செவ்வாய், 9 செப்டம்பர், 2008

நியூட்டனின் மூன்றாம் விதி

உன்னில் காட்டிய அன்பின் காயங்களில் ....
கற்றேன் நியூட்டனின் மூன்றாம் விதி

புகை

மனித வெடி குண்டு ,,,
இரக்கமற்ற அரக்கர்கள்
எரிகிறது மனம்
பதைபதைக்கிறேன் நான்
கண் சிமிட்டி சிரிக்கிறது கையில் உள்ள சிகரெட் துண்டு ......

ஞாயிறு, 27 ஜூலை, 2008

சிறு துளிகள்

காதலி

பாண்டவர் கொண்டிட்ட பாத்திரம் போலே
என் மனமானது உன் வரவாலே
அட்சயமானது நீ அருகில் வந்ததும்
பிச்சயம் ஆனது பின் விலகிச் சென்றதும்

ஹீரோ

சினிமா ஒரு எதிர் வேள்வி
வரம் தரும் பக்தர்களாய் ரசிகர்கள்
நாலே படங்களில் நல்லவனாய் நடித்ததில் நான் கடவுள்

காதலி
நாளுக்கொரு ஆப்பிள் வேண்டாம்,
உன் பார்வைகளால் என் ஆயுள் நீளும்
வெயிலுக்கு இனி பழ ரசம் வேண்டாம்
உன் புன்னகையால் என் தாகம் தீரும்



கடவுள்

மனிதன் - வயது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகள்
கடவுள் - வயது அதை விட சற்று குறைவு தான்

காட்டிலும் குகைகளிலும் வாழ்ந்த ஆதி மனிதனுக்கு ஒரு கடவுள் இருந்தான். இதோ, இன்று உயர் கட்டிடங்களில் கணிப்பொறியுடன் விளையாடிக் கொண்டிருக்கும் மனிதனுக்கும் ஒரு கடவுள் இருக்கிறான். இவ்விரு கடவுள்களுக்கும் , அந்த மனிதருக்குள் உள்ள நாகரிக வேற்றுமைகேற்ப தோற்ற வேறுபாடு மட்டுமே உள்ளது. கடவுள் பற்றி தவறாய் பேசுவதாய் நினைத்து யாரேனும் காயப் பட்டால் என் ஒவ்வொரு செல்களின் சார்பிலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் . யாரேனும் கோபப் பட்டால் நிச்சயம் நான் உங்களை மன்னிக்கிறேன்.

கடவுள் இல்லை என்ற பிரச்சாரம் எனது கொள்கை அல்ல. மனிதம் மறந்து தனது கடவுளைப் பிரச்சாரம் செய்பவர்களுக்கான என் பரிதாபத்தின் வெளிப்பாடு தான் இது. மனிதனின் இத்தனை ஆண்டு கால பயணத்தில் அவனுக்கு நற்பண்புகள் சொல்லிக் கொடுத்ததில் நிச்சயம் அவன் நம்பும் அத்தனை கடவுள்களுக்கும் மதங்களுக்கும் நிறையவே பங்கு உள்ளது. ஆனால் அனைத்து மதங்களும் சொல்லியும் மனிதன் மறந்து போனது மனிதம் மட்டும்தான் . மதவாதிகளின் மதப் பிரசாரத்தில் பாவம் மறைந்து போனது இந்த மனிதம். ஒன்றாம் வகுப்பிற்கான அறிவு கூட இல்லாத ஒருவன் அறுவை சிகிச்சை செய்தால் விளையும் ஆபத்துதான் மனிதனை நேசிக்கும் பண்பு குறைந்த ஒருவன் கடவுளை நேசிப்பதால் விளையும்.

கடவுளை நம்பாத எவனும் கடவுளை நம்புபவனை கொலை செய்ததில்லை . கடவுளை நம்புபவர் தான் ஒருவரை ஒருவர் கொன்று கொள்கின்றனர் . 'யார் கடவுள்?' என்ற கேள்விக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் இரத்தத்தால் தான் பதில் எழுதப் பட்டுள்ளது. தனது கடவுளை மட்டும் நம்புபவன் கடவுளின் படைப்பாக கருதப் படும் மனிதனை நம்ப மறுக்கிறான். கடவுள்கள் இங்கே கொட்டிக் கிடக்கிறார்கள், கடவுள் தன்மை தான் காணாமல் போய் இருக்கிறது.

ரோடோரங்களில் சிங்கமும் மனிதனும் சிநேகமாய் இருப்பது போன்ற அட்டைப் படத்தோடு மதப் பிரச்சாரம் செய்யும் மனிதர்கள் எங்கும் காணலாம் . ஒரு சர்க்கஸ் விளம்பரதிர்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. மத போதகர்கள் கவனம் ஈர்க்க தெரிந்தவர்கள் . சிங்கம் சைவம் ஆகி நம்மோடு சிநேகமாய் இருந்தால் அதோடு எடுத்துக் கொண்ட புகைப் படம் கழுவப் படும் முன்பே அது நம் வீட்டுக் குழம்பில் கொதித்துக் கொண்டிருக்கும். இவை எல்லாம் கடவுள் மனிதனுக்காக படைத்தது என்ற விளக்கத்தோடு நாம் சுவைத்துக் கொண்டு இருப்போம் .

தூணிலும் துரும்பிலும் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கடவுளை நேசிக்கும் மனிதர்கள், சதையும் இரத்தமும் சேர்ந்து எதிரே நிற்கும் வேறு மத மனிதனை நேசிப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். இங்கே உணவுப் பஞ்சத்தில் இறந்தவரை விட உணர்வுப் பஞ்சத்தில் இறந்தவரே அதிகம். மத போதனைகள் அத்தனையும் மனித போதனையாய் மாறி இருந்தால் அவர்களை காப்பாற்றி இருக்கலாம்.

நிச்சயம் கடவுளை மறந்ததால் இங்கே கொலைகள் பெருக வில்லை . போர் செய்யும் எந்த இரண்டு நாட்டுக்கும் ஏதாவது மதம் கண்டிப்பாய் இருக்கிறது. கொலை செய்பவனும் கடவுளை தொழுகிறான் , கொலை செய்ய படுபவனும் கடவுளை தொழுகிறான். சொல்லப் போனால் மனிதன் கடவுளை மறந்தால் இங்கே நடக்கும் கொலைகளில் ஒரு சதவிகிதமாவது குறையும் .

"எங்கள் கடவுளைக் கும்பிட்டால் வாழ்வில் இருக்கும் துயரம் மறையும். எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார். எங்கள் கடவுளை தொழுவதால் தான் மகிழ்ச்சியாய் இருக்கிறோம். " தன்னை வணங்குபவனை மட்டும் காக்க கடவுள் ஒன்றும் மனிதன் இல்லை. உங்கள் கடவுள் தான் உண்மையாகவே இருக்கட்டும், உங்களை காக்கும் உங்கள் கடவுளுக்கு உலகத்தையும், தன்னையும் தன் கொள்கைகளையும் காக்க தெரியும். முடிந்தால் நீங்கள் மனிதத்தை பிரச்சாரம் செய்யுங்கள் . வேண்டாம் வேண்டாம் , நீங்கள் சும்மா இருந்தாலே மனிதம் தன்னால் பிழைத்துக் கொள்ளும்.

ஞாயிறு, 29 ஜூன், 2008

தமிழ்

தமிழ்.. உலகோடு என்னை இணைத்துக்கொள்ள உதவிய முதல் பாலம். என்னை சேர்ந்த மனிதர்கள் தவிர நான் ஆழமாய் நேசிப்பதாய் உணர்ந்த முதல் உறவு.. ஆங்கிலம் வந்து அழுத்திய போதும், அதில் இருந்து பல சொற்களை தனக்குள் இழுத்துக் கொண்டு, டார்வினின் தத்துவத்தை எனக்கு உணர்த்திய ஓர் இயற்கை நிகழ்வு. இளம் வயதில் இருந்து உருவான முதல் காதல். செடிகளை பிடுங்கி நடும் போது ,அதனோடு சிறிது பழைய மண்ணையும் சேர்த்து நடுவது போல், நான் எத்தனை முறை இடம் பெயர்ந்தாலும் என் வேரோடு ஒட்டிக் கொண்டிருக்கும் முதல் ஈரம்.

கௌரவ டாக்டர் பட்டத்தைக் கூட மருத்துவர் என்று சொல்லிக் கொள்வது போல், திரைப் படம் மோசமாகவே இருந்தாலும் தலைப்பு தமிழில் தான் இருக்க வேண்டும் என்பது போல, அரசியல் கேலிக் கூத்தாக இதை நான் எழுதவில்லை . சபையில் இருந்து ஒதுக்கி வைக்கப் பட்டு, தன்மானக் காயங்களுடன் நின்று இருக்கும் என் தமிழுக்கு நான் போட முயற்சிக்கும் ஆறுதல் மருந்து. தாமதமாய் பேசும் குழந்தை போல, இணைய தளத்தில் என்னை இணைத்துக் கொள்ள இத்தனை நாளானாலும், என்னைப் பேச வைத்த தமிழைப் பற்றி என் முதல் கட்டுரை எழுதுவது, தூரத்தில் இருந்து மலர் தூவி மகிழ்ந்து போகும் ஒரு தொண்டனின் முயற்சி.

சிறு வயதின் மழலை மாறாதிருந்த போது " இங்கிலீஷ் நல்லா வரும், தமிழ் தான் தடுமாறும், இங்கிலீஷ் மீடியம் ல படிக்கிறான் ல " என்று புழங்காதிதம் அடையும் சராசரி நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் தான் நானும் . பயிற்சியைத் தாண்டி, பெருமை வேண்டி படித்த சொந்தக்காரர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதும் அற்ப கூட்டத்தில் நானும் ஒருவனாய் இருந்து இருக்கிறேன் .ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைக்கும் ஒரு சமுதாயத்தில் தன் மகனை சான்றோன் எனக் கேட்க விரும்பும் தாய் தானே எனக்கும்.

ஆங்கில மோகம் ..... இத்தனை ஆண்டுகளில், தமிழ் எழுதிப் படிக்க தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கிக் இருக்கிறோம். நகரங்களில் நாகரிகம் காக்க தமிழர் இருவர் பேசும் போது தமிழைத் தவிர்க்கும் நிலை... இங்கு யாரும் ஆங்கிலத்தில் பேசுவதில் ஆட்சேபனை இல்லை. தமிழில் பேசுவதை தரைக்குறைவாக நினைக்கும் நாகரிக சமுதாயம், அடிமை காலத்தின் வேதனையை சற்று நினைவு படுத்துகிறது . எனக்கு தெரிந்த வெள்ளைக் கார நண்பர்கள் கூட ஆங்கிலம் பேசாதவனை அற்பமாய் பார்ப்பதில்லை . ஆனால் இங்கே தமிழில் பேசுபவனை ,காலத்தில் பின் தங்கியவனாக பார்க்கும் கூட்டம் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது. நண்பரின் பெற்றோருக்கு இரு கரம் கூப்பி வணக்கம் சொன்னேன். தன்னை பழமைவாதிகள் என நான் நினைத்து விட்டதாக கருதி பதிலுக்கு ஹலோ என்று கை குலுக்கி சென்றார்கள். ' வணக்கம் ' சொல்பவன் இங்கே பழமைவாதி!!!! திரைப் படங்களில் கூட, 'அன்பே சிவம்' வெறும் வசனம் நிறைந்து மெதுவாக நகரும் படம் என்று சொல்லிய சில நண்பர் கூட்டம் சிக்ஸ்த் சென்ஸ்ஐ அபாரமாக பாராட்டினார்கள். நல்ல படைப்புக்கு கூட ஆங்கில கவர்ச்சி தேவைப் படுகிறது .

சில நூறு வருடங்களில் தமிழ் மொழிக்கு எழுத்து வடிவம் இருந்தது என்று யாரேனும் தோண்டித் தான் எடுக்க வேண்டும் . பள்ளிகளில் முதல் மொழியில் இருந்து இரண்டாம் மொழிக்கு தள்ளப் பட்டு , "ஜெர்மன் , பிரெஞ்சு படிச்சா மார்க்கும் வரும் அறிவும் வளரும் , தமிழ் படிச்சா என்ன வரும்?' " என்ற மதிப்பெண் கணக்குகளிலும் அவமானக் குறிப்புகளிலும் தலை தொங்கித்தான் கிடக்கிறது எங்கள் தங்கத் தமிழ். எதை செய்தாலும் பலன் கேட்கும் இந்த வியாபார சமுதாயத்தில் மொழி உணர்வுப் பற்றி பேசுவதில் எந்த பயனும் இல்லை. பிள்ளைகள் வந்து பாராத முதியோர் இல்ல வாசிககள் போல தான் தமிழ் புத்தகங்கள் தவங்கிடக்கின்றன. சிட்னி ஷெல்டன் , ஜெபிரி ஆர்ச்சர் மத்தியில் கல்கியும் சாண்டில்யனும் பாவம் தொலைந்துதான் போனார்கள். தனது கற்பனை வளங்களை தமிழ் வடிவத்தில் உலகுக்கு கொடுத்ததில் அவர்கள் தவறு தான் என்ன???

நான் வேற்று மொழிகளை எதிர்க்கவில்லை . நடைமுறை தேவைகளுக்கு வேறு மொழி கற்றாலும் , தமிழ் மொழியைத் திரும்பியாவது பாருங்கள். 'டாட் , மாம் ' என்று சொல்ல வெள்ளைக்கார குழந்தைகள் கோடி இருக்கின்றன. 'அப்பா, அம்மா' என்று அழகிய தமிழில் சொல்லுவதால் உங்கள் குழந்தைகள் அறிவில் ஒரு துளி கூட சிதறி விடாது. அப்படி ஒன்றும் தமிழ் நாட்டில் தமிழ் கற்பதோ, தமிழ் தெரிந்தவரிடம் தமிழில் பேசுவதோ பெரிய குற்றம் இல்லை. ஆங்கிலம் நிச்சயம் உங்களை கோபிக்காது.



காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...