ஆமா ஆமா என்று கத்தின.
"அவர்களை நாங்கள் மூவரும் தான் கொலை செய்தோம்" , இதை சற்றும் எதிர்பார்க்க வில்லை யாரும். கூட்டத்தில் சலசலப்பு தொடங்கியது. ஊடக நிருபர்கள் எல்லாம் ஒரு நிமிடம் அதிர்ச்சியை மறந்து ஆர்வமாகி அருகே ஓடி வரத் தொடங்கினர். ரேவதி மேலும் பேசிக் கொண்டிருந்தாலும் தூரத்தில் கேட்காத படி ஒலிபெருக்கிகள் உடனடியாக நிறுத்த பட்டன. மேடையில் இருந்த பெரியவர்கள் அந்த பெண்களை தாக்க துடிக்க, சசிகரனின் உடனடி உத்தரவில் காவல் துறை அந்த பெண்களை சூழ்ந்து கொண்டது. கூச்சலும் குழப்பமும் கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும் என்ற கவலையில் அங்கு கூடி இருந்த அத்தனை காவலர்களும் முழு வீச்சில் செயல்பட்டனர். சசிகரன் சமிஞ்கைகள் மூலம் கட்டளைகளை தனது ஆட்களுக்கு பிறப்பித்துக் கொண்டே இருந்தார்.. அந்த கூட்டத்தில் மாமா தில்லையைத் தேடித் கொண்டிருந்த அவனது கண்கள் கொஞ்சம் பனித்தன, குழப்பத்தால் பறந்த தூசி என்று நினைக்கையில், கால்கள் தடுமாறின, கைகள் கட்டுப்பாடுகளை இழப்பது போல் இருந்தது. தொண்டை வறண்டு நாக்கில் ஒரு வித எரிச்சல் தெரிந்தது, குடல் வரை உள்ள உணவுப்பாதை முழுதும் உணர முடிந்தது. எரிச்சல் கொஞ்சம் கொஞ்சமாக நெஞ்சிலும் தெரிய ஆரம்பித்தது, மூளை எதையும் தெளிவாக யோசிக்க முடியவில்லை, நாற்காலியில் இருந்து கீழே விழும் உணர்வு கூட இல்லாமல் சரியத் தொடங்கிய சசிகரனை, திரும்பி பார்த்து, புன்னகை செய்தாள் ரேவதி.
_____________________________________________________________
பி.கு.
அன்று இரவே வாட்சப்பில் ஒரு காணொளி தமிழகம் எங்கும் பரவியது. வெள்ளை சுடிதாரில், சிவப்பு துப்பட்டா அணிந்த மூன்று பெண்கள் கை கட்டி நின்றிருந்தனர். அவர்கள் பார்வை தீர்க்கமாக தெரிந்தன. முகத்தில் எந்த சலசலப்பும் இல்லாத அமைதி. கோபமோ, சோகமோ, மகிழ்ச்சியோ எதுவும் வெளிப்படுத்தாத விழிகள். கைப்பேசியிலேயே பதிந்திருப்பது போல வெளிச்சம் குறைவாகவே தெரிந்தது. காணொளி தொடங்கிய நான்காவது வினாடியில் முதலாமவள் பேசினாள்,
"வணக்கம், நாங்க யாருன்னு இப்போ அறிமுகம் தேவை இருக்காது. எப்படியும், நாங்க யாருனு உங்களுக்கு தெரியிர நேரம், நாங்க பேசக் கூடிய நிலைல இருக்க மாட்டோம்னு எங்களுக்கு தெரியும். அதுனால தான் முதல்லயே இத பதிவு செஞ்சு வச்சுட்டோம். "
ஒரு வினாடி மௌனம் . பார்ப்பவர்கள் இதய துடிப்பை ஓடச் செய்தது. மூன்று பெண்கள் திட்டம் தீட்டி பெற்ற தந்தைகளை கொன்று இருக்கின்றனர். அதை பற்றி அறிக்கை வேறு முன்னதாகவே பதிவு செய்திருக்கின்றனர் என்பது, காணொளியை பார்ப்பவர்களை, மர்மத் தொடரின் கடைசி பக்கம் நோக்கி நடக்கும் விறுவிறுப்பான ஓட்டத்துடன் வைத்திருந்தது. தொண்டையை செருமிக் கொண்டு இரண்டாமானவள் தொடர்ந்தாள்,
"எங்க அப்பாங்கள கொன்னது நாங்கதான். இத எதுக்காக பண்ணோம்னு ஆளாளுக்கு கற்பன பண்ணிக்க கூடாதுன்னு தான் இப்போ பேசிட்டு இருக்கோம். நாங்க ஏதோ நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் இத பண்ணதா யாரும் தப்பா நெனச்சிட கூடாது. அவுங்க எல்லாம் எவ்வளவு மோசமானவுங்கனு தெரிஞ்சே ஓட்டு போட்டு ஜெயிக்க வச்ச உங்களுக்காக நாங்க எதுக்கு கோப படனும்? நீங்க எக்கேடு கேட்டு போனாலும் எங்களுக்கு ஒரு பைசா நஷ்டம் இல்ல"
பார்ப்பவர்களுக்கு உள்ளுக்குள்ளே சுட்டது. தங்களை ஒரு சிறு வயது பெண் திட்டுவது அவமானமாக தெரியவில்லை. அவள் சொன்ன விசயமே கேட்பவர்கள் சுயங்களை கொஞ்சமாக உரசி காயப்படுத்தியது.மூணாமவள் பேசத் தொடங்கினாள்.
"இந்த ரெண்டு மாசத்துல, நம்ம நாட்டோட அரசியலமைப்பையும் மக்களாட்சியும் எவ்வளவோ கேவல படுத்தினாங்க. ஆனா அதுக்காக கூட அவுங்கள கொல்ற அளவுக்கு நாங்க துணியில. எப்போ எல்லாம் தேவையோ அப்போ லஞ்சம் குடுத்து வேலைய சாதிச்சுக்கிட்டு, எங்கெல்லாம் முடியுதோ அங்க வரி கட்டாம அரசாங்கத்த ஏமாத்திட்டு, சாதிப் பேர சொல்லியும் காசு வாங்கியும் ஓட்டு போட்டுட்டு, ஊரே மாறனும் ஆனா நான் சட்டத்த மதிக்க மாட்டேன் அப்டினு, எல்லா தப்பையும் செஞ்சுட்டு திரியுற உங்களுக்கு நடுவுல என்ன காமராஜரும் கக்கணுமா வருவாங்க. எங்க அப்பாங்கள போல கழிசடைங்க தான் வருவாங்க. அதுனால அதுக்காக எல்லாம் கோப படர அளவுக்கு நாங்க முட்டாள் இல்ல"
பார்க்கும் அனைவருக்கும் அவர்களை செருப்பால் அடித்தது போல இருந்தது. மாற்றம் என்பது உள்ளிருந்தும் தொடங்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளாமல், தன்னோட சுயநலத்துக்கும் இயலாமைக்கும் காரணம் தேடும் சனங்களுக்கு சுருக்கென்றிருந்தது. நல்லதுக்கு தானே ஊரோடு ஒத்து வாழனும், நாம செய்யிற தப்புக்கெல்லாம் அல்லவா ஊரோடு ஒத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முதலாமவள் தொடர்ந்தாள்
"அப்போ நாங்க எதுக்கு அவுங்கள கொல பண்ணோம்னு குழப்பமா இருக்கா"
ஒரு வினாடி நிறுத்தினாள். கண்களில் கோபம் தேங்கிக் கொண்டு கண்ணீராய் கொஞ்சம் மாறிக் கொண்டிருந்தது. "இது ஒரு விதத்துல ஹானர் கில்லிங். " மீண்டும் ஒரு நொடி மௌனம். அந்த பெண்ணின் பார்வை பார்ப்பவரை உள்ளே ஊடுருவியது.
"உங்க எல்லாருக்கும் தெரியும், ஒரு பத்து நாளா அத்தன MLA ங்களும் அந்த ரிசார்ட் ல என்னென்ன கூத்தடிச்சாங்க னு. வீட்ல வயசு பொண்ணுங்க இருக்கவனுங்க கூட பொறுக்கித்தனம் பண்ணி இருக்கானுங்க. இப்போ ஒரு பேச்சுக்கு கேக்குறோம், இவுங்க பண்ணிட்டு வந்ததையே , நாங்களோ எங்க அம்மாங்களோ பண்ணிட்டு வந்திருந்தா என்ன பண்ணி இருப்பாங்க? "
கடவுளாக இருந்தாலும், ஒரு பெண்ணின் புனிதத்தை ஏற்க அவளை நெருப்பில் ஏற்றும் சமூகம், தாசி வீட்டுக்கு போக விரும்பும் கணவனை தலையில் தூக்கிச் செல்பவளையே கற்புக்கரசிக்கு அடையாளாமாக சொல்லுவது எத்தனை பெரிய கேவலம் .
" பொட்ட புள்ள படி தாண்ட கூடாது, ஆம்பள எப்படி வேணும்னாலும் ஊர் மேயலாம்? கற்ப்புக்குன்னு ஒரு கோடு போட்டா அது ஆம்பள பொம்பள ரெண்டு பேருக்கும் சமமாத்தான் இருக்கணும். அத மீறினா , ஆம்பளையும் வேசி தான். அந்த கோட்ட தாண்டினா எங்கள கொன்னு போட்டுட்டு மாணத்துக்காக எதுவும் பண்ணுவோம்னு பேசி இருக்க மாட்டானுங்க ? நாங்களும் அதையே தான் பண்ணினோம். பொண்ணுக்கு ஒரு நியாயம், தனக்கொரு நியாயம்னு அலையிறவனுங்களுக்கு இது ஒரு பாடமா அமையனும். இதுனால எங்களுக்கு எதிரா எது நடந்தாலும், அத நேருக்கு நேரா நின்னு ஒரு அடி பின்னாடி போகாம எதிர்த்து நிக்க போறோம். எங்களுக்கு எந்த உறுத்தலும் இல்ல, பயமும் இல்ல. ."
பேசி முடித்ததும் மூன்று பெரும் கை கோர்த்து, நெஞ்சு நிமிர்ந்து, நேராக பார்த்த பொது காணொளி முடிந்தது. என்றோ செத்து போன ஒரு கவிஞனின் சாம்பல் துகள்களில் கேட்டுக்கொண்டிருந்தது "அக்கினி குஞ்சொன்று கண்டேன்...."