சனி, 22 ஜூன், 2019

மாரி

"பூவில் தோன்றும் வாசம், அதுதான் ராகமோ, இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அது தான் தாளமோ", யமனின் பாசக்கயிற்றில் நரம்பெடுத்து கருவிகள் செய்தனரோ, ராஜாவின் இசை உயிரை அல்லவா சுண்டி இழுக்கிறது. ஜானகியின் குரலில் லயித்து மயங்கிக் கொண்டே வரிசையில் நின்றிருந்தேன்.  ஒவ்வொரு முறையும் இந்தியா செல்லும் பயணங்கள், முதல் முறை விமானம் ஏறிய அதே கிளர்ச்சியையே கொடுக்கிறது.

விமானம். தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் போது,எங்கோ தூரத்தில் கேட்கும் விமானத்தின் சத்தத்தை,நெற்றிக்கு மேல் கையை குடையாய் தூக்கி அதன் நிழலை குளிர்கண்ணாடியாய் அணிந்து, உச்சத்தில் நகரும் அந்த சொச்ச  புள்ளியை அண்ணாந்து பார்த்திருக்கும் அத்தனை பேர் விழிகளும். வாரம் ஒருமுறை வரும் ராமாயணம் பார்த்துக் கொண்டிருக்கும் போது கூட ஓட்டம் பிடித்து வெளியே வந்து விமானம் பார்த்ததுண்டு. இன்று எப்போது வேண்டுமானாலும் இராமாயணம் பார்க்கலாம்.  ஆனால் அன்றிருந்த ஆர்வம் இல்லை.  புள்ளியாய் தெரிந்த விமானத்தின் சத்தம் அன்று அதிசயமாய், இன்று உள்ளே அமர்ந்திருக்கும் போது இறைச்சலாய். எத்தனை விந்தை, விமானத்தில் ஏறுவதற்கான படிகள்  எல்லோருக்கும் ஒரே அளவில் இருப்பதில்லை. இந்திய வரைபடத்தில், குளம் கீழ் பாசி போல் எங்கும் நிறைந்திருந்தாலும், தனித்து வெளியே புலப்படாத கிராமம் ஒன்றில் பிறந்தவனுக்கு விமானத்தை நெருங்க நிறைய படிகளை கடந்து வர வேண்டியிருக்கிறது. அப்படி வருபவர் அனைவரையும் விமானம் ஒரே இலக்கிற்கு அழைத்து போவதில்லை. ஜம்பதாம் மாடியின் குளிரூட்டப்பட்ட அறையின் மூலையில் மூளை சிந்தி பிழைப்பதற்கு சிலரையும், உணவு சுமந்து செல்லும் எறும்புகள் போல வெயிலிலும் உழைக்க சிலரையும், யாரோ ஒருவரின் பசியாற்றி அவர் பிள்ளைகளை வளர்க்க தம் பிள்ளைகளை விட்டுவிட்டு போக சிலரையும், உள்ளுர் சூதாட்டம் சலித்துப் போக வெளிநாட்டு குட்டிகளும் புட்டிகளும் கொண்டு குதூகலிக்க சிலரையும், இப்படி ஒரே பயணம் ஒவ்வொருவரையும் வெவ்வேறு இடத்திற்கே கொண்டு செல்கிறது. காதில் மாட்டியிருந்த Head Phone  தாண்டி ஒலித்த குரல் வந்த திசை நோக்கி நடந்தேன்.  பாடலை நிறுத்தி விட்டு, Head Phone க்கு கொஞ்சம் விடுதலை கொடுத்தேன். இல்லை, அதனிடமிருந்து விடுதலை பெற்றேன்.  

உரக்க பேசினாலும், பெண்களின், அதிலும் நமக்கு பரிச்சயமில்லாத பெண்களின் குரல் எப்போதும் அழகாகவே இருக்கிறது.

"PassPort Please". 

இந்த வினாடியில் உலகம் உச்சரித்த ஆகச்சிறந்த கவிதை இதுதான்.  35 வயது கடந்த பின் ஏனோ தெரியவில்லை, அழகான பெண்களை பார்க்கும் போதெல்லாம் காதல் ரசம் சொட்ட தொடங்கி விடுகிறது. கையில் இருந்த பாஸ்ப்போர்ட்டை அந்த பக்கம் இருந்த பெண் விமான அலுவலரிடம் கொடுத்தேன். 

"Ticket Please"
 
விண்ணில் பறக்க வைத்து, பிறகேன் கேட்கிறாய் பணச்சீட்டு. 

"Sir Ticket Please", சற்றே உயர்த்திய குரல்.
'Ah Sorry, got lost in thoughts,, missing my family already'.
குடும்பஸ்தனாய் இருப்பதில் இது ஒரு வசதி.  நம்பினாளா தெரியாது.  சிரியதாய் புண்முறுவலோடு, "Hope its not for too long" என்று சொல்லிக் கொண்டே தலைதாழ்த்தி கணிப்பொறியின் கட்டளைக்கு விரலாடத் தொடங்கினாள். அவள் நகக்கீறல்கள் நடுவில் நர்த்தனமாடிக் கொண்டிருந்தன கீபோர்ட் விசைகள். 

இத்தனை இரவில் எத்தனை இயக்கங்கள். இரவு அமைதியானது என்பது பொதுமை. அனால் பொதுமையை கடந்த வாழ்க்கை எங்கும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. உறங்க வேண்டிய நேரத்தில் இதோ வழித்திருப்பவர் இருக்கின்றனர்.  அலைகள் அழகானது, படகோட்டிக்கல்ல.  பனிமலையின் பேரமைதி, அதில் வழிகாட்டி பிழைப்பவர்க்கில்லை. விசித்திரம் என்னவென்றால், பொதுமையை உண்மை என்று நம்புவர் தம்மை குழப்பிக் கொள்ளுவதில்லை.  தனிமையில் மனது ஆழமான சிந்தனைகளை சுவைத்துக் கொண்டு நடந்தது.  ஆங்காங்கே எதிர் வந்த அழகான பெண்கள் மட்டுமே சலனங்கள்.  ஆனால் அதில் எந்த வருத்தமும் இல்லை.  மாறாக சலனங்கள் கூட சில நேரம் சிந்தனைக்கு உதவுகின்றன.

Head Phone -ஐ மீண்டும் அணிந்து கொண்டேன்.  Head Phone -ஐ  தமிழில் எப்படி சொல்லலாம் என்று இது வரை ஏன் யோசிக்காமல் போனேன்?!  'தலை ஒலி பெருக்கி' என்றால் Rap song போல நரநரவென்றிருக்கும். .  கொஞ்சம் கொஞ்சலாய் ஒரு பெயர் வைக்கவேண்டும். "நயன்தாரா" எனக்கு  Ok தான், உலகம் ஒத்துக் கொள்ளாது.  "குரலி", அட அழகான பெயர், “தலைக்கு வெளியில் இருந்து இசை ஊட்டுவதால் இன்று முதல் புறக்குரலி என்ற எல்லாராலும் அன்பாய்  அழைக்கப்படுவாய்'. எனக்கு நானே சபாஷ் சொல்லிக்கொண்டு , பெயர் சூட்டிய கையோடு மனைவிக்கு அலைப்பேசி தூதனுப்பினேன்.

"ஹே கண்ணு"
..........

"செக்-இன் பண்ணிட்டேன், 20 நிமிஷத்துல கேட் போய்டுவேன்.  குட்டீஸ் தூங்கியாச்சா?"
................
"என்ன ஏம்மா மிஸ் பண்ணுதுங்க, நீயும் உம் பிள்ளைகளும் நாலு நாள் ஜாலி பண்ணுங்க."
...........................

"இல்ல பாப்பா, தூக்கம் வரல. சுத்தி இத்தனை பொண்ணுங்க,  மாமா எப்படி தூங்குவேன்?"
..........................
"ஹா ஹா. அது வேறு இது வேறு கண்மணியே"
.............................

"நீ கடல், நான் கடல் காதலன், அதனாலேயே மழைத்துளிகளையும் ரசிக்கின்றேன்."
............................
 
"ஹே நல்ல கவிதடி, இப்டி சொல்லிட்ட. சரி, போய் தூங்கு, Reach ஆகிட்டு, Message பன்றேன்."
 
சிறிது நேரம் இருவரும் sweet nothings இல் கரைந்தோம்.

"Love you , miss you... Bye கண்ணு " 

கைபேசி கண் மூடிக்கொண்டது. உள்ளே நிறைய இருக்கிறது, ஆனால் அருகில் இருக்கும் போது ஏனோ கொஞ்சுவதில்லை மனைவியை . Play list இல் இருந்து அந்த பாடல் ஆரம்பித்தது.  சில நாட்களாய் மனதை மிகவும் தொட்ட பாடல்.  பின்புற வாத்திய தொடக்கமே துள்ளலாய்  இருந்தது.

"ஒத்தையடி பாதையில் தாவி ஒடினேன்.  அத்த பெத்த பூங்குயில தேடி வாடினேன்."

முதல் முறையே கேட்டதும் மிகவும் பிடித்துப் போனது. துள்ளலான இசைத் தாண்டி அதன் ஒரு வரி என்னை ஆழமாய் தொட்டதாலேயே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தேன்.  பாடல் பிடித்துப் போய் காணொளியைப் பார்த்தேன்.  பார்த்ததில், உள்ளே என்றோ உறங்கிப் போன அதிர்வுகளை அலையாய் எழுப்பிவிட்டது பாடல்.  ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னால் சுற்றும் நாயகன் பார்வையில் காட்சி அமைக்க பட்டிருந்தது.  தான் உண்டு தன் வேலை உண்டு என்று வேறு எங்கும் சிதறாத பார்வையோடு, கொஞ்சம் ஆண்மை கலந்த உடல்மொழியோடு, வாரி சீவிய ஜடையோடு எந்தக் கருமமும் பூசாத இயற்கை அழகோடு நாயகி நடப்பது என் ஆழ்மனதில் புதைந்திருந்த அவளை மீண்டும் நினைவுகளின் தளத்திற்கு நெம்பி எடுத்து வந்தது.  'சந்தன மாரி' மனதின் ஆழ்துளை கிணற்றில் இருந்து எட்டிப் பார்த்தாள். உழவன் நிறம், படிய வாரிய தலைமுடி, எண்ணெய் மினுமினுப்பு, வட்டத்தின் மையத்தை மட்டுமே குறிவைக்கும் அம்பின் பார்வை, குளத்தின் நடுவில் தெரிந்தும், தெரியாமலும் தாவிக்குதிக்கும் மீன் போல் கருப்பில் சின்னதாய் ஒரு பொட்டு, அரசுப் பள்ளியின் வெள்ளை நீல சீறுடை, இதோ இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருக்கும் விமானப்பணிப்பெண்களின் சீறுடையை விடவும் அழகு.   

“நெஞ்சுல வீசும் சந்தன வாசம்” என்ற வரி, அவளைக் கடந்து போகும் அந்த வினாடிப்பொழுது வரும் வாசணையை இந்த கணத்தின் உணர்விற்கு கொண்டு வந்தது.  அந்தப் பாடலில் வரும் நாயகன் தான் நான்.  அவள் பார்க்கிறாளோ இல்லையோ  என் பார்வையை விட்டு அவளை விலக்கியதில்லை.  120 degree பார்க்க கூடிய விழிகள் அவள் இருக்கும் போது மட்டும் 5 degree குவியத்துக்குள் சுருங்கி ஒடுங்கி விடும் ஆனாலும் ஏதேச்சையாய் அவள் திரும்பும் போது, நேர்கோட்டில் அவள் கண்கள் வரும் நொடி, கிரஹணமாய் என் கண்கள் மூடிக்கொள்ளும்.  இன்று வரை எந்த பெண்ணின் பார்வையையும் தவிர்த்ததில்லை.  என்னைப் பார்க்க மாட்டாளா என்ற ஏக்கம் இருந்த போதும் கூட அவள் பார்க்கையில் மட்டும் அதை எதிர்கொள்ள முடியாமல் நெழிந்திருக்கிறேன். முரண்கள், காதலின் அரண்கள்.

SECURITY CHECK -ற்கு வந்து நின்றேன்.  இப்போதெல்லாம் விமான பயணங்களுக்கு உகந்த உடை வேஷ்டியும், பட்டாப்பட்டியும் தான் என்று தோன்றுகிறது.  Jacket, shoe, Belt என்று ஒவ்வொன்றையும் கலட்டுவதற்குள் உலகத் தீவிரவாதிகள் அனைவரையும், அவர்களுக்கு ஆயுதம் விற்று பிறகு உலக சமாதானம் என்று வரிந்து கட்டும் அமெரிக்காவையும் உள்ளுக்குள் அசிங்கமாய் 5 நிமிடமாவது திட்டி இருப்பேன்.  Belt கலட்டுவது ஓரளவு எளிது, அனால் மறுபடியும் சட்டையை தூக்கி, இத்தனை நேரம் மறைத்து வைத்திருந்த எனது Single Pack ஐ உலகத்திற்கு எடுத்துக் காட்டி மீண்டும் மறைத்து அந்த Belt ஐ அணிவதற்கு, வேஷ்டியை கலட்டி கழுத்தில்  போட்டுக் கொண்டு பட்டாபட்டியுடன் நடந்து விடலாம்.  பட்டாபட்டி என்று ஏளனமாய் பேசிய அனைவரும் இன்று Shorts என்று சொல்லப்படும் கோடு போடாத பட்டாபட்டிகளில் தான் அலைகின்றனர்.  உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சாஸா  மூமண்ட். 

சோதனை சாதனத்திற்குள் கைப்பையைத் தள்ளி விட்டு, Scanner கீழ் நடந்து சென்று, கைகளை அகல விரித்து,”என் உயிர் நீதானே” என்பது போல் நின்றேன்.  சோதனைக் கருவி என் மீது படர, எத்தனை மனிதரின் வாசம் பிடிக்கிறது இந்த கருவி என்று தோன்றியது. எவருடைய வியர்வை நாற்றத்திலாவது முகம் சுளித்து இருக்குமா இது. 'குளிச்சிட்டு வாங்கடா' என்று என்றாவது அது கத்தினால் எப்படி இருக்கும்! யோசனையில் சிரித்துக் கொண்டே, பரிசோதகர் சற்று நிமிர, “மாரிமுத்து” என்று பெயர் பொறிக்கப்பட்ட அவர் சட்டையைப் பார்த்தேன்.  நாம் சிந்திப்பதையே உலகம் நமக்கு தருகிறதா இல்லை நமக்கு உலகம் தருவதையே மனம் சிந்திக்கிறதா! புரியவில்லை.

நான் புறப்பட்டுவிட்டதை கைப்பேசியில் சுற்றம் மற்றும் நட்புகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு, விமானம் ஏற ஆயுத்தமானேன்.  வெளியில் மெல்லியதாய் தூரிக் கொண்டிருந்தது! மழை! மாரி! உள்ளும் புறமும்.  பள்ளி நாட்களில் ஒருமுறை இப்படி ஒரு மழை இன்னும் நினைவில் இருக்கிறது.  வார நாட்களில் முழுவதும் மாரியை பார்ப்பது சுலபம், பள்ளி செல்வதால். சனி, ஞாயிறுகளில் அம்மா என்னை வெளியில் அதிகம் அனுப்பியதில்லை.  மாரியை இரண்டு நாட்கள் பார்க்கவே முடியாது.  வெள்ளிக்கிழமை மாலை, கோவிலுக்கு போய்விட்டு நண்பர்களை பார்த்து வருவதாய் சொல்லி மாரியின் வீட்டுப்பக்கம் போய்விடுவேன்.  மாரியின் அப்பா அம்மா துப்புறவு தொழிலாளர்கள்.  அவர்கள் இருந்த தெருவில் பெரும்பாலும் கூலித்தொழிலோ, துப்புறவு தொழிலோ செய்பவர்களே இருந்தனர்.  பெரும்பாலான என் நண்பர்கள் அங்கே வராமல் இருந்ததற்கான காரணம் அந்த வயதில் புரியவில்லை.  சாதி மதம் பற்றி அம்மா சொல்லிக் கொடுத்ததில்லை.  எங்கள் காட்டில் வேலை செய்த யாரையும் ஒருமையில் அழைத்ததில்லை.  இளையவரை பெயர் சொல்லியும், பெரியவரை முறை சொல்லியுமே அழைத்ததை பார்த்திருக்கிறேன். பிறக்கும் முன் கருமுட்டையும்  மரித்த பிறகு உடல் கட்டையும் எல்லாருக்கும் ஒரே இயல்பில் இருந்தாலும் இடைபட்ட காலத்தில் மனிதர் ஒரே இயல்பில் இருப்பதில்லை என்பது, இருபது வயது தாண்டிய பிறகே கண்டறிந்தேன்.  மாரி, சமுதாயம் வரைந்து வைத்த முட்டாள் கோடுகளுக்கு மிகவும் கீழே எங்கோ வசித்தவள் என்று அப்போது விளங்கவில்லை.  ஆசிரியர்கள் சிலர் பெரும்பாலும் வகுப்பறை வேலைகள் எல்லாம் மாரியிடமும் அவள் தெருவில் இருந்து வரும் செந்திலிடமுமே கொடுத்தது அப்போது ஏன் என்று புரியவில்லை.  Class Leader போல் அது ஒரு பதவி என்றே நினைத்தேன்.  சிலமுறை யாராவது வாந்தி எடுத்தால் அதில் மண்ணை கொட்டி, குப்பை கூடையில் அள்ளிக் கொட்டி சுத்தம் செய்வது கூட மாரி செய்திருக்கிறாள்.  


     அட, மாரியை பற்றிய எண்ண ஒட்டங்கள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு ஓடிக் கொண்டிருக்கின்றன.  இதோ இந்த தூரல் பார்த்ததும், நினைவில் வந்த அந்த மழை நாள் அவளை பற்றிய மற்ற நினைவுகளில் பின்னுக்கு போய்விட்டது.  அது ஒரு வெள்ளிக்கிழமை.பள்ளி நாட்களில் மட்டுமே அவளை பார்க்க முடிந்ததால், விடுமுறை நாட்கள் பிடிக்காத ஒரே மாணவன் நானாகத்தான் இருந்திருப்பேன்.  சனி, ஞாயிறுகளில் அவளை பார்ப்பது மிகவும் கடினம்.  படிப்பில் கவனம் சிதறி விடக்கூடாது என்பதில் என் அம்மா மிகவும் கவனமாக இருந்ததால் வெளிளே அதிகம் அனுமதிக்க மாட்டார்.  அவளைப் பார்க்காத வார விடுமுறைகள் கொடுமுறைகள் என்றே கழிந்தன.  வெள்ளிக்கிழமை மாலை மாரியம்மன் கோவிலுக்கு போக இருந்த அனுமதியை அவளைப் பார்க்க எடுத்துக் கொண்டேன்.  எந்த அம்மனைப் பார்த்தால் என்ன. அவள் தெருவில் வசித்த செந்திலிடம் அதற்காகவே நட்பானேன். அவன் நல்ல நண்பனாய் பின்னாளில் ஆனது தனிக்கதை. செந்திலுடன் அந்த தெருவில் சுற்றினாலும் மாரியைப் பார்ப்பது எளிதாய் இருந்ததில்லை. பெரும்பாலும் அவள் வீட்டை விட்டு வரமாட்டாள். அதிர்ஷ்டம் இருந்தால் எதற்காகவாவது வெளியே வரும் அவளை பார்க்கும் அந்த விநாடிப் பொழுதுகள் அடுத்த இரண்டு நாட்களுக்கு போதுமாய் இருந்தன.  பள்ளி சீறுடை அல்லாத அந்த பாவாடை சட்டைகளில் என் கண்ணிற்கு மாரி தேவதையாகவே தெரிந்தாள்.  
"தேவதைகள் தெருவில் நடந்தால் இப்படித்தான் இருக்கும்.அப்போது என்றோ தோன்றிய கவிதை இன்னும் நினைவிருக்கிறது.  

"உன்னைப் பெற்றதால் உன் அம்மா கூட டாவின்சி தான்" 
என்றொன்று எழுதினேன் அந்நாளில். பின்னாளில் பாரிஸில் உள்ள 'லீ லாவ்ரே' அருங்காட்சியகத்தில் மோனலிஸா ஓவியம் பார்த்த போது அந்த கவிதை ஞாபகம் வந்தது.  ஆனால் மோனலிஸா ஏன் அழகியென்று எனக்கு புரியவில்லை. எத்தனை முயன்றாலும் டாவின்சி மாரியின் அம்மா ஆகமுடியாது என்று அன்று தோன்றியது.

அவளைப் பார்ப்பதென்பது, கோவிலில் தீபஆராதணை நேரம், அது வரை சும்மா இருந்தவர்  கூட அணிச்சையாய் பரவசம் ஆனது போல் கண்ணத்தில் போட்டு கொள்வார்களே,  அது போல் பழக்கத்தில் வந்த பரவசம் அல்ல.  அபிராமிபட்டர் அம்மனை நினைவில் நிறுத்தும் போதெல்லாம் பரவச நிலையில் பித்து பிடித்தவர் போல் இருப்பாராமே, அது போல. அந்த வெள்ளிக்கிழமை மாலை மேகமூட்டமாய் இருந்தது.  'மழை வரும், அதனால் வெளியே போக வேண்டாம்' என்று அம்மா சொன்னாலும், 'பத்து நிமிஷத்துல வந்துருவேம்மா' என்று கிளம்பினேன்.  செந்திலோடு சேர்ந்து சுத்தி சுத்தி வந்தும் அன்று மாரியின் தரிசனம் கிடைக்கவில்லை.  பெரிய தூறலில் தொடங்கிய மழை வேகம் பிடித்தது.
இதற்கு மேல் அவள் வெளியே வர வாய்ப்பில்லை என்றுணர்ந்து சோகமாய் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினேன். பாதி தூரம் வந்திருந்த போதுதான் கவனித்தேன், நிறைய வீடுகளில் பிள்ளைகள் வாசலில் நின்று மழையை பார்த்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தனர்.  இருட்டில் மின்னல் போல தலைக்குள் ஒரு பளிச்.  திருப்புடா சைக்கிள, சோர்ந்திருந்த முகத்தில் ஆயிரம் வாட்ஸ் இப்போது.  Hope, நம்பிக்கை நமது வேகத்தை எப்படி இரட்டிப்பாகும் என்பது அன்றைக்கு நிகழ்வு, இன்றைக்கு நினைவு. துவண்டு விழும் நேரங்களில் நம்பிக்கையே தூண்டுகோள். உலகத்தையே நனைத்து மூழ்கடித்து விட வேண்டும் என்பது போல் மழை கொட்டித் தீர்த்தது.  அடாத அந்த மழையில் எவரும் இல்லாத சாலையில் ஒருவன் மட்டும் ஒலிம்பிக் வீரன் போல் வேகமெடுத்துக் கொண்டு. சைக்கிளின் வேகத்தோடு இதயமும் சேர்ந்திருந்தது. அவளைப் பார்க்கும் அந்த ஒரு நொடியை எதிர்பார்த்து இருக்கும் அத்தனை நொடிப்பொழுதும் அதே உள்ளக்கிளர்ச்சியை தருகின்றது. மழை நீரில் கை நனைக்கும் அவளை மின்னல் வெளிச்சத்தில் பார்க்க போகின்றேன். என்னையும் அவளையும் ஒரே மழை இணைக்க போகிறது. அவள் மேல் விழும் துளியும் என் மேல் விழும் துளியும் மேலே எங்கேயோ ஒன்றோடு ஒன்று மோதி ஒன்றாய் இருந்திருக்கும். அவள் தெருவுக்குள் நுழையும் போது இதயம் இன்னும் கனமாகி இருந்தது. "மழை வருது மழை வருது குடை கொண்டு வா, மானே உன் மாராப்பிலே", இன்றும் அன்றும் அதே பாடல் உள்ளுக்குள். இருட்டுக்குள் அவள் நெற்றியின் ஒற்றை பொட்டை காண கண்கள் தவித்தன. அவள் வீடருகில் வந்து விட்டேன். கைகளும், கால்களும் மூளையின் கட்டுப்பாட்டை கடந்து விட்டிருந்தன. மழையா வியர்வையா தெரியாது, உடல் எங்கும் ஈரம். இருட்டை பிழிந்து வந்த அந்த மின்னலில், அவள் வீட்டுக்கதவு அடைபட்டிருந்தது தெரிந்தது. இப்போது பெருமழை, அதே வேகத்தில் என் விழிகளில்.

"Passengers with Infants and children please go to the boarding gate" பயணிகளை ஏற்ற தொடங்கியிருந்தனர்.  எத்தனை  மனிதர்கள் தினமும் பயணிக்கின்றனர். என்ன காரணத்திற்காக பயணித்து கொண்டே இருக்கிறார்கள் இவர்கள்? ஒரு வேளை ஆதியில் மனிதன் நாடோடியாய் அலைந்ததாலேயோ என்னவோ இன்னும் பயணப் பட்டு கொண்டே இருக்கிறான். இன்று மனிதர்கள் இலக்கை பற்றிய கவலையிலும் சிந்தனையிலும் பயணத்தை ரசிக்க தவறி விடுகிறார்களோ என்று தோன்றுகிறது. கண்ணாடி வழியே வெளியே இருந்த இருட்டையும், நடு நடுவே ஏறியும் இறங்கியும் கொண்டிருந்த விமானங்களையும் பார்த்துக் கொண்டிருந்த அந்த குழந்தை என்ன எண்ணிக் கொண்டிருந்தது?  குழந்தைகள் ஒரு நாளில் 400க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்குமாம்.  அத்தனை கேள்விகளுக்கு நடுவிலும், இது இருள், இது விமானம், இது மனிதர்கள் என்று இருப்பை எந்த எதிர்ப்பும் இன்றி உள்வாங்கிக் கொண்டிருக்குமோ!  இன்னும் ஐந்து நிமிடம் கழித்து போனாலும் அதே இருக்கைதான், ஆனால் கூட்டத்தோடு முண்டியடிக்க விரும்பாத எல்லாரையும் போல் அந்த குழந்தையின் அம்மா அவளை இழுத்துக் கொண்டு நகர்ந்தார். வெளியே திரும்பி பார்த்துக் கொண்டே மனமில்லாமல் நகர்ந்தது குழந்தை. "planeல போலாமா" என்று அந்த அம்மா சந்தோசமாய் சொன்னதும், மீண்டும் உற்சாகத்தோடு அடுத்த பக்கம் திரும்பிவிட்டது குழந்தை. பிடித்தத்தையும் , கிடைக்காததையும் எவ்வளவு எளிதாய் கடந்து போய்விடுகிறார்கள் குழந்தைகள். "குழந்தை ஞானி இந்த இருவர் தவிர இங்கே சுகமாய் இருப்பவர் யார் காட்டு.",  வைரமுத்து காசுக்கு எழுதினாலும் சில உண்மைகளை சொல்லித்தான் இருக்கிறார்.  கைப்பையை தூக்கி கொண்டு நானும் நகர்ந்தேன்.

விமானம் பேரிரைச்சலுடன் பெருவெளியை நோக்கி உடலை தூக்கிக் கொண்டு பறந்தது. யாரோ ஒரு சிலரின் அறிவு, பறப்பதை சாத்தியப்படுத்தி, யாரோ ஒரு சிலரின் ஆசை, அதை மனித தேவையாக்கியிருக்கிறது.  லட்சக்கணக்கான வருடம் பறக்க முடியாமல் இருந்த மனிதன் எதை இழந்தான் என்று தெரியவில்லை.  கண்களை மூடினேன்.  மேகத்திற்கு நடுவில் மீண்டும் மாரி.  

ஆறாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை தான் மாரியை எனக்குத் தெரியும்.  நன்றாக படிப்பாள், ஒரு சில ஆசிரியர் மட்டுமே பாராட்டினர்.  எல்லா பதிலும் சொல்லுவாள்,  அதனால் பலர் அவளிடம் கேள்விகள் கேட்டதில்லை. அந்த காலத்தில் ஊரில் பெரும்பாலும் ஆண்பிள்ளைகள் பெண்பிள்ளைகளிடம் சகஜமாய் பேசாமலேயே இருந்தனர்.  மாரியிடம் பெண்பிள்ளைகள் பலரே பேச மாட்டார்கள்.  மாரி 5 ரேங்க் உள்ளே வருவாள், முதலாய் வந்தது போல் நினைவில்லை.  விளையாடும் போதும் அவளை எல்லாரும் சேர்த்துக் கொண்டதில்லை.  அவளுடன் பேசவும் விளையாடவும் செந்தில் எப்போதும் இருந்தான். அனால்  தனிமையிலும் கூட அவள் மகிழ்ச்சியாக இருந்தது போலவே இருந்தது. உள்ளே எப்படி இருந்திருப்பாள் என்ற தெரியவில்லை. தெரிந்திருந்தாலும் மற்றவர்கள் அவளை சேர்த்திருப்பார்களா தெரியவில்லை. ஒரே வகுப்பறைக்குள் பல வகுப்புக்குள் இருந்திருக்கிறது. கண்ணுக்கு தெரியாத அந்த கோட்டிற்கு அந்த பக்கமே அவள் இருந்தாள்.  அவளை யாரும் சேர்ப்பதில்லை என்ற கருணையும், அவளின் அறிவின் மீதிருந்த மரியாதையும் நாளுக்கு நாள் அதிகமாகி என்னவென்று பெயர் சொல்லாத உணர்வாய் மாறியிருந்தது. அதையே  முதல் காதல் என்று இன்று நான் சொல்லிக் கொள்கிறேன். அவள் கைகட்டி பாடம் ஒப்புவிப்பதை ரசித்தேன், அவளது  நேரான பார்வையை பலர் திமிர் என்று சொன்னாலும் ரசித்தேன். நவாஸ் Tailor ஐ விடவும், அளவாகவே வார்த்தைகளை கத்தரித்தாள், அதையும் ரசித்தேன்.  பிடித்ததை எல்லாம் ரசிக்க தொடங்கினேன், பிறகு அவளை ரசிப்பது மட்டுமே பிடிக்க தொடங்கியிருந்தது. obsession என்று சொல்லி  டாக்டரிடம் அழைத்து செல்லும் அளவிற்கு அப்போது மக்களுக்கு அரைகுறை தெளிவு இருந்ததில்லை. அதனால் எவரும் அதை பெரிதாய் கண்டுகொள்ளவில்லை. முன்னவே கவிதை எழுத வரும், ஆனால் அதிகமாய் எழுத ஆரம்பித்தது அவளால் தான்.  Unconditional Love என்பதையும் அவளே கற்றுக் கொடுத்தாள். அவளை பார்க்காத போது காயப்பட்டேன். அரசல் புரசலாக நான் அவள் பின்னால் சுற்றுவது அவளுக்கு தெரிந்ததும் தெரியாதது போலவே இருப்பாள். அது கொஞ்சம் வலித்தாலும் கூட அவள் மீது அன்பு அதிகமாகியதே ஒழிய குறையவில்லை. காதல் பாடல்களே கேட்டுத் திரிந்தேன்.  கவிதைக்கென ஒரு நோட் வாங்கி கிருக்கித் தள்ளினேன். 
"இத்தனை இரவிலும் இருவர் மட்டும் விழித்து கிடக்கிறோம்.  நானும் உன் நினைவுகளும்" என்று பிதற்றினேன். ஒரு நாள் விடாது பள்ளி சென்றேன். மழையில் அழுது வீடு சேர்ந்தேனே, அந்த நாள் அன்று காய்ச்சல் வந்து விட்டது. அம்மாவிடம் சொன்னால் திங்கட்கிழமை பள்ளி செல்ல முடியாதோ என்று நினைத்து சொல்லவே இல்லை.  "அண்ணே, காச்ச மாத்திரை ஒன்னு குடுங்க" என்று மருந்தகரை மருத்துவராக்கி இருந்தேன்.  இரண்டு வருடம் எப்படி நகர்ந்தது தெரியவில்லை.  மாரியோடு திருமணம், எங்கள் மகள் அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு என்பது வரை கனவில்  கரைந்திருந்தேன்.  அப்பாவின் வேலை மாற்றம், சென்னை என்னை வாடா வெண்ணெய் என்று சொல்ல வைத்தது.  உடைந்து போனேன், என் கவிதை நோட்டுக்குள் நான் கட்டிய காதல் கோட்டை ஒரு புள்ளியாய் நொருங்கிப் போனது.  அழுதேன், வேண்டாம் என்று கதறினேன்.  அப்பாவின் கைரேகை முதுகில் ஏறியது தான் மிச்சம். செந்திலை உண்மையாய் கட்டிக்கொண்டு அழுதேன்.  நகரத்தில் நுழைந்த நான் படித்தேன், பட்டதாரி ஆனேன்.  பல இஞ்சினியர்கள் போல் வெளிநாடுகள் சென்றேன். காலம் ஓடியது. கல்லூரியில் படித்த ருக்மணியை காதலித்தேன்.  அதிசயமாய் என்னையும் ஒருத்தி திரும்ப  காதலித்தாள்.  மாங்கல்யம் சுபம் என்று வாழ்க்கை அழகாய் ஓடிக் கொண்டிருக்கிறது. பிறவிகளில் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை, அனால் ஒரு வேலை பல பிறவிகள் உண்மை என்றால், ஏதோ பிறவியில் நான் செய்த பயன் ருக்மணி எனக்கு மனைவியாய் வந்தது. 

எப்போதோ அப்பா வாங்கியிருந்த ஒரு நிலம், அதை மாமாவிற்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டி இத்தனை வருடங்கள் கழித்து ஊருக்கு போகின்றேன்.  மாமா கஷ்டகாலத்தில் கை கொடுத்தவர்.  அவருக்கு உதவியாய் இருக்கும் என்று அந்த நிலத்தை மாமாவையே வைத்துக் கொள்ள சொன்னார் அம்மா.  இத்தனை வருடம் மாமாவிற்கு அம்மாவின் வாக்கே போதுமானதாய் இருந்தது, ஆனால் அவர் பிள்ளைகளுக்கு இன்று பத்திரம் தேவைப்படுவதாலேயே இந்த பயணம். பரவாயில்லை. இந்த பயணத்தில் மாரியை பற்றி கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன், செந்திலைத் தேடி கண்டுபிடித்திருந்தேன்.  Face Book ஐ வெறுத்தாலும்,  பழைய நட்புகளை தேடித் கொடுத்த காரணத்தால் நன்றி சொல்வதுண்டு.  மாரி இன்னும் மாறவில்லை போலும், தானுண்டு தன வேலையுண்டு என்று இருப்பாள் போல. Face Book ம் Google ம் கூட அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. அவள்  படிப்பாளி, எங்காவது இந்நேரம் அவளும் வானத்தில் பறந்து கொண்டிருப்பாள். நான் வரும் நேரம், செந்திலும் ஊருக்கு வருவதாய் சொன்னான்.  நல்லவன், இன்னும் என் மீது அன்பாய் இருக்கிறான்.  மாரியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.   ஒரு Hello சொல்ல முடிந்தால் சிறப்பு, இல்லாவிட்டாலும் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தவாவது எங்கிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நேரம் எனது புறக்குரலி வேறு, "ஏ கோலி சோடவே" என்று ஆரம்பித்திருந்தது.  பார்ரா, மீண்டும் மாரி, மாரி 2 என்று சிரித்துக் கொண்டே உறங்கிப் போனேன். குத்துப்பாட்டை கேட்டால் கூட பழைய காதலி நினைவில் தூக்கம் வருகிறது.

அடுத்த நாள் மதியம் வரை பாபுவுடன் சார்பதிவாளர் அலுவலகம் சுற்றித் திரிந்தேன்.  பாபு மாமா பையன். சீ, அப்படி சொன்னால் வேறு மாதிரி அர்த்தம் வருகிறது. அவன் மாமா பையன் தான், ஆனால் நான் சொல்ல வந்தது மாமாவின் பையன் என்று. மாலைக்குள் வேலை முடிந்திருந்திருந்தது. இரவு ஹோட்டலில் அறை முன்பதிவு  பண்ணியிருந்தேன். மாமா இருந்திருந்தால் வீட்டிற்கு போயிருப்பேன்.  பாபுவும் அழைக்கவில்லை.  அதுவும் நல்லதே.  காலைப்  பேருந்தில் வருவதாய் செந்தில் சொல்லியிருந்தான். ஒரு நாள் முழுவதும் அவனோடு ஊர் சுற்ற வேண்டும், ரகுபதி விலாஸில் புரோட்டா சாப்பிட வேண்டும். முடிந்தால் அவர்கள் வசித்த தெருவை போய் பார்க்க வேண்டும். காலையில் கடிகாரத்திற்கு முன்னதாகவே விழித்துக் கொண்டேன். ஆட்டோ எடுத்துக் கொண்டு செந்திலை அழைத்து வர புறப்பட்டேன். இப்போது அவன் பெரிய அரசு அதிகாரி. ஆனால் ஆள் மாறவே இல்லை. தொலைபேசியில் பேசிய போது  கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவே இல்லை. என்னைப் பார்க்க அவன் விடுப்பெடுத்து வரவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும்  வருகிறான். நல்ல நண்பன். முன்னவே அவனைத் தேடிப்பிடித்திருக்க வேண்டும்.பரவாயில்லை, இன்னும் வாழ்க்கை இருக்கிறது. 

என்னை அவன் பேருந்து நிலையத்தில் எதிர்பார்க்கவே இல்லை. FB இல் போட்டோ பார்த்திருந்தாலும் நேரில் வேறாய் இருந்தான். அரசு அலுவல் நண்பனின் பருமனில் தெரிந்தது. 
'டேய் மாப்ளே, எப்படி இருக்க' என்று அணைத்துக் கொண்டோம்.  முன்னதாய் இதே போல் ஓர் அணைப்பில் கலங்கிய விழி இன்றும் கொஞ்சமாய் நனைந்தது.   

'என்ன தம்பி, வேல ரொம்ப போல இருக்கு?', அவன் தொப்பையை தடவி சிரித்தேன்.  

'வந்ததும் மானத்த வாங்காதடா,இதெல்லாம் இல்லைனா மதிக்க மாட்டானுங்கடா' என்று சிரித்தான்.   

'அப்ப இன்னும் பெரிய ஆபீஸரா வளர வளர தொப்ப திண்டிவனம் போய்டும் போலயேடா',   இருவரும் கண்ணில் நீர் வர சிரித்தோம். சிறு வயது நண்பர்களுடன் அப்படியே பேச முடிகிறது. அவன் மனம் கோனுமோ என்று அதிகம் யோசிக்கத் தேவையில்லாமல் இருந்தது.  இயல்பாய் இருந்த காலத்தில் உருவான நட்பு, இயல்பாகவே இருக்கிறது.  பத்து பேர் கைகட்டி மரியாதை கொடுக்கும் ஒருவனை சரலமாய் 'போடா ங்கொண்ணியான்' என்று திட்ட முடிகிறது.  பதிவான எனது பாஸ்போர்ட் பக்கங்களோ, தினம் கையெழுத்திடும் அவனது பச்சை மையோ எங்களுக்கு இடையில் எதையும் மாற்றவில்லை.
 “Bus Stand லயே டீ குடிச்சிட்டு போலாம் மாப்ள'.  இளங்காலை, டீக்கடை பாடல், அவ்வப்போது வரும் பேருந்து சத்தம், இதோடு ஒரு டீ யாருக்கு சலிக்கும்.
'தம் அடிப்பயாடா', என்றேன்.
'இல்ல மாப்ள முன்னாடி அடிச்சேன், பையன் பொறந்த அப்புறம் நிப்பாட்டிடேன், நீ ?' என்றான்.
'College ல அடிச்சதோட சரிடா, அப்புறம் தோன்றதில்ல', நானும் ரவுடிதான்னு சொல்லி வச்சேன்.

சென்னை சென்றது, படித்தது, பட்டம் பெற்றது, பல நாடுகள் சுற்றியது, அப்பா அம்மா தவறியது என இத்தனை வருட கதைகளையும் சென்னேன்.  செந்திலும் அவன் கணக்கிற்கு , அவன் படித்த கதை,  பிறகு கல்லூரி சென்றது, அங்கு அவமானங்கள் பல கண்டது, அரசு வேலையில்  சேர்ந்தது, உயர்சாதி என்று அங்கிகரிக்கப்பட்டாலும் அதை தலைமயிர் என தூக்கி எறிந்துவிட்டு அவனுக்காக காதல் மனைவி அணு வந்தது என்று  அவன் கதையை சொல்லி முடித்த போது மணி 12 ஆகி இருந்தது.  
'Sorry மாப்ள, உன்ன முன்னவே Reach பண்ணி இருக்கணும்', உண்மையாக வருந்தினேன்.
'நானுந்தானடா தேடி இருக்கலாம். Life மாற மாற வேற வேற வேல வந்துறுதுடா, என்ன பன்றது! இப்பவாச்சும் பாத்தோமே, விடு', என்றான்.

'அது சரி மாரி எப்ட்றா இருக்கா?' என்று இழுத்தேன்.

'டேய் இப்பதான் தெரிது என்ன எதுக்கு தேடி கண்டுபுடிச்சனு, ஏண்டா இன்னமும் நான் தான் ஊறுகாயா? ' என்று வம்பளந்தான்.

'அடப்பாவி, புத்திசாலிடா நீ கண்டுபிடிச்சிட்ட, எங்க இருக்கா சொல்லு மாப்ள', என்றேன்.

'சொல்றது என்ன,  கூப்டே போறேன் வா' என்றான்.   

இத்தனை வருடம் கழித்தும் விளையாட்டாய் இதை கையாளுகிறது பால்ய நண்பனால் தான் முடியும். 'உனக்கு கல்யாணம் ஆயிருச்சு, அவளுக்கு கல்யாணம் ஆயிருச்சு, இப்ப எதுக்கு உனக்கு அவள பத்தி?' , என்று விளையாட்டாய் கூட கேக்கவில்லை. ஆனால் மாரி இன்னும் ஊரிலேயே இருப்பது ஆச்சர்யமாய் இருந்தது.

'இன்னமும் இங்கதான் இருக்காளா?' உருவம் உயர்திக் கேட்டேன்.

'ஏன்டா, இதுக்கென்ன? Singapore இல்லைனாளும் இதுவும் Town தான்'.   

'சீ, அது சொல்லல டா, அவ படிப்பாளியாச்சே, ஏதோ வெளியூர்ல இல்ல வெளிநாட்ல இருப்பானு நெனச்சேன்டா,'. உண்மையாகவே அப்படித்தான் நினைத்திருந்தேன். 

'மாப்ள, திறமை இருந்தா மட்டும் எல்லாம் மேல வந்துட முடியாது.  இன்னைக்கு இந்த இடத்துக்கு வரதுக்கு முன்னாடி, ஏன் இப்ப கூட என்ன அவமானப் படுத்துறவன் இருக்கத்தான் செய்றான்.  உனக்கு இதெல்லாம் தெரியுமானு தெரியல மாப்ள.  வா, மாரிய பாத்துட்டு வரலாம்' என்றான்.   
செந்தில் சொன்னதை கேட்டதும் எனக்கு என்னென்னவோ தோன்றியது. இதற்கு மேல் விவரம் கேட்கவும் தோன்றவில்லை. ஒருவேலை மாரியின் வாழ்க்கையில் பெரியதாய் ஏதோ நடந்திருக்குமோ என்ற பயம் வந்தது.  அவளைப் பார்க்காவிட்டால் கூட பரவாயில்லை, அவளது நினைவுகள் இன்றுவரை சுகமாய் இருக்கிறது. ஒரு வலியோடு அவள் நினைவுகள் எனக்குள் இருக்க வேண்டாம். பேசாமல் கிளம்பி விடலாம் என்று யோசித்தேன்.

'மாப்ள அவள கண்டிப்பா பாக்கனும்னா இல்லடா, நல்லா இருக்காளான்னு தெரிஞ்சுகிட்டா போதும் அதான் கேட்டேன்',  

'டேய், அது நல்லா தான் இருக்கு', என் முகத்தில் இருந்த கவலையை பார்த்து புரிந்து கொண்டவனாய், 'மாப்ள, மாரி ஒரு fighterடா,அத அப்படியெல்லாம் இந்த வாழ்க பொரட்டி போட முடியாது, வாடா', நம்பிக்கையாய் சொன்னான்.

Auto பிடித்து Holy Angel School க்கு போக சொல்லி ஓட்டுனரிடம் கேட்டுக்கொண்டான். School Teacher ஆகிட்டாளோ என்று யோசித்தேன்.  எதுவாய் இருந்தாலும் நேரில் போய் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். நன்றாய்  தானே இருக்கிறாள் என்ற தைரியத்தில் எதுவும் கேக்காமலேயே செந்திலுடன் போனேன்.

'ஏன்டா, Class நடக்கும் போது வெளில வர முடியுமா' என்றேன் அப்பாவியாய். 

'டேய் அது Office ல வேல பாக்குதுடா. Teacher இல்ல'.  ஒரு சிறிய நொடி இடைவெளிக்கு பிறகு அவனே தொடர்ந்தான்.  'நல்லா படிச்சிட்டிருந்த பொண்ணுடா, நீ எட்டாவதுல சென்னை போயிட்ட, உனக்கு தெரிஞ்சிருக்காது, 9ஆம் Class படிக்கும் போது அவுங்க அப்பா தவறிட்டாரு.' பெரிய உணர்ச்சி ஏதும் இல்லாமல் சொல்லினான்.

'எப்படிடா அவ்ளோ சின்ன வயசிலேயே? அவருக்கு ஏதோ வியாதியாடா?', பழைய செய்தி ஆனாலும் எனக்கு புதிதென்பதால் இன்று நடந்தது போலவே பதறினேன்.

'ஊரோட சுகாதாரத்துக்கு வேல பாக்குறவனுக்கு, அவன் உடம்புல என்ன வந்தாலும் பாத்துக்க முடியாதுடா, அதான் உண்மை.  தோட்டி னு சொல்லி எல்லாரும் தள்ளி வச்சுதான் பாப்பாங்க. சின்ன பிள்ளைங்க வெளில போனா கூட அம்மா தான் மொகம் சுளிக்காம கழுவி விடுவாங்க. ஊரே போற அசிங்கத்த முகம் சுளிக்காம Clean பண்ணுறவன், பாக்குற எல்லாருக்கும் தோட்டி தான். Machine அ வச்சு செய்ய வேணாம், கொறஞ்சது கைக்கு ஒரு gloves,  காலுக்கு ஒரு Shoe, பாதுகாப்பா ஒரு  Dress உண்டா சொல்லு?' அவன் கண்களில் கோபம் தெரிந்தது. ஒரு அரசு ஊழியனாய் இருந்தும் இதற்க்கு எதுவும் செய்ய முடியாத ஆற்றாமை அவன் சொற்களில் தெரிந்தது.

எனக்கும் உள்ளுக்குள் சுருக்கென்றது. வளர்ந்த நாடுகள் பல சுற்றி இருக்கிறேன்.  தெரு கூட்டும் வேலையை இயந்திரங்களே செய்கின்றன.  மிச்சம் மீதி சுகாதார வேலை செய்பவர்கள், அதற்கு தேவைப்படுகிற ஆடைகளும் கவசங்களும் அணிந்தே வேலை செய்கின்றனர்.  எல்லாருடைய உயிரும் ஒரே போல தான், அல்லது கிட்டதட்ட ஒரே போல் தான் அந்தந்த அரசாங்கத்தால் பார்க்கப் படுகிறது. வீட்டு கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு கையுறைகள் கிடைக்கின்ற காலத்தில் பொது கழிப்பறை சுத்தம் செய்பவர் வெறும் கையுடனும், அணியில்லாத கால்களுடனேயுமே வேலை பார்க்கின்றனர்.  பெறும்பாலான சுகாதார வேலை ஒரு சாதியினரே பார்ப்பதும், அந்த வேலைக்குரிய பாதுகாப்பை அரசாங்கமோ பொதுமக்களோ பெரியதாய் எடுத்துக் கொள்ளாததும் எதேச்சையான நிகழ்வாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

'அப்பா செத்ததும், ஒரு வருமானம் போச்சே!, அவுங்க அம்மா ஆயாவா வேல பாத்த School Teacher ஒருத்தவுங்க வீட்ல வேலைக்கு போக ஆரம்பிச்சுடுச்சு மாரி, தம்பி தங்கச்சிய பாக்கனுமே.'
ஒரு குழந்தை பசிக்காக புத்தகத்தை வைத்து விட்டு, பாத்திரத்தை எடுப்பது எத்தனை பெரிய வன்முறை. எவ்வளவு வேதனை கொடுத்திருக்கும், அதுவும் மாரி படிப்பில் ஆர்வம் உள்ள பெண்.

'குடும்ப கஷ்டம்! மாமா மகன் மருந்தடிக்கிற வேல, அரசாங்க வேலைன்னு சீக்கிரமே கட்டிக் குடுத்துட்டாங்க. மாரி விடாம Private ஆ அதுவே படிச்சு +2 வரைக்கும் பரிட்ச எழுதுச்சு.  அது புருஷன் நல்ல பய. மாரி படிக்கிற புள்ள, நல்லா படிக்கனும்னு ஆசப்படுறவன்.ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாது.  மாரி பெரிய Officer அ கல்யாணம் பண்ணல ஆனா நல்லவன தான் கல்யாணம் பண்ணிருக்கு.', அந்த அளவில் சந்தோஷப்பட்டேன்.  பாரதிகள் பிராமண குடும்பத்தில் தான் பிறக்க வேண்டும் என்பதில்லை. 

'அப்புறம் கொழந்த பொறந்ததும் அத பாத்துகிட்டு வீட்லயே இருந்துச்சு.  +2 படிச்சதுக்கு ஆயா வேல தான் கெடச்சுச்சு. ஆனா மாரி விடல, கொஞ்ச வருஷம் கழிச்சு அப்படியே ஒரு டிகிரி ஒன்னு படிக்க ஆரம்பிச்சுச்சு. நல்லா எல்லாம் போதுன்னு நெனைக்குறதுக்குல்ல, கடங்காரன் ஒருத்தன் அவ புருஷன் மேல accident பண்ணிட்டான்.  உசுருக்கு ஒன்னும் இல்ல, ஆனா நடபோச்சு, Wheel Chair ல ஒக்கார வச்சுருச்சு'. என் கண்ணத்தில் சின்னதாய் எழுந்த ஈரக்கோட்டை நான் கவனிக்கவில்லை.  

'மாப்ள ஏண்டா கலங்குர?' என்றதும் துடைத்துக் கொண்டேன்.  உள்ளுக்குள் நெஞ்சை அடைத்து கொண்டு வந்தது.  வலி மட்டுமே பார்த்து வளர்ந்த மாரி ஒரு பக்கம், எந்த கஷ்டமுமே இல்லாமல் உலகம் சுற்றிக் கொண்டிருக்கும் நான் இன்னொரு பக்கம். வாழ்க்கை மீது கோபம் வந்தது, எரிச்சல் வந்தது.  அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.  அப்படியே எதுவம் பண்ணாமல் போக என்னால் முடியாது.

'மாப்ள, இப்ப அவளுக்கு ஏதாவது உதவி..?' இழுத்தேன்.   

நான் சொல்ல வந்தததை புரிந்து கொண்டவனாய், 'டேய், நீ பணம்னு சொன்னா வாங்குற ஆள் கிடையாது மாரி. நான் எத்தன  தடவ கேட்டிருப்பேன்.  வேலைக்கு ஏதாச்சும் ஒதவி முடிஞ்சா பண்ணு செந்திலு, காசெல்லாம் கொடுத்து அசிங்கபடித்திடாதன்னு சொல்லிடும்'. மாரியின் பார்வை இத்தனை புயலுக்கு பின்னும் வளையாமல் நேராகவே இருக்கிறது, இரும்பு தூண் மாதிரி.

'அப்பத்தான் இந்த Church ஆளுங்க கிட்ட போய் நின்னுச்சு. எல்லாரும் ஆயா வேல மட்டும் தந்தப்ப, இவுங்க தான் Office வேல குடுத்தாங்க. ஆனா ரெண்டு வருஷத்துல கண்டிப்பா டிகிரி முடிச்சிறனும்னு  சொன்னாங்க. மாரி யாரு, அவுங்க சொன்ன மாதிரியே படிச்சுச்சு. அதோட கொணத்தையும் நேர்மையையும் பாத்து, அதோட வீட்டுக்காரருக்கும்  messenger வேல போட்டு கொடுத்துட்டாங்க. அதுவும் Degree முடிச்சிருச்சு, இப்ப அடுத்து Masters படிச்சிட்டு இருக்கு, இந்த வருஷம் முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்.'

கடவுள் நம்பிக்கை இல்லாதவன் தான், ஆனால் கூட சில நேரங்களில் மதங்களும் வழிப்பாட்டுத் தளங்களும் இருப்பதால் தவறில்லை என்று தோன்றுகிறது.  இதோ மாரிக்கு வேலைக் கொடுத்த இந்த church போல, 

'அப்புறம் மாப்ள, இப்ப அது மாரி இல்ல, மேரி. School ல அப்படிக் கேட்டாதான் தெரியும்', என்றான்.

'மதம் மாரிட்டாளா?', எதற்கு அதிர்ந்தேன் தெரியவில்லை.

'பசின்னு வந்தா மனுஷனே மாறுறான்.  மதம் தாணடா, என்ன இப்போ?',  என்றான் அலட்டிக் கொள்ளாமல்.
என்றோ மதமாற்றத்தை எதிர்த்து ஒரு NRI நண்பன் உணர்ச்சி வசப்பட்டு பேசியது  நினைவுக்கு வந்தது.  “கர் வாப்ஸி” பற்றி எல்லாம் கண்கள் நெருப்பாய் எரிய பேசினான். ஒருவனது வறுமையை பயன்படுத்தி மதம் பரப்புவது தவறென்று வாதிடலாம். அதில் ஆழ்ந்த உண்மை கூட இருக்கலாம். ஆனால் காயம் பட்ட மனிதனுக்கு மருந்தும் அளிக்காமல், அவனை புறம் தள்ளியும் வைத்து விட்டு, அவன் வேறு எங்கோ வைத்தியம்பார்த்துக் கொள்ளும் போது அவன் காயம் சுற்றிய கட்டுகளில் நெருப்பு வைப்பது எந்த விதத்திலும் நியாயமாய் தெரியவில்லை.  மனிதர்கள் நெஞ்சுக்குள் சுமக்கும் சிலுவைகளை கலைவது பற்றி கவலை படாத சமுதாயம் அதே சிலுவை அவர்கள் நெஞ்சுக்கு வெளியில் அணியும் போது மட்டும் கொதித்தெழுகின்றது. என் சந்தன மாரி போராளி, வாழ்க்கையை ஜெயித்து விடுவாள். ஆனால் சாக்கடை வாசத்தில் எத்தனை சந்தன மாரிகள் வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருக்கின்றனரோ!      

ஒரு நாள் உலகம் நீதிப் பெறும், திருநாள் நிகழும் தேதி வரும்', ஆட்டோவில் பாடல் கசித்து கொண்டிருந்தது.....
                                               

சனி, 4 மார்ச், 2017

தழல் வீரத்தில்..

இரவிற்கும் இதயத்திற்க்கும் ஒரு நெருங்கிய ஒற்றுமை உள்ளது. மனதின் ஆர்ப்பரிப்புகள் எல்லாமே இதயம் வெளி சொல்வதில்லை. பகலின் அத்தனை அநர்த்தனங்களின் நர்த்தனங்களை தனக்குள் புதைத்துக் கொண்டு மௌனத்தின் அடையாளமாய் அலட்டிக் கொள்ளாதது இரவு. சில தினங்களாய் தமிழகத்தில், பிறந்த குழந்தை போல இரவுகளும் விழித்துக்கொண்டு சத்தமிட்டுக் கொண்டிருந்தன. மாநில அரசு, மறைந்த முதல்வரின் பணக்கார அனாதைப் பிள்ளையாய் தவித்ததில், அதை தன் வசப் படுத்த பல பக்கங்களில் இருந்தும் போட்டி நிலவியது. நெருக்கமான தோழியின் கூட்டம், நம்பகமான தொண்டரின் கூட்டம், தமையன் மகள் கூட்டம் என எங்கெங்கிருந்தோ பருந்துகளும் , வல்லாருகளும் தமிழகத்தின் மீது வட்டமிட்டு, ஒன்றை ஓன்று அடித்துக் கொண்டிருந்தன. தினமும் திருப்பங்கள், மக்கள் பிரதிநிதிகளின் முட்டாள்தன  உரைகள், அறிவழிந்த மக்களின் இயலாமை கோபங்கள், கட்சி சார்ந்த ஊடகங்கள் உண்மையின் மீது நடத்திய வண்புணர்ச்சிகள், இளைய ரத்தத்தின் போர் கொடிகள், முதிர்வற்ற முதுமையாய் வலைத்தளங்களின் புலம்பல்கள், ஆறுதலாய் நையாண்டிகள், பால் மறவா குழந்தை கூட அரசியல் பேசும் காணொளிகள், என தினமும் உணர்வுகள் நாட்களை இயக்கிக் கொண்டிருந்தன. கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த மக்களின் உணர்ச்சிகள் உச்சத்தை தொட்டது, மக்கள் பிரதிநிதிகள் பத்து நாளாய் உல்லாச விடுதியில் இருந்து விட்டு வந்து, மக்களின் எண்ணத்திற்கு மாறாக சட்டசபையில் நம்பிக்கை வாக்களித்தது போதுதான். அலையில்லா கடல் கொந்தளிக்கும் போது நிலம் அழியும். குனிந்தே கிடந்த சராசரி மனிதனை கூட இந்த  ஏமாற்றமும், இயலாமையும் கடும் கோபம் கொள்ள  செய்தது. மக்களாட்சி கேலிக்கூத்தாய், அரசு மக்களுக்கு எதிரான ஆயுதமாய் மாறி இருந்ததை கண்டு, ஊமை பொது சனம் உள்ளெ பொருமிக் கொண்டிருந்தது. பகல் நேரங்கள் பரபரப்பாகவும், இரவுகள் அடுத்த பகலுக்கான திட்டமிடுதலிலும், சில நாட்களாய் தமிழகம் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது.


அனால் இன்று நள்ளிரவு புதிதாய் ஒரு புயல் கிளம்பியது.  ஊர் அடங்கிய நிலையில் , குறுஞ்செய்திகளும் , வாட்ஸாப் மற்றும் ஃபேஸ்புக் பதிவுகளும் கைப்பேசிகளில் விடாது அறிவிப்பு மணியை எழுப்பி மக்களை தூக்கத்தில் இருந்து உசுப்பி விட்டுக்கொண்டிருந்தன.  உண்மையா பொய்யா என்று தெரியாது வந்த செய்திகள் அப்படியே முன்னூட்டம் செய்யப்  பட்டன  
.  தெருக்களில் காக்கிகள் அதிகமாக தென்பட்டனர்.  தீயணைப்பு மருத்துவ வாகனங்கள் குறுஞ்சங்கு ஒலியோடு தயார் நிலையில் இருந்தன. சட்டசபை உறுப்பினர்கள் வீடுகள் எல்லாம் இருள் விலக்கி வெளிச்சத்திற்கு வந்தன.  அதுவரை மக்கள் முகத்தில் மட்டுமே இருந்த பதட்டம்,  அவர்கள் பிரதிநிதிகள் குடும்பங்களிலும் பற்றிக் கொண்டது. அனைத்துக் கட்சி தலைமையகங்களும்  இரவிலும் உயிரூட்டப்பட்டன. தொலைப்பேசிகள் அலறிக்கொண்டிருந்தன. ஆளுங்கட்சி தொலைக்காட்சி சமையல் சமையல் நிகழ்ச்சியையும் , எதிர்க்கட்சி தொலைக்காட்சி 'இது மக்களின் எழுச்சியா' என்றும் தங்கள் வேசித்தனத்தை எப்போதும் போல் தொடர்ந்து கொண்டிருந்தன.

ஆளுங்கட்சி அலுவலகத்தில் இருந்து, முக்கிய பிரமுகர்கள் அனைவரும் உடனடியாக வரும் படி ஆணை பறந்தது.  பொம்மை முதல்வர் முருகசாமியும், கட்சியை தன் கையகப்படுத்தி இருந்த சசிகரனும், முன்னிரவின் போதை முழுதாய் தெளியும் முன்பே களைந்து போக, பதட்டத்துடன் பேசிக் கொண்டிருந்தனர்.  சசிகரனின் அர்ச்னைகளை தலை குனிந்து எந்த எதிர்ப்புமின்றி வாங்கி கொண்டிருந்தார் முருகசாமி.
"ஏன்யா, இது எவ்ளோ உண்மைன்னு கூட தெரியாட்டி என்னய்யா நாம ஆளுங்கட்சி , நீ CM வேற",
"தலைவரே, இது பொய் மாதிரி  தெரியல, இன்னும் 5 நிமிசத்துக்குள்ள தெரிஞ்சிடும்"
"இது பொய் மாதிரி தெரிலன்னு சொல்ல வெக்கமா இல்லையா, நீ தானயா போலீஸ் மந்திரி , அத்தன பேர் வீட்டுலயும் பாதுகாப்பு போட சொன்னியா இல்லையா ". மான அவமானங்கள் பார்க்காத அரசியல் வாழ்க்கையில் ஊறிப் போன முருகனுக்கு அது பெரியதாய் தெரியவில்லை.
"நான் வெறும் கை எழுத்து தான தலைவரே போட்டேன். நீங்க தான ஏற்பாடு எல்லாம் பண்ணீங்க". நிதானம் தவறாத கட்டுப்பாடு.

"அப்புறம் எப்புடி யா நடந்தது. இது உண்மையா இருந்து, பயத்துல நம்ம பக்கம் இருந்து பத்து பேரு வெளில போய்ட்டா என்னயா பண்றது?" எல்லாம் முடிந்தது என்று நிம்மதியா இருக்கும் வேலையில் புதிதாய் முதலில் இருந்து மீண்டும் கதை தொடங்கியது  போல் இருந்தது.

"எப்புடி போவானுங்க தலைவரே, நீங்க மறுபடியும் அந்த ஹோட்டல்ல போட்டு எல்லாத்தையும் அடச்சிடா மாட்டிங்களா ?", மிட்டாய் கேக்கும் பிள்ளை போல பழையதை நினைத்து ஆசையாய் கேட்டார் முருகன்.

"வாயா வா, உங்களுக்கு நாலு  வருஷமும் ஊத்தி கொடுக்கவும் கூட்டி கொடுக்கவுமா நாங்க ஆட்சி நடத்துறோம்?" .சில நேரத்தில் கோபம் குழந்தை போல் உண்மையை பேசி விடுகிறது..

"அவனுங்க வீடியோ எல்லாம் இருக்கு, எவன் போறான்னு பாத்துடலாம் தலைவரே"..

"யோவ், அது வெறும் மிரட்டல் கு தான் யா, இவ்ளோ கூட யோசிக்க மாட்டயா? அதான் உன்ன அத்தம்மா CM ஆக்கி இருக்காங்க... அந்த வீடியோ எல்லாம் வெளில  வந்தது, நமக்கு தான்யா மொத பிரச்சன."

காவல் ஆணையரிடம் இருந்து வந்த அழைப்பை சத்தமின்றி துண்டித்துக் கொண்டே, முருகன் வசை வாங்குவதில் ஆர்வமாய்  இருந்தார். "நானுந்தாங்க பதட்டமா  இருக்கேன் . என்ன பண்றதுனு அத்தம்மா கிட்ட கேட்டுட்டு வந்துடுவோமா?"

"கரெக்ட் யா, கேட்டுட்டு வரதுக்குள்ள இங்க எல்லாம் நாசமா போய்டும், இப்போ என்ன பண்றதுனு யோசிக்காம, ஆந்திரா ஜெயில் வரைக்கும் போயிட்டு வரலாம்னு சொல்லுற. என்ன நடக்குதுன்னு மொதல்ல கேட்டியா ".

"IG போன் பண்ணிட்டே தான் இருக்கார் தலைவரே"

"அத ஏன்யா எடுக்கல? எடுத்து தொலைக்க வேண்டியது தான "

"இல்லைங்க, அத்தம்மா பேசிட்டு இருக்கும் போது குறுக்க போன் எடுத்ததுக்கு தான் அந்த கொளத்தூர் காரனுக்கு குறுக்க ஒடச்சீங்க. அதான்". பவியத்தின் உச்சம் என தன்னை காட்டிக் கொள்வதில் உறுதியாய் இருந்த முருகன் தன்னுடைய முயற்சியில் சற்றும் மனம் தளரவில்லை.

"உன்ன எல்லாம் வச்சுக்கிட்டு , எரும மாடு தான் மேய்க்கணும். போன போட்டு கேளுய்யா முதல.. speaker ல  போடு "
இதற்குத்தானே ஆசை பட்டாய் முருகா! ஏவலை ஏற்றதும் கைபேசி கடமையை செய்தது.

மறுமுனையில், "சார் , கன்பார்ம் பண்ணிட்டேன் . MP அப்பாதுரை செத்துட்டார். ஆனா இது கொலைன்னு மக்கள் பேசிக்கிறது வதந்தி மாதிரி தான் தெரியுது சார்."

"அதென்னய்யா வதந்தி மாதிரி. ஒருத்தன் எப்படி செத்தான் னு கூட சொல்ல முடியாதா?" 

ஒரு மாநிலத்தின்  முதல்வர் மரணமே எப்படி நடந்தது என்று மக்களுக்கோ, காவல் துறைக்கோ அல்லது நாட்டில் இருக்கும் அத்தனை ரகசிய பாதுகாப்பு அமைப்புகளுக்கோ தெரியாமல் போகும் இந்த காலத்தில், பார்த்ததும் ஒருவர் மரணம் கொலையா இயற்கையா என்பதை சொல்ல முடியாதது அவ்வளவு பெரிய குற்றமாக தெரியவில்லை.

"அவுங்க வீட்ல நெஞ்சு வலி னு தான் சொல்றாங்க. எந்த விதமான அசால்ட்டும் இல்ல, வெளிப்படையா பாய்சனிங்கோட அடையாளம் ஏதும் தெரில. ஆனா போஸ்ட்-மார்ட்டம் பண்ணாம கண்பார்ம் பண்ண முடியாது சார்."

"போஸ்ட் மார்ட்டம் ஆ ..பாடிய ஆஸ்பத்திரிக்கு எடுத்து போயாச்சா?"

"உங்க கிட்ட கேட்டுட்டு பண்ணிடலாம்னு வெயிட் பண்றோம் சார்".
அதே நேரத்தில் கட்சிக்காரர்களால் செல்லமாக 'மாமா' என்றும், பொது மக்களால் "சாக்கடை எல்லாம் சாணக்கியத்தனம் பண்ணுது " என்றும் வாழ்த்தப்படுகின்ற அத்தம்மாவின் கணவர் 'தில்லை' உள்ளே நுழைந்தார். தொலைபேசி உரையாடலை கேட்டுக் கொண்டே வந்தவர்,
"ஒரு FIR பைல் பண்ணி, இது கொலை, இத நாங்க தான் பண்ணோம்னு எழுதி எங்கள உள்ள தூக்கி போட்டுடு "  என்றார் கோபமாக.

"என்ன மாமா சொல்றீங்க"

"பின்ன என்னடா..நம்ம ஆளு ஒருத்தன் சாவுல சந்தேகம் இருக்குனு நாமளே ஒத்துக்கிட்டு போஸ்ட் மார்ட்டம் வேற பண்ணி , இது இயற்கையான சாவு இல்லைனு தெரிஞ்சா என்ன ஆகும்?"

முருகசாமி அவசரமாய், "எதிரணி மேல பழிய போட்டு மக்கள் கிட்ட அனுதாபம் வாங்கிடலாம் பெரிய தலைவரே"..  சசிகரனுக்கு முன்னால் இன்னொருவரை பெரிய தலைவர் என்று அவசர பட்டு சொல்லி விட்டதுக்கு உள்ளுக்குளே தன்னைதிட்டி க் கொண்டாலும் முகத்தில் அதை காட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சி செய்து தோற்றுக்  கொண்டிருந்தார். சசிகரன் முகத்தில் சின்ன சுருக்கமும், தில்லை முகத்தில் சின்ன சிரிப்பும் வினாடி பொழுதில் வந்து  மறைந்தது. இருந்தாலும் இறுக்கத்தை குறைக்காமல் தில்லை  தொடர்ந்தார். "உன்ன மாதிரி பழைய மாங்கா எல்லாம் இதுக்கு அரசியலுக்கு வரீங்க". என்னதான் அவமானங்களை சகித்துக்  கொண்டாலும்,அதை அரசியல்வாதிகள் மறப்பதில்லை. முருகசாமியை ஒவ்வொரு முறையும் தூக்கி விட்டவர்கள் அவரை இப்படி எல்லாம் பேசி இருக்கிறார்கள். இன்று அவர்களில் பல பேர் அடையாளம் தெரியாமல் மறைந்து  விட்டனர், சிலர் அவருக்கு அடிபணியும் இடத்தில் இருக்கின்றனர்.  மனதுக்குள்ளே இந்த அவமானங்களை குறித்துக் கொண்டு வெளியே ஒன்றும் காட்டாமல் பேசுவதில் முருகசாமிக்கு எந்த சிரமமும் இருந்ததில்லை.

"செத்தவனுக்கோ , நமக்கோ ஜனங்க கிட்டவும்  சரி,கட்சிக்குள்ளவும் சரி , ரொம்ப நல்ல பேரா இருக்கு. கொலைன்னு  சொன்னா, கொலகாரனுக்கு கோவில் கட்டி கொண்டாடிட்டு, நம்மல போட்டு தள்ள பத்து பேர் கெளம்பிடுவான். நமக்கு எவனும் உச்சு கொட்ட போறதில்ல."

"மாமா ,மறுபடியும் ஒரு கொலைய மறைக்க போறோமா?"

"யோவ் போலீஸ், லைன கட் பண்ணு,நாங்க 5 நிமிஷத்துல கூப்பிடறோம். அது வரைக்கும் உங்க ஆளுங்கள வச்சு  அப்பாதுர வீட்டுக்கு எக்ஸ்ட்ரா செக்கியூரிட்டி போட்டுடுங்க. அவங்க வீட்ல இருந்து வெளில யாருக்கும் எந்த நியூஸ் உம் போக கூடாது. பத்திரிக்க காரங்க யாரும் போகாம பாத்துக்கோங்க. வெளில தெரிஞ்சா , சட்ட ஒழுங்கு பிரச்சன வந்துடும். இன்னும் வேற MLA யாருக்கும் எதாவது ஆச்சுன்னா அதுக்கு நீயும் பதில் சொல்லவேண்டி வரும். சந்தேகம்,  போஸ்ட் மார்ட்டம், போலீஸ் கேஸ் னு எந்த பிரச்னையும் வர கூடாது.  அங்க முரளிதரன் கிட்ட பொறுப்பெல்லாம் குடுத்துடுங்க. வேற யாரையும் இன்வால்வ் பண்ணக் கூடாது. எங்க கிட்ட கேக்காம எந்த முடிவும் எடுக்காதீங்க.  "
கண்டவனெல்லாம் ஒரு நிலவரத்தை எப்படி கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதில் கை தேர்ந்த தனக்கு கட்டளை இடுவதை நொந்து கொண்டு, இடப்பட்ட வேலையை செய்ய தொடங்கினார். காவல் துறையின் எல்லைகளை நன்கு அறிந்தவர் அவர்.

தொடர்பு துண்டிக்க பட்டதும், " ஏன்டா, உள்ளுக்குள்ள கூட பேச கூடாதத போன் ல உளர்ர பாரு. இன்னொரு கொலைன்னு யாராச்சும் சொல்லுவாங்களா ". இப்போது அதிகாரம் இருந்தாலும், காவல் துறையை எங்கே வைக்க வேண்டும் என்பது அவசியம். இல்லா விட்டால்  பின்னால் சரியான நேரத்தில் சட்டம் எப்படி பாயும் என்பது தெரியாது என்பது தில்லை இத்தனை வருடத்தில் கற்று கொண்ட பாடங்களில் ஒன்று. இதை எல்லாம் தனக்கு தொடர்பில்லாதது போல் பார்த்து கொண்டிருந்த முதல்வரிடம் சசிகரன் எச்சரித்தான். "முருகா , இங்க பேசுற எதுவும் வெளில போக கூடாது."

"தலைவரே, நீங்க எல்லாம் என்ன சொல்றீங்களோ அத தவிர வேற எதுவும்  நடக்காது."

"மாமா, இப்போ என்ன பண்றது"

"அப்பாதுர நம்ம பழைய முதல்வர் செத்ததுல இருந்தே சோர்ந்து தான் இருந்தாப்ல, இப்போ நெஞ்சு வலி வந்து செத்து   போய்ட்டார். இதுதான் எல்லாரும் சொல்லணும்"

கட்சிக்குள் தனக்கு நிகரான பெரிய தலைகளில் ஒன்று குறைந்தது உள்ளுக்குள் முருகசாமிக்கு கொஞ்சம் சந்தோசமாய் தான் இருந்தது.

"மருமகனே , இப்போ இருக்குற நெலமைல, இது கொலையோ இல்லையோ, ஆனா, கொலையா இருக்குமான்னு பயம் வந்துட்டா உயிர் பயத்துல நம்ம ஆளுங்க ஒரு அஞ்சு பேராவது போயிடுவான். நம்ம ஆட்சியே கயித்து மேல தான் நடத்துறோம்"

"ஆனா, இது கொலைனா நாம அத செஞ்சவன கண்டு பிடிச்சே ஆகணும் மாமா, இல்லாட்டி இன்னும் நாம நிம்மதியா இருக்க முடியாது."

"கேஸே இல்லாம அத நாம விசாரிச்சிக்கலாம். அப்புடி எல்லாம் அரசியல் வாதிங்க மேல எவனும் கைய வைக்க மாட்டான். எதிரணி எதிர் கட்சி எல்லாம் சண்ட போட்டுக்குவோம், ஆனா எல்லாரும் நிம்மதியா பணம் பண்ணனும்னா இந்த மாதிரி கட்சிக்காரங்கல கொல  பண்ற அளவுக்கு போக கூடாதுன்னு எல்லாருக்கும் தெரியும். அந்தாளு எல்லாம் அந்த காலத்துல இருந்து கண்ட கண்ட சரக்கு குடிச்சவன், லிவர் வெந்தே செத்து போய் இருப்பான். இப்போ அரசாங்கத்த கண்ட்ரோல் ல வச்சுக்கணும். அதுதான் முக்கியம். எதுக்கும் போன தடவ மாதிரியே நம்ம ஆளுங்கள அடக்கி கட்டுப்பாட்டுல வச்சுக்கிட்டா நல்லது . அந்த விஜயகுமார உடனே வர சொல்லு. அவன் ஆளுங்க போன தடவ மாதிரியே இப்பவும் தேவ படுவாங்க."

அரசியல், சதுரங்கத்தை விட சாதுர்யம் அதிகமாக தேவைப்  படுகிற விளையாட்டு. ஒவ்வொரு அடி முன்னே போகும் போதும் அடுத்த நூறு நகர்வுகளுக்கான வியூகங்களை சரியாக கணக்கிட்டு முன்னே போய் கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் புதிதாக எதிர் பார்க்கா தடைகள் முளைக்கும், அதை எல்லாம் சலிக்காமல் வெட்டி சாய்த்து நடப்பவனே இங்கே நிலைத்து நிற்க  முடியும். நடந்ததை எப்படி சமாளிப்பது என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, காவல் ஆணையரிடம் இருந்து மீண்டும் அழைப்பு வந்த்து.

"ஸ்பீக்கர் ல போடு"
முருகசாமி மனதுக்குள் " ஆடுங்கடா, உங்களுக்கும் ஒரு நாள் வைக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே "போட்டுடறேன் தலைவரே" என்றார்.

"நாங்க தான் கூப்பிடறோம்னு சொன்னேனே, அதுக்குள்ளே என்னையா அவசரம்.?"

"சாரி சார், எமெர்ஜெண்சி "

பணமும் படையும் தரும் போதையை விட உலகில் பெரியது எதுவும்  இல்லை. சுற்றி இருப்பவர்களின் தகுதிகள் எல்லாம், தனக்கு சேவகம் செய்யவே என்று தோன்றும் பொழுது கடவுள் போல் உணர முடியும்.  மாமா கடவுளானார்.
"எல்லா எமர்ஜென்சியும் பாத்துட்டு தான் இங்க  இருக்கோம்.மொதல்ல நான் சொல்றத கேளு. அமைச்சர் ஆவடி விஜயகுமார உனக்கு கொஞ்ச நேரத்துல போன்  போட சொல்றேன். அவுங்க ஆளுங்க கொஞ்ச பேர் MP அப்பாதுர வீட்டுக்கு  வருவாங்க.அவுங்கள அங்க உள்ள  விட்டு, பாதுகாப்பு வேலைய பாத்துக்கோங்க. நான் விஜயகுமார் கிட்ட இப்போ பேசிட்டு சொல்றேன்."

தனது அவமானங்களுக்கு ஒரு சிறிய மருந்து கிடைத்தது போல் மனதுக்குள் சிரித்துக் கொண்டே, "அது முடியாது சார்" என்றார்.
முருகசாமிக்கு கோபம் பொங்கியது போல் காட்ட வேண்டியது அந்த நிமிடத்தின் கட்டாயம்.
"முடியாதா, அவளவு திமிரா. தலைவர் சொல்றத கேக்க முடியாதா?" . பெருசாக இருந்தாலும் பொம்மைகள் அசைவது, கண்ணுக்கு தெரியாத நூலின் இழுப்புகளிலேயே.
"அப்டி மீன் பண்ணல சார். நான் சொன்ன எமர்ஜெண்சி விஜயகுமார் சார் பத்திதான். நீங்க அவர் கிட்ட பேச முடியாது. சாரி சார், ஹி இஸ் நோ மோர். "

தூக்கி வாரி போட்டது மாமா கூட்டணிக்கு. "யாரு சொன்னாங்க. இதுவும் ரூமரா?"

"இல்ல சார் , இது யாருக்கும் தெரியாது. அவர் வீட்ல செக்யூரிட்டி இருக்க போலீஸ் காரங்க இப்போதான் கால்  பண்ணாங்க. சொந்த காரங்களுக்கு கூட தெரியக்கூடாது னு சொல்லி வச்சிருக்கேன். "

அந்த பதட்டத்திலும் சரியாக முடிவெடுத்த காவல் துறையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
"நல்ல காரியம் பண்ணீங்க. அங்க இருக்க போலீஸ் தவிர யாரும் உள்ளே  போக கூடாது. அங்க இருந்து வேற எந்த தகவலும் வெளியே போக கூடாது."
எந்த முறையான பயிற்சியும் இல்லாமல் மாமாவால் வேக வேகமாக சிந்திக்க முடிந்தது, சசிகரனுக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது.
"பை த வே, ரீசன் பார் டெத்?"

"லுக்ஸ் லைக் சிமிலர் சிச்சுவேஷன் சார். நெஞ்சு வலின்னு சொல்றாங்க."

போன வாரம் குடிச்ச சர்க்குல கலப்படம் சேந்துடுச்சா, மனதுக்குள் லேசாக முருகசாமிக்கு பயம் எட்டி பார்த்தது.

"எனக்கு சந்தேகமா இருக்கு சார். நாம ,  இத இன்வெஸ்டிகெட் பண்ணனும். மறைக்க ட்ரை பண்ணக் கூடாது"

இப்போதைக்கு இருக்கும் அரசியல் குழப்பங்களுக்கு நடுவில், நடப்பது கொலையாக இருந்தால், அரசே கலைந்து விடும். மறுபடியும் சத்தியமாக ஆட்சியை பிடித்து விட முடியாது. அரசியல் பலம் இல்லாமல் போனால், சேர்த்து வைத்த கோடிகளை பல பூதங்கள் சேர்ந்து காவல் காக்க வேண்டிய தலை வலி வரும். சீக்கிரம் யோசி, சீக்கிரம் யோசி என்றே மாமாவின் இதயம் துடித்து கொண்டிருந்தது.

"நான் சொல்றத சரியா கேட்டுக்கோங்க. நாம விசாரிக்கலாம், ஆனா, இப்பவே இல்ல. பஸ்ட், விஜயகுமார் சாகல, உயிரோட தான் இருக்கார். அவருக்கு,  ஏதோ இன்பெக்சன் அப்டினு குப்பல்லோ ல அட்மிட் பண்ணி இருக்காங்க. இப்படித்தான் எல்லாருக்கும் தெரியணும்"

"சார், இது கொஞ்சம் ரிஸ்க் ஆ தெரியுது. வெளில தெரிஞ்சா பெரிய பிரச்னை ஆகிடும்"

"உன் சைடுல பிரச்னை வராம நாங்க பாத்துக்குறோம். லா அண்ட் ஆர்டர் கெட்டாலும் உனக்கு பெரிய பிரச்னை தான் . அண்ட், இதுல லீகல் சைடு எல்லாம் நாங்க பாத்துக்குறோம். குப்பல்லோ ல அவருக்கு என்னென்ன ட்ரீட்மெண்ட் தருவாங்க னு ஒரு தப்பு இல்லாம ரெகார்ட் ரெடி ஆகிடும்."

குப்பலோ  நிறுவன தலைவர் ராவுக்கு அதெல்லாம் ராவா சாப்பிடற மாதிரி என்பது ஏற்கனவே பலருக்கும் தெரிந்து தான் இருந்தது. இந்த உரையாடலின் போதே, எள்ளுக்கு எண்ணையாக சசிகரன் குப்பல்லோ ராவுக்கு கைபேசியில் கூப்பிட்டு விட்டு இருந்தார். பயத்தில் வயிற்றை குமட்டி கொண்டு வந்த முருகசாமி கழிவறை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார். முதல் கட்ட நடவடிக்கைகளை காவல் ஆணையருக்கு விளக்கி விட்டு, அடுத்து செய்ய வேண்டியதை தீவிரமாக திட்டமிட தொடங்கினர் தில்லையும் சசிகரனும்.

முதல்ல அப்பாதுர சாவுல எந்த வதந்தியும் பரவாம பாத்துக்கணும். ட்ராமா ல எந்த தப்பும் நடந்துட கூடாது. விஜயகுமார் கன்னத்துல மூணு ஓட்ட போட்டு ஒரு மாசம் கூட குப்பல்லோ ல வச்சு பாத்துக்கலாம். அவுங்க வீட்ல இருக்குறவுங்க எல்லாத்துகிட்டயும் பேசிடனும். அவரோட பொண்ணு இத போலீஸ் விசாரிச்சே ஆகணும்னு ஆடம் பிடிக்கிறதா,ஆணையர் சொன்னது கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது. இத்தனை பேருடைய வாயையும் அடக்க வேண்டும். கட்சி ஆளுங்களை விட்டு விட கூடாது, மக்களை சமாளிக்க இப்போதைக்கு தேவை இல்லை, தேர்தல் வர இன்னும் காலம் இருக்கிறது, சாமர்த்தியமாக நடந்து கொண்டால். பிதாமகன் படத்தில் சூர்யா சொல்லுவது போல், இந்த பொழப்புக்கு பண்ணி மேய்க்க போய்டலாம் என்று தோன்றியது முருகசாமிக்கு.  தில்லை தெளிவான ஒரு திட்ட அமைப்பை ஏற்படுத்தினார். அப்பாதுரை யின் உடல் அடுத்த நாளே எரியூட்ட பட வேண்டும், எந்த சந்தேகமும் எழ கூடாது. விஜயகுமார் பெண்ணுக்கு கட்சியில் ஒரு பெரிய பதவியை தருவதாக வாக்களிக்க வேண்டும், மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். பிற MLA கள் அனைவரும், இன்னும் ஒரு பத்து நாளாவது ஒரே இடத்தில் கட்டுக்குள் இருக்க வேண்டும். ஒன்று, அவர்கள் எங்கும் போக முடியாது, இன்னொன்று, அவர்களுக்கு அதுவே பாதுகாப்பு. இந்த முறை, மலை பிரதேசம் தேர்ந்தெடுக்கப் பட்டது. குன்னூர் இன்னும் பத்து நாட்களில் பல கோடிகளை நேரில் பார்க்க போகிறது. அத்தம்மாவின் பேச்சாளராக பேரம் பேசுவதில்  போன முறை  சிறப்பாக பணியாற்றிய பொன்கோட்டையனை இந்த முறையும் உபயோகிக்க முடிவு செய்ய பட்டது.  சிரிப்பு நடிகர் லொடுக்கு மூலமாக சிறப்பான  பல பலான  அனுபவங்களை MLA க்களுக்கு கொடுப்பது பற்றியும் பேசப் பட்டது. தரகனாக இருந்தாலும் தலைவர்கள் வீட்டில் இருக்க வேண்டும்.


திட்டம் தீட்டப்பட்டு சம்மந்தப்பட்ட பெரியவர்களுக்கு செய்தி அனுப்ப தயாராகிக் கொண்டிருந்த போது முருகசாமி வேர்க்க விறுவிறுக்க வேகமாக ஓடி வந்தார்.
"தலைவரே " என்று கதறிய அவருக்கு அடுத்து வார்த்தைகள் வரவில்லை. நாக்கு வறண்டு உளறியது, கண்கள் மயக்க நிலையில் தெரிந்தன. கைகள் நடுங்கின, மிகப் பெரிய பயங்கரத்தை பார்த்ததை போல முகம் வெளிரி ப் போய் இருந்தது. அவருடைய இந்த நிலையை கண்ட மாமா தில்லைக்கு உள்ளே பொறி   தட்டியது.

"இப்ப யாருய்யா?" என்றே வெளிப்படையாக கேட்டுவிட்டார்.

கத்தி அழும் நிலையில் இருந்த முருகசாமி மிகவும் பிரயத்தினம் எடுத்து பேசினார், "நம்ம பொன்கோட்டயன் தலைவரே, எவனோ ஸ்கெட்ச் போட்டு தான் நம்ம ஆளுங்க ஒருத்தர் ஒருத்தரா தூக்குறானுங்க. இதெல்லாம் அவுங்களா செத்த மாதிரி இல்ல. நான் கொஞ்ச நாளைக்கு தலை மறைவா ஆகிடறேன்", அதிகாரமில்லாத முதல்வராலும், அப்படியெல்லாம் தலைமறைவாக போய் விட முடியாது என்று உணராமல் உளறினார்.

இது வரை தைரியமாக இருந்த தில்லைக்கும் மெல்லிய பயம் ஒட்டிக் கொண்டது. மறைந்தவர்கள் எல்லாம் கட்சியில் இருந்தவர்கள், பதவிகளில் இருப்பவர்கள். அவர்களுக்கே இப்படி என்றால், முன்னாள் முதல்வரால் கட்சியில் இருந்தே துரத்தி விடப்பட்ட தனக்கு என்ன நிலை என்ற கவலை ரேகை அவர் முகத்தை தொற்றிக் கொண்டது.  எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், சில நேரங்களில் காலம் அவர்களை அடக்கி வைக்க தவறுவதில்லை. தில்லை அப்படியே சாய்ந்து உட்கார்ந்து விட்டார். இதற்க்கு மேல் இப்போதைக்கு எதுவும் யோசிக்க முடியாதோ என்று தோன்றியது. தோற்பது உறுதி என்றாலும் கடைசி நாள் வரை போர் செய்வதை தவிர ராவணன்களுக்கு வேறு வழி இல்லை .

"மாமா, இது கண்டிப்பா எதோ பெரிய திட்டம் மாதிரி தெரியுது. நாம மக்கள கொறச்சு எட போட்டுட்டோமோ?"

ஒரு சிகிரெட் எடுத்து பத்த வைத்துக் கொண்டு தில்லை பேசத் தொடங்கினார். விழுவதும் எழுவதும் பெரிய நிகழ்வுகளாக இருக்க வேண்டியதில்லை. ஒரு சராசரி கணத்தில் கூட அப்படி நடக்கும், கடலலைகள் போல. இப்போது தில்லை எழுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.

"உளராத சசிகரா, நம்மள எல்லாம் எதிர்த்து கோஷம் போடவே இத்தன வருஷம் கழிச்சு இப்போதான் அவுங்களுக்கு தைரியம் வந்திருக்கு, அதுவும் கூட்டமா மட்டுந்தான். அரசியல் வாதிங்கள போட்டு தளர அளவுக்கு மக்கள் வளர  ரொம்ப காலம் ஆகும்.  இது எவனோ நடத்துற அரசியல் வெளாட்டு மாதிரி தான் தெரியுது.  MLA ங்க கொஞ்ச பேர தூக்கிட்டா நம்ம பெரும்பான்ம போய்டும். இல்லாட்டி சட்ட ஒழுங்கு பிரச்னையா மாத்தி ஆட்சிய கலச்சிடலாம்.  ஒன்னு இது சென்டரோட வேலையா இருக்கலாம், இல்லாட்டி எதிரணி வேலையா கூட இருக்கலாம். உடனடியா எல்லா MLA வும் குன்னூருக்கு வந்தாகணும். இதுக்கு மேல நேரம் கடத்த கூடாது "

அடுத்த ஐந்து நிமிடங்கள், அந்த அலுவலகம் மாறி இருந்தது. மாறி மாறி கட்டளைகள் பறந்தன. தொலைபேசிகள், அலை பேசிகள் எல்லாம் விடாது இயங்கின. நம்பிக்கைக்கு உரிய ஒரு பத்து பேர் மட்டுமே இதில் இணைக்க பட்டனர். பொன்கோட்டையன் ஒரிசாவில் உள்ள அவரது அக்கா வீட்டிற்க்கு போய் இருக்கிறார் என்றே சொல்லப் பட்டது. அடுத்த இரண்டு நாட்களில் நெடுஞ்சாலை விபத்து ஒன்றில் அவர் வண்டி தீப்பற்றி எரிந்து அவர் உயிரிழக்க ஏற்பாடுகள் நடந்தன. அவர்  குடும்பத்தினருக்கும் பதவி மற்றும் பண பேரம் பேசப் பட்டது. பல பேர்களின் பண்ணை வீடுகளில் குப்பை வண்டிகள் யாருக்கும் தெரியாமல் பல சாக்கு பைகளை மாற்றி கொண்டிருந்தன. சிறப்பு பாதுகாப்போடு அத்தனை MLAக்களும் அழைக்க பட்டு வந்தனர். தேவைப்பட்டால் வேண்டுமென்று இரண்டாம் நிலை திட்டத்திற்காக, வேறொரு கட்சியின் இரண்டு MLA க்கள்  கட்சி தாவ தயார் நிலையில் வைக்கப் பட்டனர். தன்னுடைய கட்டப் பஞ்சாயத்துக்கள், போக்கிரித்தனங்கள் எல்லாவற்றிற்கும் பல தளங்கள் மேலே இயங்கி கொண்டிருந்தவர்கள் தில்லை கூட்டத்தினர் என்பது முருகசாமிக்கு தெளிவாக விளங்கியது. அவர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டதாகவே பட்டது. இத்தனை பயங்கரமானவர்கள் பக்கம் நின்று இருப்பது, கத்தியை கையில் பற்றி இழுத்து விளையாடும் ஆபத்தான விளையாட்டு என்று மிக தாமதமாக அவருக்கு புரிந்தது. உண்மையாகவே கொஞ்சம் நெஞ்சு வலித்தது.

அடுத்த நாள் காலை எப்போதும் போல்  சோம்பல் முறித்து விடிந்தது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இயற்கையாக  மறைந்தது குறித்த  துக்க செய்தி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது. மாநில அமைச்சர் விஜயகுமார் சிறிய உடல் உபாதையால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டது பெட்டிச் செய்தியாக வெளிவந்தது. கட்சியின் மக்கள் தொடர்பாளர்கள் அமைச்சரின் உடல்நிலை குறித்து, பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்றும், அவர் காலையில் பாயாசம் குடித்து விட்டு மீண்டும் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதாகவும், தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்தனர். குப்பல்லோவில் வழக்கம் போல், பாதுகாப்பு கருவிகள் சரியாக வேலை செய்யாமல் இருந்தன.  மற்ற ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் மிகவும் மனச்சோர்வில் இருப்பதால், குன்னூருக்கு ஒரு வார பயணம் மேற்கொண்டனர்.

ஊடகங்களும் வலைத்தளங்களும் பல விதமாக நடப்பனவற்றை அலசிக் கொண்டிருந்தன. எல்லோரும் பார்த்தும் வெளியில் அதை ஒத்துக்கொள்ள முடியாத நிர்வாண படங்களாக அரசியல் உண்மைகள் எல்லோருக்கும் தெரிந்தும் தெரியாமல் இருக்கும்.  அடுத்த இரண்டு நாட்களில் திட்டமிட்ட படி பொன்கோட்டயன் விபத்தில் பலியானதாக தகவல் வந்தது. பலருக்கும் சந்தேகம் இருந்தும் சாட்சிகள் எதுவும் இல்லாததால் உண்மை ஒளிந்து கொண்டது.  கடந்த சில மாதங்களில் இதை போன்று வெளிப்படையான உண்மைகள்  மறைக்க படுவதும் மறுக்க படுவதும்  தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் நிகழ்வாகி போனது. அரசியல் வாதிகளோடு சேர்ந்து மக்களுக்கும் இந்நிலை பழகி விட்டிருந்தது.  தனது தொழிற்சாலையில் இருந்து தாராளமாக மதுபோத்தல்களை  குன்னூருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்திருந்தார் சசிகரன். நடிகர் லொடுக்கின் சிவப்பு விளக்கு மகிழுந்து தனது கடமையை சீரும் செம்மையாக செய்து வந்தது. வழக்கம் போல எவன் தாலி அருந்தால் என்ன என்று மக்கள் பிரதிநிதிகள் உல்லாசமாக கூத்தாடிக் கொண்டிருந்தனர்.  சசிகரனுக்கு சாதகமாக மறைந்த மூன்று பேரின் மகள்களும் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து இருந்தது கூடுதல் மகிழ்ச்சியை தந்தது. ஆறாவது நாளில் சிகிச்சை பலனின்றி விஜயகுமார் மருத்துவமனையில் காலமானார் என்ற அறிவிப்பு குப்பல்லோவில் இருந்து வந்தது. மூன்று சம்பவங்களும் சந்தேகிக்கும் படி இருந்தாலும், ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவைகளாகவே அதிகாரபூர்வ வட்டங்கள் சித்தரித்தன. துக்கம் அனுசரிக்க அத்தம்மா சிறையில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார், கட்சிக்காரர்கள் அவருக்கு ஆதரவாக அழுதுகொண்டே ஊடகங்களின் செவிக்கு பசியாற்றிக் கொண்டிருந்தனர். சுவர்களில் கட்சி சின்னத்தை கடவுளாக வரைந்து , வீட்டில் பிள்ளைகளின் பள்ளிக்கூட புத்தகங்களுக்கு கூட அட்டை போட நேரமில்லாமல் கட்சியின் விளம்பர  படங்களை தெருவெங்கும் ஒட்டி ஒட்டி அழகு பார்த்த தொண்டர்கள் மூணு பேர் தற்கொலை செய்து கொண்டனர். நடப்பதை எல்லாம் வயலும் வாழ்வும் பார்ப்பது போல் எந்த உணர்வும் இன்றி ஆளுநரும், மத்திய அரசும் பார்த்துக் கொண்டிருந்தனர். 'கட்டி கொடுத்ததோட கடம முடிஞ்சு போச்சு, இனி மேல உம்புருஷன் உன்ன அடிச்சாலும் கொன்னாலும் நாங்க கேக்க மாட்டோம்' என்ற பழைய அம்மா அப்பாவின் மன நிலையில் தேர்தல் ஆணையம் தள்ளியே நின்றது. இந்திய அரசியலமைப்பின் மிக முக்கிய தூணான நீதிமன்றம், அரசாள்பவரின் சித்திரக் கூடமாக அவர்கள் விருப்பப் படி நிறங்களை ஏற்றுக் கொண்டன. வழக்கம் போல மக்கள் அங்கும் இங்கும் சின்னதாகவும் பெரியதுவாகவும் கூச்சல் செய்து கொண்டிருந்தனர். எத்தனை விசயத்திற்குத் தான் போராடுவார்கள் பாவம்!

விஜயகுமார் மிக நூதனமான விஷம் கொடுத்து  கொல்லப் பட்டிருக்கிறார் என்ற குப்பல்லோவின் ரகசிய அறிக்கை வந்தது. எதோ தாலியம் அது இது என்று புரியாத பெயராக இருந்தது,  அவர் கூட்டத்துக்கும் ஒரு பக்கம் கவலை கொடுத்தது, அதை எந்த சத்தமும் இன்றி விசாரிக்க தனியாக ஒரு குழு அமைக்க பட்டது. முருகசாமிக்குக் கூட தெரியாமல் மிகவும் ரகசியமாக பார்த்துக்  கொண்டனர் சசிகரன் கூட்டத்தினர்.  அதே நேரம், மறைந்த மூவரின் பெண்களையும் கட்சியில் அதிகார பூர்வமாக இணைத்து கொள்ள ஏற்பாடுகள் செய்ய பட்டன. பெண்களை தனிப்பட்ட முறையில் எப்படி வைத்திருந்தாலும், பொது தளங்களில் அவர்களை மேல் நிறுத்தி உயர்வாக பேசுவதையே சமூகம் அங்கீகரிக்கிறது. இதில் மூன்று படித்த பெண்கள் அரசியலுக்கு வருவது மக்களிடம் நல்ல அபிமானம் கிடைக்க ஒரு வாய்ப்பை கொடுக்கும் என்றே சசிகரனின் கூட்டம் நம்பியது. இடைத்தேர்தலுக்கு இது நல்ல வரவேற்பை கொடுக்கும் என்று கணிக்கப் பட்டது. எளிமையான ஆடைகளில் அந்த மூன்று பெண்களும் அழுது கிடந்த படங்கள் வலைத்தளங்களிலும் சம்பந்த பட்ட தொகுதிகளிலும் ஏற்கனவே வளம் வர தொடங்கி இருந்தன. என்னதான் அந்த அரசியல்வாதிகள் மேல் கோபம் இருந்தாலும், மக்களில் சிலர் இந்த பெண்களை பார்த்து பரிதாபப் பட்டனர். ஒன்பதாவது நாள் குன்னூரிலிருந்து கூட்டம் வெளிவந்தது. அன்றைக்கே கோயமுத்தூரில் 3 பெண்களும் கட்சியில் இணையும் விழா ஏற்பாடுகள் செய்ய பட்டன.  பத்திரிக்கைகள் கும்பல் கும்பலாக பெரிய அரசியல் மாற்றத்தை படம் பிடிக்கும் பகட்டுடன் படை எடுத்தன. பல கேலிக் கூத்துகளை பார்த்து சோர்ந்து போய் இருந்த பெரும்பாலான மக்கள், இதையும் சகித்துக் கொண்டனர்.

மாலை நேரம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் விரிந்தது. மூன்று பெண்களும் தத்தம் தந்தையின் படங்களுக்கு மாலை அணிவித்து மேடைக்கு வந்தமர்ந்தனர். சசிகரனும் கட்சியின் மற்ற மூத்த தலைவர்களும், மறைந்தவர்கள்  உயிருடன் இருந்த போது அவர்களைப் பற்றி  பேசாத பல உயர்குடி பண்புகளை சொல்லி கண் கலங்கினர். தந்தையின் மரணத்திலும் தயங்காமல் மக்கள் சேவைக்காக தங்களை அர்ப்பணிக்க தயாரான மாதர் குல திலகங்கள் என அந்த மூவரையும் போற்றி புளங்காகிதம் அடைந்தனர். சசிகரன் அத்தம்மா சிறையில் இருந்து எழுத்துப் பிழைகளுடன் அனுப்பிய கடிதத்தை ஒரு வழியாக உணர்ச்சி வசப்பட்டு வாசித்துக் முடித்தார்.   அடிமைகள் எல்லோரும் ஒவ்வொரு வரியிலும் வான்தொடும் வகையில் ஆர்ப்பரித்தனர். பக்கம் இருந்து பிரியாணி வாசனை வரத் தொடங்கிய நிலையில், அப்பாத்துரையின் மகள் ரேவதி பேசத் தொடங்கினார். வணக்கம் சொன்ன விதத்தில் சிறப்பான மொழி ஆளுமை தெரிந்தது. அரசியலுக்கு மிக முக்கியமான தகுதி உடையவள் என்று நினைத்து சசிகரன் மனதிற்குள் அடுத்த திட்டத்தை வரைய தொடங்கினார்.
"எங்கள் அரசியல் நுழைவு பற்றி குறை சொல்பவர்களுக்கெல்லாம் சொல்லுகிறோம், இது அரசியல் பிரவேசம் அல்ல, அக்னி பிரவேசம்."
குடிக்காதவன் கூட புல்லரித்து கை தட்டினான்.
"எங்கள் தந்தைகள் இறக்க வில்லை ", உணர்ச்சி வசப்பட்ட மகளிரணி கண்ணீர் மல்க, ஆமா ஆமா என்று கத்தின.

"அவர்களை நாங்கள் மூவரும் தான் கொலை செய்தோம்" , இதை சற்றும் எதிர்பார்க்க வில்லை யாரும். கூட்டத்தில் சலசலப்பு தொடங்கியது. ஊடக நிருபர்கள் எல்லாம் ஒரு நிமிடம் அதிர்ச்சியை மறந்து ஆர்வமாகி அருகே ஓடி வரத் தொடங்கினர். ரேவதி மேலும் பேசிக் கொண்டிருந்தாலும் தூரத்தில் கேட்காத படி ஒலிபெருக்கிகள் உடனடியாக நிறுத்த பட்டன. மேடையில் இருந்த பெரியவர்கள் அந்த பெண்களை தாக்க துடிக்க, சசிகரனின் உடனடி உத்தரவில் காவல் துறை அந்த பெண்களை சூழ்ந்து கொண்டது. கூச்சலும் குழப்பமும் கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும் என்ற கவலையில் அங்கு கூடி இருந்த அத்தனை காவலர்களும் முழு வீச்சில் செயல்பட்டனர். சசிகரன் சமிஞ்கைகள் மூலம் கட்டளைகளை தனது ஆட்களுக்கு பிறப்பித்துக் கொண்டே இருந்தார்.. அந்த கூட்டத்தில் மாமா தில்லையைத் தேடித் கொண்டிருந்த அவனது கண்கள் கொஞ்சம் பனித்தன, குழப்பத்தால் பறந்த தூசி என்று நினைக்கையில், கால்கள் தடுமாறின, கைகள் கட்டுப்பாடுகளை இழப்பது போல் இருந்தது. தொண்டை வறண்டு நாக்கில் ஒரு வித எரிச்சல் தெரிந்தது, குடல் வரை உள்ள உணவுப்பாதை முழுதும் உணர முடிந்தது. எரிச்சல் கொஞ்சம் கொஞ்சமாக நெஞ்சிலும் தெரிய ஆரம்பித்தது, மூளை எதையும் தெளிவாக யோசிக்க முடியவில்லை, நாற்காலியில் இருந்து கீழே விழும் உணர்வு கூட இல்லாமல் சரியத் தொடங்கிய சசிகரனை, திரும்பி பார்த்து, புன்னகை செய்தாள் ரேவதி.

                 _____________________________________________________________

பி.கு.
அன்று இரவே வாட்சப்பில் ஒரு காணொளி தமிழகம் எங்கும் பரவியது. வெள்ளை சுடிதாரில், சிவப்பு துப்பட்டா அணிந்த மூன்று பெண்கள் கை கட்டி நின்றிருந்தனர். அவர்கள் பார்வை தீர்க்கமாக தெரிந்தன. முகத்தில் எந்த சலசலப்பும் இல்லாத அமைதி. கோபமோ, சோகமோ, மகிழ்ச்சியோ எதுவும் வெளிப்படுத்தாத விழிகள்.  கைப்பேசியிலேயே பதிந்திருப்பது போல வெளிச்சம் குறைவாகவே தெரிந்தது.  காணொளி தொடங்கிய நான்காவது வினாடியில் முதலாமவள் பேசினாள்,
 "வணக்கம், நாங்க யாருன்னு இப்போ அறிமுகம் தேவை இருக்காது. எப்படியும், நாங்க யாருனு உங்களுக்கு தெரியிர நேரம், நாங்க பேசக் கூடிய நிலைல இருக்க மாட்டோம்னு எங்களுக்கு தெரியும். அதுனால தான் முதல்லயே இத பதிவு செஞ்சு வச்சுட்டோம். "
ஒரு வினாடி மௌனம் . பார்ப்பவர்கள் இதய துடிப்பை ஓடச் செய்தது. மூன்று பெண்கள் திட்டம் தீட்டி பெற்ற தந்தைகளை கொன்று இருக்கின்றனர். அதை பற்றி அறிக்கை வேறு முன்னதாகவே பதிவு செய்திருக்கின்றனர் என்பது, காணொளியை பார்ப்பவர்களை, மர்மத் தொடரின் கடைசி பக்கம் நோக்கி நடக்கும் விறுவிறுப்பான ஓட்டத்துடன் வைத்திருந்தது. தொண்டையை செருமிக் கொண்டு இரண்டாமானவள் தொடர்ந்தாள்,
"எங்க அப்பாங்கள கொன்னது நாங்கதான். இத எதுக்காக பண்ணோம்னு ஆளாளுக்கு கற்பன பண்ணிக்க கூடாதுன்னு தான் இப்போ பேசிட்டு இருக்கோம். நாங்க ஏதோ நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் இத பண்ணதா யாரும் தப்பா நெனச்சிட கூடாது.  அவுங்க எல்லாம் எவ்வளவு மோசமானவுங்கனு தெரிஞ்சே ஓட்டு போட்டு ஜெயிக்க வச்ச உங்களுக்காக நாங்க எதுக்கு கோப படனும்? நீங்க எக்கேடு கேட்டு போனாலும் எங்களுக்கு ஒரு பைசா நஷ்டம் இல்ல"

பார்ப்பவர்களுக்கு உள்ளுக்குள்ளே சுட்டது. தங்களை ஒரு சிறு வயது பெண் திட்டுவது அவமானமாக தெரியவில்லை. அவள் சொன்ன விசயமே கேட்பவர்கள் சுயங்களை கொஞ்சமாக உரசி காயப்படுத்தியது.மூணாமவள் பேசத் தொடங்கினாள்.

"இந்த ரெண்டு மாசத்துல, நம்ம நாட்டோட அரசியலமைப்பையும் மக்களாட்சியும் எவ்வளவோ கேவல படுத்தினாங்க. ஆனா அதுக்காக கூட அவுங்கள கொல்ற அளவுக்கு நாங்க துணியில.  எப்போ எல்லாம் தேவையோ அப்போ லஞ்சம் குடுத்து வேலைய சாதிச்சுக்கிட்டு, எங்கெல்லாம் முடியுதோ அங்க வரி கட்டாம அரசாங்கத்த ஏமாத்திட்டு, சாதிப் பேர சொல்லியும் காசு வாங்கியும்  ஓட்டு போட்டுட்டு, ஊரே மாறனும் ஆனா நான் சட்டத்த மதிக்க மாட்டேன் அப்டினு, எல்லா தப்பையும் செஞ்சுட்டு திரியுற உங்களுக்கு நடுவுல என்ன காமராஜரும் கக்கணுமா வருவாங்க. எங்க அப்பாங்கள போல கழிசடைங்க தான் வருவாங்க. அதுனால அதுக்காக எல்லாம் கோப படர அளவுக்கு நாங்க முட்டாள் இல்ல"

பார்க்கும் அனைவருக்கும் அவர்களை செருப்பால் அடித்தது போல இருந்தது. மாற்றம் என்பது உள்ளிருந்தும் தொடங்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளாமல், தன்னோட சுயநலத்துக்கும் இயலாமைக்கும் காரணம் தேடும் சனங்களுக்கு சுருக்கென்றிருந்தது. நல்லதுக்கு தானே ஊரோடு ஒத்து வாழனும், நாம செய்யிற தப்புக்கெல்லாம் அல்லவா ஊரோடு ஒத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முதலாமவள் தொடர்ந்தாள்
"அப்போ நாங்க எதுக்கு அவுங்கள கொல பண்ணோம்னு குழப்பமா இருக்கா"
ஒரு வினாடி நிறுத்தினாள். கண்களில் கோபம் தேங்கிக் கொண்டு கண்ணீராய் கொஞ்சம் மாறிக் கொண்டிருந்தது. "இது ஒரு விதத்துல ஹானர் கில்லிங். " மீண்டும் ஒரு நொடி மௌனம். அந்த பெண்ணின் பார்வை பார்ப்பவரை உள்ளே ஊடுருவியது.
"உங்க எல்லாருக்கும் தெரியும், ஒரு பத்து நாளா அத்தன MLA ங்களும் அந்த ரிசார்ட் ல என்னென்ன கூத்தடிச்சாங்க னு. வீட்ல வயசு பொண்ணுங்க இருக்கவனுங்க கூட பொறுக்கித்தனம் பண்ணி இருக்கானுங்க. இப்போ ஒரு பேச்சுக்கு கேக்குறோம், இவுங்க பண்ணிட்டு வந்ததையே , நாங்களோ  எங்க அம்மாங்களோ பண்ணிட்டு வந்திருந்தா என்ன பண்ணி இருப்பாங்க? "

கடவுளாக இருந்தாலும், ஒரு பெண்ணின் புனிதத்தை ஏற்க அவளை நெருப்பில் ஏற்றும் சமூகம், தாசி வீட்டுக்கு போக விரும்பும் கணவனை தலையில் தூக்கிச் செல்பவளையே கற்புக்கரசிக்கு அடையாளாமாக சொல்லுவது எத்தனை பெரிய கேவலம் .

" பொட்ட புள்ள படி தாண்ட கூடாது, ஆம்பள எப்படி வேணும்னாலும் ஊர் மேயலாம்? கற்ப்புக்குன்னு ஒரு கோடு போட்டா அது ஆம்பள பொம்பள ரெண்டு பேருக்கும் சமமாத்தான் இருக்கணும். அத மீறினா , ஆம்பளையும் வேசி தான். அந்த கோட்ட தாண்டினா எங்கள கொன்னு போட்டுட்டு மாணத்துக்காக எதுவும் பண்ணுவோம்னு பேசி இருக்க மாட்டானுங்க ? நாங்களும் அதையே தான் பண்ணினோம்.  பொண்ணுக்கு ஒரு நியாயம், தனக்கொரு நியாயம்னு அலையிறவனுங்களுக்கு இது ஒரு பாடமா அமையனும். இதுனால எங்களுக்கு எதிரா எது நடந்தாலும், அத நேருக்கு நேரா நின்னு ஒரு அடி பின்னாடி போகாம எதிர்த்து நிக்க போறோம்.  எங்களுக்கு எந்த உறுத்தலும் இல்ல, பயமும் இல்ல. ."

பேசி முடித்ததும் மூன்று பெரும் கை கோர்த்து, நெஞ்சு நிமிர்ந்து, நேராக பார்த்த பொது காணொளி முடிந்தது. என்றோ செத்து போன ஒரு கவிஞனின் சாம்பல் துகள்களில் கேட்டுக்கொண்டிருந்தது "அக்கினி குஞ்சொன்று கண்டேன்...."

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...