சனி, 4 மார்ச், 2017

தழல் வீரத்தில்..

இரவிற்கும் இதயத்திற்க்கும் ஒரு நெருங்கிய ஒற்றுமை உள்ளது. மனதின் ஆர்ப்பரிப்புகள் எல்லாமே இதயம் வெளி சொல்வதில்லை. பகலின் அத்தனை அநர்த்தனங்களின் நர்த்தனங்களை தனக்குள் புதைத்துக் கொண்டு மௌனத்தின் அடையாளமாய் அலட்டிக் கொள்ளாதது இரவு. சில தினங்களாய் தமிழகத்தில், பிறந்த குழந்தை போல இரவுகளும் விழித்துக்கொண்டு சத்தமிட்டுக் கொண்டிருந்தன. மாநில அரசு, மறைந்த முதல்வரின் பணக்கார அனாதைப் பிள்ளையாய் தவித்ததில், அதை தன் வசப் படுத்த பல பக்கங்களில் இருந்தும் போட்டி நிலவியது. நெருக்கமான தோழியின் கூட்டம், நம்பகமான தொண்டரின் கூட்டம், தமையன் மகள் கூட்டம் என எங்கெங்கிருந்தோ பருந்துகளும் , வல்லாருகளும் தமிழகத்தின் மீது வட்டமிட்டு, ஒன்றை ஓன்று அடித்துக் கொண்டிருந்தன. தினமும் திருப்பங்கள், மக்கள் பிரதிநிதிகளின் முட்டாள்தன  உரைகள், அறிவழிந்த மக்களின் இயலாமை கோபங்கள், கட்சி சார்ந்த ஊடகங்கள் உண்மையின் மீது நடத்திய வண்புணர்ச்சிகள், இளைய ரத்தத்தின் போர் கொடிகள், முதிர்வற்ற முதுமையாய் வலைத்தளங்களின் புலம்பல்கள், ஆறுதலாய் நையாண்டிகள், பால் மறவா குழந்தை கூட அரசியல் பேசும் காணொளிகள், என தினமும் உணர்வுகள் நாட்களை இயக்கிக் கொண்டிருந்தன. கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த மக்களின் உணர்ச்சிகள் உச்சத்தை தொட்டது, மக்கள் பிரதிநிதிகள் பத்து நாளாய் உல்லாச விடுதியில் இருந்து விட்டு வந்து, மக்களின் எண்ணத்திற்கு மாறாக சட்டசபையில் நம்பிக்கை வாக்களித்தது போதுதான். அலையில்லா கடல் கொந்தளிக்கும் போது நிலம் அழியும். குனிந்தே கிடந்த சராசரி மனிதனை கூட இந்த  ஏமாற்றமும், இயலாமையும் கடும் கோபம் கொள்ள  செய்தது. மக்களாட்சி கேலிக்கூத்தாய், அரசு மக்களுக்கு எதிரான ஆயுதமாய் மாறி இருந்ததை கண்டு, ஊமை பொது சனம் உள்ளெ பொருமிக் கொண்டிருந்தது. பகல் நேரங்கள் பரபரப்பாகவும், இரவுகள் அடுத்த பகலுக்கான திட்டமிடுதலிலும், சில நாட்களாய் தமிழகம் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது.


அனால் இன்று நள்ளிரவு புதிதாய் ஒரு புயல் கிளம்பியது.  ஊர் அடங்கிய நிலையில் , குறுஞ்செய்திகளும் , வாட்ஸாப் மற்றும் ஃபேஸ்புக் பதிவுகளும் கைப்பேசிகளில் விடாது அறிவிப்பு மணியை எழுப்பி மக்களை தூக்கத்தில் இருந்து உசுப்பி விட்டுக்கொண்டிருந்தன.  உண்மையா பொய்யா என்று தெரியாது வந்த செய்திகள் அப்படியே முன்னூட்டம் செய்யப்  பட்டன  
.  தெருக்களில் காக்கிகள் அதிகமாக தென்பட்டனர்.  தீயணைப்பு மருத்துவ வாகனங்கள் குறுஞ்சங்கு ஒலியோடு தயார் நிலையில் இருந்தன. சட்டசபை உறுப்பினர்கள் வீடுகள் எல்லாம் இருள் விலக்கி வெளிச்சத்திற்கு வந்தன.  அதுவரை மக்கள் முகத்தில் மட்டுமே இருந்த பதட்டம்,  அவர்கள் பிரதிநிதிகள் குடும்பங்களிலும் பற்றிக் கொண்டது. அனைத்துக் கட்சி தலைமையகங்களும்  இரவிலும் உயிரூட்டப்பட்டன. தொலைப்பேசிகள் அலறிக்கொண்டிருந்தன. ஆளுங்கட்சி தொலைக்காட்சி சமையல் சமையல் நிகழ்ச்சியையும் , எதிர்க்கட்சி தொலைக்காட்சி 'இது மக்களின் எழுச்சியா' என்றும் தங்கள் வேசித்தனத்தை எப்போதும் போல் தொடர்ந்து கொண்டிருந்தன.

ஆளுங்கட்சி அலுவலகத்தில் இருந்து, முக்கிய பிரமுகர்கள் அனைவரும் உடனடியாக வரும் படி ஆணை பறந்தது.  பொம்மை முதல்வர் முருகசாமியும், கட்சியை தன் கையகப்படுத்தி இருந்த சசிகரனும், முன்னிரவின் போதை முழுதாய் தெளியும் முன்பே களைந்து போக, பதட்டத்துடன் பேசிக் கொண்டிருந்தனர்.  சசிகரனின் அர்ச்னைகளை தலை குனிந்து எந்த எதிர்ப்புமின்றி வாங்கி கொண்டிருந்தார் முருகசாமி.
"ஏன்யா, இது எவ்ளோ உண்மைன்னு கூட தெரியாட்டி என்னய்யா நாம ஆளுங்கட்சி , நீ CM வேற",
"தலைவரே, இது பொய் மாதிரி  தெரியல, இன்னும் 5 நிமிசத்துக்குள்ள தெரிஞ்சிடும்"
"இது பொய் மாதிரி தெரிலன்னு சொல்ல வெக்கமா இல்லையா, நீ தானயா போலீஸ் மந்திரி , அத்தன பேர் வீட்டுலயும் பாதுகாப்பு போட சொன்னியா இல்லையா ". மான அவமானங்கள் பார்க்காத அரசியல் வாழ்க்கையில் ஊறிப் போன முருகனுக்கு அது பெரியதாய் தெரியவில்லை.
"நான் வெறும் கை எழுத்து தான தலைவரே போட்டேன். நீங்க தான ஏற்பாடு எல்லாம் பண்ணீங்க". நிதானம் தவறாத கட்டுப்பாடு.

"அப்புறம் எப்புடி யா நடந்தது. இது உண்மையா இருந்து, பயத்துல நம்ம பக்கம் இருந்து பத்து பேரு வெளில போய்ட்டா என்னயா பண்றது?" எல்லாம் முடிந்தது என்று நிம்மதியா இருக்கும் வேலையில் புதிதாய் முதலில் இருந்து மீண்டும் கதை தொடங்கியது  போல் இருந்தது.

"எப்புடி போவானுங்க தலைவரே, நீங்க மறுபடியும் அந்த ஹோட்டல்ல போட்டு எல்லாத்தையும் அடச்சிடா மாட்டிங்களா ?", மிட்டாய் கேக்கும் பிள்ளை போல பழையதை நினைத்து ஆசையாய் கேட்டார் முருகன்.

"வாயா வா, உங்களுக்கு நாலு  வருஷமும் ஊத்தி கொடுக்கவும் கூட்டி கொடுக்கவுமா நாங்க ஆட்சி நடத்துறோம்?" .சில நேரத்தில் கோபம் குழந்தை போல் உண்மையை பேசி விடுகிறது..

"அவனுங்க வீடியோ எல்லாம் இருக்கு, எவன் போறான்னு பாத்துடலாம் தலைவரே"..

"யோவ், அது வெறும் மிரட்டல் கு தான் யா, இவ்ளோ கூட யோசிக்க மாட்டயா? அதான் உன்ன அத்தம்மா CM ஆக்கி இருக்காங்க... அந்த வீடியோ எல்லாம் வெளில  வந்தது, நமக்கு தான்யா மொத பிரச்சன."

காவல் ஆணையரிடம் இருந்து வந்த அழைப்பை சத்தமின்றி துண்டித்துக் கொண்டே, முருகன் வசை வாங்குவதில் ஆர்வமாய்  இருந்தார். "நானுந்தாங்க பதட்டமா  இருக்கேன் . என்ன பண்றதுனு அத்தம்மா கிட்ட கேட்டுட்டு வந்துடுவோமா?"

"கரெக்ட் யா, கேட்டுட்டு வரதுக்குள்ள இங்க எல்லாம் நாசமா போய்டும், இப்போ என்ன பண்றதுனு யோசிக்காம, ஆந்திரா ஜெயில் வரைக்கும் போயிட்டு வரலாம்னு சொல்லுற. என்ன நடக்குதுன்னு மொதல்ல கேட்டியா ".

"IG போன் பண்ணிட்டே தான் இருக்கார் தலைவரே"

"அத ஏன்யா எடுக்கல? எடுத்து தொலைக்க வேண்டியது தான "

"இல்லைங்க, அத்தம்மா பேசிட்டு இருக்கும் போது குறுக்க போன் எடுத்ததுக்கு தான் அந்த கொளத்தூர் காரனுக்கு குறுக்க ஒடச்சீங்க. அதான்". பவியத்தின் உச்சம் என தன்னை காட்டிக் கொள்வதில் உறுதியாய் இருந்த முருகன் தன்னுடைய முயற்சியில் சற்றும் மனம் தளரவில்லை.

"உன்ன எல்லாம் வச்சுக்கிட்டு , எரும மாடு தான் மேய்க்கணும். போன போட்டு கேளுய்யா முதல.. speaker ல  போடு "
இதற்குத்தானே ஆசை பட்டாய் முருகா! ஏவலை ஏற்றதும் கைபேசி கடமையை செய்தது.

மறுமுனையில், "சார் , கன்பார்ம் பண்ணிட்டேன் . MP அப்பாதுரை செத்துட்டார். ஆனா இது கொலைன்னு மக்கள் பேசிக்கிறது வதந்தி மாதிரி தான் தெரியுது சார்."

"அதென்னய்யா வதந்தி மாதிரி. ஒருத்தன் எப்படி செத்தான் னு கூட சொல்ல முடியாதா?" 

ஒரு மாநிலத்தின்  முதல்வர் மரணமே எப்படி நடந்தது என்று மக்களுக்கோ, காவல் துறைக்கோ அல்லது நாட்டில் இருக்கும் அத்தனை ரகசிய பாதுகாப்பு அமைப்புகளுக்கோ தெரியாமல் போகும் இந்த காலத்தில், பார்த்ததும் ஒருவர் மரணம் கொலையா இயற்கையா என்பதை சொல்ல முடியாதது அவ்வளவு பெரிய குற்றமாக தெரியவில்லை.

"அவுங்க வீட்ல நெஞ்சு வலி னு தான் சொல்றாங்க. எந்த விதமான அசால்ட்டும் இல்ல, வெளிப்படையா பாய்சனிங்கோட அடையாளம் ஏதும் தெரில. ஆனா போஸ்ட்-மார்ட்டம் பண்ணாம கண்பார்ம் பண்ண முடியாது சார்."

"போஸ்ட் மார்ட்டம் ஆ ..பாடிய ஆஸ்பத்திரிக்கு எடுத்து போயாச்சா?"

"உங்க கிட்ட கேட்டுட்டு பண்ணிடலாம்னு வெயிட் பண்றோம் சார்".
அதே நேரத்தில் கட்சிக்காரர்களால் செல்லமாக 'மாமா' என்றும், பொது மக்களால் "சாக்கடை எல்லாம் சாணக்கியத்தனம் பண்ணுது " என்றும் வாழ்த்தப்படுகின்ற அத்தம்மாவின் கணவர் 'தில்லை' உள்ளே நுழைந்தார். தொலைபேசி உரையாடலை கேட்டுக் கொண்டே வந்தவர்,
"ஒரு FIR பைல் பண்ணி, இது கொலை, இத நாங்க தான் பண்ணோம்னு எழுதி எங்கள உள்ள தூக்கி போட்டுடு "  என்றார் கோபமாக.

"என்ன மாமா சொல்றீங்க"

"பின்ன என்னடா..நம்ம ஆளு ஒருத்தன் சாவுல சந்தேகம் இருக்குனு நாமளே ஒத்துக்கிட்டு போஸ்ட் மார்ட்டம் வேற பண்ணி , இது இயற்கையான சாவு இல்லைனு தெரிஞ்சா என்ன ஆகும்?"

முருகசாமி அவசரமாய், "எதிரணி மேல பழிய போட்டு மக்கள் கிட்ட அனுதாபம் வாங்கிடலாம் பெரிய தலைவரே"..  சசிகரனுக்கு முன்னால் இன்னொருவரை பெரிய தலைவர் என்று அவசர பட்டு சொல்லி விட்டதுக்கு உள்ளுக்குளே தன்னைதிட்டி க் கொண்டாலும் முகத்தில் அதை காட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சி செய்து தோற்றுக்  கொண்டிருந்தார். சசிகரன் முகத்தில் சின்ன சுருக்கமும், தில்லை முகத்தில் சின்ன சிரிப்பும் வினாடி பொழுதில் வந்து  மறைந்தது. இருந்தாலும் இறுக்கத்தை குறைக்காமல் தில்லை  தொடர்ந்தார். "உன்ன மாதிரி பழைய மாங்கா எல்லாம் இதுக்கு அரசியலுக்கு வரீங்க". என்னதான் அவமானங்களை சகித்துக்  கொண்டாலும்,அதை அரசியல்வாதிகள் மறப்பதில்லை. முருகசாமியை ஒவ்வொரு முறையும் தூக்கி விட்டவர்கள் அவரை இப்படி எல்லாம் பேசி இருக்கிறார்கள். இன்று அவர்களில் பல பேர் அடையாளம் தெரியாமல் மறைந்து  விட்டனர், சிலர் அவருக்கு அடிபணியும் இடத்தில் இருக்கின்றனர்.  மனதுக்குள்ளே இந்த அவமானங்களை குறித்துக் கொண்டு வெளியே ஒன்றும் காட்டாமல் பேசுவதில் முருகசாமிக்கு எந்த சிரமமும் இருந்ததில்லை.

"செத்தவனுக்கோ , நமக்கோ ஜனங்க கிட்டவும்  சரி,கட்சிக்குள்ளவும் சரி , ரொம்ப நல்ல பேரா இருக்கு. கொலைன்னு  சொன்னா, கொலகாரனுக்கு கோவில் கட்டி கொண்டாடிட்டு, நம்மல போட்டு தள்ள பத்து பேர் கெளம்பிடுவான். நமக்கு எவனும் உச்சு கொட்ட போறதில்ல."

"மாமா ,மறுபடியும் ஒரு கொலைய மறைக்க போறோமா?"

"யோவ் போலீஸ், லைன கட் பண்ணு,நாங்க 5 நிமிஷத்துல கூப்பிடறோம். அது வரைக்கும் உங்க ஆளுங்கள வச்சு  அப்பாதுர வீட்டுக்கு எக்ஸ்ட்ரா செக்கியூரிட்டி போட்டுடுங்க. அவங்க வீட்ல இருந்து வெளில யாருக்கும் எந்த நியூஸ் உம் போக கூடாது. பத்திரிக்க காரங்க யாரும் போகாம பாத்துக்கோங்க. வெளில தெரிஞ்சா , சட்ட ஒழுங்கு பிரச்சன வந்துடும். இன்னும் வேற MLA யாருக்கும் எதாவது ஆச்சுன்னா அதுக்கு நீயும் பதில் சொல்லவேண்டி வரும். சந்தேகம்,  போஸ்ட் மார்ட்டம், போலீஸ் கேஸ் னு எந்த பிரச்னையும் வர கூடாது.  அங்க முரளிதரன் கிட்ட பொறுப்பெல்லாம் குடுத்துடுங்க. வேற யாரையும் இன்வால்வ் பண்ணக் கூடாது. எங்க கிட்ட கேக்காம எந்த முடிவும் எடுக்காதீங்க.  "
கண்டவனெல்லாம் ஒரு நிலவரத்தை எப்படி கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதில் கை தேர்ந்த தனக்கு கட்டளை இடுவதை நொந்து கொண்டு, இடப்பட்ட வேலையை செய்ய தொடங்கினார். காவல் துறையின் எல்லைகளை நன்கு அறிந்தவர் அவர்.

தொடர்பு துண்டிக்க பட்டதும், " ஏன்டா, உள்ளுக்குள்ள கூட பேச கூடாதத போன் ல உளர்ர பாரு. இன்னொரு கொலைன்னு யாராச்சும் சொல்லுவாங்களா ". இப்போது அதிகாரம் இருந்தாலும், காவல் துறையை எங்கே வைக்க வேண்டும் என்பது அவசியம். இல்லா விட்டால்  பின்னால் சரியான நேரத்தில் சட்டம் எப்படி பாயும் என்பது தெரியாது என்பது தில்லை இத்தனை வருடத்தில் கற்று கொண்ட பாடங்களில் ஒன்று. இதை எல்லாம் தனக்கு தொடர்பில்லாதது போல் பார்த்து கொண்டிருந்த முதல்வரிடம் சசிகரன் எச்சரித்தான். "முருகா , இங்க பேசுற எதுவும் வெளில போக கூடாது."

"தலைவரே, நீங்க எல்லாம் என்ன சொல்றீங்களோ அத தவிர வேற எதுவும்  நடக்காது."

"மாமா, இப்போ என்ன பண்றது"

"அப்பாதுர நம்ம பழைய முதல்வர் செத்ததுல இருந்தே சோர்ந்து தான் இருந்தாப்ல, இப்போ நெஞ்சு வலி வந்து செத்து   போய்ட்டார். இதுதான் எல்லாரும் சொல்லணும்"

கட்சிக்குள் தனக்கு நிகரான பெரிய தலைகளில் ஒன்று குறைந்தது உள்ளுக்குள் முருகசாமிக்கு கொஞ்சம் சந்தோசமாய் தான் இருந்தது.

"மருமகனே , இப்போ இருக்குற நெலமைல, இது கொலையோ இல்லையோ, ஆனா, கொலையா இருக்குமான்னு பயம் வந்துட்டா உயிர் பயத்துல நம்ம ஆளுங்க ஒரு அஞ்சு பேராவது போயிடுவான். நம்ம ஆட்சியே கயித்து மேல தான் நடத்துறோம்"

"ஆனா, இது கொலைனா நாம அத செஞ்சவன கண்டு பிடிச்சே ஆகணும் மாமா, இல்லாட்டி இன்னும் நாம நிம்மதியா இருக்க முடியாது."

"கேஸே இல்லாம அத நாம விசாரிச்சிக்கலாம். அப்புடி எல்லாம் அரசியல் வாதிங்க மேல எவனும் கைய வைக்க மாட்டான். எதிரணி எதிர் கட்சி எல்லாம் சண்ட போட்டுக்குவோம், ஆனா எல்லாரும் நிம்மதியா பணம் பண்ணனும்னா இந்த மாதிரி கட்சிக்காரங்கல கொல  பண்ற அளவுக்கு போக கூடாதுன்னு எல்லாருக்கும் தெரியும். அந்தாளு எல்லாம் அந்த காலத்துல இருந்து கண்ட கண்ட சரக்கு குடிச்சவன், லிவர் வெந்தே செத்து போய் இருப்பான். இப்போ அரசாங்கத்த கண்ட்ரோல் ல வச்சுக்கணும். அதுதான் முக்கியம். எதுக்கும் போன தடவ மாதிரியே நம்ம ஆளுங்கள அடக்கி கட்டுப்பாட்டுல வச்சுக்கிட்டா நல்லது . அந்த விஜயகுமார உடனே வர சொல்லு. அவன் ஆளுங்க போன தடவ மாதிரியே இப்பவும் தேவ படுவாங்க."

அரசியல், சதுரங்கத்தை விட சாதுர்யம் அதிகமாக தேவைப்  படுகிற விளையாட்டு. ஒவ்வொரு அடி முன்னே போகும் போதும் அடுத்த நூறு நகர்வுகளுக்கான வியூகங்களை சரியாக கணக்கிட்டு முன்னே போய் கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் புதிதாக எதிர் பார்க்கா தடைகள் முளைக்கும், அதை எல்லாம் சலிக்காமல் வெட்டி சாய்த்து நடப்பவனே இங்கே நிலைத்து நிற்க  முடியும். நடந்ததை எப்படி சமாளிப்பது என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, காவல் ஆணையரிடம் இருந்து மீண்டும் அழைப்பு வந்த்து.

"ஸ்பீக்கர் ல போடு"
முருகசாமி மனதுக்குள் " ஆடுங்கடா, உங்களுக்கும் ஒரு நாள் வைக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே "போட்டுடறேன் தலைவரே" என்றார்.

"நாங்க தான் கூப்பிடறோம்னு சொன்னேனே, அதுக்குள்ளே என்னையா அவசரம்.?"

"சாரி சார், எமெர்ஜெண்சி "

பணமும் படையும் தரும் போதையை விட உலகில் பெரியது எதுவும்  இல்லை. சுற்றி இருப்பவர்களின் தகுதிகள் எல்லாம், தனக்கு சேவகம் செய்யவே என்று தோன்றும் பொழுது கடவுள் போல் உணர முடியும்.  மாமா கடவுளானார்.
"எல்லா எமர்ஜென்சியும் பாத்துட்டு தான் இங்க  இருக்கோம்.மொதல்ல நான் சொல்றத கேளு. அமைச்சர் ஆவடி விஜயகுமார உனக்கு கொஞ்ச நேரத்துல போன்  போட சொல்றேன். அவுங்க ஆளுங்க கொஞ்ச பேர் MP அப்பாதுர வீட்டுக்கு  வருவாங்க.அவுங்கள அங்க உள்ள  விட்டு, பாதுகாப்பு வேலைய பாத்துக்கோங்க. நான் விஜயகுமார் கிட்ட இப்போ பேசிட்டு சொல்றேன்."

தனது அவமானங்களுக்கு ஒரு சிறிய மருந்து கிடைத்தது போல் மனதுக்குள் சிரித்துக் கொண்டே, "அது முடியாது சார்" என்றார்.
முருகசாமிக்கு கோபம் பொங்கியது போல் காட்ட வேண்டியது அந்த நிமிடத்தின் கட்டாயம்.
"முடியாதா, அவளவு திமிரா. தலைவர் சொல்றத கேக்க முடியாதா?" . பெருசாக இருந்தாலும் பொம்மைகள் அசைவது, கண்ணுக்கு தெரியாத நூலின் இழுப்புகளிலேயே.
"அப்டி மீன் பண்ணல சார். நான் சொன்ன எமர்ஜெண்சி விஜயகுமார் சார் பத்திதான். நீங்க அவர் கிட்ட பேச முடியாது. சாரி சார், ஹி இஸ் நோ மோர். "

தூக்கி வாரி போட்டது மாமா கூட்டணிக்கு. "யாரு சொன்னாங்க. இதுவும் ரூமரா?"

"இல்ல சார் , இது யாருக்கும் தெரியாது. அவர் வீட்ல செக்யூரிட்டி இருக்க போலீஸ் காரங்க இப்போதான் கால்  பண்ணாங்க. சொந்த காரங்களுக்கு கூட தெரியக்கூடாது னு சொல்லி வச்சிருக்கேன். "

அந்த பதட்டத்திலும் சரியாக முடிவெடுத்த காவல் துறையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
"நல்ல காரியம் பண்ணீங்க. அங்க இருக்க போலீஸ் தவிர யாரும் உள்ளே  போக கூடாது. அங்க இருந்து வேற எந்த தகவலும் வெளியே போக கூடாது."
எந்த முறையான பயிற்சியும் இல்லாமல் மாமாவால் வேக வேகமாக சிந்திக்க முடிந்தது, சசிகரனுக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது.
"பை த வே, ரீசன் பார் டெத்?"

"லுக்ஸ் லைக் சிமிலர் சிச்சுவேஷன் சார். நெஞ்சு வலின்னு சொல்றாங்க."

போன வாரம் குடிச்ச சர்க்குல கலப்படம் சேந்துடுச்சா, மனதுக்குள் லேசாக முருகசாமிக்கு பயம் எட்டி பார்த்தது.

"எனக்கு சந்தேகமா இருக்கு சார். நாம ,  இத இன்வெஸ்டிகெட் பண்ணனும். மறைக்க ட்ரை பண்ணக் கூடாது"

இப்போதைக்கு இருக்கும் அரசியல் குழப்பங்களுக்கு நடுவில், நடப்பது கொலையாக இருந்தால், அரசே கலைந்து விடும். மறுபடியும் சத்தியமாக ஆட்சியை பிடித்து விட முடியாது. அரசியல் பலம் இல்லாமல் போனால், சேர்த்து வைத்த கோடிகளை பல பூதங்கள் சேர்ந்து காவல் காக்க வேண்டிய தலை வலி வரும். சீக்கிரம் யோசி, சீக்கிரம் யோசி என்றே மாமாவின் இதயம் துடித்து கொண்டிருந்தது.

"நான் சொல்றத சரியா கேட்டுக்கோங்க. நாம விசாரிக்கலாம், ஆனா, இப்பவே இல்ல. பஸ்ட், விஜயகுமார் சாகல, உயிரோட தான் இருக்கார். அவருக்கு,  ஏதோ இன்பெக்சன் அப்டினு குப்பல்லோ ல அட்மிட் பண்ணி இருக்காங்க. இப்படித்தான் எல்லாருக்கும் தெரியணும்"

"சார், இது கொஞ்சம் ரிஸ்க் ஆ தெரியுது. வெளில தெரிஞ்சா பெரிய பிரச்னை ஆகிடும்"

"உன் சைடுல பிரச்னை வராம நாங்க பாத்துக்குறோம். லா அண்ட் ஆர்டர் கெட்டாலும் உனக்கு பெரிய பிரச்னை தான் . அண்ட், இதுல லீகல் சைடு எல்லாம் நாங்க பாத்துக்குறோம். குப்பல்லோ ல அவருக்கு என்னென்ன ட்ரீட்மெண்ட் தருவாங்க னு ஒரு தப்பு இல்லாம ரெகார்ட் ரெடி ஆகிடும்."

குப்பலோ  நிறுவன தலைவர் ராவுக்கு அதெல்லாம் ராவா சாப்பிடற மாதிரி என்பது ஏற்கனவே பலருக்கும் தெரிந்து தான் இருந்தது. இந்த உரையாடலின் போதே, எள்ளுக்கு எண்ணையாக சசிகரன் குப்பல்லோ ராவுக்கு கைபேசியில் கூப்பிட்டு விட்டு இருந்தார். பயத்தில் வயிற்றை குமட்டி கொண்டு வந்த முருகசாமி கழிவறை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார். முதல் கட்ட நடவடிக்கைகளை காவல் ஆணையருக்கு விளக்கி விட்டு, அடுத்து செய்ய வேண்டியதை தீவிரமாக திட்டமிட தொடங்கினர் தில்லையும் சசிகரனும்.

முதல்ல அப்பாதுர சாவுல எந்த வதந்தியும் பரவாம பாத்துக்கணும். ட்ராமா ல எந்த தப்பும் நடந்துட கூடாது. விஜயகுமார் கன்னத்துல மூணு ஓட்ட போட்டு ஒரு மாசம் கூட குப்பல்லோ ல வச்சு பாத்துக்கலாம். அவுங்க வீட்ல இருக்குறவுங்க எல்லாத்துகிட்டயும் பேசிடனும். அவரோட பொண்ணு இத போலீஸ் விசாரிச்சே ஆகணும்னு ஆடம் பிடிக்கிறதா,ஆணையர் சொன்னது கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது. இத்தனை பேருடைய வாயையும் அடக்க வேண்டும். கட்சி ஆளுங்களை விட்டு விட கூடாது, மக்களை சமாளிக்க இப்போதைக்கு தேவை இல்லை, தேர்தல் வர இன்னும் காலம் இருக்கிறது, சாமர்த்தியமாக நடந்து கொண்டால். பிதாமகன் படத்தில் சூர்யா சொல்லுவது போல், இந்த பொழப்புக்கு பண்ணி மேய்க்க போய்டலாம் என்று தோன்றியது முருகசாமிக்கு.  தில்லை தெளிவான ஒரு திட்ட அமைப்பை ஏற்படுத்தினார். அப்பாதுரை யின் உடல் அடுத்த நாளே எரியூட்ட பட வேண்டும், எந்த சந்தேகமும் எழ கூடாது. விஜயகுமார் பெண்ணுக்கு கட்சியில் ஒரு பெரிய பதவியை தருவதாக வாக்களிக்க வேண்டும், மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். பிற MLA கள் அனைவரும், இன்னும் ஒரு பத்து நாளாவது ஒரே இடத்தில் கட்டுக்குள் இருக்க வேண்டும். ஒன்று, அவர்கள் எங்கும் போக முடியாது, இன்னொன்று, அவர்களுக்கு அதுவே பாதுகாப்பு. இந்த முறை, மலை பிரதேசம் தேர்ந்தெடுக்கப் பட்டது. குன்னூர் இன்னும் பத்து நாட்களில் பல கோடிகளை நேரில் பார்க்க போகிறது. அத்தம்மாவின் பேச்சாளராக பேரம் பேசுவதில்  போன முறை  சிறப்பாக பணியாற்றிய பொன்கோட்டையனை இந்த முறையும் உபயோகிக்க முடிவு செய்ய பட்டது.  சிரிப்பு நடிகர் லொடுக்கு மூலமாக சிறப்பான  பல பலான  அனுபவங்களை MLA க்களுக்கு கொடுப்பது பற்றியும் பேசப் பட்டது. தரகனாக இருந்தாலும் தலைவர்கள் வீட்டில் இருக்க வேண்டும்.


திட்டம் தீட்டப்பட்டு சம்மந்தப்பட்ட பெரியவர்களுக்கு செய்தி அனுப்ப தயாராகிக் கொண்டிருந்த போது முருகசாமி வேர்க்க விறுவிறுக்க வேகமாக ஓடி வந்தார்.
"தலைவரே " என்று கதறிய அவருக்கு அடுத்து வார்த்தைகள் வரவில்லை. நாக்கு வறண்டு உளறியது, கண்கள் மயக்க நிலையில் தெரிந்தன. கைகள் நடுங்கின, மிகப் பெரிய பயங்கரத்தை பார்த்ததை போல முகம் வெளிரி ப் போய் இருந்தது. அவருடைய இந்த நிலையை கண்ட மாமா தில்லைக்கு உள்ளே பொறி   தட்டியது.

"இப்ப யாருய்யா?" என்றே வெளிப்படையாக கேட்டுவிட்டார்.

கத்தி அழும் நிலையில் இருந்த முருகசாமி மிகவும் பிரயத்தினம் எடுத்து பேசினார், "நம்ம பொன்கோட்டயன் தலைவரே, எவனோ ஸ்கெட்ச் போட்டு தான் நம்ம ஆளுங்க ஒருத்தர் ஒருத்தரா தூக்குறானுங்க. இதெல்லாம் அவுங்களா செத்த மாதிரி இல்ல. நான் கொஞ்ச நாளைக்கு தலை மறைவா ஆகிடறேன்", அதிகாரமில்லாத முதல்வராலும், அப்படியெல்லாம் தலைமறைவாக போய் விட முடியாது என்று உணராமல் உளறினார்.

இது வரை தைரியமாக இருந்த தில்லைக்கும் மெல்லிய பயம் ஒட்டிக் கொண்டது. மறைந்தவர்கள் எல்லாம் கட்சியில் இருந்தவர்கள், பதவிகளில் இருப்பவர்கள். அவர்களுக்கே இப்படி என்றால், முன்னாள் முதல்வரால் கட்சியில் இருந்தே துரத்தி விடப்பட்ட தனக்கு என்ன நிலை என்ற கவலை ரேகை அவர் முகத்தை தொற்றிக் கொண்டது.  எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், சில நேரங்களில் காலம் அவர்களை அடக்கி வைக்க தவறுவதில்லை. தில்லை அப்படியே சாய்ந்து உட்கார்ந்து விட்டார். இதற்க்கு மேல் இப்போதைக்கு எதுவும் யோசிக்க முடியாதோ என்று தோன்றியது. தோற்பது உறுதி என்றாலும் கடைசி நாள் வரை போர் செய்வதை தவிர ராவணன்களுக்கு வேறு வழி இல்லை .

"மாமா, இது கண்டிப்பா எதோ பெரிய திட்டம் மாதிரி தெரியுது. நாம மக்கள கொறச்சு எட போட்டுட்டோமோ?"

ஒரு சிகிரெட் எடுத்து பத்த வைத்துக் கொண்டு தில்லை பேசத் தொடங்கினார். விழுவதும் எழுவதும் பெரிய நிகழ்வுகளாக இருக்க வேண்டியதில்லை. ஒரு சராசரி கணத்தில் கூட அப்படி நடக்கும், கடலலைகள் போல. இப்போது தில்லை எழுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.

"உளராத சசிகரா, நம்மள எல்லாம் எதிர்த்து கோஷம் போடவே இத்தன வருஷம் கழிச்சு இப்போதான் அவுங்களுக்கு தைரியம் வந்திருக்கு, அதுவும் கூட்டமா மட்டுந்தான். அரசியல் வாதிங்கள போட்டு தளர அளவுக்கு மக்கள் வளர  ரொம்ப காலம் ஆகும்.  இது எவனோ நடத்துற அரசியல் வெளாட்டு மாதிரி தான் தெரியுது.  MLA ங்க கொஞ்ச பேர தூக்கிட்டா நம்ம பெரும்பான்ம போய்டும். இல்லாட்டி சட்ட ஒழுங்கு பிரச்னையா மாத்தி ஆட்சிய கலச்சிடலாம்.  ஒன்னு இது சென்டரோட வேலையா இருக்கலாம், இல்லாட்டி எதிரணி வேலையா கூட இருக்கலாம். உடனடியா எல்லா MLA வும் குன்னூருக்கு வந்தாகணும். இதுக்கு மேல நேரம் கடத்த கூடாது "

அடுத்த ஐந்து நிமிடங்கள், அந்த அலுவலகம் மாறி இருந்தது. மாறி மாறி கட்டளைகள் பறந்தன. தொலைபேசிகள், அலை பேசிகள் எல்லாம் விடாது இயங்கின. நம்பிக்கைக்கு உரிய ஒரு பத்து பேர் மட்டுமே இதில் இணைக்க பட்டனர். பொன்கோட்டையன் ஒரிசாவில் உள்ள அவரது அக்கா வீட்டிற்க்கு போய் இருக்கிறார் என்றே சொல்லப் பட்டது. அடுத்த இரண்டு நாட்களில் நெடுஞ்சாலை விபத்து ஒன்றில் அவர் வண்டி தீப்பற்றி எரிந்து அவர் உயிரிழக்க ஏற்பாடுகள் நடந்தன. அவர்  குடும்பத்தினருக்கும் பதவி மற்றும் பண பேரம் பேசப் பட்டது. பல பேர்களின் பண்ணை வீடுகளில் குப்பை வண்டிகள் யாருக்கும் தெரியாமல் பல சாக்கு பைகளை மாற்றி கொண்டிருந்தன. சிறப்பு பாதுகாப்போடு அத்தனை MLAக்களும் அழைக்க பட்டு வந்தனர். தேவைப்பட்டால் வேண்டுமென்று இரண்டாம் நிலை திட்டத்திற்காக, வேறொரு கட்சியின் இரண்டு MLA க்கள்  கட்சி தாவ தயார் நிலையில் வைக்கப் பட்டனர். தன்னுடைய கட்டப் பஞ்சாயத்துக்கள், போக்கிரித்தனங்கள் எல்லாவற்றிற்கும் பல தளங்கள் மேலே இயங்கி கொண்டிருந்தவர்கள் தில்லை கூட்டத்தினர் என்பது முருகசாமிக்கு தெளிவாக விளங்கியது. அவர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டதாகவே பட்டது. இத்தனை பயங்கரமானவர்கள் பக்கம் நின்று இருப்பது, கத்தியை கையில் பற்றி இழுத்து விளையாடும் ஆபத்தான விளையாட்டு என்று மிக தாமதமாக அவருக்கு புரிந்தது. உண்மையாகவே கொஞ்சம் நெஞ்சு வலித்தது.

அடுத்த நாள் காலை எப்போதும் போல்  சோம்பல் முறித்து விடிந்தது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இயற்கையாக  மறைந்தது குறித்த  துக்க செய்தி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது. மாநில அமைச்சர் விஜயகுமார் சிறிய உடல் உபாதையால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டது பெட்டிச் செய்தியாக வெளிவந்தது. கட்சியின் மக்கள் தொடர்பாளர்கள் அமைச்சரின் உடல்நிலை குறித்து, பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்றும், அவர் காலையில் பாயாசம் குடித்து விட்டு மீண்டும் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதாகவும், தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்தனர். குப்பல்லோவில் வழக்கம் போல், பாதுகாப்பு கருவிகள் சரியாக வேலை செய்யாமல் இருந்தன.  மற்ற ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் மிகவும் மனச்சோர்வில் இருப்பதால், குன்னூருக்கு ஒரு வார பயணம் மேற்கொண்டனர்.

ஊடகங்களும் வலைத்தளங்களும் பல விதமாக நடப்பனவற்றை அலசிக் கொண்டிருந்தன. எல்லோரும் பார்த்தும் வெளியில் அதை ஒத்துக்கொள்ள முடியாத நிர்வாண படங்களாக அரசியல் உண்மைகள் எல்லோருக்கும் தெரிந்தும் தெரியாமல் இருக்கும்.  அடுத்த இரண்டு நாட்களில் திட்டமிட்ட படி பொன்கோட்டயன் விபத்தில் பலியானதாக தகவல் வந்தது. பலருக்கும் சந்தேகம் இருந்தும் சாட்சிகள் எதுவும் இல்லாததால் உண்மை ஒளிந்து கொண்டது.  கடந்த சில மாதங்களில் இதை போன்று வெளிப்படையான உண்மைகள்  மறைக்க படுவதும் மறுக்க படுவதும்  தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் நிகழ்வாகி போனது. அரசியல் வாதிகளோடு சேர்ந்து மக்களுக்கும் இந்நிலை பழகி விட்டிருந்தது.  தனது தொழிற்சாலையில் இருந்து தாராளமாக மதுபோத்தல்களை  குன்னூருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்திருந்தார் சசிகரன். நடிகர் லொடுக்கின் சிவப்பு விளக்கு மகிழுந்து தனது கடமையை சீரும் செம்மையாக செய்து வந்தது. வழக்கம் போல எவன் தாலி அருந்தால் என்ன என்று மக்கள் பிரதிநிதிகள் உல்லாசமாக கூத்தாடிக் கொண்டிருந்தனர்.  சசிகரனுக்கு சாதகமாக மறைந்த மூன்று பேரின் மகள்களும் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து இருந்தது கூடுதல் மகிழ்ச்சியை தந்தது. ஆறாவது நாளில் சிகிச்சை பலனின்றி விஜயகுமார் மருத்துவமனையில் காலமானார் என்ற அறிவிப்பு குப்பல்லோவில் இருந்து வந்தது. மூன்று சம்பவங்களும் சந்தேகிக்கும் படி இருந்தாலும், ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவைகளாகவே அதிகாரபூர்வ வட்டங்கள் சித்தரித்தன. துக்கம் அனுசரிக்க அத்தம்மா சிறையில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார், கட்சிக்காரர்கள் அவருக்கு ஆதரவாக அழுதுகொண்டே ஊடகங்களின் செவிக்கு பசியாற்றிக் கொண்டிருந்தனர். சுவர்களில் கட்சி சின்னத்தை கடவுளாக வரைந்து , வீட்டில் பிள்ளைகளின் பள்ளிக்கூட புத்தகங்களுக்கு கூட அட்டை போட நேரமில்லாமல் கட்சியின் விளம்பர  படங்களை தெருவெங்கும் ஒட்டி ஒட்டி அழகு பார்த்த தொண்டர்கள் மூணு பேர் தற்கொலை செய்து கொண்டனர். நடப்பதை எல்லாம் வயலும் வாழ்வும் பார்ப்பது போல் எந்த உணர்வும் இன்றி ஆளுநரும், மத்திய அரசும் பார்த்துக் கொண்டிருந்தனர். 'கட்டி கொடுத்ததோட கடம முடிஞ்சு போச்சு, இனி மேல உம்புருஷன் உன்ன அடிச்சாலும் கொன்னாலும் நாங்க கேக்க மாட்டோம்' என்ற பழைய அம்மா அப்பாவின் மன நிலையில் தேர்தல் ஆணையம் தள்ளியே நின்றது. இந்திய அரசியலமைப்பின் மிக முக்கிய தூணான நீதிமன்றம், அரசாள்பவரின் சித்திரக் கூடமாக அவர்கள் விருப்பப் படி நிறங்களை ஏற்றுக் கொண்டன. வழக்கம் போல மக்கள் அங்கும் இங்கும் சின்னதாகவும் பெரியதுவாகவும் கூச்சல் செய்து கொண்டிருந்தனர். எத்தனை விசயத்திற்குத் தான் போராடுவார்கள் பாவம்!

விஜயகுமார் மிக நூதனமான விஷம் கொடுத்து  கொல்லப் பட்டிருக்கிறார் என்ற குப்பல்லோவின் ரகசிய அறிக்கை வந்தது. எதோ தாலியம் அது இது என்று புரியாத பெயராக இருந்தது,  அவர் கூட்டத்துக்கும் ஒரு பக்கம் கவலை கொடுத்தது, அதை எந்த சத்தமும் இன்றி விசாரிக்க தனியாக ஒரு குழு அமைக்க பட்டது. முருகசாமிக்குக் கூட தெரியாமல் மிகவும் ரகசியமாக பார்த்துக்  கொண்டனர் சசிகரன் கூட்டத்தினர்.  அதே நேரம், மறைந்த மூவரின் பெண்களையும் கட்சியில் அதிகார பூர்வமாக இணைத்து கொள்ள ஏற்பாடுகள் செய்ய பட்டன. பெண்களை தனிப்பட்ட முறையில் எப்படி வைத்திருந்தாலும், பொது தளங்களில் அவர்களை மேல் நிறுத்தி உயர்வாக பேசுவதையே சமூகம் அங்கீகரிக்கிறது. இதில் மூன்று படித்த பெண்கள் அரசியலுக்கு வருவது மக்களிடம் நல்ல அபிமானம் கிடைக்க ஒரு வாய்ப்பை கொடுக்கும் என்றே சசிகரனின் கூட்டம் நம்பியது. இடைத்தேர்தலுக்கு இது நல்ல வரவேற்பை கொடுக்கும் என்று கணிக்கப் பட்டது. எளிமையான ஆடைகளில் அந்த மூன்று பெண்களும் அழுது கிடந்த படங்கள் வலைத்தளங்களிலும் சம்பந்த பட்ட தொகுதிகளிலும் ஏற்கனவே வளம் வர தொடங்கி இருந்தன. என்னதான் அந்த அரசியல்வாதிகள் மேல் கோபம் இருந்தாலும், மக்களில் சிலர் இந்த பெண்களை பார்த்து பரிதாபப் பட்டனர். ஒன்பதாவது நாள் குன்னூரிலிருந்து கூட்டம் வெளிவந்தது. அன்றைக்கே கோயமுத்தூரில் 3 பெண்களும் கட்சியில் இணையும் விழா ஏற்பாடுகள் செய்ய பட்டன.  பத்திரிக்கைகள் கும்பல் கும்பலாக பெரிய அரசியல் மாற்றத்தை படம் பிடிக்கும் பகட்டுடன் படை எடுத்தன. பல கேலிக் கூத்துகளை பார்த்து சோர்ந்து போய் இருந்த பெரும்பாலான மக்கள், இதையும் சகித்துக் கொண்டனர்.

மாலை நேரம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் விரிந்தது. மூன்று பெண்களும் தத்தம் தந்தையின் படங்களுக்கு மாலை அணிவித்து மேடைக்கு வந்தமர்ந்தனர். சசிகரனும் கட்சியின் மற்ற மூத்த தலைவர்களும், மறைந்தவர்கள்  உயிருடன் இருந்த போது அவர்களைப் பற்றி  பேசாத பல உயர்குடி பண்புகளை சொல்லி கண் கலங்கினர். தந்தையின் மரணத்திலும் தயங்காமல் மக்கள் சேவைக்காக தங்களை அர்ப்பணிக்க தயாரான மாதர் குல திலகங்கள் என அந்த மூவரையும் போற்றி புளங்காகிதம் அடைந்தனர். சசிகரன் அத்தம்மா சிறையில் இருந்து எழுத்துப் பிழைகளுடன் அனுப்பிய கடிதத்தை ஒரு வழியாக உணர்ச்சி வசப்பட்டு வாசித்துக் முடித்தார்.   அடிமைகள் எல்லோரும் ஒவ்வொரு வரியிலும் வான்தொடும் வகையில் ஆர்ப்பரித்தனர். பக்கம் இருந்து பிரியாணி வாசனை வரத் தொடங்கிய நிலையில், அப்பாத்துரையின் மகள் ரேவதி பேசத் தொடங்கினார். வணக்கம் சொன்ன விதத்தில் சிறப்பான மொழி ஆளுமை தெரிந்தது. அரசியலுக்கு மிக முக்கியமான தகுதி உடையவள் என்று நினைத்து சசிகரன் மனதிற்குள் அடுத்த திட்டத்தை வரைய தொடங்கினார்.
"எங்கள் அரசியல் நுழைவு பற்றி குறை சொல்பவர்களுக்கெல்லாம் சொல்லுகிறோம், இது அரசியல் பிரவேசம் அல்ல, அக்னி பிரவேசம்."
குடிக்காதவன் கூட புல்லரித்து கை தட்டினான்.
"எங்கள் தந்தைகள் இறக்க வில்லை ", உணர்ச்சி வசப்பட்ட மகளிரணி கண்ணீர் மல்க, ஆமா ஆமா என்று கத்தின.

"அவர்களை நாங்கள் மூவரும் தான் கொலை செய்தோம்" , இதை சற்றும் எதிர்பார்க்க வில்லை யாரும். கூட்டத்தில் சலசலப்பு தொடங்கியது. ஊடக நிருபர்கள் எல்லாம் ஒரு நிமிடம் அதிர்ச்சியை மறந்து ஆர்வமாகி அருகே ஓடி வரத் தொடங்கினர். ரேவதி மேலும் பேசிக் கொண்டிருந்தாலும் தூரத்தில் கேட்காத படி ஒலிபெருக்கிகள் உடனடியாக நிறுத்த பட்டன. மேடையில் இருந்த பெரியவர்கள் அந்த பெண்களை தாக்க துடிக்க, சசிகரனின் உடனடி உத்தரவில் காவல் துறை அந்த பெண்களை சூழ்ந்து கொண்டது. கூச்சலும் குழப்பமும் கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும் என்ற கவலையில் அங்கு கூடி இருந்த அத்தனை காவலர்களும் முழு வீச்சில் செயல்பட்டனர். சசிகரன் சமிஞ்கைகள் மூலம் கட்டளைகளை தனது ஆட்களுக்கு பிறப்பித்துக் கொண்டே இருந்தார்.. அந்த கூட்டத்தில் மாமா தில்லையைத் தேடித் கொண்டிருந்த அவனது கண்கள் கொஞ்சம் பனித்தன, குழப்பத்தால் பறந்த தூசி என்று நினைக்கையில், கால்கள் தடுமாறின, கைகள் கட்டுப்பாடுகளை இழப்பது போல் இருந்தது. தொண்டை வறண்டு நாக்கில் ஒரு வித எரிச்சல் தெரிந்தது, குடல் வரை உள்ள உணவுப்பாதை முழுதும் உணர முடிந்தது. எரிச்சல் கொஞ்சம் கொஞ்சமாக நெஞ்சிலும் தெரிய ஆரம்பித்தது, மூளை எதையும் தெளிவாக யோசிக்க முடியவில்லை, நாற்காலியில் இருந்து கீழே விழும் உணர்வு கூட இல்லாமல் சரியத் தொடங்கிய சசிகரனை, திரும்பி பார்த்து, புன்னகை செய்தாள் ரேவதி.

                 _____________________________________________________________

பி.கு.
அன்று இரவே வாட்சப்பில் ஒரு காணொளி தமிழகம் எங்கும் பரவியது. வெள்ளை சுடிதாரில், சிவப்பு துப்பட்டா அணிந்த மூன்று பெண்கள் கை கட்டி நின்றிருந்தனர். அவர்கள் பார்வை தீர்க்கமாக தெரிந்தன. முகத்தில் எந்த சலசலப்பும் இல்லாத அமைதி. கோபமோ, சோகமோ, மகிழ்ச்சியோ எதுவும் வெளிப்படுத்தாத விழிகள்.  கைப்பேசியிலேயே பதிந்திருப்பது போல வெளிச்சம் குறைவாகவே தெரிந்தது.  காணொளி தொடங்கிய நான்காவது வினாடியில் முதலாமவள் பேசினாள்,
 "வணக்கம், நாங்க யாருன்னு இப்போ அறிமுகம் தேவை இருக்காது. எப்படியும், நாங்க யாருனு உங்களுக்கு தெரியிர நேரம், நாங்க பேசக் கூடிய நிலைல இருக்க மாட்டோம்னு எங்களுக்கு தெரியும். அதுனால தான் முதல்லயே இத பதிவு செஞ்சு வச்சுட்டோம். "
ஒரு வினாடி மௌனம் . பார்ப்பவர்கள் இதய துடிப்பை ஓடச் செய்தது. மூன்று பெண்கள் திட்டம் தீட்டி பெற்ற தந்தைகளை கொன்று இருக்கின்றனர். அதை பற்றி அறிக்கை வேறு முன்னதாகவே பதிவு செய்திருக்கின்றனர் என்பது, காணொளியை பார்ப்பவர்களை, மர்மத் தொடரின் கடைசி பக்கம் நோக்கி நடக்கும் விறுவிறுப்பான ஓட்டத்துடன் வைத்திருந்தது. தொண்டையை செருமிக் கொண்டு இரண்டாமானவள் தொடர்ந்தாள்,
"எங்க அப்பாங்கள கொன்னது நாங்கதான். இத எதுக்காக பண்ணோம்னு ஆளாளுக்கு கற்பன பண்ணிக்க கூடாதுன்னு தான் இப்போ பேசிட்டு இருக்கோம். நாங்க ஏதோ நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் இத பண்ணதா யாரும் தப்பா நெனச்சிட கூடாது.  அவுங்க எல்லாம் எவ்வளவு மோசமானவுங்கனு தெரிஞ்சே ஓட்டு போட்டு ஜெயிக்க வச்ச உங்களுக்காக நாங்க எதுக்கு கோப படனும்? நீங்க எக்கேடு கேட்டு போனாலும் எங்களுக்கு ஒரு பைசா நஷ்டம் இல்ல"

பார்ப்பவர்களுக்கு உள்ளுக்குள்ளே சுட்டது. தங்களை ஒரு சிறு வயது பெண் திட்டுவது அவமானமாக தெரியவில்லை. அவள் சொன்ன விசயமே கேட்பவர்கள் சுயங்களை கொஞ்சமாக உரசி காயப்படுத்தியது.மூணாமவள் பேசத் தொடங்கினாள்.

"இந்த ரெண்டு மாசத்துல, நம்ம நாட்டோட அரசியலமைப்பையும் மக்களாட்சியும் எவ்வளவோ கேவல படுத்தினாங்க. ஆனா அதுக்காக கூட அவுங்கள கொல்ற அளவுக்கு நாங்க துணியில.  எப்போ எல்லாம் தேவையோ அப்போ லஞ்சம் குடுத்து வேலைய சாதிச்சுக்கிட்டு, எங்கெல்லாம் முடியுதோ அங்க வரி கட்டாம அரசாங்கத்த ஏமாத்திட்டு, சாதிப் பேர சொல்லியும் காசு வாங்கியும்  ஓட்டு போட்டுட்டு, ஊரே மாறனும் ஆனா நான் சட்டத்த மதிக்க மாட்டேன் அப்டினு, எல்லா தப்பையும் செஞ்சுட்டு திரியுற உங்களுக்கு நடுவுல என்ன காமராஜரும் கக்கணுமா வருவாங்க. எங்க அப்பாங்கள போல கழிசடைங்க தான் வருவாங்க. அதுனால அதுக்காக எல்லாம் கோப படர அளவுக்கு நாங்க முட்டாள் இல்ல"

பார்க்கும் அனைவருக்கும் அவர்களை செருப்பால் அடித்தது போல இருந்தது. மாற்றம் என்பது உள்ளிருந்தும் தொடங்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளாமல், தன்னோட சுயநலத்துக்கும் இயலாமைக்கும் காரணம் தேடும் சனங்களுக்கு சுருக்கென்றிருந்தது. நல்லதுக்கு தானே ஊரோடு ஒத்து வாழனும், நாம செய்யிற தப்புக்கெல்லாம் அல்லவா ஊரோடு ஒத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முதலாமவள் தொடர்ந்தாள்
"அப்போ நாங்க எதுக்கு அவுங்கள கொல பண்ணோம்னு குழப்பமா இருக்கா"
ஒரு வினாடி நிறுத்தினாள். கண்களில் கோபம் தேங்கிக் கொண்டு கண்ணீராய் கொஞ்சம் மாறிக் கொண்டிருந்தது. "இது ஒரு விதத்துல ஹானர் கில்லிங். " மீண்டும் ஒரு நொடி மௌனம். அந்த பெண்ணின் பார்வை பார்ப்பவரை உள்ளே ஊடுருவியது.
"உங்க எல்லாருக்கும் தெரியும், ஒரு பத்து நாளா அத்தன MLA ங்களும் அந்த ரிசார்ட் ல என்னென்ன கூத்தடிச்சாங்க னு. வீட்ல வயசு பொண்ணுங்க இருக்கவனுங்க கூட பொறுக்கித்தனம் பண்ணி இருக்கானுங்க. இப்போ ஒரு பேச்சுக்கு கேக்குறோம், இவுங்க பண்ணிட்டு வந்ததையே , நாங்களோ  எங்க அம்மாங்களோ பண்ணிட்டு வந்திருந்தா என்ன பண்ணி இருப்பாங்க? "

கடவுளாக இருந்தாலும், ஒரு பெண்ணின் புனிதத்தை ஏற்க அவளை நெருப்பில் ஏற்றும் சமூகம், தாசி வீட்டுக்கு போக விரும்பும் கணவனை தலையில் தூக்கிச் செல்பவளையே கற்புக்கரசிக்கு அடையாளாமாக சொல்லுவது எத்தனை பெரிய கேவலம் .

" பொட்ட புள்ள படி தாண்ட கூடாது, ஆம்பள எப்படி வேணும்னாலும் ஊர் மேயலாம்? கற்ப்புக்குன்னு ஒரு கோடு போட்டா அது ஆம்பள பொம்பள ரெண்டு பேருக்கும் சமமாத்தான் இருக்கணும். அத மீறினா , ஆம்பளையும் வேசி தான். அந்த கோட்ட தாண்டினா எங்கள கொன்னு போட்டுட்டு மாணத்துக்காக எதுவும் பண்ணுவோம்னு பேசி இருக்க மாட்டானுங்க ? நாங்களும் அதையே தான் பண்ணினோம்.  பொண்ணுக்கு ஒரு நியாயம், தனக்கொரு நியாயம்னு அலையிறவனுங்களுக்கு இது ஒரு பாடமா அமையனும். இதுனால எங்களுக்கு எதிரா எது நடந்தாலும், அத நேருக்கு நேரா நின்னு ஒரு அடி பின்னாடி போகாம எதிர்த்து நிக்க போறோம்.  எங்களுக்கு எந்த உறுத்தலும் இல்ல, பயமும் இல்ல. ."

பேசி முடித்ததும் மூன்று பெரும் கை கோர்த்து, நெஞ்சு நிமிர்ந்து, நேராக பார்த்த பொது காணொளி முடிந்தது. என்றோ செத்து போன ஒரு கவிஞனின் சாம்பல் துகள்களில் கேட்டுக்கொண்டிருந்தது "அக்கினி குஞ்சொன்று கண்டேன்...."

திங்கள், 22 செப்டம்பர், 2014

இது படிப்பதற்கு இல்லை..

                                                ----------- முற்றும் ----------------

"ஹூம்.. இந்த இன்டர்நெட்ட வெச்சுக்கிட்டு கண்டவனெல்லாம் கத எழுதுறான். இதுல ஹாரர் ஸ்டோரி வேற.".

கூகுள் க்ரோமை எரிச்சலாய் கொன்றான். பேய் இருக்கிறதோ இல்லையோ, அதைப் பற்றி பேசும் போதும், கதையில், திரையில் பார்க்கும் போதும் கொஞ்சமாய் திகில் மனதின் ஓரம் ஒட்டிக் கொள்கிறது. சற்று நேரம் முன் வரை குளுமையாய் தெரிந்த ஜன்னல் காற்று இப்போது கொஞ்சம் அமானுஷ்யமாய் இருந்தது. பட பட வென காற்றில் ஆடிய செய்தித் தாளின் மேற்பக்கங்கள் இப்போது இயல்பாய் தெரியவில்லை.
"கில் தெம் ..." 'தட தட தட ' - திடீரென்று வந்த சத்தம் உடலை ஒரு வினாடி நடுங்க செய்தது.

"ஷிட்... இந்த மாதிரி பாப்-அப் எல்லாம் எவன் டிசைன் பண்றானோ. கர்ண கொடூரமா ஒரு ஆடியோ வேற."

எப்படியா உயிர் பெற்ற பாப்-அப் ஜன்னல்களை எல்லாம் கோபத்தோடு மூடினான். எரிச்சலில் கூட ஒரு மகா தத்துவம் தோன்றியது. திறக்க படும் எல்லா ஜன்னல்களிலும் வசந்தம் மட்டுமே வருவதில்லை. சிந்தனையில் மூழ்கும் முன்னரே "கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் " .... கதறிய அலாரம் சத்தம் உடலில் சில்லென்று ஒரு அதிர்வை பரப்பியது. அலைப்பேசி 9.30 p.m . "Talk to Appa " என்று ஒரு செய்தியோடு மின்னிக் கொண்டிருந்தது.

"வித்யா ஆஆஆ " மனதிற்குள் கடிந்து கொண்டே அலாரத்தை அமைதிப் படுத்தினான். முக்கால் வாசி நேரம் வேலையில் மூழ்கிக் கிடக்கும் இவனை இப்படி ஏடா கூடமான ஒலிகளை கொண்டு நினைவூட்டல்கள் பதிவு செய்து  வைப்பது அவள்தான். இப்போது அப்பாவிடம் பேச மனமில்லை. காலையில் பேசிக் கொள்ளலாம். வேலைக்கு நடுவில் பத்து நிமிடம் ஓய்வுக்காக படித்த கதை கூட இனியதாய் இல்லை. அசதியும் எரிச்சலும் இன்னும் அதிகமானது போல் தெரிந்தது. இண்டர்காம் ஐ கையில் எடுத்தான்.
"வித்யா...இந்த அலாரம் வைக்காதன்னு எத்தன தடவ சொல்றது!.."
".........."
"ப்ளீஸ் ப்பா..இந்த மாதிரி சவுண்ட் தலைல அடிக்கிற மாதிரி இருக்குது"
"..........."
"யா, காபி இஸ் எ பெட்டர் ஐடியா. தேங்க்ஸ்"  சொல்லிவிட்டு இண்டர்காமுக்கு ஒய்வு கொடுத்தான்.

'க்ரீச்ச்' - பாத்ரூம் கதவை மெல்ல திறந்தான். சிறு வயதில் பாத்ரூம்கள், கதையில் படித்த பேய்களின் கூடாரமாகவே தெரியும். கையை துலாவி லைட் ஆன் செய்யும் வரை மனது திக் திக்கென்றிருக்கும், சில சமயம் உருவமில்லா விரல்கள் வந்து கையை பிடித்துக் கொண்டு லைட் ஐ போட விடாமல் தடுப்பது போல் ஒரு உணர்வு தோன்றும். அறைக்குள் ஒளி வரும் வரை இதயத் துடிப்பு இரட்டிப்பாகும். இன்னும் கூட உள்ளூர பயம் இருந்துக் கொண்டேதான் இருக்கிறது. சிறு பிள்ளையாய் இருந்தால் அப்பாவையோ அம்மாவையோ துணைக்கு அழைக்கலாம். அவர்கள் தைரியசாலிகள் என்று அப்போதெல்லாம் தோன்றியதுண்டு. வளர வளர பயங்கள் மறைவதில்லை, மறைக்கப் படுகின்றன என்று பின்னரே புரிந்தது. விளக்கை ஒளிர விட்டு குழாயை வேகமாய் திறந்து விட்டான். கையால் நீரை முகத்தில் தெளித்ததும் கையெல்லாம் ஒரு வேலை ரத்தமாய் மாறிவிடுமோ என்று ஒரு முட்டாள்தனமான உணர்வு.

"சே, இந்த பேய் படம் எடுத்தவனெல்லாம் காலி பண்ணனும்". எரிச்சலாய் இருந்தது.  பேய் பற்றிய நிறைய கற்பனைகளை திரைப்படங்கள் ஊட்டியுள்ளன.  இந்த பேய் கதையை இன்று படித்திருக்க கூடாதே என்று அவனுக்கு தோன்றியது. ஏதோ அறைக்குள் அசைவது போல் தோன்ற நிமிர்ந்து பார்த்தவன் சட்டென்று அனிச்சையாய் பின்னே நகர்ந்தான்.

"இந்த கண்ணாடி சனியன சின்க் மேல எதுக்கு வச்சுத் தொலஞ்சோம்"

சின்ன வயதில் இருந்து படித்த, பார்த்த, கேட்ட பேய் கதைகள் அனைத்திலும்
கண்ணாடிக்கு பெரும்பங்கு இருந்தே உள்ளது. மனதில் பயம் இருக்கும் நேரமெல்லாம் அவன் பாத்ரூம் கண்ணாடிகளை பார்ப்பதை தவிர்த்து விடுவான். விளக்குகள் எரியும் போதும், கண்ணாடிகள் தவிர்க்கப் படும் போதும் பேய்கள் எங்கோ மறைந்த விடுகின்றன. வேகமாய் கண்ணாடியை விட்டு நகர்ந்து கதவை திறக்க போனான். கதவை திறந்ததும் சட்டென்று உடல் முழுதும் ஒரு பய மின்னல் பாய்ந்தது. வேகமாய் இரண்டடி பின்னால் போனான்.

"பிசாசு, ஏண்டி இப்டி கதவுக்கிட்ட வந்து நிக்குற, அதுவும் தலைய விரிச்சுப் போட்டுட்டு"

"ஏங்க, கதவுக்கிட்ட நிக்கிறது கூட தப்பா!!! போனா போகுது, தல வலிக்குதுன்னு சொன்னீங்களே அப்டின்னு காபியோட வந்து நின்னேன்"

"எம்மா, அதுக்காக வாசல்லையே வந்து நிக்கனுமா..ஒம் பசங்க என்ன பண்றாங்க . நீ எதுக்கு கொண்டு வந்த"

"அவுங்க படிச்சிட்டு இருக்காங்க..இந்தாங்க"

காபியை வாங்கி ஒரு முறை உறிந்து விட்டு, "தேங்க்ஸ் பா..கொஞ்சம் பெட்டரா இருக்கு. நன்றி மனைவியே". சொல்லிவிட்டு கணிப்பொறி முன்னால் அமர்ந்தான்.

"லொள்ளுன்னு கொலச்சுட்டு நன்றிக்கொன்னும் கொறச்சல் இல்ல" என்று முணுமுணுத்துக் கொண்டாள். அவன் வேலையில் குதிக்கும் முன்னரே கேட்டு விடலாம் என்று

"ஏங்க, அப்பாவுக்கு போன் பண்ணீங்களா?" என்று தயங்கித் தயங்கி கேட்டாள்.

"வித்யா, நிறைய தடவ சொல்லிட்டேன். நான் வேலை செய்யும் பொது என்ன தொந்தரவு பண்ணாத..ஒன்னும் ஒலகம் அழிஞ்சிடாது, நாளைக்கு பேசிக்கிறேன்"

"வீட்லயும் இந்த வேலைய கட்டிட்டு அழுறதுக்கு ஆபிஸ் லயே இருந்திருக்கலாம்" சொல்லிவிட்டு பதில் கூட கேக்காமல் அறையை விட்டு வெளியே கிளம்பினாள். திருமணம் ஆகி பல வருடங்கள் ஆனதற்கான அடையாளம் அது.

காபியை உறிந்துக் கொண்டே ஓரிரு நிமிடம் எதையும் யோசிக்காமல் அமைதியாய் இருந்தான். அமைதி. மனம் கொஞ்சம் லேசானது போல் இருந்தது. இன்னும் ஓரிரண்டு நிமிடம் வேறு எதாவது செய்துவிட்டு வேலையை தொடரலாம் என்று மெயில் பாக்ஸ் திறந்தான். வழக்கம் போல் அத்தனை விளம்பர மெயில்கள். யாருக்காக இதெல்லாம் அனுப்புகிறார்கள் என்று தோன்றியது. கண்கள் மெயில் சப்ஜெக்ட் கலை மேய்ந்து கொண்டிருக்க, ஒரு வாசகம் கவனத்தை ஈர்த்தது. "உன்னுடைய கடைசி 30 மணி நேரம்" இதென்ன புது விதமான ஸ்பாம் ஆ என்று நினைத்து அந்த மெயிலை கவனமாக திறந்தான்.
உள்ளே
 "உன்னுடைய கதை முடிகிறது, இன்னும் 30 மணி நேரத்தில். - வாசாபி ". 9.29 மணிக்கு வந்திருந்தது.

"ம், வர வர எப்டி எல்லாம் ஜன்க் வருது, அந்த கத படிச்சே இருக்க கூடாது, ஏதோ மால்வேர் வந்துடுச்சு போல, எத்தன ஆண்டி-வைரஸ் ஆண்டி-ஸ்பாம் போட்டாலும் இதெல்லாம் முழுசா நிறுத்த முடியல  " மனதுக்குள்  எரிச்சல் பட்டுக் கொண்டான். தலை வலி குறைந்த மாதிரி இல்லை. இருந்தாலும் வேலையில் கவனம் செலுத்த தொடங்கினான். கடிகாரம் ஒவ்வொரு நொடியையும் இழந்து கொண்டிருந்தது.

                                     ---------------------------------

'சஷ்டியை நோக்க சரவணா பவனா..' மங்களகரமான அலாரத்தோடு காலை புலர்ந்தது. சிறு வயதில் 'கிர்ர்ர்ர்ர்' என்று பக்கத்து வீட்டையும் சேர்த்து எழுப்பும் அலார சத்தம் கேட்டு படபடப்போடு எழுவது எரிச்சலாய் இருக்கும். மற்ற நேரங்களில் அமைதியை கெடுக்கும் கைப்பேசி காலையில் அமைதியாக எழுப்புவது ஆறுதலாய் இருந்தது. கண்களை திறந்தும் திறக்காமலும் போனை கையால் தடவியே அலாரத்தை நிறுத்தினான். மெல்ல கண்களை திறந்து மறுபக்கம் திரும்பியவன், "ஷிட்ட்ட்ட்ட்" என்று கதறி விடுக்கென்று பின்னே தாவினான். ரத்தம் ஒரு நிமிடம் உறைந்து போனது. கட்டிலின் ஒரு பக்கம் தலையில் தடாலென்று இடித்தது. ஓரிரு வினாடிகளில் இயல்பானான். கேக்க பொக்க வென்று சிரித்த 8 வயது மகனை பார்த்து கோபம் வந்தது.

"எரும எரும , என்னடா கருமம் இது." கத்தினான்.

"ம்ம்ம்...நேத்து நீங்க ஸ்கூல் பங்க்ஷன் வரேன்னு சொல்லிடு வரல. அதான் நான் நேத்து போட்ட வேசத்த உங்களுக்கு காட்டலாம்னு காலைலேயே மேக்-அப் பண்ணிட்டு வந்தேன்" அப்பாவியாய் சொன்னான்.

உடலை ஒட்டிய வெள்ளை ஆடையில் பரவலாய் அங்கங்கே ரத்த கீற்றுகள். ஒரு கண் மட்டும் விகாரமாய் பெரிதாக, ஆனால் பாதி வெந்ததும் வேகாமலும், இன்னொரு கண் எதோ களிமண் போல் இருக்க, மூக்கு வாயெல்லாம் விகாரமாய் புள்ளிகள். இத்தனை அருவருப்பாய் பேய் மாஸ்க்குகள் பார்த்தால் பேய்க்கே கோபம் வரும்.

"என்ன வேஷம் டா இது, உங்க ஸ்கூல் ல யாருக்கும் அறிவே இல்லையா"

"அது ஒரு பேய் ஸ்டோரி ப்பா..நான்தான் மெய்ன் க்யாரெக்ட்டர்."

"உனக்கு கரெக்ட்  க்யாரெக்ட்டர் தான்..", எரிந்து விழுந்தான். "டோன்ட் டூ திஸ் ஸில்லி திங் அகேன்".

"ஏம்பா, பயந்துடீங்களா ? " குறும்பாய் சிரித்துக் கொண்டு கேட்டான். வழக்கமாக பிள்ளைகளை அடிப்பதில்லை, ஆனால் அன்று முதுகில் ஒன்று வைக்க வேண்டும் போல் இருந்தது.
"ஸ்டாப் லாபிங்க்.. இட்ஸ் நாட் ஃபன்னி, அப்பாக்கு கோபம் அதிகமாறதுக்கு முன்னாடி ஓடிடு", மிரட்டிவிட்டு பாத்ரூம் பக்கம் நடந்தான்.

வாடிய முகத்தோடு, "டேய் அண்ணா, உன் ஐடியா வால நான் திட்டு வாங்கிட்டு இருக்கேன்" என்று முனங்கிக் கொண்டே கீழே நடந்தான் சிறுவன்.

          _______________________________


"வழுக்கினா சுளுக்கு வரும், ஆனா, அந்த பொண்ணுக்கு சுளுக்கினதுல அவென்  வழுக்கி விழுந்துட்டன்.." FM இல் பிரபல RJ  பின்னிக் கொண்டிருக்க காரை நிதானமாக ட்ராபிக் நடுவே புகுத்திக் கொண்டிருந்தான். அலுவலகம் பக்கம் வர, FM இல் இப்போது கார்த்திக் காதலை சொல்லிக் கொண்டிருக்க, ரோடோரம் எதோ கூட்டம் சேர்ந்திருந்தது. ஹார்ன் அடித்துக் கொண்டே ஓரமாய் ஊர்ந்து கூட்டத்தை கடக்க முயற்சி செய்தான். கூட்டத்தின் நடுவில் தரையை சிவப்பு திரவம் நனைத்துக் கொண்டிருந்தது. அங்கங்கே ஆடை கிழிந்து உடல் வழியே ரத்தம் கசிந்துக் கொண்டிருந்த ஒரு உடல். கார் மெல்ல ஊர்ந்தது செல்ல, அவளது முகம் கண்ணில் பட்டது. வாய் அகல திறந்திருக்க, கன்னச் சதை கீழே தொங்கிக் கொண்டிருக்க, உதடுகள் கிழிந்து ரத்தக் கீற்றுகளோடு, கண்கள் குத்தீட்டி போல் இவன் திசையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு வினாடி, அவள் இவனையே உற்றுப் பார்ப்பது போல் இருந்தது.

"ப்ப்பூ" , ஆழமாக மூச்சிழுத்து, ஆசுவாச படுத்திக் கொள்ள முயற்சி செய்தான். "ரிலாக்ஸ், ரிலாக்ஸ்" உதடுகள் மெல்ல முணுமுணுத்துக் கொண்டன.

முந்தய இரவில் அந்த கதை படித்ததில் இருந்தே மனதும் சரியில்லை, நடப்பதெல்லாம் கூட சரியாக இல்லாதது போல் இருந்தது. உடனே அந்த மெயில் ஞாபகம் வந்தது. காரை ஆபிஸ் வாசலில் நுழைத்து, வேகமாய் இக்னிஷனை அணைத்துவிட்டு, சாவியை செக்யூரிட்டியிடம் கொடுத்து விட்டு அவசரமாய் கைபேசியை எடுத்து ஜிமெயில் திறந்தான். வழக்கம் போல் குவிந்திருந்த ஸ்பாம்களுக்கு நடுவில் கண்கள் மேய்ந்தன. "கடைசி 24 மணி நேரம்" என்று காலை 3.29 க்கு ஒரு மெயில். பதட்டமாய் திறந்தான், உள்ளே ஒரே வாசகம்.
"கடைசி முழு  இரவு, கடைசி 24 மணி நேரம் - வாசாபி ". ஒரு புறம் மனதில் கலவரம் அதிகமானது, இன்னொரு புறம் இது அதீத கற்பனையோ என்றும் தோன்றியது. புது விதமான இனைய தள விளையாட்டாய் இருக்கலாம் என்று மனம் சமாதானமும் செய்துக் கொண்டது. முதல் மெயில் 9.29 க்கு, இரண்டாவது மெயில் 3.29 க்கு, சப்ஜெக்ட்டில் 30 மணி நேரம், 24 மணி நேரம் ...மூளையில் சுருக்கென்று எதோ குத்த, வேகமாய்புதிய மெயில்களை பார்க்க தொடங்கினான். கைபேசியில் மணி 9.28 காட்டிக் கொண்டிருந்தது. இதயம் வேகாமாய் துடித்தது. அணிச்சை செயலாய் கால்கள் அலுவலகம் உள்ளே நடக்க, ஒரு கை ஐ.டி. கார்டை சென்சார்களில் காட்டிக்கொண்டு முன்னே சென்று கொண்டிருந்தான். ஏ.சி இருந்தும் உடல் வேர்த்து ஒழுகியது. இன்னொரு கை மீண்டும் மீண்டும் ஜிமெயில் ஐ ரெப்ரெஷ் பண்ணிக் கொண்டே இருந்தது. மணி 9.29, புதிய மெயில் எதுவும் வரவில்லை. கண்களின் அத்தனை செல்களும் கைபேசியை நோக்கியே பார்த்துக் கொண்டிருந்தன, உதடுகள் காய்ந்து வெடிப்பது போல் இருந்தது. தலைக்குள் பாரம் இறங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நொடியும் இதயத்துள் ஊசி நுழைத்துக் கொண்டிருந்தது. இன்னும் சிலவினாடிகளில் 9.29 கடந்து விடும். ஜிமெயில் ரெப்ரெஷிங் என்று சொல்லி சக்கரத்தை சுற்றிக் கொண்டிருந்தது. கைபேசி 9.30 காட்டியது. மனம் கொஞ்சம் அமைதியானது போல் இருந்தது.  ரெப்ரெஷிங்க் நின்று, அணைத்து மெயில்களும் சட்டென ஒரு வரிசை இறங்கின. "கடைசி 18 மணி நேரம்" என்ற சப்ஜெக்டோடு 9.29 க்கு ஒரு மெயில்.

உடலில் தீ மீண்டும் பற்றிக் கொண்டது. கைகள் நடுங்க அலைபேசி நழுவி கீழே விழுந்து, உரை தனியாகவும் பாட்டரி தனியாகவும் பறந்து சிதறியது. அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டுத் திரும்பி பார்த்தனர். "என்ன சாமி, அடுத்த ஐ-போன் ரிலீஸ் க்கு ரெடி ஆகிடீங்க போல" என்று ஒருவன் கலாய்க்க, சிரிக்கும் நிலையில் இல்லாமல் அவனை முறைத்துப் பார்த்தான். சிதறிய பாகங்களை பொறுக்கி, ஒன்று சேர்த்து வேக வேகமாக மூடி, அதற்க்கு உயிர் கொடுத்தான். அது அவசரம் புரியாமல் மெதுவாய் விழித்துக் கொண்டிருந்தது. பொறுமை இழந்து முகத்தில் வியர்வை திப்பிகளுடன், ஜிமெயிலை திறந்தான். கடைசியாய் வந்த அந்த மெயிலை திறந்தான். உள்ளே ஒரே வாசகம், "பயத்துடன் தொடங்கிய இறுதிப் பகல், கடைசி 18 மணி நேரம் - வாசாபி ".

இவனுக்கு உடல் தூக்கி வாரிப் போட்டது.  இதை விளையாட்டாய் எடுக்கக்கூடாதோ என்று தோன்றியது. யாரோ தன்னை கவனித்துக் கொண்டே இருந்திருக்க வேண்டும். ஆனால் எதற்கு என்று புரியவில்லை. மனதில் குழப்பம் அதிகமானது. ஒரு வேலை, கூட இருக்கும் யாரவது விளையாடுகிறார்களா!! சட்டென எதோ புரிந்தது போல் இருந்தது, கண்கள் கொஞ்சம் பிரகாசமானது. வேகமாய் அலைபேசியில் விரல்கள் விளையாடியது, எதிர்முனையில் "கூட மேல கூட வச்சு " இனிமையாய் பாடிக் கொண்டிருந்தது.
"ஹே வித்யா, எவ்வளவு நேரண்டி? என்ன பண்ணிட்டு இருந்த?"கத்தினான்.

"சரி, அத விடு, கார்த்திக் நேத்து நைட் எப்போ தூங்கினான் னு  தெரியுமா?

".................."
முகம் இன்னும் கொஞ்சம் தெளிவானது.

"நாலு மணி வரைக்கும் என்ன பண்ணான்!! இப்பவே என்ன பெரிய ஸ்கூல் ப்ராஜெக்ட். ரொம்ப ஓவர் தெரியுமா"

போனை வைத்தவன் கொஞ்சம் நிம்மதியானான். அவனுடைய 12 வயது மகன் கார்த்திக் இது போல் முன்னவே விளையாடி இருக்கிறான்.

"'யூ ஆர் எ மில்லியனர்', 'வீ ஆர் கோயிங் டூ ஸ்டீல் யுவர் கார்', 'யு ஆர் அரெஸ்டட்" என்று பல முறை விளையாடி இருக்கிறான். சொன்னாலும் கேட்பதில்லை. நேற்று கூட கதை படிக்க தொடங்கும் முன்னர் அவன் தன்னுடைய அறைக்கு வந்து போனது நினைவுக்கு வந்தது. இன்று காலை நடந்ததும் அவனுக்கு தெரிந்திருக்கும், இன்னைக்கு ஸ்கூல் லீவ் வேறு, அப்போ இது எல்லாம் அவன் வேலையாத்தான் இருக்கும். "

மனதுக்குள் பாரம் நிறைய குறைந்திருந்தது. தலை வலி குறைந்ததில், வேலை செய்ய மும்முரமடைந்தான். வினாடிகள் மறுபடியும் இறந்துக் கொண்டிருந்தன.

   ____________________

மதியம் தலை வலி கொஞ்சம் அதிகமானது போல் இருந்தது. முந்தைய இரவின் குறைவான தூக்கம், குழம்பிய மன நிலை, உடலும் மனதும் அசதியாய் தெரிந்தது. காபி அறை வரை சென்று வரலாம் என்று கிளம்பினான். காபி ஒரு அங்கிகரிக்கப்பட்ட போதை. அது இல்லாத ஒரு உலகில் பலர் அலுவலக மாடியில் இருந்து குதித்து இருக்கலாம். அந்த நேரத்தில் காபி மெஷினின் சத்தம் காபி ராகம் போல் இருந்தது. சுடச்சுட கோப்பையில் இருந்து வந்த ஆவி நாசியின் வழியில் சென்று மூளையில் வயலின் மீட்டியது. இளஞ்சூடு பரவிய நெற்றியில் கொஞ்சம் பாரம் குறைந்தது. ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டே தேவ திரவத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். யாரோ உள்ளே நுழைந்த சத்தம் அந்த நேரத்து அமைதியை கொஞ்சம் கெடுத்தது. தலை கவிழ்ந்து, கண் மூடி கோப்பையை முகர்ந்து கொண்டிருந்தான். ஒரு வித மயக்கத்தில் இருந்து கண்கள் மெதுவாய் திறந்தன. கண வினாடியில் உடல் முழுக்க மின்சாரம் பாய்ந்தது. ஜன்னல் கண்ணாடியில் அந்த பிம்பம். காலை விபத்தில் இறந்து கிடந்த அந்த பெண், அதே ரத்தக் கறை படிந்து. வேகமாய் பின்னால் திரும்பினான். எந்த உணர்ச்சியும் இல்லாத அவள் அவனை கூர்ந்துப் பார்த்தாள், அவள் பார்வை அவன் கை நோக்கி போக, அவள் பார்வையை தொடர்ந்த அவன் கண்கள் அனிச்சையாய் தனது கைகளை பார்த்தது. ஆவி பறக்க கோப்பையில் கொதித்துக் கொண்டிருந்தது ரத்தம். பார்த்த அதே நொடி ஒரு துளி ரத்தம் மேல் இருந்து அதனுள் விழுந்தது, அவனது இன்னொரு கை வாயை தொட்டுப் பார்க்க எங்கும் ரத்தம்,,நிமிர்ந்த நொடி அவன் மூச்சு படும் தூரத்தில் அந்த பெண் முகம் முழுக்க சிவப்பாய் சிரித்துக் கொண்டிருந்தாள். கை கால்கள் அசைய மறுக்க, வாய் திறந்தாலும் அலறல் வர மறுக்க, உடல் எல்லாம் கட்டிப் போட்ட படி இருக்க, அதிரிச்சியில் கண் விழித்தான். முகம் வியர்த்துப் போய் இருந்தது. ஒன்னும் புரியவில்லை. எதிரில் கணிப்பொறியில் மனைவியும் மகன்களும் சிரித்துக் கொண்டிருந்தனர். அலுவலகத்தில் தூங்குவது முதல் முறை அல்ல, ஆனால் இன்று அந்த தூக்கம் அசதியை இன்னும் தான் அதிகப் படுத்தியது. போனை எடுத்து எண்களை தட்டினான். "ஜகன், ஒரு காபி அடிச்சிட்டு வருவோமா?"

__________

பகல் பொழுது எப்படியோ முடிந்தது. குழப்பங்கள் இருந்தாலும், அலுவலகத்தில் முடிக்க நினைத்த பணிகள் முடிந்தது கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. வீட்டிற்க்கு வந்த போது "என் கணவன், என் கண்ணீர்" தொலைக்காட்சி தொடரின் 2472 வது பாகத்தில் மூழ்கிக் கொண்டிருந்தாள் மனைவி.
"ஏம்மா, பசங்க வீட்ல இருக்கும் போது இதெல்லாம் பாக்காதன்னு எத்தன தடவ சொல்றது!"

"எனக்கு பொழுது போக வேணாமா!!, நான் என்ன எல்லார் மாதிரி நாள் பூராமா பாக்குறேன்,,ஒரு நாளைக்கு 10 கூட பாக்குறது இல்ல.."

"நீ எத்தன வேணும்னா பாரு, பசங்க இருக்கும் போது மட்டுமாவது அத ஆப் பண்ணி பை, இல்லாட்டி ஏதாவது உருப்படியா பாரு. வாழ்க்கைல இருக்குற டென்ஷன் பத்தாதா!"

"வந்ததும் ஆரம்பிக்காதீங்க. ரெப்ரெஷ் பண்ணிட்டு வாங்க, காபி தரேன். பசிச்சா சொல்லுங்க, சாப்பாடு பண்ணிடலாம்."

"நீ என்னவோ பண்ணு, இதுக்கு என்னோட பேய் கனவே பரவாயில்ல போல இருக்கு." முணுமுணுத்துக் கொண்டே உள்ளே சென்றான். மிகவும் கொடூரமான இசையுடன், ஐந்தாறு முகங்களை மிகவும் ஸ்லோ மோஷனில் க்ளோஸ்-அப் செய்து கொண்டிருந்தது தொலைக்காட்சி பெட்டி.

_________________________________

கிட்டத்தட்ட சாப்பாடு முடிக்கும் தருவாயில் கார்த்திக் கைபேசியில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வந்தான். அப்பாவை பார்த்ததும் காதில் இருந்த காதொலிப்பானை கழட்டிவிட்டு "ஹாய் ப்பா" என்றான்.

"டேய், ஹெட் போன்ஸ் போடாத, நல்லதில்லைன்னு சொன்னா கேளேண்டா.."

"கூல் ப்பா, கொஞ்ச நேரம்தான். ஒன்னும் ஆகாது.", எதுவும் நடக்காதது போல் தட்டை எடுத்துக் கொண்டே அமர்ந்தான்.

தனக்கு வந்த மெயில் ஞாபகம் வர, சுவாமி கண்ணில் கேலியோடு சிரித்துக் கொண்டே "கடைசி 30 மணி நேரம்" என்று பயமுடுத்தும் தொனியில் கார்த்திக்கை நோக்கி சொன்னான். அவன் எந்த சலனமும் இல்லாமல் ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டே ரொட்டியை தின்று கொண்டிருந்தான். சுவாமி கொஞ்சம் எரிச்சல் வந்தவன் போல், சற்று எழுந்து அவன் காதைப் பிடித்து திருகி, 
"டேய், நா உனக்கு அப்பன்டா" என்றான்.

"ஏங்க, சாப்டும் போது என்ன வெளாட்டு, அவனோட காத விடுங்க"

"உனக்கு தெரியாது உன்னோட திருபுத்திரனோட வேல, என்கிட்டயே வம்பு பண்றான் ராஸ்கல்"

"அப்பா, நான் என்னப் பண்ணேன்"

"நடிக்காத மகனே, உன்னோட மெயில் விளையாட்ட எல்லாம் மூட்ட கட்டி வை முதல்ல"

"என்ன மெயில் ப்பா, எனக்குப்  புரில.நான் இப்போ எதுவுமே அனுப்பலையே"

"கார்த்திக், வெளாட்றது ஓகே,,ஆனா பொய் சொல்றது தப்பு"

"ப்ராமிஸ் ப்ப்பா, நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்கு புரியல."

"டேய், 6 மணி நேரத்துக்குஒரு மெயில் அனுப்ச்சு வெளாடிட்டு இப்போ புரியலன்னு சொல்லாத"

"அப்பா, ஐ கெஸ் யு ஹேவ் காட் சம் ப்ரான்க் மெயில். பட் ஐ ப்ராமிஸ், இட்ஸ் நாட் மீ"

"எனக்கு இப்போ நிஜமாவே கோபம் வருது கார்த்திக்"

"அப்பா, அம் நாட் ப்லப்பிங். நான் எதுவும் உங்கள கலாட்டா பன்னல"

அவன் நடிப்பது போல் தெரியவில்லை. லேசாக பய ரேகைகள் உடல் முழுக்க பரவ தொடங்கின. வேகமாக மொபைல் போனை எடுத்து ஜிமெயிலை திறந்தான். கண்களும் கை விரல்களும் பதட்டத்துடன் மெயில்களை மேய்ந்தன. 
'கடைசி 12 மணி நேரம்" என்ற சப்ஜெக்ட், நேரம் 3.29 p .m . பார்த்ததும் தலை சுற்றியது. 

"அப்பா, நீங்க மட்டும் சாப்டும் போது மொபைல் யூஸ் பண்றீங்க"

"வில் யு ஷட் அப்."
 வித்யா குழம்பினாள், அவனுடைய பதட்டம் அவளையும் பற்றிக் கொண்டது.

பயத்துடன் அந்த மெயிலை திறந்தான், வழக்கம் போல் ஒரு வாசகம்..
 "பகல் கனவு, அதிலும் பேய் கனவு, கடைசி 12 மணி நேரம் - வாசாபி "
கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. கண்கள் மெல்ல மூட, முகம் சரிந்து சாப்பாட்டுத் தட்டு நோக்கி கவிழத் தொடங்கியது. 

----------------------------------

கண்கள் திறக்க போராடின, மலையை அசைப்பது போல் இருந்தது. மெல்ல மெல்ல கண்கள் திறந்து பார்த்தான். மிகவும் பலவீனமாக உணர்ந்தான். கவலை, பயம், பதட்டம்  எல்லாம் கலந்த முகத்துடன் வித்யா அருகிலேயே அமர்ந்திர்ந்தாள். இவன் கண் விழித்ததுதான் தாமதம்,
"என்னங்க நீங்க, இந்த மாதிரி மிரட்டல் எல்லாம் வந்தா உடனே சொல்றதில்லையா??""

"ஸ்பாம் னு நெனச்சேன்டி..இப்பக் கூட எனக்கு கொழப்பமாத்தானிருக்கு....சம்திங் இஸ் ராங். ஆனா, நாம பயப்படற அளவுக்கான்னு இன்னும் புரியல. "

"நாம ஜாக்கிரதையா இருக்குறது தப்பில்லைங்க..சேகர வரச் சொல்லி இருக்கேன்..இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவார்."

"சேகர் கிட்ட எதுக்குப்பா சொன்ன, போலீஸ் கிட்ட போற அளவுக்கு இது..."

"இது கொல மிரட்டல் மாதிரி தெரியுதுங்க, அதென்ன சின்ன விசயமா..அப்டியே போலீஸ் கிட்ட சொல்லற அளவுக்கு பெரிய விசயமா இல்லைனாக் கூட, ப்ரெண்ட் கிட்ட சொல்லலாம் தான.."

சொல்லிக் கொண்டிருக்கும் போதே வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.

__________________

நான்கு மெயில்களையும் பார்த்துவிட்டு, "அதென்னடா நாலாவது மெயில் ல கனவு பத்தி இருக்கு, என்ன அது, யார்கிட்ட எல்லாம் அத ஷேர் பண்ண"

"எனக்கும் புரியல டா..ஆபீஸ் கலீக்ஸ் ரெண்டு பேர் கிட்ட கேஷுவலா சொன்னேன், ஆனா அவுங்க இந்த மாதிரி ஆள் எல்லாம் இல்லடா..."

"அது ஒனக்கு டா, அண்ட், அவுங்க மூலமா வேற யாருக்கும் கூட தெரிஞ்சிருக்கும். அவுங்க நம்பர்ஸ் எல்லாம் குடு.."

அந்த சமயம் வீட்டின் கடிகாரம் ஒரு மணி அடித்தது..9.30 மணி, மூளைக்குள்ளும் மணியடிக்க சுவாமி வேகமாய் கைபேசி எடுத்து மெயில்களை பார்த்தான் சரியாய் ஒரு நிமிடம் முன்னால் எதிர்பார்த்தபடி அந்த செய்தி வந்திருந்தது. "கடைசி ஆறு மணி நேரம்", சேகரும் சேர்ந்து பார்த்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சேகர் வேகமாய் அந்த மெயிலை திறந்தான். உள்ளே 
"எந்த நண்பனும் உயிர் காக்க முடியாது, கடைசி ஆறு மணி நேரம் - வாசாபி  ". அதிர்ச்சி அலைகள் சேகர் முகத்திலும் தெரியத் தொடங்கின.

"வாட் தி ஹெல்.. உன்ன யாரோ ரொம்ப க்லோஸா வாட்ச் பண்றாங்க..ஆனா கவல பட வேணாம்.. அவனோட கணக்கு படி கூட நமக்கு 6 ஹவர்ஸ் இருக்கு.. இன்டர்நெட் யூஸ் பண்ணியிருக்கதால, கண்டு பிடிக்க நமக்கு ரொம்ப நேரம் தேவை இல்லை. லீவ் இட் டு மீ அண்ட் பீ பீஸ்புல்."

கைபேசியில் சில எண்களை தட்டிவிட்டு, "கணேஷ்,, சாரி டு ட்ரபுள் யு இன் தி லேட் ஹவர்ஸ். ஒரு கேஸ் விசயமா சின்ன ஹெல்ப்"
"........."
"ஹாஹா, தேங்க்ஸ் கணேஷ்.. எப்பவும் போல தான், ஒரு மெயில் இருக்கு..அது மூலமா அனுப்பினவன ட்ரேஸ் பண்ணனும்."
"......"
"ஷுர் ..டீடைல்ஸ் அனுப்புறேன்..."
"................"

-----------------------------------------------
அடுத்த அரை மணி நேரத்தில் அத்தனை தவகல்களும் கையில் இருந்தன.

"நான் சொல்லல, நமக்கு நெறைய நேரம் இருக்குனு..அட்ரஸ் கூட கிடைச்சிருச்சு..புடிச்சிடலாம்..இங்க ரெண்டு பேர் சர்வேலென்ஸ் க்கு இருப்பாங்க..நீங்க எல்லாரும், எப்பவும் போல லைட் எல்லாம் ஆப் பண்ணிட்டு தூங்குங்க, ஆர், தூங்குற மாதிரி நடிங்க.. உங்க பெட் ரூம் கு வெளில ஒருத்தர் காவல்கு இருப்பார்..டோன்ட் பீ ஸ்கேர்ட்."

சொல்லிவிட்டு கூட இன்னும் ஐந்தாறு காவலர்களுடன் அந்த விலாசம் அடைந்த பொது கடிகாரம் பதினொன்று மணிக்கு பக்கத்தில் நெருங்கி கொண்டிருந்தது.  அது ஒரு சராசரி நடுத்தர வீடு. ஒரு மாடி இருந்தது, சாதரணமாக தென்பட்டது. உள்ளே வெளிச்சம் எதுவும் இல்லை.

"சார், உள்ள யாரும் இல்லையோ?""

"மே பீ, ஆனா நம்ம இங்க இருந்து தான் ஆரம்பிக்க முடியும்."

அழைப்பு மணியை அழுத்தி 5 நிமிடம் வரை எதுவும் பதிலில்லை, உள்ளே ஒரு சத்தமும் வரவில்லை. 

"பாய், கதவ உடைங்க". ஆஜானுபாகுவான ஒருத்தர் கையில் ஒரு இரும்பு கம்பியுடன் முன்னே நடந்தார். ஒரு நிமிடம் கூட இல்லை, கதவு வழி விட்டிருந்தது. கதவை திறந்ததும், கொஞ்சமாய் கெட்டநாற்றம் வந்தது. 

"சார், எதோ தப்பு இருக்கு சார்,"

கைபேசியின் வெளிச்சத்தில் முன்னேறி, சுவர் ஓரம் இருந்த பொத்தான்களை அழுத்தி அறைக்கு விளக்கேற்றினான். இன்னும் வீட்டிற்க்குள் ஒரு சலனமும் இல்லை. 

கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டிற்க்குள் முன்னேறினர். துர்நாற்றம் அதிகமாகிக் கொண்டே போனது. என்ன இருக்கும் என்ற பதட்டமும், குமட்டிக் கொண்டு வந்த உணர்வும், அவதியாய் இருந்தது. கைகள் துப்பாக்கிகளை அழுத்திப் பற்றிக் கொண்டன. அடி மீது அடி வைத்து மாடியில் ஏறினர். கிட்டத்தட்ட வாந்தி வந்தது...மேல் ஏறியவுடன் மூலையில் இரண்டு  அறைக் கதவுகள் தெரிந்தன. ஒரு சிலரின் முகங்கள் நடுக்கத்தை மறைக்கவில்லை. முதல் கதவை திறந்து உள்ளே இருந்த விளக்கை உயிர்ப்பித்ததில் ஒன்றும் தெரியவில்லை. அடுத்து இரண்டாவது கதவு மூடி இருந்தது. எல்லோரும் ஆயுத்தமாகினர். அணைத்து துப்பாக்கிகளும் கதவை நோக்கி இருக்க, இரண்டு பேர் வேகமாய் கதவை தள்ளினர். போன வேகத்தில் இருவரும்  பின் நோக்கி வந்தனர் குமட்டிக் கொண்டு..உள்ளே இருள். 

கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டிற்க்குள் முன்னேறினர். துர்நாற்றம் அதிகமாகிக் கொண்டே போனது. என்ன இருக்கும் என்ற பதட்டமும், குமட்டிக் கொண்டு வந்த உணர்வும், அவதியாய் இருந்தது. கைகள் துப்பாக்கிகளை அழுத்திப் பற்றிக் கொண்டன. அடி மீது அடி வைத்து மாடியில் ஏறினர். கிட்டத்தட்ட வாந்தி வந்தது...மேல் ஏறியவுடன் மூலையில் இரண்டு  அறைக் கதவுகள் தெரிந்தன. ஒரு சிலரின் முகங்கள் நடுக்கத்தை மறைக்கவில்லை. முதல் கதவை திறந்து உள்ளே இருந்த விளக்கை உயிர்ப்பித்ததில் ஒன்றும் தெரியவில்லை. அடுத்து இரண்டாவது கதவு மூடி இருந்தது போல் இருந்தது. எல்லோரும் ஆயுத்தமகினர். அணைத்து துப்பாக்கிகளும் கதவை நோக்கி இருக்க, இரண்டு பேர் வேகமாய் கதவை தள்ளினர். கதவு திறக்க, போன வேகத்தில் இருவரும்  பின் நோக்கி வந்தனர், குமட்டிக் கொண்டு.. வேக வேகமாய் எல்லோரும் கைக்குட்டை கொண்டு முகத்தை மூடிக் கட்டினர். கதவை தள்ளிக் கொண்டு வேகமாய் உள்ளே சென்று "ஹான்ட்ஸ் அப்" என்று சேகர் கத்தியதற்கு எந்த அசைவும் உள்ளே இல்லை..ஆனால் நிழலாய் ஒரு உருவம் தெரிந்தது. அறையின் லைட்டை உயிர்ப்பித்ததும் அனைவரின் கண்களிலும் அதிர்ச்சி..இப்படி ஒன்றை அது வரை அவர்கள் பார்த்ததே கிடையாது. ஒவ்வொரு திசையிலும்ஒரு பிணம், நடுவில் கண்கள் அகல திறந்து கொண்டு, வாயோரம் ரத்தக் கரையுடன்  ஒருவன். அந்த உடல்கள் ஒவ்வொன்றும் அழுக தொடங்கி இருந்தன, ஆனால் ரத்தம் முழுதும் உறிஞ்சப் பட்டது போல் உடல் சுருங்கி இருந்தன..அவன் எந்த அதிர்ச்சியும் காட்ட வில்லை. 
"அசஞ்சா சுட்ருவோம்". எல்லோரும் நெருங்கினர்..

அவன் இன்னும் அசைய வில்லை. கண்கள் பார்க்கவே பயம் கொடுத்தன. 
"மிஸ்டர், டோன்ட் ட்ரை எனி ட்ரிக்ஸ்" கையில் துப்பாக்கியை தாங்கிய படியே சேகர் முன்னேறினான்..அமர்ந்திருந்த அவன் கரு விழிகள் மெல்லமாய் நகர்ந்து சேகரை பார்த்தது..அந்த நொடியே அவனுக்கு நெஞ்சு அடைத்து கொண்டு வந்தது போல் இருந்தது, உடல் வேர்த்தது..அவனுடைய ஈரக் குலை அறுந்து போனது. சிறு வயது முதல் இப்படி ஒரு பயம் அவனுக்கு வந்ததில்லை... எல்லோரும் அருகில் நகர, வேகமாய் அவன் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து கையை மடக்கிப் பிடித்தனர். இத்தனை வெப்பத்திலும் அவன் உடல் சில்லென இருந்தது...

----------------------------


 அடுத்த அரை மணி நேரத்திருக்குள் அந்த வீடு முழுக்க வெளிச்சமும் கூட்டமும்.. ஆம்புலன்ஸ், காவலர்கள், தடய வல்லுனர்கள் என வீடு நிறைந்திருந்தது...அங்கங்கு "crime scene " என்ற டேப் ஆடிக் கொண்டிருந்தது.

"நாலு கோல்ட்-ப்லட்டட் மர்டர்ஸ், ரொம்ப கொடூரமா இருந்தது சார், ஹீ லுக்ஸ் லைக் எ சைக்கோ கில்லெர்..அவுங்க ரத்தத்த எல்லாம் குடிசிருப்பான்னு தோணுது..எதுவும் பேச மாட்டேங்குறான், அவன் மேல ஒரே பொன வாட.."
"............"
"எஸ் சார், இட் வாஸ் ஹார்ரிபில்"
".........."
"ஷுர் சார்.."

வந்த கட்டளைகளை அங்கிருந்த மற்றவர்களிடம் பிறப்பித்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்..போகும் வழியில் சுவாமிக்கு தகவல் சொல்லினான்.வித்யா அழுது கொண்டே நன்றி சொன்னாள்.. எல்லாம் சரி ஆனது போல் இருந்தாலும், அந்த கொலைகாரனுடைய பார்வை இவனை ரொம்ப பாதித்திருந்தது.  நடுவில் இரண்டு முறை வண்டியை நிறுத்தி வாந்தி எடுத்தான்.. GH சென்று அங்கு எல்லாம் முடித்து விட்டு மீண்டும் காவல் நிலையம் வரும் போது காலை மணி 3 தொட்டு இருந்தது. எரிச்சல், பயம், அசதி என்று எல்லாம் சேர்ந்து அவன் கண்களை தின்றன. அந்த கொலைகாரனை பார்க்க போவது வேறு மனதின் அடி ஆழத்தில் ஒரு பய அலையை அவிழ்த்து விட்டிருந்தது. வேகமாய் உள்ளே நுழைந்தவன்,
"என்னய்யா, ஏதாவது சொன்னனா?? "

"சார், அவன் கிட்ட போகவே பயமா இருக்கு, அருவருப்பாவும் இருக்கு சார்.. கெட்ட நாத்தம், பக்கத்துல போகவே முடியல, அவென் பாக்குறது வேற கொடூரமா இருக்கு சார்"

"போலீஸ் னு வெளில போய் சொல்லிடாதையா.." கோபமாய் வந்தாலும், அவனும் அந்த நிலையில்தான் இருக்கிறான் என்பது கொஞ்சம் அவமானமாய் இருந்தது.
"நானே போய் பாக்குறேன்" - வேறு வழி இல்லாமல் விசாரணை செய்ய கிளம்பினான். நாய் வேஷம்!!

உள்ளே.... அந்த கொலைகாரன் இன்னும் கண்களை மூட வில்லை.ஒரு வேளை அவன் மந்திர வாதியாய் இருப்பானோ என்று ஒரு சந்தேகம் எல்லோர் மனதிலும் இருந்தது. எத்தனை முயன்றும் அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பயத்தை தாண்டிய கோபத்தோடு சேகர் அவனை அடிக்க கை ஓங்கிய நேரம், அதுவரை அசையாமல் அமர்ந்திருந்த அந்த மனிதன்அப்படியே பின்னால்சாய்ந்தான். திறந்திருந்த கண்கள் மூடியது. சேகரின் கைபேசியில் மணி 3.29 a.m என்று காட்டிக் கொண்டிருந்தது.

____________________

காலை 8 மணியளவில் அரசு மருத்துவமனை வாசலுக்கு வந்திறங்கியது சேகரின் வண்டி..தூக்கமில்லாத இரவு அவன் கண்களில் நன்கு தெரிந்தது. நண்பனுக்கு வந்த மிரட்டல், நான்கு கொலைகள், காவல் நிலையத்தில் கொலை காரனின் மர்ம சாவு, அதுவும் அவன் சுவாமிக்கு குறித்து வைத்திருந்த அதே நேரத்தில்..அரை நாளில் இவ்வளவு நடந்திருந்ததை அவனுடைய மூளை இன்னும் முழுதாய் கிரகிக்க முடியாமல் தவித்தது.

"இம்பாசிபிள் டாக்டர்...என்ன சொல்றீங்க?"

"நான் சொல்லல சார், போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் சொல்லுது"

"யார் பண்ணது?"

"ரிப்போர்ட் ல இருக்கு பாருங்க, Dr.வெங்கட். அவர் ரிபோர்ட் தப்பா சொல்ல வாய்ப்பே இல்ல"

"சார் ஆனா, இது கரெக்ட் ஆ இருக்க முடியாது,, அவன் செத்த நேரம் கண்டிப்பா தப்பு "

"சார், நாங்க ஒன்னும் எங்களுக்கு தோன்ற நேரத்த அதுல போடறது இல்ல,,,அல்கார் மார்டிஸ், ரிகர் மார்டிஸ் , லிவர் மார்டிஸ், மற்ற பாடி பார்ட்ஸோட டீகே லெவல் எல்லாம் பாத்து தான் சொல்றோம்...இது ஜோசியம் இல்ல, சயன்ஸ்."

"அம்  சாரி சார்..உங்கள அபெண்ட் பண்ணி இருந்தா மன்னிச்சிருங்க..ஆனா, அவன நான் தான் அர்ரெஸ்ட் பண்ணின்னேன். அவன் செத்து 2 நாள் கிட்ட ஆகுதுன்னு சொல்றீங்க.. மற்ற மூணு பேரோட டெத் டைம் அதுக்கப்புறம் தான் இருக்கு ..இது எதுவுமே நான் பாத்ததோட சிங்க ஆகல சார்.. எங்கயோ தப்பு நடக்குது"

"சார், அத கண்டு பிடிக்க வேண்டியது உங்க வேல.. நாங்க எங்க ரிபோர்ட்ட கரெக்டா ரெடி பண்ணிட்டோம்"

அதற்க்கு மேல் அங்கு பேச எதுவும் இருந்ததாய் தெரியவில்லை. எங்கோ தவறு இருப்பது மட்டும் புரிந்தது.

____________________
கார்த்திக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.

"அப்பா, எனக்கு பசிக்குது, அம்மா எங்க??"

சுவாமி பதில் சொல்லாமல் கணிப்பொறியில் எதோ செய்து கொண்டிருந்தான். அப்பாவுக்கு வேலை செய்யும்போது தொந்தரவு செய்வது பிடிக்காது என்று தெரிந்து, பதில் கிடைக்காமலேயே , மறுபடியும் கதவை மூடிவிட்டு வெளியே போனான் கார்த்திக்.

அவன் திறந்து வைத்திருந்த மெயிலில் "உன்னுடைய கதை முடிகிறது, இன்னும் 30 மணி நேரத்தில். - வாசாபி" என்று எழுதி இருந்தது. எந்த உணர்ச்சியும் இல்லாமல் செண்ட் பட்டனை அழுத்தினான்.. வாயோரம் இருந்த சிவப்பு கரையை நாக்கால் துடைத்துக் கொண்டான். கட்டிலின் கீழே, கழுத்தில் அறுபட்டு, ரத்தம் முழுக்க குடிக்கப்பட்டு, அமைதியாய் படுத்திருந்தாள் வித்யா"

                                               -------முற்றும் ---------------

ச, இன்டர்நெட் வந்தாலும் வந்துச்சு..கண்டவனெல்லாம் ஹார்ரர் ஸ்டோரி எழுதுறான். சொல்லிக் கொண்டே இருக்கையில், அவனுடைய கணிப்பொறியின் கீழ் மூளையில் "you have got a mail" என்று அறிக்கை வந்தது. அதை கிளிக் செய்ய, திறந்த அந்த மெயில் "கடைசி 30 மணி நேரம் " என்ற சப்ஜெக்ட்டுடன் இருந்தது...



ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

செவல

'சரவணா, கொஞ்சம் அந்த ஏ.சி.ய அமத்துப்பா, நான் ஜன்னல தொறந்து வச்சுகிறேன்'. பொத்தானை அழுத்தியதும் ஜன்னல் கண்ணாடி சீரான வேகத்தில் கீழ் நோக்கி நகர்ந்தது. பல நேரங்களில் இந்த சத்தம், வண்டின் ரீங்காரத்தை நினைவு படுத்துவதாய் இருக்கிறது. முத்துசாமியின் கண்கள், தாயின் மார் காணும் பிள்ளை போல் ஆனது. மெலிதான காட்டராக்ட் திரைகள் தாண்டி ஜீவன் நிறைந்த அந்த ஒளி உள்ளே நுழைந்தது. நான்கு வழி தார் சாலையில் இஞ்சின் சூடேற ஓடி வந்த கார், கிராமத்து குழிகளில் தனது உடலை அப்படியும் இப்படியும் முறுக்கி இளைப்பாறிய வண்ணம் நடை பழகிக் கொண்டிருந்தது. அழகான நிலவே சென்றாலும் மீண்டும் பூமிக்கு வருவது சுகம். தூரத்து கண்மாய், சாலையின் இரு புறமும் பச்சை கூந்தல் விரித்திருந்த பூமிப் பெண், எங்கோ மெல்லியதாய் கேட்கும் மாடுகளின் சலங்கை, காற்றின் ராகத்தோடு சுதி சேர்த்து பாடும் பறவைகள், முன்னும் பின்னும் தொட்டில் ஆட்டி தாலாட்டும் குழிச் சாலைகள், சுமைகள் எல்லாம் அவிழ்த்து விட்டு நிர்வாணமாய் நிற்கும் சிறுசுகள், அத்தனை இயக்கத்துக்கு நடுவிலும் எங்கும் நிலவிய அமைதி.  இங்கேயே இருந்த போது தாய் சமைக்கும் சோறு போல, அதன் ருசி தெரியாமல் இருந்தது.

'சரவணா, அது செல் போன் டவரு தான?'.
' ஆமா சார், பரவா இல்லையே, சின்ன ஊர்லயும் இப்பல்லாம் சிக்னல் பிரச்சன இருக்காது போல இருக்கே. நாடு எங்கயோ போகுது போங்க', பெருமையாய் சொன்னான். நாடு எங்கேயோ தான் போய் கொண்டிருக்கிறது. உள்ளுக்குள் நினைத்ததை அமைதியாய் முழுங்கி கொண்டார்.  முன்பு வாழ்க்கை ஓடி கொண்டிருந்த போது விஞ்ஞானத்தின் வேகமான  வளர்ச்சி கண்டு ஆச்சர்ய பட்டதுண்டு. இப்போதெல்லாம் வேகத்தின் மீது சலிப்பே ஏற்படுகிறது. சொந்த ஊருக்குள் நுழையும் போது உள்ளே இருக்கும் பழைய நினைவுகள் நீருள் குமிழி போல மேலே வரத் தொடங்கின. சட்டென ஏதோ நினைவில் விழ, சட்டை பாக்கெட்டில் கங்காரு குட்டி போல் படுத்திருந்த கைபேசியை எடுத்து, கண்களை கூர்மையாக்கி பொத்தான்களை அமுக்கினார்.

'ராஜா, ஊருக்கு வந்து சேந்தாச்சுப்பா.'
...............
'ஆமாமா, சரவனெ மெதுவாத்தான் வந்தாப்ள'
..............
'இப்போ மீனாவுக்கு எப்டி இருக்கு? வலி வந்துடுச்சா??' - கேட்கும் பொது நெற்றியில் விழுந்த சுருக்கங்கள் உண்மையான அக்கறையை பதிவு செய்தன.

'நீ பக்கத்துலயே இரு தம்பி. நம்ம பாண்டி தொண இருப்பான்.'
...................
'சரிப்பா, நா வச்சுடறேன்..நீ பாத்துக்கப்பா'

முகத்தை மேல் நோக்கி, கைகள் உயர்த்தி 'பாண்டிஈஈ , ஓம்பிள்ளைய சோதிச்சது போதுஞ்சாமி' என்று மல்கினார்.

நிகழ்காலத்தின் கலவரங்களும், கடந்த காலத்தின் நினைவுகளும் மாறி மாறி மனது எதோ பண்ணியது. இதே சாலையில் தான் தினமும் ஆற்றுக்கு போவார்கள். மகன் ராசபாண்டியையும் மகள் சுந்தரியையும் தோளில் தூக்கி பல முறை சவாரி செய்திருக்கிறார். பிள்ளைகளின் பால்யம் தாண்டி நினைவு அவள் மீது படர்ந்தது. எத்தனை முறை முயன்றாலும் அவர் தோற்று போகும் விஷயம் அது. மனதை அரிக்கும் அவள் நினைவுகளை தள்ளி வைக்க முடிய வில்லை. பொன்னுத்தாயை பெண் பார்க்க போனது தெளிந்த நீரோடை கீழ் நிலம் போல் இன்னும் நினைவில் நிற்கிறது. அவளை குழந்தையாய் ஒரு முறை மடியில் கூட வைத்த ஞாபகம் இருக்கிறது. மாமன் மகள் என்ற உரிமையில் அவளை பல முறை வம்பிழுத்ததுண்டு. தன்னை பார்த்து எப்போதும் அவள் கொஞ்சம் பயந்ததது சுகமாய் தான் இருந்தது. 'ஓம் பொஞ்சாதிய தூக்கிட்டு வாடா, ஓம் மாமெ என்ன பண்ணிடுவான்னு பாத்துக்குவோம்' என்று பிள்ளை பருவத்தில் அம்மா சொன்ன போது பொஞ்சாதி என்றால் என்ன என்பது சரியாய் புரியாவிட்டாலும், அவள் மீது தனக்கு உரிமை இருப்பது ஆழமாய் புரிந்தது. மீசை முளைத்த பருவத்தில் பாவாடை போட்ட பொன்னுத்தாயி அவர் கண்களுக்கு தண்ணீர் குடம் தாங்கிய தேவதையாய் தெரிந்தாள். வயற்காட்டில் இருந்து ஒரு நாள் வரும் போது வீட்டில் எல்லாரும் பரபரப்பாய் இருந்தனர். 'எம் பேத்தி குத்த வச்சுடாடாமுத்து' என்று அம்மாயி உற்சாகமாய் சொன்னாள்.  சின்ன மாமா, ' என்ன மருமவனே, இன்னிக்கே பேசி முடிச்சிடுவோமா?'  என்று வம்பிழுத்தார்.

கிரீச் என்ற சத்தம் நினைவுகளை சட்டென மறைய செய்தன.
' எண்ணே, பாத்து போக மாட்டியா, வண்டி வருதுல' - சரவணன் உச்ச ஸ்தாதியில் கத்தினான்.  கோபம் வந்தாலும் அவருடைய கிராமத்தில் மரியாதை குறைவாக பேசுவது முத்துசாமிக்கு பிடிக்காது என்பது சரவணனுக்கு தெரியும். அதனால் தான் கோபத்திலும் 'அண்ணே' என்று சொல்லி கத்தினான்.

'சரவணா பாத்துப்பா', என்று சொல்லும் போதே, சைக்கிளில் இருந்து கோபமாய் இறங்கி வந்தான் அவன். வேகமாய் எதோ சொல்ல வந்தவன் பார்வையை உள்ளே செலுத்தியதும், ' பெரியப்பா' என்றான் உற்சாகமாய் .

'பெரியப்பா, நீங்கதானா... வண்டிய பாக்கும் போதே எனக்கு புரிஞ்சிருக்கனும். நல்லா இருக்கீங்களா?? தம்பி எப்டி இருக்கான்?' அன்பாய் கேட்டான்.
'சங்கரா, எப்டிப்பா இருக்க?, சரவணா வண்டிய நிப்பாட்டிக்கோ பா' என்று சொல்லி விட்டு வண்டியை விட்டு இறங்கினார்.

'அம்மா நல்ல இருக்காங்களா?

'இருகாங்க பெரியப்பா, அப்பா தவறினதுல பாதி ஆயிடுச்சு, ஆனா முன்னைக்கு இப்ப பரவாயில்ல, நீங்க சொகந்தானா? ஆள் எளச்சுடீங்களே, மீசைய வேற எடுத்துடீங்க, மொதல்ல எனக்கே அடையாளம் சரியா தெரியல போங்க' இயல்பாய் பேசினான். முத்துசாமி மெல்ல சிரித்துவிட்டு,
'பேரேன் குத்துதுன்னு எடுக்க சொல்லி ஒரே பிடிவாதம். சரி, என்னென்னவோ போச்சு, மசுரு கழுத தானன்னு எடுத்துட்டேன்.'

'சரி பெரியப்பா, ரோட்லயே நின்னு ஏம் பேசிக்கிட்டு,  வீட்டுக்கு போலாம், இன்னைக்கு கடா அடிச்சிடுவோம். போன தடவ ரெண்டு நாளும் மாமே  வீட்லயே இருந்துடீங்க, இந்த மொற நம்ம வீட்லதா' என்று அடுக்கி கொண்டே போனவனை மறித்து,
'சங்கரா, நா இன்னு கொஞ்ச நேரத்துல கெளம்பிடுவேம்பா, இப்போ தங்குற மாதிரி வரலப்பா' என்றதும், கொஞ்சம் கோபம் வந்தவனாய்,
'அது சரி பெரியப்பா, சிட்டி மனுசனா ஆகிடீங்க, நாங்க என்ன சொல்ல முடியும். விருந்தாளி தான இப்ப' என்று கோபித்தான் உரிமையாக.
' அட, இல்லடா தம்பி, ஒந்தம்பி பொஞ்சாதி முழு மாசமா இருக்குப்பா.. நாள் தள்ளுது, வலி வரல...ஆஸ்பத்திரில ஏதேதோ சொல்றாங்க, மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, அதான் பாண்டியப்பன பாத்து நாலு வார்த்த கேட்டுட்டு போலாம்னு வந்தேம்பா, ஒடனே திரும்ப போகணும், தம்பி தனி ஆளா கஷ்ட பட்டுட்டு இருப்பான்'. அவர் சொன்னதை கேட்டவன், கொஞ்சம்  அமைதி ஆகிவிட்டு ஆறுதலாய் பேசினான்.

' விடுங்க பெரியப்பா, நெலம தெரியாம பேசிட்டேன், மன்னிச்சிடுங்க, நீங்களும் பெரியம்மா வும் செஞ்சிருக்கற புண்ணியத்துக்கு ஒன்னும் ஆகாது'

'சரிப்பா, நா கெளம்புறேன், நீதான் மத்தவுங்ககிட்ட எல்லாம் சொல்லணும், யாரையும் கோச்சுக்க வேண்டாம்னு சொல்லுப்பா, கொழந்த பொறந்ததுக்கு அப்புறமா வந்து ஒரு வாரங் கூட தங்கிட்டு போறேன்'

'சரி பெரியப்பா, நீங்க கவல படாம , நேரத்துக்கு கெளம்புங்க' .

கார் மீண்டும் புறப்பட்டது, நினைவுகளும் கூடத்தான் . பெரியம்மாவை பற்றி அவன் சொன்னதில் எந்த மிகையும் கிடையாது என்று அவருக்கு தெரியும். இந்த சங்கரன் பிறக்கும் போது கூட, பிரசவம் முழுதும் பொன்னுத்தாயி உடன் இருந்தாள். மிகவும் அன்பானவள், அழகானவள். அவள் வயசுக்கு வந்ததும் இவர்கள் கல்யாணம் பற்றி பெரியவர்கள் பேசத் தொடங்கினார்கள். முத்துசாமியின் தந்தை அந்த காலத்தில் முற்போக்கு வாதி. நல்ல மனுஷன்.' மொதல்ல, வெவசாயத்த தனியா பாத்துகிட்டு, சொந்த கால்ல நிக்கட்டும், அப்புறம் தொரைக்கு கல்யாணம்  பண்ணலாம்' என்று தீர்க்கமாய் சொன்னார். சொன்னதோடு, தனது வயக்காட்டில் ஒரு பகுதியை முழுசாய் முத்துசாமிக்கே கொடுத்து, தனியாய் பார்க்க விட்டார்.
பதின் பருவம், இவள் தான் தன்னோடு வரப் போகின்றவள் என்ற உணர்வு, அனைத்தும் சேர்ந்து அவள் மீது ஒரு ஈர்ப்பு வந்தது. அதற்கப்புறம் வந்த ஒவ்வொரு விஷேசத்தின் போதும் அவளை கண்களால் விழுங்க தொடங்கினார். அவளை வம்பு செய்வது குறைந்து அவளுக்காக ஏங்குவது தொடங்கியது. அவளை சீக்கிரம் அடையும் நோக்கத்திலேயே இரவும் பகலும் தொழிலை உள்ளும் புறமும் அலசி கற்றுக் கொண்டிருந்தார். அவள் ஆற்றுக்கு போகும் நேரத்தில், அந்த பாதையில் உள்ள தனது நிலத்திலே வேலையே அமைத்துக் கொண்டு, அவளை பார்க்காதது போல் பார்ப்பதில் சுகம் கண்டார். கவனம் சிதறி சில முறை கைகால்களை காயப் படுத்தி கொண்டதும் உண்டு.  அது வரை இயல்பாய் வரும் அவள், அந்த இடத்தில் மட்டும் இவர் பக்கம் பார்க்காமல் இருக்க, தலை குனிந்து நடப்பாள். தான் பார்க்கா விட்டாலும் தன் மீது இரு கண்கள் அலைவதை உணர்ந்தவள், வெட்கத்தை தெளித்து கொண்டே போவது அவள் மேல் இருக்கும் காதலை அதிக படுத்தியது .  இரண்டு வருடம்  கழிந்து ஒரு நன்னாள் அவள் கரம் பற்றி உடன் அழைத்து வந்தார். முதலில் காமத்தின் பாதியே ஓங்கி இருந்தாலும், நாளுக்கு நாள் அவள் மீது காதல் வலுத்தது. ஒரு வேலை அவர் சாப்பிட தாமதமானாலும் துவண்டு போனாள், நேரத்திற்கு வீடு திரும்பாத நாட்களில் கலங்கி விடுவாள். இத்தனை அன்பை அவர் அம்மாவிடம் மட்டுமே  அனுபவித்தது. அவர் மீது மட்டும் இன்றி, தேவை என்று வீட்டுக்கு வந்த எல்லாருக்கும் முகம் சுளிக்காமல் வேண்டியதை செய்தாள். வீடு முழுக்க அன்பால் நிறைத்து இருந்தாள்.
'எம் மருமக நம்ம கொல தாயி டா, அவ மனசு கஷ்ட படாம பாத்துக்க' என்று அம்மா பல முறை சொல்லி இருக்கிறாள். முதல் இரண்டு குழந்தை தவறிய போது கூட மனம் கலங்காமல், ' சாமிக்கு தெரியும் மாமா, நமக்கு என்ன சரியோ அத பாண்டி பாத்துக்குவான்' என்று தைரியமாய் பேசுவாள். காலம் ஓடியது, அவள் சொன்னது போல இரண்டு பிள்ளைகள் பிறந்து நன்றாகவே வளர்ந்தன. ஒரு மகன், ஒரு மகள் சேர்த்து அந்த வீட்டில் மூன்று பிள்ளைகளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டாள். படிக்காதவள், பிள்ளைங்களுக்கு புத்தகம் படிக்க அவள் உதவியதில்லை, ஆனால் வாழ்க்கையை அழகாய் சொல்லித் தந்தாள். நல்ல பண்புகளோடு வளரும் குழந்தைகள் அறிவு குறையாமலேயே வளர்கின்றன. அவளோடு வாழ்ந்த காலம் அவருக்கு வேகமாய், ஆனால் ஆனந்தமாய் நகர்ந்தது. சில காலத்திலேயே, பிள்ளைகள் வளர்ந்து கல்லூரி வயது வரை வந்தது போல் இருந்தது. இரு பிள்ளைகளும் வெளியூர் போய் படிக்க கேட்ட போதும் அவர்கள் முடிவுக்கு துணையாகவே இருந்தாள். 'தூரம் என்பது அன்பின் அளவுகோல் அல்ல. வாழ்க்கை போகும் பாதையில் போவது பிழையும் இல்லை' என்று அவருக்கு புரிய வைத்தவளும் அவள் தான். விடுமுறைக்கு பிள்ளைகள் ஊர் வந்து போகும் காலம் தவிர மீத நேரம் முழுவதும் அவளுடைய அரவணைப்பை முழுவதுமாய் முதிர்ந்த பிள்ளையே அனுபவித்து கொண்டிருந்தது.ஒரு நாள் அதற்கும் ஒரு போட்டி வந்தது.

கோவிலுக்கு பின்புறம் ஆற்றுக்கு பக்கத்தில் இருக்கும் அம்மனுக்கு விளக்கு வைக்க சென்றவள் அங்கே எதோ முனகல் சத்தம் கேட்டு தேடித் பார்த்தாள்.  கொஞ்சம் தள்ளி மரத்துக்கு கீழே அழகாய் பஞ்சு சேர்த்து வரைந்த ஓவியம் போல் ஒரு நாய்க்குட்டி இருந்தது. கண்கள் கூட இன்னும் முழுதாய் திறக்காத குட்டி. அங்கு எப்படி வந்தது என்று தெரியாது, அதை ஆராயவும் தோன்றவில்லை. அப்படியே எடுத்து மாரோடு அணைத்துக் கொண்டாள். நிலம் சுற்றிய நீர் போல் போல், அங்கங்கே வெள்ளை கருப்பு திட்டுகளை சுற்றி, பொன்னிற சிவப்பு நிறம்.  மறுபடியும் தாய்மை அடைந்தது போல் ஒரு உணர்வு. 'ஏ செவல குட்டி, எங்க இருந்து இங்க வந்தீங்க' என்று கொஞ்சியபடி அப்படியே வீட்டுக்கு அழைத்து வந்தாள். எந்த புன்னியாஞ்சலமும் இன்றி 'செவல' என்ற பெயர் சூட்டப்பட்டு புது குழந்தை வீட்டுக்கு வந்தது. முதல் சில நாட்கள் பஞ்சில் பால் நனைத்து ஊட்டினாள், பிறகு ஒரு பால் பாட்டில் வைத்து கிட்டத்தட்ட அவள் குழந்தைகளை பார்த்துக் கொண்டது போல் பார்த்துக்கொண்டாள். வெளி வேலைகள் முடித்து வீட்டுக்கு வந்த பின்னர் அவரும் செவலையோடு நிறைய நேரம் செலவழித்தார். அவனை குளிப்பாட்டி, தட்டில் சோறு வைத்து, அவன் முடியை கோதி விட்டு, உடம்பை திருப்பிக் கொண்டு வயிற்றில் கை வைத்து கொஞ்ச சொல்லும் அவனோடு விளையாடுவது என்று இருவருக்கும் அவனோடு நேரம் நன்றாகவே கழிந்தது. காலையில் அவள் விழித்ததும் அறை வாசலில் வாலாட்டிக் கொண்டு வந்து நின்று விடுவான். அவள் சேலையை முட்டிக் கொண்டு முகத்தை அப்படியும் இப்படியும் சிலுப்பி, நாள் முழுவதும் அவளோடவே களிப்பான் .  அவள் உடல் நோவில் படுத்தாள், அவனும் சோறின்றி கிடப்பான்.  வெளியே சென்றால், நிழல் போல அல்ல, விரல் போல கூடவே சுற்றித் திரிவான். அடுத்த நான்கு வருடங்களில் வீட்டில் இரண்டு கல்யாணங்கள் நடந்து முடிந்தன. வீட்டிற்கு புதிதாய் வந்தவர்களை எந்த கஷ்டமும் இன்றி குடும்பத்தோடு இணைத்து கொள்ள அவளும் அவனும் அவர்கள் மீதும் அன்பை பொழிந்தார்கள். சுந்தரியின் கற்ப காலத்தில், பக்கத்தில் பிராணிகள் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னது அவனுக்கு எப்படி புரிந்தது என்று தெரியவில்லை. அந்த காலம் முழுவதும் திண்ணை தாண்டி உள்ளே வருவதை கிட்ட தட்ட நிறுத்தி இருந்தான். புத்திசாலி பிள்ளை. பேரப் பிள்ளை வந்தாலும், வளர்ப்புப் பிள்ளையை ஏங்க விட்டதில்லை அவள்.

வாழ்க்கை விசித்திரமானது. ஒரு நாள் கை நிறைய கொடுக்கும், ஒரு நாளில் இருக்கும் அத்தனையும் பறித்துக் கொள்ளும். வழக்கமாய் இரவில் உறங்க சென்ற அவள், ஒரு நாள் காலையில் விழிக்க வில்லை. எந்த வலியும் இன்றி போய் சேர்ந்தாள் புண்ணியவதி. எந்த வழியும் இன்றி நின்றிந்தார் அவர். நிழல் கொடுத்து மரம்,  வெயிலில் விட்டுவிட்டு விழுந்தது. இனி குடை பிடித்த வாழ வேண்டிய நிலை. உடைந்து போனார். அடுத்த சில நாட்கள் செவலயும் எதுவும் சாப்பிட வில்லை. தினமும் காலையில் அறை வாசலில் கண்ணில் நீரோடு  வாலாட்டி கொண்டே நின்றான். மூன்று வாரம் கடந்து இருக்கும். காலையில் வாசலில் அவன் வந்து நிற்கவில்லை. பிள்ளை தவறினால் செய்யும் அத்தனை ஈம காரியங்களையும் செய்து முடித்து வீட்டுக்கு வந்த முத்துசாமிக்கு முதல் முறையாய் உயிர் சுமையாய் தெரிந்தது.வாழ்க்கையை அதன் போக்கில் வாழ சொல்லித் தந்தவள் இன்றில்லை. நினைவுகள் முள் படுக்கையாய் மாறியது. அவள் நிறைந்திருந்த வீடு இருண்டிருந்தது. பிள்ளைகள் கலங்கி போனார்கள். மருமகள் மீனா எல்லா வாரமும் வந்து பார்த்துக் கொண்டாள். மகள் என்றே அவளை சொல்லலாம். தங்களோடு வந்து தங்கிவிட கெஞ்சினாள். மூன்று மாதங்கள் கழிந்திருக்கும், மூன்று யுகங்கள் போல் இருந்தது. அதற்க்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை அவருக்கு. ஒரு வாரம் தனியாய் வந்த மருமகள் திரும்பும் பொது பெட்டியோடு அவரையும் அழைத்துக் கொண்டு திரும்பினாள். மகன், மருமகள், பேரன் என்று ஒரு புது வாழ்க்கை. வீட்டுக்குள் அன்பு நிறைந்து இருந்தாலும், வீட்டுக்கு வெளியே இருந்த உலகம் கொஞ்சம் அந்நியமாய் இருந்தது. காலை வெளியில் நடக்கும் பொது எதாவது சிவப்பு நாயை பார்த்தால் செவலை கண்ணுக்குள் வந்து போனான். நாட்கள் முத்துசாமியை நகரத்துக்குள் இழுத்து கொண்டிருந்தது. பாக்கெட் பாலும், பாலிதீன் பையும் பழகி போனது.

ஒரு பொன்னான மாலையில் கையில் சக்கரை கிண்ணத்தோடு சிரித்துக் கொண்டே வந்தாள் மீனா.  இன்னொரு வரவு, புதிய உறவு அவள் வயிற்றுக்குள். அன்று பொன்னுத்தாயின் படத்திற்கு முன்னால் ரொம்ப நேரம் அமைதியாய் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். சந்தோசத்தை அவளோடு பகிர்ந்தே பழகியவர்.  சில மாதம் புரண்டது, மகன் சோர்வாய் வந்தான் ஒரு நாள். மீனாவின் கருப்பையில் எதோ பிரச்சனை வந்திருந்ததாய் சொன்னான். 'அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா, இப்ப இருக்க மெடிக்கல் டெவலப்மெண்ட் க்கு இதெல்லாம் ஒரு பெரிய ப்ராப்ளமே இல்ல. இவர் தான் பயப்படுறார்.' என்றாள் அவள். ஒரு புறம் பயமாய் இருந்தாலும்,உறுதியான மருமகளை பார்த்து மகனும் குடுத்து வைத்தவன் என்று சந்தோசப்  பட்டார். பிரசவ காலமும் வந்தது, ஆனால் வலி  வரவில்லை. டாக்டர்கள் ஏதேதோ சொன்னார்கள். அவர் மனம் குழம்பி  தவித்தது.குல தெய்வம் கோவில் வரை போய் வந்தால் மனதிற்கு ஆறுதலாய் இருக்கும், எல்லாம் சரி ஆகி விடும் என்று தோன்றியதும், ஊருக்கு புறப்பட்டு வந்தார்.  மருமகள் பற்றிய கவலைகளுக்கு நடுவில் பழைய நினைவுகளும் வந்து போயின.

கோவிலுக்குள் வந்து நின்றார் முத்துசாமி. 'பாண்டி சாமிஈஈ, அங்க எம்புள்ள கஷ்ட படுறது போதுண்டா அய்யா, என்ன வேணும்னாலும் என்கிட்ட இருந்து எடுத்துக்க, என்ன கஷ்டம்னாலும் எனக்கு குடுப்பா, எம் பிள்ளைங்களுக்கு நீதா கூடவே நின்னு எல்லாத்தையும் பாத்துக்கணும் சாமி'  கண்கள் நீர் சிந்த கீழே விழுந்து வணங்கினார். பொன்னுத்தாயி வழக்கமாய் கோவிலுக்கு பின்னால் இருக்கும் அம்மனை சென்று கும்பிடுவாள், அவரும் அதே பழக்கத்தில் அந்த பக்கம் சென்றார். கைபேசி குரல் கொடுத்தது,
' சொல்லுப்பா'
' அப்பா, குட் நியுஸ், ஒங்களுக்கு பேத்தி பொறந்திருக்கா'
சந்தோசத்தில் நீர் வழிந்து குரலை அடக்கியது. 'மீனா எப்டி ப்ப இருக்குது?'
'அவ ஒ.கே பா, இன்னும் கொஞ்சம் மயக்கத்துல இருக்கா. கொஞ்ச நேரத்துல சரி ஆகிடுவாப்பா.. நாங்க காலைலேயே அட்மிட் ஆகிட்டோம். சொன்னா நீங்க கோவில் போகாம வந்துடுவீங்கன்னு தான் சொல்லல.'

'பரவா இல்லப்பா, அந்த பாண்டி கை விடல'... ;சாமிஈஈ, காப்பதிட்டயா' என்று உருகினார்.
'அப்பா...' மெதுவாய் தழு தழுத்த குரலில் 'பாப்பா, அம்மா ஜாட யா இருக்குறாப்பா' என்றான்.இதயம் நிறைந்து தொண்டையை அடைத்தது. கண்ணை முட்டி கொண்டு கண்ணீர் பெருக்கெடுத்தது.
'எந்தாயி, மறுபடியும் பொறந்து வந்திருக்காளாப்பா!!!' என்று வார்த்தைகளை முடிக்க முடியாமல் அழுகையோடு கைபேசியை அணைத்தார்.
மனது கணம் குறைந்து, ஆனால் நிறைந்திருந்தது...கை கூப்பி அம்மன் சந்நிதியில் அப்படியே கீழே விழுந்து வணங்கினார். லேசாய் ஒரு முனகல் சத்தம். சத்தம் வந்த திசையில் பஞ்சு கூட்டமாய் சின்னதாய் ஒரு சிகப்பு நாய் குட்டி. கால்கள் அனிச்சையாய் அதனருகில் சென்றது, அப்படியே எடுத்து மாரோடு அணைத்து கொண்டார். 'எஞ் செவல குட்டி, எங்க இருந்து வந்தீங்க?' என்று கொஞ்சினார்.

வாழ்க்கை விசித்திரமானது, சில சமயம் கைகளில் உள்ள அனைத்தையும் பறித்துக் கொள்கிறது, சில சமயம் அத்தனையும் மீண்டும் கொடுத்து சிரிக்கிறது.


வியாழன், 6 மார்ச், 2014

ஒரிரு வரிக் கதைகள் - காதல் பக்கம் (One/Two Line Stories - Love Version)

ஒரு வருடமாய் அவள் கான்டீன் கடந்து போகையில், எதிர் மரத்தடி பெஞ்சில் வைத்த பூக்களும், அதன் கீழிருந்த கடிதங்களும் குப்பை தொட்டிக்கே காதலை சொல்லின. அடுத்த நாள் அவள் கடக்கையில் பூவும் காகிதமும் இல்லாத வெற்றிடத்தில், அவள் பார்வைகள் பரிதவிப்போடு ஓடிக் கொண்டிருக்கையில்  வானம் தேடி பறக்கத் தொடங்கின என் கால்கள்.

'காதலிச்ச பொண்ணு வேற யாராவது கல்யாணம் பண்ணிக்கிட்டா, இவனும் வேற யாராயாவது கல்யாணம் பண்ணிட்டு போகாம விஷத்த குடிப்பானா, முட்டாள் ' - யாரோ ஒருவன் பற்றி கோபத்தில் பேசி விட்டு அவள் பக்கம் திரும்பியதும், கண்களில்  நீர் மை ஏந்திய படி, 'நா போய்டா நீ அப்டி தான் மறந்துடுவயா!!' என்றது தழு தழுத்த குரல்.. பெண்கள்!!!!

'ஹிந்து பையன கல்யாணம் பண்ணிட்டு எப்டி சந்தோசமா இருக்க போறான்னு பாப்போம், சீக்கிரமா கண்ண கசக்கிட்டு வந்து நிக்க போறா!!!'..ஒன்னரை  வருடத்தில் இயேசு பிரான் குழல் ஊத, வெள்ளை அங்கியில் கிருஷ்ண பரமாத்மா ஆசீர்வதிக்க, கூடைக்குள்ளே, உலகத்தையே வசீகரிக்கும் புன்னகையோடு ஒரு குழந்தை படம் வீட்டுக்கு வந்தது.

'நல்லா யோசிங்க சார், உங்க சொந்த காரங்க தப்பு சொல்லாத படி உங்க சாதிப் பொண்ணுதான் வேணும்னா நீங்களே உங்க பையனுக்கு பொண்ணு பாருங்க, ஆனா, உங்கள உங்க பையன் பாத்துக்குற மாதிரியும், உங்க பையன நீங்க பாத்துக்குற மாதிரியும் பாத்துக்குற ஒரு பொண்ணு வேணும்னா, உங்க பையனுக்கு பிடிச்ச என்ன கல்யாணம் பண்ணி வைங்க', மூச்சு விடாமல் தைரியமாய் பேசிவிட்டு போன அவளை பார்த்து கொண்டே கைபேசியை எடுத்தார்."ம்ம், சங்கர லிங்கம், அடுத்த வாரம் அந்த ரெண்டு பொண்ணுங்கள பாக்க வரோம்னு சொல்லி இருந்தேன்ல, அத கான்செல் பண்ணிடுங்க,,, இந்த வாரமே வந்து பாக்குறோம்'.

'அப்பாடி, அஞ்சு வருஷமாகிடிச்சு, இன்னும் மூணு நாளைக்கு இந்த வீடு எனக்கு மட்டும்தான், எந்த தொந்தரவும் இல்லாம நிம்மதியா இருப்பேன்.' ஒரு மாலை பொழுதும் இரவும் தனிமையில் கழிந்ததும்,  பலகாரமெல்லாம் வாங்கி விட்டு காலை வண்டி ஏறினேன், மனைவியின் ஊர் நோக்கி.

'லவ் வே பேத்தல், இதுல லவ் அட் பஸ்ட் சைட் எல்லாம் சுத்த பேத்தல்,' தோழியிடம் சொல்லிக் கொண்டே வரும் போது 'டமால்'..'ஐயோ, சாரி சாரி, சாரிங்க தெரியாம இடிச்சிட்டேன், மன்னிச்சிடுங்க ' பட பட வென்று அவன் கண்கள் அவளை கெஞ்சி கொண்டிருக்கும் போது, அவளுக்குள் ஏதோ ஒன்று.., பக்கத்தில் வாயை மூடியபடி சிரித்து கொண்டிருந்தனர் காதல் தேவதைகள்.

தாலி கட்டுவதற்கு முன்னால் கடைசியாய், அவனுக்கு முதல் காதல் சொல்லி தந்து, இன்று முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த அவள் கண்களை 2 நொடி ஆழமாய் பார்த்தான். அவளுக்கு ஐந்தடி தள்ளி இருந்த இரு கண்கள் இவன் பக்கத்தில் அமர்ந்திருந்தவள் கண்களோடு 2 நொடி கலந்ததை இவன் கவனிக்கவில்லை.

'வீட்ல உக்காந்தா எங்க சார் படிக்கிறான், மனச கண்ட படி அலைய விட்டுட்டே இருக்கான், நீங்க தான் டியூஷன் ல வச்சு பாத்துக்கணும்' சொல்லி விட்டு அப்பா கிளம்பினார். பள்ளியில் யூனிபார்மில் மட்டுமே பார்த்த அவளை கலர் பாவாடை சட்டையில் பார்த்த போது மனம் எங்கும் அலையாமல் அவளையே பற்றிக் கொண்டிருந்தது.

வீட்டை விட்டு மற்ற அனைவரும் கிளம்பியதை உறுதி செய்து கொண்டு, அவள் தனியாய் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தை தவற விடக்கூடாது என்று உறுதியாய் உள்ளே நுழைந்த நான்,  குளித்து விட்டு நீர் சொட்டும் கூந்தலுடன் அவள் வருவதை பார்த்ததும் பற்றிய நெருப்பை அணைக்க முடியாமல், அவளை அணைத்து முகமெங்கும் முத்தம் பதித்தேன். 'விடுங்க, பசங்களும், பேர பிள்ளைங்களும் பக்கத்துல இருக்குற கடைக்குத்தான் போய் இருக்காங்க, இப்போ வந்துடுவாங்க' என்று சொல்லி செல்லமாய் சிணுங்கினாள் அவள்.

'மத்ததெல்லாம் ஓகே தான், ஆனா என்னத் தொடாத, அப்புறம் பாப்பா வந்துடும்', என்று சொன்னவளை ஏக்கத்துடன் பார்த்தான். 'என்னோட அப்பா அம்மா இப்டி த் தான் அப்பா-அம்மா வெளாட்டு வெளாடும் போது, அப்பா அம்மா கைய தொட்டுடாராம், அப்புறம் நான் பாப்பாவா பொறந்திட்டேன், தெரியுமா' என்று மழலை மாறாமல் சொல்லி முடித்தாள்.

'நான் வெளில வரும் போதெல்லாம் நீ என்னோட பக்கத்துல வரதும், என்ன சுத்தி சுத்தி வரதும் எங்க அப்பாவுக்கு பிடிக்கல, இனி மேல் என் பின்னாடி வராத', முகத்தில் அடித்தது போல அவள் சொன்னாள். 'என்னைக்காவது என்னோட காதல் உனக்கு புரியும். அது வரைக்கும் நான் காத்து இருப்பேன்', சொல்லிக் கொண்டிருக்கும் போதே, 'ம்ம், பப்பி டார்லிங், வா போகலாம்', என்று அவளது சங்கிலியை பிடித்து இழுத்து சென்று விட்டான் அந்த கடங்காரன்.

'நீ என் கிட்ட வந்து உன்னோட லவ் வ சொல்லும் போதும், இப்டித் தான் விஷ்வா இருந்துச்சு, உடம்பெல்லாம் ரெஸ்ட் லெஸ்ஸா, வயிறு நெஞ்செல்லாம் ஏதோ உருள்ற மாதிரி அன்-ஈசியா,  ஆனா இது கொஞ்சம் வேறல்ல'..கண்ணீர் திரை கண்களை மூட மரணப் படுக்கையில் இருந்த அவளை இலை போல் அணைத்து, நெற்றியில் கொஞ்சம் வெப்பமாய் உமிழ் நீர் பதித்து, 'சீ... லூஸு.. ' என்று சொல்லும் போது வெடித்து வந்த நீர் பிரவாகத்தை அவள் பார்க்கும் முன் வேகமாய் துடைத்தான்.








திங்கள், 3 மார்ச், 2014

ஒரிரு வரிக் கதைகள் (One/Two Line Stories)

'அந்த கடங்கார ஆபிசர் இந்த வேலைய முடிக்க லஞ்சம் கேட்க கூடாது கடவுளே, அப்படி பண்ணிட்டா கோவில்ல உனக்கு காணிக்கையா பத்தாயிரம் ரூபா போடுறேன்', வணங்கி சென்றான் அவன்.

தினமும் போல் படுக்கை அறைக்குள் உற்சாகமாய் விசிலடித்து கொண்டு அருகில் வந்து படுத்தான் என் கணவன், "தினமும் 7 மணி ரயில விட்ருவேன்னு சொல்வியே, எப்டி இன்னக்கி புடிச்சேன் பாத்தியா?'. அவன் சரியாய் பிடித்த ரயில் கவிழ்ந்து அனைவரையும் பலி வாங்கி ஒரு வருடம் மேல் ஆகிறது.

மாலை மாற்றிய உடனே ஆளுக்கொரு தம்ளர் பாயாசம். 'நம்ம கல்யாண நாள் அன்னைக்கு  முதியோர் இல்லம் போறதுக்கு, மேல போய்டலாம்', விரக்த்தியாய் பேசியவருக்கு விடுதலை கொடுத்தது விஷக் குப்பி .

'ரயில்ல யாராவது ஏதாவது கொடுத்தா வாங்கி சாப்ட கூடாது', சொன்ன அப்பா செத்ததில் இருந்து, மயக்க மருந்து கலக்கிய பிஸ்கட்டோடு எனது ரயில் பயணங்கள்.

'காக்கா குருவி எல்லாம் பயப்படத்தான் இந்த சோளக்கொள்ள பொம்ம வச்சிருக்கு கண்ணு', சாமிக் குத்தத்துக்கு பயந்து பொங்க வைக்க போகும் போது தாத்தா சொன்னார்.

தினமும் அய்யாவோட பிள்ளை தன்னோடு   நிறைய விளையாடுவதால் தான் தன்னை அலங்காரமாய் கோவிலுக்கு அழைத்து செல்கிறார்கள் என்று  தம்பட்டம் அடித்து கொண்டது, தலையில் மஞ்சள் தண்ணி ஊற்றப்பட்ட ஆடு.

நெற்றி நிறைய பட்டையுடன், கழுத்தில் மாலையுடன், கடவுளுக்கு நன்றி சொல்லி வெளியே வந்து கொண்டிருந்தார், ஊழல் வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பிரேக் இன்ஸ்பெக்டர்.

தப்பாய் பதில் எழுதிய மகளை அடித்தே விட்டாள் அம்மா. ' நீ ஒன்னு, அப்பா ஒன்னு, நீங்க கல்யாணம் பண்ணிகிட்டதும் நான் ஒன்னு, அப்ப ஒன்னும் ஒன்னும் கூட்டுனா மூணுதான அம்மா' அழுகையோடு சொன்னாள்  மகள்.

'பையன் கருப்பு, எனக்கு வேண்டாம்' , சிறு வயதில் இருந்தே தன்னை போல மெலனின் குறைபாடுள்ள வெள்ளை பையனுக்கே வாழ்க்கை தருவதில் உறுதியாய் இருந்தாள் அவள்.

அது, ஆம்பள நாய் ல, அதான் அந்த ஆபரேஷன் பண்ணி விட்டாச்சு, சரி, நம்ம பையனுக்கு பொண்ணு பாக்க சொல்லி இருந்தேனே, என்னாச்சு? வயசாகிட்டே போது, அவனுக்கு ஒரு தொணைய புடிச்சு வச்சிடணும்.


புதன், 22 ஜனவரி, 2014

சிறு துளிகள்

வாழ்க்கை

காலண்டர் வாழ்க்கை,
புதிதாய் பிறக்கும் நாட்கள்,
சுழலும் பழைய தேதிகள்...

மதுரை சாலைகள் 

சந்திப்புகள் காவல் காக்கும் தலைவர் சிலைகள்..
சிக்னல் பொருத்தாமல் சிலையாய் காவல் துறை...

கண்மை

போன மழையில்,
உன் கண்மை திருடிச் சென்ற மேகம்..
இன்று வானில் கருப்பாய்..

ஈதல் யாசகம்

புண்ணியம் வேண்டி அன்னதானம்!
ஈதல் யாசகம்...

பகல்

பகல் கொள்ளை!!
எங்கே போனது??
இரவெல்லாம் நான் காவல் காத்த,
என் மின்மினி பூக்கள்...

வியாழன், 5 டிசம்பர், 2013

ஃபிரான்சிஸ் இந்து (Francis - Indhu)

11-Oct-2013
வீதி வரை மின்னலாய் வந்த பைக் பள்ளி வளாகத்தில் நுழைந்ததும் வேகம் குறைந்தது. நகரத்திற்கும் கிராமத்திற்கும் நடுவிலான ஒரு சிறிய ஊர் அது. ஐந்தாறு தொடக்க பள்ளிகள் மொத்தமாய் இருந்தாலும், அதில் இது மிகவும் பழமையானது. கட்டிடம் கூட ரொம்ப வருடமாய் அப்படியே தான் இருக்கிறது. 'ப' வடிவில் இரண்டு வரிசையாய் வகுப்பறைகள். நடுவில் திறந்த மைதானம். பைக்கை ஒரு ஓரமாய் நிறுத்தி விட்டு, அதில் அமர்ந்திருந்த காக்கி யூனிபார்ம், அநாயசமாய் கால்களை தூக்கி, விறைப்பாய் இறங்கியது. முகத்தில் சரியாய் ட்ரிம் செய்த மீசை, ஒரு நாள் வயதான தாடி மயிர்கள், திமிரான பார்வை, சட்டையை கிழித்து கொண்டிருந்த மார்பு மற்றும் கை தசைகள், முக்கியமாய் தொப்பை இல்லை. தனக்கு மிகவும் பழக்கமான இடம் போல் உள்ளே நடக்க தொடங்கினான். எதிர் வந்த பியூன் வயதில் முதியவராய் இருந்தாலும், தலை தாழ்த்தி 'வணக்கம் சார்' என்றார். 'அத்த ரூம் ல இருக்காங்களா?', கம்பீரமாய் கேட்டான். ' இருக்காங்க சார்', பணிவாய் பதில் வந்தது. உள் வரிசை அறைகளில் ஓரமாய் இருந்த ஹச்.எம். (H.M) அறை நோக்கி நடந்தான். அறை என்றால் சுவரால் தடுக்க பட்டது அல்ல, ஒரு பழைய கார்ட் போர்ட் வைத்து அடைக்க பட்ட அறை. கதவென்ற பெயரில் இருந்த தகரத்தை லேசாக தட்டி விட்டு, 'அத்த' என்றான். தலை நிமிர்ந்த ஹச்.எம் மிற்கு 50 வயது தாண்டி இருக்கும், தலை நரைக்காவிட்டாலும் முகத்தில் அனுபவ கோடுகள், இன்று கொஞ்சம் கவலை ரேகைகள் சேர்ந்து கொண்டது போல் இருந்தது.


'வாய்யா சௌந்தரு', பதட்டத்தில் இருப்பது போல் இருந்தாலும், குரலில் கொஞ்சம் பாசம் தெரிந்தது.
'உக்காருப்பா'

'மன்னிச்சிடுங்க அத்த, நீங்க போன் பண்ண போது கலெக்டர் மீட்டிங் ல இருந்தேன். எடுக்க முடியல. 5 மிஸ்டு கால் இருந்தது. ஏதோ அவசரம் போலன்னுட்டு மீட்டிங் முடிஞ்சதும் இங்க வந்துட்டேன். எதுவும் பிரச்சனையா அத்த, அந்த கடக்காரென் ஏதாவது மறுபடியும் கலாட்டா பண்ணானா?'

'அதெல்லாம் ஒன்னு இல்லையா, வேற விஷயம். பிரச்சனையான்னு தெரியல, அதான் உன்ன கூப்டேன்.'

'புரியல அத்த'

ஹச்.எம் சற்று குரலை தாழ்த்தி, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தொடங்கினார், 'நம்ம இந்து டீச்சர் இருக்காங்கள்ள.. '

'ஆமா, அந்த வடக்கு கோனார் தெருக் காரங்க தான?'

'ஆமாய்யா, அவுங்கதான். நாலு நாளா ஸ்கூல் க்கு வரல. ஒரு போன், லெட்டெர் எதுவும் இல்ல'

'யாரையாவது வீட்டுக்கு அனுப்ச்சு பாத்தீங்களா?'

'ஆமா, நம்ம கோமாரிய போய் பாக்க சொன்னேன். வீட்டு பக்கம் 2,3 நாளா ஆள காணோமாம்'

'அவுங்க புருஷன் இருக்காப்லயா?

'ஒனக்கு ஞாபகம் இல்லையா, அவன் சரியான தண்ணி வண்டி. எந்நேரமும் போத தான், அக்கம் பக்கத்து வீட்டுக் காரவுங்க தான் சொல்லி இருக்காங்க'.

'ஊருக்கு எதுவும் அவசரமா  போய்  இருப்பாங்க அத்த,'

'நானும் அப்டித்தான் நெனச்சேன், ஆனா, காலைல அவுங்க அப்பா ஸ்கூல் க்கு போன் பண்ணாரு, வீட்டு நம்பர் கிடைக்காம இங்க கால் பண்ணி இருந்தாரு. நான் அவர பயமுடுத்த வேண்டாமேன்னு, ஒரு ஸ்கூல் விஷயமா பக்கத்து ஊர் போய் இருக்காங்கன்னு சொல்லி வச்சேன்'

'ஒ, ஏதோ பிரச்சன மாதிரி தான் தெரியுது அத்த, சரி, கம்ப்ளைன்ட் எதுவும் பண்றீங்களா?'

'இல்லையா, அது ரொம்ப தங்கமான புள்ள.. பொம்பள புள்ள சமாச்சாரம், என்னன்னு தெரியாம பெருசு பண்ண வேண்டாம். நீ கொஞ்சம் அந்த பொண்ணு பத்தரமா இருக்கான்னு விசாரிச்சு பாருய்யா'

'புரியுது அத்த, நான் இப்பவே விசாரிச்சு பாக்குறேன் '

'சரிய்யா, இன்னொன்னு..' என்று இழுத்தார்.

'சொல்லுங்க அத்த,'

'இது என்னன்னு தெரியலையா, தப்பா எதுவும் இருக்க கூடாதுன்னு சாமிய வேண்டிக்கிறேன்', சற்று குரலை தாழ்த்தி, 'நம்ம ஸ்கூல் ல டெம்பரவரி ஸ்டாஃப் ஒரு டீச்சர் மூணு மாசமா இருக்காரு, அவரையும் நாலு நாளா காணல'

'ஒ.., அவரு வீட்ல போய் பாத்தீங்களா?'

'அவரு பக்கத்து டவுன் ல இருந்து வந்துட்டு இருந்தாரு, இன்னும் போய் பாக்கல, நான் அட்ரஸ் தரட்டுமாய்யா ?'

'குடுங்க அத்த, ரெண்டு பேரு ஒரே நேரத்துல காணோம் னு சொல்றீங்க, ஏதோ வெவகாரமா தெரியுது.'

'எதுவும் வெவகாரம் இருக்க கூடாதுய்யா, ரெண்டு பேரும் ரொம்ப நல்ல ஆளுங்க'

'சரி அத்த, நான் விசாரிச்சிட்டு சொல்றேன், அந்த இன்னொரு டீச்சர் பேரு என்ன?'

'பிரான்சிஸ்

                                             ______________________________
6-Oct-2010 (மூன்று வருடம் முன்னர்)

'இந்து,நல்லா யோசிச்சுதான் பேசுறியா?' கண்களில் நிரம்பிய நீர் வழிந்தோட தயாராய் இருந்தது.

'என்னால இதுக்கு மேல யோசிக்க முடியல பிரான்சிஸ்', அவளது விழிகளும் கண்ணீர் மொழியில் பேச தயாராயிருந்தது..

'என்ன பிரிஞ்சு உன்னால இருக்க முடியுமா இந்து?'

'தெரியாது பிரான்சிஸ், ஆனா, எங்கப்பாவ கொன்னுட்டு உங்கூட சந்தோசமா இருக்க முடியாதுன்னு கண்டிப்பா தெரியும்'

'உங்கப்பா மனசு மாறுற வரைக்கும் நான் காத்திருக்கேன்னு தான் சொல்றேனே! ', அவன் குரலில் இயலாமை நிறைந்திருந்தது..

'ஒனக்கு புரியலையா பிரான்சிஸ், இது நடக்காது!!', அவள் பிரசவிக்க மறுக்கும் வார்த்தைகளை, இதழ்கள் வெடிக்க, இதயம் கனக்க, வெளியே தள்ளி கொண்டிருந்தாள்... வார்த்தைகளின் வலியை கண்ணீர் கொண்டு கரைக்க முயற்சி செய்து கொண்டிருந்தன விழிகள் .

'நீ இல்லாட்டி நா செத்துடுவேன் இந்து '

'நீயும் எங்கப்பா மாதிரியே மெரட்டுரியே டா , முழுசா உயிர விடுற உரிம கூட இல்லாம கொஞ்சம் கொஞ்சமா நான் செத்துட்டு தான் இருக்கேன், அது உனக்கு தெரியலையா?! '

'எனக்கு தல வெடிக்குது இந்து, உன்ன நான் எப்டி மறக்க முடியும்'

'என்ன மறக்க சொல்ற அளவுக்கு நா கொடும காரி கெடயாது, என்னாலயும் உன்ன மறக்க முடியாது,, ஆனா நாம சேந்து வாழ இந்த உலகத்துல எடம் இல்ல டா '

'இருந்தாலும் செத்தாலும் ஒன்னா தான் இருப்போம்னு, நீதான இந்து சொன்ன', குழந்தை போல் அழுகை பீறிட்டு வந்தது..

அவளால் நீர் பிரவாகத்தை தடுக்க முடிய வில்லை, எதோ சொல்ல நினைத்தாள், ஆனால்  மொழியின் உதவி அற்றுப் போனது. அவள் மெல்ல குனிந்து அவன் நெற்றியில் முத்தம் பதித்தாள். அவள் கண்ணீரின் வெப்பம் அவன் தலை மயிரை கோதியது, வெடித்து அழ காத்திருந்த அவனது இதழ்களில் தனது இதழ் பதித்தாள்.  எத்தனையோ நாட்களில் காதலிலும், காமத்திலும் கூட தள்ளிப் போட்ட முத்தம், இன்று குளிர் வாடையில் நெருப்பு துண்டாய் அவன் அழுகைக்கு இதம் தந்தது. காமம் கொஞ்சம் கூட கலக்காத உயிர் முத்தம் அது. அனிச்சையாய் அவன் கைகள் அவள் கைகளோடு கோர்க்க, நிலை உணர்ந்தவளாய் அவன் கைகளை விலக்கி பின்னே நடந்தாள்.

'நான் வரேன் பிரான்சிஸ்', ஒலிக்கு உதவாமல் உதடுகள் அசைந்தன..

'மனச தொட்டு சொல்லு இந்து, என்ன விட்டு போக உன்னால முடியமா?' அவன் மனதுக்குள் முணுமுணுத்தது அவள் காதுகள் அறியாவிட்டாலும், காதல் அறிந்தது.  பதில் ஏதும் இல்லாமல் தொலை தூர மேகமாய் மறைந்து போனாள்.

                                     ___________________________________
11-Oct-2013

ஒரு குடம் தண்ணீர் ஊற்றியும் அவன் எந்த சலனமும் இல்லாமல் போதையில் கிடந்தான். சௌந்தர் எரிச்சலாய் 'இவென் எப்பவும் இப்டிதானா?' என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டான்.

'ஆமா சார், பகல் குடிகார பய சார்'

'ம்ம்..எத்தன வருஷமா இவுங்கள தெரியும்?'

'அது இருக்கும் சார் மூணு வருஷம். கல்யாணம் ஆனதுல இருந்து இங்க தான் இருக்காங்க, அந்த பொண்ணு இந்துவோட அப்பா வாங்கி குடுத்த வீடு சார் இது, இந்து தங்கமான பொண்ணு, இவந்தான் காலிப் பய'

'ம்ம்..எங்க, அந்த டீச்சர் இப்போ?'

'தெரியல சார், ஊர்க்கு போனா கூட எங்க வீட்ல சொல்லிட்டு தான் போகும். ரெண்டு மூணு நாளா காணோம், என்னான்னு தெரியல, இந்த பய தொல்ல தாங்க முடியாம எங்கயும் போய்டுச்சோன்னு பயமா இருக்கு சார். இல்ல இவென் எதுவும் எழவு பண்ணிட்டானான்னு வேற கவலயா இருக்கு '

'சரி, நீங்க போங்க, இவன நான் பாத்துக்குறேன். எதுவும் வேணும்னா கூப்ட்டு விடறேன்'

'சரிங்க சார்', அதற்க்கு மேல் அங்கு இருக்க முடியாதென அறிந்து, குழப்பமாக வெளியே போனார் பக்கத்துக்கு வீட்டுக்காரர்.

குடி போதையில் இருக்கும் இவனால் எதுவும் பிரோஜனம் இல்லை என்று புரிந்தது. அவன் மேல் சந்தேகம் படும் படியும் எதுவும் தெரியவில்லை, மெல்ல தட்டினால் சுருண்டு விழுந்து விடுவான். வீட்டை முழுசுமாய் அலசுவதென்று முடிவு செய்து, ஒவ்வொரு அறையாய் நுழைந்தான். கொஞ்ச நேரத்தில் எதுவும் கிடைக்காமல் சலிப்பாய் திரும்பிய போது, ஓரத்தில் ஒரு இரும்பு பீரோ இருந்தது. யோசிக்காமல் அதனை திறந்தான், அதுவும் எந்த எதிர்ப்பும் இன்றி திறந்து கொண்டது. உள்ளே, பெருசாய் எதுவும் இல்லை. கீழ் வரிசையில் பழைய சேலைகள், நைட்டிகள், உள்ளாடைகள். நடு வரிசையில், சில நல்ல சேலைகள். அதை அகற்றி பார்த்தான், சில ரசீது காகிதங்கள். எல்லாவற்றையும் நகர்த்தி உள்ளே பார்த்த போது, மஞ்சள் நிறமாய் மாறி இருந்த ஒரு பேப்பர். அதை மெல்ல எடுத்தான், கொஞ்சம் நைந்த நிலையில் இருந்த பேப்பரை, பக்குவமாய் திறந்து பார்த்தான். கீழே கையொப்பம் கண்ணை கவர்ந்தது. 'காதலுடன், உன் பிரான்சிஸ்' பக்கத்தில் ஒரு ஹார்ட்-இன் தொங்கிக் கொண்டிருந்தது. சட்டென திரும்பி, பைக் நோக்கி நகர்ந்தான்.  பைக் பிரான்சிஸ் வீடு தேடிப் பறந்தது.
                                         ________________________________________
8-Jul-2013(3 மாதம் முன்னால்)

இந்து வழக்கம் போல் அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். மதிய சாப்பாட்டை டிபன் பாக்ஸ்ஸில் போட்டு அடைத்துக் கொண்டாள். காலை உணவு, தினமும் சாப்பிடும் பழக்கம் மறந்து சில வருடங்கள் ஆகி விட்டன. இன்று லேசாய் பசிப்பது போல் இருந்தது. சட்டியில் மீதமிருந்த லெமன் ரைஸ் கொஞ்சம் எடுத்து தட்டில் போட்டு ஒரு வாய் எடுத்து வைக்கும் போது 'உவ்வேஏ' என்று கேவலமான சத்தத்துடன் அவள் புருஷன் வாந்தி எடுத்தான்.. திருமணமாகி இவள் வாந்தி எடுத்தாளோ இல்லையோ, அவன் தினமும் எடுத்துக் கொண்டிருந்தான். அவளுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பாத் ரூமில் எடுப்பான், சுத்தம் செய்வது எளிதாய் போகும். பல நாட்களில் அவள் அதிர்ஷ்டம் இல்லாதவளாகவே இருந்தாள். சத்தத்தில் கூட நாற்றம் இருப்பது பலருக்கு புரியாது. தட்டில் இருந்த சோறு அருவருப்பாய் பட்டது. அப்படியே குப்பையில் போட்டுவிட்டு நகர்ந்தாள்.

கண்ணாடியை கடந்த போது, நெற்றி வெற்றாய் இருந்தது தெரிந்தது. வேகமாய் பைக்குள் இருந்து நீள பொட்டை எடுத்து வைத்துக் கொண்டாள். அந்த நீள பொட்டை ரசிக்க சில வருடம் முன்பு இரண்டு கண்கள் இருந்தன. கண்கள் தொலைந்து போனாலும், அதன் பார்வைகளை திரும்ப தராத இரவல் போல் சேர்த்து வைத்திருந்தாள். நினைவுகள் இன்னும் இனித்தன.'பிரான்சிஸ், எத்தனை அழகாய் அவனோடு குடும்பம் நடத்தி இருக்கலாம்' அவனோடு சேர்ந்து வாழ்வது போன்ற கற்பனைகளை அவள் ஒதுக்கி வைத்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன,, இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் அன்று ஏனோ மேலெழும்பின..மறுபடியும் 'உவ்வே', அவள் அங்கிருந்து கிளம்பினாள்.

பள்ளிக்கூடம் வழக்கம் போல் அவளை வரவேற்த்தது. முட்கள் நிறைந்த அவள் வாழ்க்கையில் கொஞ்சம் மகரந்தம் தூவியது இந்த பள்ளிதான். கை எழுத்து போட ஹச்.எம். அறையில் நுழைந்தவள் சிலை போல் நின்றாள். கண்கள் சொல்வதை மூளை ஏற்றுக் கொள்ள வில்லை. இதயம் ராக்கெட் வேகத்தில் துடித்தது. அவனே தான், அவன் எப்படி இங்கே! இதழ்கள் மொழி மறக்க, கண்கள் பேச எத்தனித்தன. 
' என்ன இந்து, அப்டியே நின்னுடீங்க?' ஹச்.எம் அன்பாய் கேட்டார். 
'ஒன்னும் இல்ல மேடம், ஏதோ தூசி விழுந்துடுச்சு'.
'பாத்து வரதில்லையா, சரி, இவர் பிரான்சிஸ் சகாயதேவன், நம்ம சுந்தரம் சார் 6 மாசம் கழிச்சுதான் வருவார். இவர் அது வரைக்கும் டெம்பரவரி யா நாலாங் கிளாஸ் பாடம் எடுப்பார். பிரான்சிஸ், இது இந்து, மூனாங் கிளாஸ் டீச்சர்.' என்று அறிமுகம் செய்து வைத்தார். தன்னை தனக்கே அறிமுகம் செய்து வைத்த ஹச்.எம் ஐ வேடிக்கையாய் நினைத்து விட்டு, 'வணக்கம்' என்று பட்டும் படாமலும் சொல்லி வைத்தான். அவள் மெதுவாய் முனகி விட்டு அங்கிருந்து வேகமாய் நகர்ந்தாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை, அன்று எதுவும் புலப்பட வில்லை. பாடத்தில் கவனம் செல்ல வில்லை. எந்த சலனமும் இல்லாமல் அவன் பக்கத்து அறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தது அவளுக்கு கேட்டது. 2 நாட்கள் ஓடியது, விசை கொடுத்த பொம்மை போல் அவள் இயங்கிக் கொண்டிருந்தாள்.  அவனிடம் பேச அத்தனை  ஆசை,ஆனால் துணிவு வரவில்லை. 3 ஆவது நாள் உணவு நேரத்தில் அவனே பேச வந்தான். 
'இந்து', அவன் அழைத்தது அவள் வாழ்வில் மறைந்து போன இசை மீண்டும் வந்தது போல் இருந்தது. வினாடி பொழுது கண்கள் கலந்தன. குழந்தைகளின் இரைச்சல் அவளை நிலத்திற்கு அழைத்து வந்தது. சுதாரித்துக் கொண்டு, சுற்றும் முற்றும் யாரும் பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டாள். 'இன்னும் அடுத்தவங்களுக்கு பயந்து தான் வாழ்ந்துட்டு இருக்கியா இந்து?'. அவன் வார்த்தைகள் சட்டென சுட்டன. வலியை மறைத்துக்கொண்டு, 'எப்டி இருக்க பிரான்சிஸ், உன்ன பாத்ததும் எவ்வளவு சந்தோசம் தெரியுமா?' மறுபடியும் அனிச்சையாய் அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டாள். 'எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல தெரியுமா'.
'ஏன் இந்து, நான் வந்தது உனக்கு கஷ்டமா இருக்கா?', கிண்டலாய் சிரித்தான்.
'என்ன பேசுற பிரான்சிஸ்!' சில நொடிகள் அமைதியாய் கடந்தன. அவனாய் எதுவம் பேசவில்லை.
'அது சரி, வேற ஊருக்கு போய்டதா சொன்னாங்க??'
'ஆமா, கொடைகானல் போய்டோம் எல்லாரும். வேற ஊர், வேற உலகம். ' அமைதியாய் சொன்னான்.

'ம்ம்...அப்புறம் எப்டி இந்த பக்கம்?' சட்டென ஏதோ நினைத்தவளாய், 'சாமி, ஏன் வந்தன்னு கேட்கலப்பா' என்றாள். அவள் இப்படி பேசி பல காலம் ஆகி விட்டது.

அவன் அமைதியாய் பதில் சொன்னான் 'நம்ம மேல அன்பு இருக்குறவுங்க நம்மள நினைச்சா நமக்கு தெரியும்னு சொல்லுவாங்க. நீ என்ன பத்தி நினைச்சன்னு தோனுச்சு, அதான் உன்ன பாக்க வந்துட்டேன்.'. 

அவள் முகம் மாறியது. அதை உணர்ந்தவனாய் ' கிண்டலுக்கு சொன்னேன் இந்து, டீச்சர் வேல காலின்னு விளம்பரத்த பாத்து வந்தேன், உன்ன பாத்ததும் பயங்கர சந்தோசம்'.

மறுபடியும் என்ன பேசுவதென்று புரியாமல் போக, 'சரி, சாப்ட வா, ஸ்டாஃப் ரூம் போலாம்' என்றாள். 'நமக்கு வெளில தான் சாப்பாடு, நீ கிளம்பு' என்று சொல்லிவிட்டு பட்டும் படாமலும் கிளம்பினான்.

                         ________________________________________
7-Oct-2013(ஒரு வாரம் முன்பு)
பிரான்சிஸ் வந்த  பின்பு,கடந்த மூன்று மாதங்கள் இந்துவின் நாட்கள் சக்கரம் கட்டிக் கொண்டு பறந்தன. இப்போதெல்லாம் அவள் புருஷனின் 'உவ்வே' அவள் காதுகளில் விழுவதே இல்லை. நாளுக்கு மூணு வேளை சாப்பிட தொடங்கி இருந்தாள். புதிதாய் சில புடவைகள் கூட எடுத்தாள். வெறும் பொட்டு வைக்க மட்டும் பார்த்திருந்த கண்ணாடியுடன் கணிசமான நேரம் உரையாடினாள். பள்ளியில் அங்கும் இங்கும் இயல்பாய் சிரித்துக் கொண்டார்கள், நேரம் கிடைக்கும் போது விளையாட்டாய் பேசிக் கொண்டார்கள். விளையாட்டு பேச்சு, சமூகம் அவளுக்கு போட்டுள்ள கோட்டை லேசாக தொடும் போதெல்லாம் அவள் விலக முயன்றாள். இருந்தாலும் இந்த மாற்றங்கள் அவளுக்கு பிடித்திருந்தன. நடைபாதைகள் வானவில்லாயின, குழந்தைகள் தேவதை ஆனார்கள், காற்று வாசமானது, உடல் எடை இழந்து பறந்தது.

நாட்கள் நகர நகர காலெண்டர் காகிதம் போல் அவளது வரையறைகள் மறைய தொடங்கின. அதை அவள் உணரத் தொடங்கியதும் பயம் பற்றிக் கொண்டது. அவளது புதிய சிறகுகளை, உலகம் எச்சில் துப்பி சிதைத்து விடும் என்று எண்ண தொடங்கினாள். ஒரு பக்கம் அவன், ஒரு பக்கம் உலகம், நடுவில் இரண்டாய் பிரிந்து ரத்தம் கசிந்து கொண்டு அவள். அவளது நிலைபாட்டை அவன் உணராமல் இல்லை, ஆனால் அதற்க்கு அவன் கவலை படுவதாக அவளுக்கு தெரியவில்லை. இது சரி இல்லை என்று அவளுக்கு பட்டது. இன்று அவனுடன் பேசி இதை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தாள். முடிந்தால், அவனை உடனே ஊரை விட்டு போக சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அவனுடன் இதெல்லாம் பேச அவளுக்கு நேரம் தேவை பட்டது. ஸ்கூலில் பேச முடியாது, ஊருக்கு வெளியில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு இடத்தில அவனை மாலையில் சந்திப்பதென முடிவு செய்தாள்.

காற்று இதமாய் வீசியது, அவனும் அவளும் அங்கே நிசப்தத்தின் சங்கீதத்தை ரசித்து கொண்டிருந்தனர். நேரம் கடத்த முடியாது, அவள் தொடங்கினாள். 
'ஏன் பிரான்சிஸ் ஏன், எதுக்கு என்னோட எடத்துக்கு வந்த நீ?', ஆற்றாமை, இந்த முறை அவளுக்கு.

'கரெக்ட் இந்து, நான் எதுக்கு உன்னோட எடத்துக்கு வந்தேன். பேசாம என் கூட வா, என்னோட எடத்துக்கு போலாம், நம்ம எடத்துக்கு போலாம்'. அவன் சுற்றி வளைக்காமல் நேரடியாக பேசுவான் என அவள் எதிர் பார்க்கவில்லை. 

'என்ன பேசுற பிரான்சிஸ், நீ மொதல இங்க இருந்து போய்டு. நீ நெனைக்கிற எதுவும் நடக்காது!'

' எல்லாம் நடக்கும் இந்து, நான் நெனைக்கிறது தான் நீயும் நெனைக்கிற, ஊருக்கு பயந்தது போதும் இந்து.'

'நான் முடிஞ்சு போன ஒரு கத, என்ன விட்டுட்டு நீ ஒன்னோட வழிய பாரு', அவள் சொல்லி முடிக்கையில், அவள் இதழ்கள் அவன் இதழ்களால் சிறை பிடிக்க பட்டன. ஆண்மையின் ஆளுமையை முதன் முதலில் உணர்ந்தாள். இத்தனை காலத்தில் அவன் காதல் கொஞ்சமும் குறைய வில்லை என்பதை அந்த முத்தம் அவளுக்கு உணர்த்தியது. எங்கோ ஒரு இடி சத்தம்... சட்டென அவனை தள்ளி விட்டாள். அவளது புத்தி தடுமாறியது, 'உன்ன கெஞ்சி கேக்குறேன் பிரான்சிஸ், நீ போய்டு ' என்று கதறினாள். அவன் கண்கள் கோபத்தில் சிவந்தன. இத்தனை கோபமாய் அவனை அவள் பார்த்ததில்லை. பயத்தில் பின்னோக்கி நடந்தாள். அவன் விடாமல் முன்னேறினான், அந்த ஆண்மை அவளை பயத்திலும் சிலிர்க்க வைத்தது. அவள் அருகில் வந்து, அவள் கழுத்தை அழுத்தமாய் பற்றி, ஆவேசமாய் கேட்டான் ' மனச தொட்டு சொல்லு இந்து, என் கூட இருக்க உனக்கு இஷ்டம் இல்ல???'
                            __________________________________
12-Oct-2013
சனிக்கிழமை என்பதால் பள்ளியில் யாரும் இல்லை. ஹச்.எம் மை பள்ளிக்கு வர சொல்லி தானும் அங்கு வந்தான் சௌந்தர். 
'என்னய்யா, இந்து எங்க இருக்கான்னு தெரிஞ்சுடுச்சா?'

'இல்ல அத்த, ஆனா, அந்த ஆள் பிரான்சிஸ் குடுத்த அட்ரெஸ் போலி, அப்டி ஒரு எடம் இல்லவே இல்ல'

'என்னய்யா சொல்லற, அந்த பையன் ரொம்ப நல்லவனா இருந்தானே'

'அவென் எனக்கு சரியா படல அத்த, நான் ஸ்டேஷன் ல சொல்லி விசாரிக்க சொல்லி இருக்கேன். அந்த பொண்ணோட போட்டோ அவ வீட்ல இருந்து எடுத்தேன், அவனோட போட்டோ இருக்குதா ?'

'ஒரு நிமிஷம் யா, வேலைக்கு போட்ட அப்ளிகேஷன் ல இருக்கும்.', எழுந்து சென்று ஒரு கோப்பை புரட்டி பார்க்கையில்அதிர்ச்சியானார், ' சௌந்தரு, அந்த அப்ளிகேஷன் மட்டும் காணல யா'.

'நான் நெனச்சது சரியா இருக்கு அத்த, அந்த ஆளு எதோ பிளான் போட்டுதான் வந்து இருக்கான். அந்த பொண்ணுக்கும் அவனுக்கும் முன்னாடி பழக்கம் இருந்திருக்கு, அத பத்தி  அப்புறம் சொல்றேன் அத்த. வேற எதுவும் போட்டோ இருக்கா?'

'போன மாசம் ஈ.ஓ(E.O) வந்த போது ஒரு போட்டோ எடுத்தோம், ஒரு நிமிஷம்', என்று மறுபடியும் இன்னொரு கோப்பை எடுத்து புரட்டினார். இந்த முறை முகம் இன்னும் மிரண்டது, சட்டென சௌந்தர் அந்த கோப்பை வாங்கி பார்த்தான். ஒரு முகம் மட்டும், யாரோ உப்புக் கல்லால் தேய்த்தது போல் மறைந்திருந்தது. 

'அவென் கிரிமினலா வேல செஞ்சிருக்கான் அத்த, இந்த போட்டோ வையும் டேமேஜ் பண்ணி இருக்கான் அவன். இவ்வளவு வேல பண்ணவன்,  ஒன்னு அந்த பொண்ண ஏமாத்தி கூட்டிட்டு போயிருப்பான், இல்லாட்டி கடத்திட்டு கூட போயிருப்பான்.' 
சௌந்தர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய செல்லுலார் கனைத்தது. அதை காதிற்கு கொடுத்தவன், ' என்னது,.... எங்க???.... சரி, நான் 30 நிமிசத்துல வரேன் ' என்று சொல்லி அணைத்தான். முகத்தில் குழப்பமும் பதற்றமும் நன்றாய் தெரிந்தது. 

'அத்த, நீங்க என் கூட  அர மணி நேரம் ஒரு எடத்துக்கு வரீங்களா?'

'என்னய்யா, எதாவது பிரச்சனையா?' என்று பயத்துடன் கேட்டார்.

'ஒன்னும் இல்ல அத்த, நீங்க வாங்க' என்று சொல்லி இருவரும் கிளம்பினர்.

அரை மணி நேரத்தில், ஊருக்கு வெளியில் ஒரு தோப்புக்கு இருவரும்  வந்து சேர்ந்தனர். ஆறேழு ஆட்கள் கூடி பதட்டமாய் பேசிக் கொண்டிருந்தனர் , அவர்களை தாண்டி ஏதோ மூடி வைக்க பட்டிருந்தது. போலிஸ் ஒருவர் வேகமாய்  ஓடி வந்து, 'அந்த பொண்ணுதான்னு நெனைக்கிறேன் சார், மொகம் அவ்வளவு சரியா தெரியல, ஆனா உடம்புல எதுவும் ரத்த காயம் இருக்குற மாதிரி தெரியல. கண்ண மூடி அமைதியா தூங்கிட்டு இருக்குற மாதிரி இருக்கு' என்று ஒப்பித்தார்.

'அத்த , பயப்படாதீங்க, இது அந்த பொண்ணு இந்து வான்னு மட்டும் பாத்து சொல்லுங்க'. ஹச்.எம் முகத்தில் பயமும், பதட்டமும் வியர்வையாய் வழிந்தது. மெதுவாய் மூடி இருந்த துணியை விலக்கினார்கள். பார்த்ததும், ஹச்.எம் அப்படியே மயங்கி  விழுந்தார். சௌந்தர் அவரை தாங்கிப்பிடிக்க, இன்னொரு போலீஸ் வேகமாய் சென்று ஜீப்பில் இருந்து பாட்டில் ஒன்று எடுத்து  வந்தார். தண்ணீர் அடித்து அவரை எழுப்பியதும், லேசாய் கண் விழித்தவர் 'இந்து.....' என்று கதறி அழ தொடங்கினார்.
                       _____________________________________


அதே நாள், வேறொரு இடத்தில் 

அமைதியான காற்று சுகமாய் இருந்தது.
'இந்த ஒரு வாரம் போல நான் எப்பவும் சந்தோசமா இருந்ததில்ல பிரான்சிஸ்'

'இனி நம்மள பிரிக்க யாராலயும் முடியாது இந்து' . சந்தோசமாய் கண்ணடித்தான்.

'அது சரி, அன்னைக்கு அவ்வளவு கோபமா என் கூட வா ன்னு கூப்டயே, நா சரின்னு சொல்லாம முடியாதுன்னு சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்ப?'

'நீ அப்டி சொல்ல மாட்டன்னு எனக்கு தெரியும் இந்து. ஒரு வேல, நீ அப்டி சொல்லி இருந்தா, உன்ன தொந்தரவு பண்ணாம மறுபடியும் தனியா இங்க வந்திருப்பேன்'

'சரியான லூசுடா நீ, நான் போன தடவ பிரிஞ்சு போன போதே நீ என்ன தூக்கிட்டு போய் இருந்தா இவ்வளவு பிரச்சினையே இல்ல. பெரிய நல்லவனாட்டம் இந்த தடவையும் விட்டுட்டு வந்திருப்பானாம். நான் இப்ப எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா. இனி எப்பவும் உன் கூடத்தான்..'

இருவரும் சிரித்துக் கொண்டிருக்கையில் நட்சத்திரங்கள் அவர்களைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. இருவரும் பூப் போல் எழுந்து நடக்க தொடங்கினர். கல்லறைக்  காடு  அமைதியாய் ,ஆனந்தமாய் இசைத்துக் கொண்டிருந்தது. அவர்கள் அமர்ந்திருந்த கல்லில் அழகிய பூக்கள் சிதறிக் கிடந்தன. பூக்களுக்கு கீழே அழுத்தமாய் பதித்திருந்தது ' பிரான்சிஸ் சகாயதேவன், தோற்றம் : 5-Feb-1987, மறைவு : 6-Jan-2011'.



காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...