வியாழன், 6 மார்ச், 2014

ஒரிரு வரிக் கதைகள் - காதல் பக்கம் (One/Two Line Stories - Love Version)

ஒரு வருடமாய் அவள் கான்டீன் கடந்து போகையில், எதிர் மரத்தடி பெஞ்சில் வைத்த பூக்களும், அதன் கீழிருந்த கடிதங்களும் குப்பை தொட்டிக்கே காதலை சொல்லின. அடுத்த நாள் அவள் கடக்கையில் பூவும் காகிதமும் இல்லாத வெற்றிடத்தில், அவள் பார்வைகள் பரிதவிப்போடு ஓடிக் கொண்டிருக்கையில்  வானம் தேடி பறக்கத் தொடங்கின என் கால்கள்.

'காதலிச்ச பொண்ணு வேற யாராவது கல்யாணம் பண்ணிக்கிட்டா, இவனும் வேற யாராயாவது கல்யாணம் பண்ணிட்டு போகாம விஷத்த குடிப்பானா, முட்டாள் ' - யாரோ ஒருவன் பற்றி கோபத்தில் பேசி விட்டு அவள் பக்கம் திரும்பியதும், கண்களில்  நீர் மை ஏந்திய படி, 'நா போய்டா நீ அப்டி தான் மறந்துடுவயா!!' என்றது தழு தழுத்த குரல்.. பெண்கள்!!!!

'ஹிந்து பையன கல்யாணம் பண்ணிட்டு எப்டி சந்தோசமா இருக்க போறான்னு பாப்போம், சீக்கிரமா கண்ண கசக்கிட்டு வந்து நிக்க போறா!!!'..ஒன்னரை  வருடத்தில் இயேசு பிரான் குழல் ஊத, வெள்ளை அங்கியில் கிருஷ்ண பரமாத்மா ஆசீர்வதிக்க, கூடைக்குள்ளே, உலகத்தையே வசீகரிக்கும் புன்னகையோடு ஒரு குழந்தை படம் வீட்டுக்கு வந்தது.

'நல்லா யோசிங்க சார், உங்க சொந்த காரங்க தப்பு சொல்லாத படி உங்க சாதிப் பொண்ணுதான் வேணும்னா நீங்களே உங்க பையனுக்கு பொண்ணு பாருங்க, ஆனா, உங்கள உங்க பையன் பாத்துக்குற மாதிரியும், உங்க பையன நீங்க பாத்துக்குற மாதிரியும் பாத்துக்குற ஒரு பொண்ணு வேணும்னா, உங்க பையனுக்கு பிடிச்ச என்ன கல்யாணம் பண்ணி வைங்க', மூச்சு விடாமல் தைரியமாய் பேசிவிட்டு போன அவளை பார்த்து கொண்டே கைபேசியை எடுத்தார்."ம்ம், சங்கர லிங்கம், அடுத்த வாரம் அந்த ரெண்டு பொண்ணுங்கள பாக்க வரோம்னு சொல்லி இருந்தேன்ல, அத கான்செல் பண்ணிடுங்க,,, இந்த வாரமே வந்து பாக்குறோம்'.

'அப்பாடி, அஞ்சு வருஷமாகிடிச்சு, இன்னும் மூணு நாளைக்கு இந்த வீடு எனக்கு மட்டும்தான், எந்த தொந்தரவும் இல்லாம நிம்மதியா இருப்பேன்.' ஒரு மாலை பொழுதும் இரவும் தனிமையில் கழிந்ததும்,  பலகாரமெல்லாம் வாங்கி விட்டு காலை வண்டி ஏறினேன், மனைவியின் ஊர் நோக்கி.

'லவ் வே பேத்தல், இதுல லவ் அட் பஸ்ட் சைட் எல்லாம் சுத்த பேத்தல்,' தோழியிடம் சொல்லிக் கொண்டே வரும் போது 'டமால்'..'ஐயோ, சாரி சாரி, சாரிங்க தெரியாம இடிச்சிட்டேன், மன்னிச்சிடுங்க ' பட பட வென்று அவன் கண்கள் அவளை கெஞ்சி கொண்டிருக்கும் போது, அவளுக்குள் ஏதோ ஒன்று.., பக்கத்தில் வாயை மூடியபடி சிரித்து கொண்டிருந்தனர் காதல் தேவதைகள்.

தாலி கட்டுவதற்கு முன்னால் கடைசியாய், அவனுக்கு முதல் காதல் சொல்லி தந்து, இன்று முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த அவள் கண்களை 2 நொடி ஆழமாய் பார்த்தான். அவளுக்கு ஐந்தடி தள்ளி இருந்த இரு கண்கள் இவன் பக்கத்தில் அமர்ந்திருந்தவள் கண்களோடு 2 நொடி கலந்ததை இவன் கவனிக்கவில்லை.

'வீட்ல உக்காந்தா எங்க சார் படிக்கிறான், மனச கண்ட படி அலைய விட்டுட்டே இருக்கான், நீங்க தான் டியூஷன் ல வச்சு பாத்துக்கணும்' சொல்லி விட்டு அப்பா கிளம்பினார். பள்ளியில் யூனிபார்மில் மட்டுமே பார்த்த அவளை கலர் பாவாடை சட்டையில் பார்த்த போது மனம் எங்கும் அலையாமல் அவளையே பற்றிக் கொண்டிருந்தது.

வீட்டை விட்டு மற்ற அனைவரும் கிளம்பியதை உறுதி செய்து கொண்டு, அவள் தனியாய் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தை தவற விடக்கூடாது என்று உறுதியாய் உள்ளே நுழைந்த நான்,  குளித்து விட்டு நீர் சொட்டும் கூந்தலுடன் அவள் வருவதை பார்த்ததும் பற்றிய நெருப்பை அணைக்க முடியாமல், அவளை அணைத்து முகமெங்கும் முத்தம் பதித்தேன். 'விடுங்க, பசங்களும், பேர பிள்ளைங்களும் பக்கத்துல இருக்குற கடைக்குத்தான் போய் இருக்காங்க, இப்போ வந்துடுவாங்க' என்று சொல்லி செல்லமாய் சிணுங்கினாள் அவள்.

'மத்ததெல்லாம் ஓகே தான், ஆனா என்னத் தொடாத, அப்புறம் பாப்பா வந்துடும்', என்று சொன்னவளை ஏக்கத்துடன் பார்த்தான். 'என்னோட அப்பா அம்மா இப்டி த் தான் அப்பா-அம்மா வெளாட்டு வெளாடும் போது, அப்பா அம்மா கைய தொட்டுடாராம், அப்புறம் நான் பாப்பாவா பொறந்திட்டேன், தெரியுமா' என்று மழலை மாறாமல் சொல்லி முடித்தாள்.

'நான் வெளில வரும் போதெல்லாம் நீ என்னோட பக்கத்துல வரதும், என்ன சுத்தி சுத்தி வரதும் எங்க அப்பாவுக்கு பிடிக்கல, இனி மேல் என் பின்னாடி வராத', முகத்தில் அடித்தது போல அவள் சொன்னாள். 'என்னைக்காவது என்னோட காதல் உனக்கு புரியும். அது வரைக்கும் நான் காத்து இருப்பேன்', சொல்லிக் கொண்டிருக்கும் போதே, 'ம்ம், பப்பி டார்லிங், வா போகலாம்', என்று அவளது சங்கிலியை பிடித்து இழுத்து சென்று விட்டான் அந்த கடங்காரன்.

'நீ என் கிட்ட வந்து உன்னோட லவ் வ சொல்லும் போதும், இப்டித் தான் விஷ்வா இருந்துச்சு, உடம்பெல்லாம் ரெஸ்ட் லெஸ்ஸா, வயிறு நெஞ்செல்லாம் ஏதோ உருள்ற மாதிரி அன்-ஈசியா,  ஆனா இது கொஞ்சம் வேறல்ல'..கண்ணீர் திரை கண்களை மூட மரணப் படுக்கையில் இருந்த அவளை இலை போல் அணைத்து, நெற்றியில் கொஞ்சம் வெப்பமாய் உமிழ் நீர் பதித்து, 'சீ... லூஸு.. ' என்று சொல்லும் போது வெடித்து வந்த நீர் பிரவாகத்தை அவள் பார்க்கும் முன் வேகமாய் துடைத்தான்.








திங்கள், 3 மார்ச், 2014

ஒரிரு வரிக் கதைகள் (One/Two Line Stories)

'அந்த கடங்கார ஆபிசர் இந்த வேலைய முடிக்க லஞ்சம் கேட்க கூடாது கடவுளே, அப்படி பண்ணிட்டா கோவில்ல உனக்கு காணிக்கையா பத்தாயிரம் ரூபா போடுறேன்', வணங்கி சென்றான் அவன்.

தினமும் போல் படுக்கை அறைக்குள் உற்சாகமாய் விசிலடித்து கொண்டு அருகில் வந்து படுத்தான் என் கணவன், "தினமும் 7 மணி ரயில விட்ருவேன்னு சொல்வியே, எப்டி இன்னக்கி புடிச்சேன் பாத்தியா?'. அவன் சரியாய் பிடித்த ரயில் கவிழ்ந்து அனைவரையும் பலி வாங்கி ஒரு வருடம் மேல் ஆகிறது.

மாலை மாற்றிய உடனே ஆளுக்கொரு தம்ளர் பாயாசம். 'நம்ம கல்யாண நாள் அன்னைக்கு  முதியோர் இல்லம் போறதுக்கு, மேல போய்டலாம்', விரக்த்தியாய் பேசியவருக்கு விடுதலை கொடுத்தது விஷக் குப்பி .

'ரயில்ல யாராவது ஏதாவது கொடுத்தா வாங்கி சாப்ட கூடாது', சொன்ன அப்பா செத்ததில் இருந்து, மயக்க மருந்து கலக்கிய பிஸ்கட்டோடு எனது ரயில் பயணங்கள்.

'காக்கா குருவி எல்லாம் பயப்படத்தான் இந்த சோளக்கொள்ள பொம்ம வச்சிருக்கு கண்ணு', சாமிக் குத்தத்துக்கு பயந்து பொங்க வைக்க போகும் போது தாத்தா சொன்னார்.

தினமும் அய்யாவோட பிள்ளை தன்னோடு   நிறைய விளையாடுவதால் தான் தன்னை அலங்காரமாய் கோவிலுக்கு அழைத்து செல்கிறார்கள் என்று  தம்பட்டம் அடித்து கொண்டது, தலையில் மஞ்சள் தண்ணி ஊற்றப்பட்ட ஆடு.

நெற்றி நிறைய பட்டையுடன், கழுத்தில் மாலையுடன், கடவுளுக்கு நன்றி சொல்லி வெளியே வந்து கொண்டிருந்தார், ஊழல் வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பிரேக் இன்ஸ்பெக்டர்.

தப்பாய் பதில் எழுதிய மகளை அடித்தே விட்டாள் அம்மா. ' நீ ஒன்னு, அப்பா ஒன்னு, நீங்க கல்யாணம் பண்ணிகிட்டதும் நான் ஒன்னு, அப்ப ஒன்னும் ஒன்னும் கூட்டுனா மூணுதான அம்மா' அழுகையோடு சொன்னாள்  மகள்.

'பையன் கருப்பு, எனக்கு வேண்டாம்' , சிறு வயதில் இருந்தே தன்னை போல மெலனின் குறைபாடுள்ள வெள்ளை பையனுக்கே வாழ்க்கை தருவதில் உறுதியாய் இருந்தாள் அவள்.

அது, ஆம்பள நாய் ல, அதான் அந்த ஆபரேஷன் பண்ணி விட்டாச்சு, சரி, நம்ம பையனுக்கு பொண்ணு பாக்க சொல்லி இருந்தேனே, என்னாச்சு? வயசாகிட்டே போது, அவனுக்கு ஒரு தொணைய புடிச்சு வச்சிடணும்.


புதன், 22 ஜனவரி, 2014

சிறு துளிகள்

வாழ்க்கை

காலண்டர் வாழ்க்கை,
புதிதாய் பிறக்கும் நாட்கள்,
சுழலும் பழைய தேதிகள்...

மதுரை சாலைகள் 

சந்திப்புகள் காவல் காக்கும் தலைவர் சிலைகள்..
சிக்னல் பொருத்தாமல் சிலையாய் காவல் துறை...

கண்மை

போன மழையில்,
உன் கண்மை திருடிச் சென்ற மேகம்..
இன்று வானில் கருப்பாய்..

ஈதல் யாசகம்

புண்ணியம் வேண்டி அன்னதானம்!
ஈதல் யாசகம்...

பகல்

பகல் கொள்ளை!!
எங்கே போனது??
இரவெல்லாம் நான் காவல் காத்த,
என் மின்மினி பூக்கள்...

வியாழன், 5 டிசம்பர், 2013

ஃபிரான்சிஸ் இந்து (Francis - Indhu)

11-Oct-2013
வீதி வரை மின்னலாய் வந்த பைக் பள்ளி வளாகத்தில் நுழைந்ததும் வேகம் குறைந்தது. நகரத்திற்கும் கிராமத்திற்கும் நடுவிலான ஒரு சிறிய ஊர் அது. ஐந்தாறு தொடக்க பள்ளிகள் மொத்தமாய் இருந்தாலும், அதில் இது மிகவும் பழமையானது. கட்டிடம் கூட ரொம்ப வருடமாய் அப்படியே தான் இருக்கிறது. 'ப' வடிவில் இரண்டு வரிசையாய் வகுப்பறைகள். நடுவில் திறந்த மைதானம். பைக்கை ஒரு ஓரமாய் நிறுத்தி விட்டு, அதில் அமர்ந்திருந்த காக்கி யூனிபார்ம், அநாயசமாய் கால்களை தூக்கி, விறைப்பாய் இறங்கியது. முகத்தில் சரியாய் ட்ரிம் செய்த மீசை, ஒரு நாள் வயதான தாடி மயிர்கள், திமிரான பார்வை, சட்டையை கிழித்து கொண்டிருந்த மார்பு மற்றும் கை தசைகள், முக்கியமாய் தொப்பை இல்லை. தனக்கு மிகவும் பழக்கமான இடம் போல் உள்ளே நடக்க தொடங்கினான். எதிர் வந்த பியூன் வயதில் முதியவராய் இருந்தாலும், தலை தாழ்த்தி 'வணக்கம் சார்' என்றார். 'அத்த ரூம் ல இருக்காங்களா?', கம்பீரமாய் கேட்டான். ' இருக்காங்க சார்', பணிவாய் பதில் வந்தது. உள் வரிசை அறைகளில் ஓரமாய் இருந்த ஹச்.எம். (H.M) அறை நோக்கி நடந்தான். அறை என்றால் சுவரால் தடுக்க பட்டது அல்ல, ஒரு பழைய கார்ட் போர்ட் வைத்து அடைக்க பட்ட அறை. கதவென்ற பெயரில் இருந்த தகரத்தை லேசாக தட்டி விட்டு, 'அத்த' என்றான். தலை நிமிர்ந்த ஹச்.எம் மிற்கு 50 வயது தாண்டி இருக்கும், தலை நரைக்காவிட்டாலும் முகத்தில் அனுபவ கோடுகள், இன்று கொஞ்சம் கவலை ரேகைகள் சேர்ந்து கொண்டது போல் இருந்தது.


'வாய்யா சௌந்தரு', பதட்டத்தில் இருப்பது போல் இருந்தாலும், குரலில் கொஞ்சம் பாசம் தெரிந்தது.
'உக்காருப்பா'

'மன்னிச்சிடுங்க அத்த, நீங்க போன் பண்ண போது கலெக்டர் மீட்டிங் ல இருந்தேன். எடுக்க முடியல. 5 மிஸ்டு கால் இருந்தது. ஏதோ அவசரம் போலன்னுட்டு மீட்டிங் முடிஞ்சதும் இங்க வந்துட்டேன். எதுவும் பிரச்சனையா அத்த, அந்த கடக்காரென் ஏதாவது மறுபடியும் கலாட்டா பண்ணானா?'

'அதெல்லாம் ஒன்னு இல்லையா, வேற விஷயம். பிரச்சனையான்னு தெரியல, அதான் உன்ன கூப்டேன்.'

'புரியல அத்த'

ஹச்.எம் சற்று குரலை தாழ்த்தி, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தொடங்கினார், 'நம்ம இந்து டீச்சர் இருக்காங்கள்ள.. '

'ஆமா, அந்த வடக்கு கோனார் தெருக் காரங்க தான?'

'ஆமாய்யா, அவுங்கதான். நாலு நாளா ஸ்கூல் க்கு வரல. ஒரு போன், லெட்டெர் எதுவும் இல்ல'

'யாரையாவது வீட்டுக்கு அனுப்ச்சு பாத்தீங்களா?'

'ஆமா, நம்ம கோமாரிய போய் பாக்க சொன்னேன். வீட்டு பக்கம் 2,3 நாளா ஆள காணோமாம்'

'அவுங்க புருஷன் இருக்காப்லயா?

'ஒனக்கு ஞாபகம் இல்லையா, அவன் சரியான தண்ணி வண்டி. எந்நேரமும் போத தான், அக்கம் பக்கத்து வீட்டுக் காரவுங்க தான் சொல்லி இருக்காங்க'.

'ஊருக்கு எதுவும் அவசரமா  போய்  இருப்பாங்க அத்த,'

'நானும் அப்டித்தான் நெனச்சேன், ஆனா, காலைல அவுங்க அப்பா ஸ்கூல் க்கு போன் பண்ணாரு, வீட்டு நம்பர் கிடைக்காம இங்க கால் பண்ணி இருந்தாரு. நான் அவர பயமுடுத்த வேண்டாமேன்னு, ஒரு ஸ்கூல் விஷயமா பக்கத்து ஊர் போய் இருக்காங்கன்னு சொல்லி வச்சேன்'

'ஒ, ஏதோ பிரச்சன மாதிரி தான் தெரியுது அத்த, சரி, கம்ப்ளைன்ட் எதுவும் பண்றீங்களா?'

'இல்லையா, அது ரொம்ப தங்கமான புள்ள.. பொம்பள புள்ள சமாச்சாரம், என்னன்னு தெரியாம பெருசு பண்ண வேண்டாம். நீ கொஞ்சம் அந்த பொண்ணு பத்தரமா இருக்கான்னு விசாரிச்சு பாருய்யா'

'புரியுது அத்த, நான் இப்பவே விசாரிச்சு பாக்குறேன் '

'சரிய்யா, இன்னொன்னு..' என்று இழுத்தார்.

'சொல்லுங்க அத்த,'

'இது என்னன்னு தெரியலையா, தப்பா எதுவும் இருக்க கூடாதுன்னு சாமிய வேண்டிக்கிறேன்', சற்று குரலை தாழ்த்தி, 'நம்ம ஸ்கூல் ல டெம்பரவரி ஸ்டாஃப் ஒரு டீச்சர் மூணு மாசமா இருக்காரு, அவரையும் நாலு நாளா காணல'

'ஒ.., அவரு வீட்ல போய் பாத்தீங்களா?'

'அவரு பக்கத்து டவுன் ல இருந்து வந்துட்டு இருந்தாரு, இன்னும் போய் பாக்கல, நான் அட்ரஸ் தரட்டுமாய்யா ?'

'குடுங்க அத்த, ரெண்டு பேரு ஒரே நேரத்துல காணோம் னு சொல்றீங்க, ஏதோ வெவகாரமா தெரியுது.'

'எதுவும் வெவகாரம் இருக்க கூடாதுய்யா, ரெண்டு பேரும் ரொம்ப நல்ல ஆளுங்க'

'சரி அத்த, நான் விசாரிச்சிட்டு சொல்றேன், அந்த இன்னொரு டீச்சர் பேரு என்ன?'

'பிரான்சிஸ்

                                             ______________________________
6-Oct-2010 (மூன்று வருடம் முன்னர்)

'இந்து,நல்லா யோசிச்சுதான் பேசுறியா?' கண்களில் நிரம்பிய நீர் வழிந்தோட தயாராய் இருந்தது.

'என்னால இதுக்கு மேல யோசிக்க முடியல பிரான்சிஸ்', அவளது விழிகளும் கண்ணீர் மொழியில் பேச தயாராயிருந்தது..

'என்ன பிரிஞ்சு உன்னால இருக்க முடியுமா இந்து?'

'தெரியாது பிரான்சிஸ், ஆனா, எங்கப்பாவ கொன்னுட்டு உங்கூட சந்தோசமா இருக்க முடியாதுன்னு கண்டிப்பா தெரியும்'

'உங்கப்பா மனசு மாறுற வரைக்கும் நான் காத்திருக்கேன்னு தான் சொல்றேனே! ', அவன் குரலில் இயலாமை நிறைந்திருந்தது..

'ஒனக்கு புரியலையா பிரான்சிஸ், இது நடக்காது!!', அவள் பிரசவிக்க மறுக்கும் வார்த்தைகளை, இதழ்கள் வெடிக்க, இதயம் கனக்க, வெளியே தள்ளி கொண்டிருந்தாள்... வார்த்தைகளின் வலியை கண்ணீர் கொண்டு கரைக்க முயற்சி செய்து கொண்டிருந்தன விழிகள் .

'நீ இல்லாட்டி நா செத்துடுவேன் இந்து '

'நீயும் எங்கப்பா மாதிரியே மெரட்டுரியே டா , முழுசா உயிர விடுற உரிம கூட இல்லாம கொஞ்சம் கொஞ்சமா நான் செத்துட்டு தான் இருக்கேன், அது உனக்கு தெரியலையா?! '

'எனக்கு தல வெடிக்குது இந்து, உன்ன நான் எப்டி மறக்க முடியும்'

'என்ன மறக்க சொல்ற அளவுக்கு நா கொடும காரி கெடயாது, என்னாலயும் உன்ன மறக்க முடியாது,, ஆனா நாம சேந்து வாழ இந்த உலகத்துல எடம் இல்ல டா '

'இருந்தாலும் செத்தாலும் ஒன்னா தான் இருப்போம்னு, நீதான இந்து சொன்ன', குழந்தை போல் அழுகை பீறிட்டு வந்தது..

அவளால் நீர் பிரவாகத்தை தடுக்க முடிய வில்லை, எதோ சொல்ல நினைத்தாள், ஆனால்  மொழியின் உதவி அற்றுப் போனது. அவள் மெல்ல குனிந்து அவன் நெற்றியில் முத்தம் பதித்தாள். அவள் கண்ணீரின் வெப்பம் அவன் தலை மயிரை கோதியது, வெடித்து அழ காத்திருந்த அவனது இதழ்களில் தனது இதழ் பதித்தாள்.  எத்தனையோ நாட்களில் காதலிலும், காமத்திலும் கூட தள்ளிப் போட்ட முத்தம், இன்று குளிர் வாடையில் நெருப்பு துண்டாய் அவன் அழுகைக்கு இதம் தந்தது. காமம் கொஞ்சம் கூட கலக்காத உயிர் முத்தம் அது. அனிச்சையாய் அவன் கைகள் அவள் கைகளோடு கோர்க்க, நிலை உணர்ந்தவளாய் அவன் கைகளை விலக்கி பின்னே நடந்தாள்.

'நான் வரேன் பிரான்சிஸ்', ஒலிக்கு உதவாமல் உதடுகள் அசைந்தன..

'மனச தொட்டு சொல்லு இந்து, என்ன விட்டு போக உன்னால முடியமா?' அவன் மனதுக்குள் முணுமுணுத்தது அவள் காதுகள் அறியாவிட்டாலும், காதல் அறிந்தது.  பதில் ஏதும் இல்லாமல் தொலை தூர மேகமாய் மறைந்து போனாள்.

                                     ___________________________________
11-Oct-2013

ஒரு குடம் தண்ணீர் ஊற்றியும் அவன் எந்த சலனமும் இல்லாமல் போதையில் கிடந்தான். சௌந்தர் எரிச்சலாய் 'இவென் எப்பவும் இப்டிதானா?' என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டான்.

'ஆமா சார், பகல் குடிகார பய சார்'

'ம்ம்..எத்தன வருஷமா இவுங்கள தெரியும்?'

'அது இருக்கும் சார் மூணு வருஷம். கல்யாணம் ஆனதுல இருந்து இங்க தான் இருக்காங்க, அந்த பொண்ணு இந்துவோட அப்பா வாங்கி குடுத்த வீடு சார் இது, இந்து தங்கமான பொண்ணு, இவந்தான் காலிப் பய'

'ம்ம்..எங்க, அந்த டீச்சர் இப்போ?'

'தெரியல சார், ஊர்க்கு போனா கூட எங்க வீட்ல சொல்லிட்டு தான் போகும். ரெண்டு மூணு நாளா காணோம், என்னான்னு தெரியல, இந்த பய தொல்ல தாங்க முடியாம எங்கயும் போய்டுச்சோன்னு பயமா இருக்கு சார். இல்ல இவென் எதுவும் எழவு பண்ணிட்டானான்னு வேற கவலயா இருக்கு '

'சரி, நீங்க போங்க, இவன நான் பாத்துக்குறேன். எதுவும் வேணும்னா கூப்ட்டு விடறேன்'

'சரிங்க சார்', அதற்க்கு மேல் அங்கு இருக்க முடியாதென அறிந்து, குழப்பமாக வெளியே போனார் பக்கத்துக்கு வீட்டுக்காரர்.

குடி போதையில் இருக்கும் இவனால் எதுவும் பிரோஜனம் இல்லை என்று புரிந்தது. அவன் மேல் சந்தேகம் படும் படியும் எதுவும் தெரியவில்லை, மெல்ல தட்டினால் சுருண்டு விழுந்து விடுவான். வீட்டை முழுசுமாய் அலசுவதென்று முடிவு செய்து, ஒவ்வொரு அறையாய் நுழைந்தான். கொஞ்ச நேரத்தில் எதுவும் கிடைக்காமல் சலிப்பாய் திரும்பிய போது, ஓரத்தில் ஒரு இரும்பு பீரோ இருந்தது. யோசிக்காமல் அதனை திறந்தான், அதுவும் எந்த எதிர்ப்பும் இன்றி திறந்து கொண்டது. உள்ளே, பெருசாய் எதுவும் இல்லை. கீழ் வரிசையில் பழைய சேலைகள், நைட்டிகள், உள்ளாடைகள். நடு வரிசையில், சில நல்ல சேலைகள். அதை அகற்றி பார்த்தான், சில ரசீது காகிதங்கள். எல்லாவற்றையும் நகர்த்தி உள்ளே பார்த்த போது, மஞ்சள் நிறமாய் மாறி இருந்த ஒரு பேப்பர். அதை மெல்ல எடுத்தான், கொஞ்சம் நைந்த நிலையில் இருந்த பேப்பரை, பக்குவமாய் திறந்து பார்த்தான். கீழே கையொப்பம் கண்ணை கவர்ந்தது. 'காதலுடன், உன் பிரான்சிஸ்' பக்கத்தில் ஒரு ஹார்ட்-இன் தொங்கிக் கொண்டிருந்தது. சட்டென திரும்பி, பைக் நோக்கி நகர்ந்தான்.  பைக் பிரான்சிஸ் வீடு தேடிப் பறந்தது.
                                         ________________________________________
8-Jul-2013(3 மாதம் முன்னால்)

இந்து வழக்கம் போல் அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். மதிய சாப்பாட்டை டிபன் பாக்ஸ்ஸில் போட்டு அடைத்துக் கொண்டாள். காலை உணவு, தினமும் சாப்பிடும் பழக்கம் மறந்து சில வருடங்கள் ஆகி விட்டன. இன்று லேசாய் பசிப்பது போல் இருந்தது. சட்டியில் மீதமிருந்த லெமன் ரைஸ் கொஞ்சம் எடுத்து தட்டில் போட்டு ஒரு வாய் எடுத்து வைக்கும் போது 'உவ்வேஏ' என்று கேவலமான சத்தத்துடன் அவள் புருஷன் வாந்தி எடுத்தான்.. திருமணமாகி இவள் வாந்தி எடுத்தாளோ இல்லையோ, அவன் தினமும் எடுத்துக் கொண்டிருந்தான். அவளுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பாத் ரூமில் எடுப்பான், சுத்தம் செய்வது எளிதாய் போகும். பல நாட்களில் அவள் அதிர்ஷ்டம் இல்லாதவளாகவே இருந்தாள். சத்தத்தில் கூட நாற்றம் இருப்பது பலருக்கு புரியாது. தட்டில் இருந்த சோறு அருவருப்பாய் பட்டது. அப்படியே குப்பையில் போட்டுவிட்டு நகர்ந்தாள்.

கண்ணாடியை கடந்த போது, நெற்றி வெற்றாய் இருந்தது தெரிந்தது. வேகமாய் பைக்குள் இருந்து நீள பொட்டை எடுத்து வைத்துக் கொண்டாள். அந்த நீள பொட்டை ரசிக்க சில வருடம் முன்பு இரண்டு கண்கள் இருந்தன. கண்கள் தொலைந்து போனாலும், அதன் பார்வைகளை திரும்ப தராத இரவல் போல் சேர்த்து வைத்திருந்தாள். நினைவுகள் இன்னும் இனித்தன.'பிரான்சிஸ், எத்தனை அழகாய் அவனோடு குடும்பம் நடத்தி இருக்கலாம்' அவனோடு சேர்ந்து வாழ்வது போன்ற கற்பனைகளை அவள் ஒதுக்கி வைத்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன,, இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் அன்று ஏனோ மேலெழும்பின..மறுபடியும் 'உவ்வே', அவள் அங்கிருந்து கிளம்பினாள்.

பள்ளிக்கூடம் வழக்கம் போல் அவளை வரவேற்த்தது. முட்கள் நிறைந்த அவள் வாழ்க்கையில் கொஞ்சம் மகரந்தம் தூவியது இந்த பள்ளிதான். கை எழுத்து போட ஹச்.எம். அறையில் நுழைந்தவள் சிலை போல் நின்றாள். கண்கள் சொல்வதை மூளை ஏற்றுக் கொள்ள வில்லை. இதயம் ராக்கெட் வேகத்தில் துடித்தது. அவனே தான், அவன் எப்படி இங்கே! இதழ்கள் மொழி மறக்க, கண்கள் பேச எத்தனித்தன. 
' என்ன இந்து, அப்டியே நின்னுடீங்க?' ஹச்.எம் அன்பாய் கேட்டார். 
'ஒன்னும் இல்ல மேடம், ஏதோ தூசி விழுந்துடுச்சு'.
'பாத்து வரதில்லையா, சரி, இவர் பிரான்சிஸ் சகாயதேவன், நம்ம சுந்தரம் சார் 6 மாசம் கழிச்சுதான் வருவார். இவர் அது வரைக்கும் டெம்பரவரி யா நாலாங் கிளாஸ் பாடம் எடுப்பார். பிரான்சிஸ், இது இந்து, மூனாங் கிளாஸ் டீச்சர்.' என்று அறிமுகம் செய்து வைத்தார். தன்னை தனக்கே அறிமுகம் செய்து வைத்த ஹச்.எம் ஐ வேடிக்கையாய் நினைத்து விட்டு, 'வணக்கம்' என்று பட்டும் படாமலும் சொல்லி வைத்தான். அவள் மெதுவாய் முனகி விட்டு அங்கிருந்து வேகமாய் நகர்ந்தாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை, அன்று எதுவும் புலப்பட வில்லை. பாடத்தில் கவனம் செல்ல வில்லை. எந்த சலனமும் இல்லாமல் அவன் பக்கத்து அறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தது அவளுக்கு கேட்டது. 2 நாட்கள் ஓடியது, விசை கொடுத்த பொம்மை போல் அவள் இயங்கிக் கொண்டிருந்தாள்.  அவனிடம் பேச அத்தனை  ஆசை,ஆனால் துணிவு வரவில்லை. 3 ஆவது நாள் உணவு நேரத்தில் அவனே பேச வந்தான். 
'இந்து', அவன் அழைத்தது அவள் வாழ்வில் மறைந்து போன இசை மீண்டும் வந்தது போல் இருந்தது. வினாடி பொழுது கண்கள் கலந்தன. குழந்தைகளின் இரைச்சல் அவளை நிலத்திற்கு அழைத்து வந்தது. சுதாரித்துக் கொண்டு, சுற்றும் முற்றும் யாரும் பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டாள். 'இன்னும் அடுத்தவங்களுக்கு பயந்து தான் வாழ்ந்துட்டு இருக்கியா இந்து?'. அவன் வார்த்தைகள் சட்டென சுட்டன. வலியை மறைத்துக்கொண்டு, 'எப்டி இருக்க பிரான்சிஸ், உன்ன பாத்ததும் எவ்வளவு சந்தோசம் தெரியுமா?' மறுபடியும் அனிச்சையாய் அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டாள். 'எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல தெரியுமா'.
'ஏன் இந்து, நான் வந்தது உனக்கு கஷ்டமா இருக்கா?', கிண்டலாய் சிரித்தான்.
'என்ன பேசுற பிரான்சிஸ்!' சில நொடிகள் அமைதியாய் கடந்தன. அவனாய் எதுவம் பேசவில்லை.
'அது சரி, வேற ஊருக்கு போய்டதா சொன்னாங்க??'
'ஆமா, கொடைகானல் போய்டோம் எல்லாரும். வேற ஊர், வேற உலகம். ' அமைதியாய் சொன்னான்.

'ம்ம்...அப்புறம் எப்டி இந்த பக்கம்?' சட்டென ஏதோ நினைத்தவளாய், 'சாமி, ஏன் வந்தன்னு கேட்கலப்பா' என்றாள். அவள் இப்படி பேசி பல காலம் ஆகி விட்டது.

அவன் அமைதியாய் பதில் சொன்னான் 'நம்ம மேல அன்பு இருக்குறவுங்க நம்மள நினைச்சா நமக்கு தெரியும்னு சொல்லுவாங்க. நீ என்ன பத்தி நினைச்சன்னு தோனுச்சு, அதான் உன்ன பாக்க வந்துட்டேன்.'. 

அவள் முகம் மாறியது. அதை உணர்ந்தவனாய் ' கிண்டலுக்கு சொன்னேன் இந்து, டீச்சர் வேல காலின்னு விளம்பரத்த பாத்து வந்தேன், உன்ன பாத்ததும் பயங்கர சந்தோசம்'.

மறுபடியும் என்ன பேசுவதென்று புரியாமல் போக, 'சரி, சாப்ட வா, ஸ்டாஃப் ரூம் போலாம்' என்றாள். 'நமக்கு வெளில தான் சாப்பாடு, நீ கிளம்பு' என்று சொல்லிவிட்டு பட்டும் படாமலும் கிளம்பினான்.

                         ________________________________________
7-Oct-2013(ஒரு வாரம் முன்பு)
பிரான்சிஸ் வந்த  பின்பு,கடந்த மூன்று மாதங்கள் இந்துவின் நாட்கள் சக்கரம் கட்டிக் கொண்டு பறந்தன. இப்போதெல்லாம் அவள் புருஷனின் 'உவ்வே' அவள் காதுகளில் விழுவதே இல்லை. நாளுக்கு மூணு வேளை சாப்பிட தொடங்கி இருந்தாள். புதிதாய் சில புடவைகள் கூட எடுத்தாள். வெறும் பொட்டு வைக்க மட்டும் பார்த்திருந்த கண்ணாடியுடன் கணிசமான நேரம் உரையாடினாள். பள்ளியில் அங்கும் இங்கும் இயல்பாய் சிரித்துக் கொண்டார்கள், நேரம் கிடைக்கும் போது விளையாட்டாய் பேசிக் கொண்டார்கள். விளையாட்டு பேச்சு, சமூகம் அவளுக்கு போட்டுள்ள கோட்டை லேசாக தொடும் போதெல்லாம் அவள் விலக முயன்றாள். இருந்தாலும் இந்த மாற்றங்கள் அவளுக்கு பிடித்திருந்தன. நடைபாதைகள் வானவில்லாயின, குழந்தைகள் தேவதை ஆனார்கள், காற்று வாசமானது, உடல் எடை இழந்து பறந்தது.

நாட்கள் நகர நகர காலெண்டர் காகிதம் போல் அவளது வரையறைகள் மறைய தொடங்கின. அதை அவள் உணரத் தொடங்கியதும் பயம் பற்றிக் கொண்டது. அவளது புதிய சிறகுகளை, உலகம் எச்சில் துப்பி சிதைத்து விடும் என்று எண்ண தொடங்கினாள். ஒரு பக்கம் அவன், ஒரு பக்கம் உலகம், நடுவில் இரண்டாய் பிரிந்து ரத்தம் கசிந்து கொண்டு அவள். அவளது நிலைபாட்டை அவன் உணராமல் இல்லை, ஆனால் அதற்க்கு அவன் கவலை படுவதாக அவளுக்கு தெரியவில்லை. இது சரி இல்லை என்று அவளுக்கு பட்டது. இன்று அவனுடன் பேசி இதை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தாள். முடிந்தால், அவனை உடனே ஊரை விட்டு போக சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அவனுடன் இதெல்லாம் பேச அவளுக்கு நேரம் தேவை பட்டது. ஸ்கூலில் பேச முடியாது, ஊருக்கு வெளியில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு இடத்தில அவனை மாலையில் சந்திப்பதென முடிவு செய்தாள்.

காற்று இதமாய் வீசியது, அவனும் அவளும் அங்கே நிசப்தத்தின் சங்கீதத்தை ரசித்து கொண்டிருந்தனர். நேரம் கடத்த முடியாது, அவள் தொடங்கினாள். 
'ஏன் பிரான்சிஸ் ஏன், எதுக்கு என்னோட எடத்துக்கு வந்த நீ?', ஆற்றாமை, இந்த முறை அவளுக்கு.

'கரெக்ட் இந்து, நான் எதுக்கு உன்னோட எடத்துக்கு வந்தேன். பேசாம என் கூட வா, என்னோட எடத்துக்கு போலாம், நம்ம எடத்துக்கு போலாம்'. அவன் சுற்றி வளைக்காமல் நேரடியாக பேசுவான் என அவள் எதிர் பார்க்கவில்லை. 

'என்ன பேசுற பிரான்சிஸ், நீ மொதல இங்க இருந்து போய்டு. நீ நெனைக்கிற எதுவும் நடக்காது!'

' எல்லாம் நடக்கும் இந்து, நான் நெனைக்கிறது தான் நீயும் நெனைக்கிற, ஊருக்கு பயந்தது போதும் இந்து.'

'நான் முடிஞ்சு போன ஒரு கத, என்ன விட்டுட்டு நீ ஒன்னோட வழிய பாரு', அவள் சொல்லி முடிக்கையில், அவள் இதழ்கள் அவன் இதழ்களால் சிறை பிடிக்க பட்டன. ஆண்மையின் ஆளுமையை முதன் முதலில் உணர்ந்தாள். இத்தனை காலத்தில் அவன் காதல் கொஞ்சமும் குறைய வில்லை என்பதை அந்த முத்தம் அவளுக்கு உணர்த்தியது. எங்கோ ஒரு இடி சத்தம்... சட்டென அவனை தள்ளி விட்டாள். அவளது புத்தி தடுமாறியது, 'உன்ன கெஞ்சி கேக்குறேன் பிரான்சிஸ், நீ போய்டு ' என்று கதறினாள். அவன் கண்கள் கோபத்தில் சிவந்தன. இத்தனை கோபமாய் அவனை அவள் பார்த்ததில்லை. பயத்தில் பின்னோக்கி நடந்தாள். அவன் விடாமல் முன்னேறினான், அந்த ஆண்மை அவளை பயத்திலும் சிலிர்க்க வைத்தது. அவள் அருகில் வந்து, அவள் கழுத்தை அழுத்தமாய் பற்றி, ஆவேசமாய் கேட்டான் ' மனச தொட்டு சொல்லு இந்து, என் கூட இருக்க உனக்கு இஷ்டம் இல்ல???'
                            __________________________________
12-Oct-2013
சனிக்கிழமை என்பதால் பள்ளியில் யாரும் இல்லை. ஹச்.எம் மை பள்ளிக்கு வர சொல்லி தானும் அங்கு வந்தான் சௌந்தர். 
'என்னய்யா, இந்து எங்க இருக்கான்னு தெரிஞ்சுடுச்சா?'

'இல்ல அத்த, ஆனா, அந்த ஆள் பிரான்சிஸ் குடுத்த அட்ரெஸ் போலி, அப்டி ஒரு எடம் இல்லவே இல்ல'

'என்னய்யா சொல்லற, அந்த பையன் ரொம்ப நல்லவனா இருந்தானே'

'அவென் எனக்கு சரியா படல அத்த, நான் ஸ்டேஷன் ல சொல்லி விசாரிக்க சொல்லி இருக்கேன். அந்த பொண்ணோட போட்டோ அவ வீட்ல இருந்து எடுத்தேன், அவனோட போட்டோ இருக்குதா ?'

'ஒரு நிமிஷம் யா, வேலைக்கு போட்ட அப்ளிகேஷன் ல இருக்கும்.', எழுந்து சென்று ஒரு கோப்பை புரட்டி பார்க்கையில்அதிர்ச்சியானார், ' சௌந்தரு, அந்த அப்ளிகேஷன் மட்டும் காணல யா'.

'நான் நெனச்சது சரியா இருக்கு அத்த, அந்த ஆளு எதோ பிளான் போட்டுதான் வந்து இருக்கான். அந்த பொண்ணுக்கும் அவனுக்கும் முன்னாடி பழக்கம் இருந்திருக்கு, அத பத்தி  அப்புறம் சொல்றேன் அத்த. வேற எதுவும் போட்டோ இருக்கா?'

'போன மாசம் ஈ.ஓ(E.O) வந்த போது ஒரு போட்டோ எடுத்தோம், ஒரு நிமிஷம்', என்று மறுபடியும் இன்னொரு கோப்பை எடுத்து புரட்டினார். இந்த முறை முகம் இன்னும் மிரண்டது, சட்டென சௌந்தர் அந்த கோப்பை வாங்கி பார்த்தான். ஒரு முகம் மட்டும், யாரோ உப்புக் கல்லால் தேய்த்தது போல் மறைந்திருந்தது. 

'அவென் கிரிமினலா வேல செஞ்சிருக்கான் அத்த, இந்த போட்டோ வையும் டேமேஜ் பண்ணி இருக்கான் அவன். இவ்வளவு வேல பண்ணவன்,  ஒன்னு அந்த பொண்ண ஏமாத்தி கூட்டிட்டு போயிருப்பான், இல்லாட்டி கடத்திட்டு கூட போயிருப்பான்.' 
சௌந்தர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய செல்லுலார் கனைத்தது. அதை காதிற்கு கொடுத்தவன், ' என்னது,.... எங்க???.... சரி, நான் 30 நிமிசத்துல வரேன் ' என்று சொல்லி அணைத்தான். முகத்தில் குழப்பமும் பதற்றமும் நன்றாய் தெரிந்தது. 

'அத்த, நீங்க என் கூட  அர மணி நேரம் ஒரு எடத்துக்கு வரீங்களா?'

'என்னய்யா, எதாவது பிரச்சனையா?' என்று பயத்துடன் கேட்டார்.

'ஒன்னும் இல்ல அத்த, நீங்க வாங்க' என்று சொல்லி இருவரும் கிளம்பினர்.

அரை மணி நேரத்தில், ஊருக்கு வெளியில் ஒரு தோப்புக்கு இருவரும்  வந்து சேர்ந்தனர். ஆறேழு ஆட்கள் கூடி பதட்டமாய் பேசிக் கொண்டிருந்தனர் , அவர்களை தாண்டி ஏதோ மூடி வைக்க பட்டிருந்தது. போலிஸ் ஒருவர் வேகமாய்  ஓடி வந்து, 'அந்த பொண்ணுதான்னு நெனைக்கிறேன் சார், மொகம் அவ்வளவு சரியா தெரியல, ஆனா உடம்புல எதுவும் ரத்த காயம் இருக்குற மாதிரி தெரியல. கண்ண மூடி அமைதியா தூங்கிட்டு இருக்குற மாதிரி இருக்கு' என்று ஒப்பித்தார்.

'அத்த , பயப்படாதீங்க, இது அந்த பொண்ணு இந்து வான்னு மட்டும் பாத்து சொல்லுங்க'. ஹச்.எம் முகத்தில் பயமும், பதட்டமும் வியர்வையாய் வழிந்தது. மெதுவாய் மூடி இருந்த துணியை விலக்கினார்கள். பார்த்ததும், ஹச்.எம் அப்படியே மயங்கி  விழுந்தார். சௌந்தர் அவரை தாங்கிப்பிடிக்க, இன்னொரு போலீஸ் வேகமாய் சென்று ஜீப்பில் இருந்து பாட்டில் ஒன்று எடுத்து  வந்தார். தண்ணீர் அடித்து அவரை எழுப்பியதும், லேசாய் கண் விழித்தவர் 'இந்து.....' என்று கதறி அழ தொடங்கினார்.
                       _____________________________________


அதே நாள், வேறொரு இடத்தில் 

அமைதியான காற்று சுகமாய் இருந்தது.
'இந்த ஒரு வாரம் போல நான் எப்பவும் சந்தோசமா இருந்ததில்ல பிரான்சிஸ்'

'இனி நம்மள பிரிக்க யாராலயும் முடியாது இந்து' . சந்தோசமாய் கண்ணடித்தான்.

'அது சரி, அன்னைக்கு அவ்வளவு கோபமா என் கூட வா ன்னு கூப்டயே, நா சரின்னு சொல்லாம முடியாதுன்னு சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்ப?'

'நீ அப்டி சொல்ல மாட்டன்னு எனக்கு தெரியும் இந்து. ஒரு வேல, நீ அப்டி சொல்லி இருந்தா, உன்ன தொந்தரவு பண்ணாம மறுபடியும் தனியா இங்க வந்திருப்பேன்'

'சரியான லூசுடா நீ, நான் போன தடவ பிரிஞ்சு போன போதே நீ என்ன தூக்கிட்டு போய் இருந்தா இவ்வளவு பிரச்சினையே இல்ல. பெரிய நல்லவனாட்டம் இந்த தடவையும் விட்டுட்டு வந்திருப்பானாம். நான் இப்ப எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா. இனி எப்பவும் உன் கூடத்தான்..'

இருவரும் சிரித்துக் கொண்டிருக்கையில் நட்சத்திரங்கள் அவர்களைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. இருவரும் பூப் போல் எழுந்து நடக்க தொடங்கினர். கல்லறைக்  காடு  அமைதியாய் ,ஆனந்தமாய் இசைத்துக் கொண்டிருந்தது. அவர்கள் அமர்ந்திருந்த கல்லில் அழகிய பூக்கள் சிதறிக் கிடந்தன. பூக்களுக்கு கீழே அழுத்தமாய் பதித்திருந்தது ' பிரான்சிஸ் சகாயதேவன், தோற்றம் : 5-Feb-1987, மறைவு : 6-Jan-2011'.



சனி, 14 செப்டம்பர், 2013

'ஆனந்த யாழ்' பாடல் எனது வரிகளில்

தங்க மீன்கள் திரைக்காவியத்தில் வரும்  'ஆனந்த யாழ்' மெட்டில் மனம் சுற்றிக் கொண்டே இருந்தது. நானும் பெண்ணை பெற்ற அப்பனானதால் அந்த மெட்டிற்கு ஒரு பாட்டெழுத தோன்றியது. முயற்சி செய்திருக்கிறேன்.

வானவில் தேரில் ஏற்றுகிறாய்,
எந்தன் வானத்தில் பேரொளி ஊற்றுகிறாய்.
காற்றினில் ஈரம் கூட்டுகிறாய்,
எந்தன் கால்களில் சிறகை பூட்டுகிறாய்.
ஒரு பாலை மணலில் பூக்களை நிரப்பி,
சோலைகள் பரப்பிய சாரலும் நீ.
எந்தன் ஆயுள் முழுக்க கண்ணுக்குள் சுமப்பேன்,
அன்னையுமாக்கினாய் என்னையே நீ.
இந்த பூமியில் எதுவும் தேவை இல்லை,
நம் கூட்டுக்குள்ளே  வரும் சொர்க்கமடி.
நம் வாழ்க்கைக்கு வேண்டிய செல்வம் எல்லாம்,
தினம் புன்னகையாலே தந்திடு நீ.

கண்களில் தெரியும் தென்றலடி,
என் கைகளில் கிடைத்த திங்களடி ,
வண்ணத்து பூச்சியின் வண்ணமடி,
வெண்பனி உந்தன் கன்னமடி.
தினம் பார்வைக்குள் புதைத்து, பாதங்கள் பதித்து,
மோட்சங்கள் கொடுக்கும் தெய்வமடி.
உன் தாமரை விழியின் தாள் திறக்க பல சூரியன்கள் தினம் பூக்குமடி.

                                                                      (வானவில் தேரில்...)

மேகத்தின் மேலொரு வீடு கட்டி,
ஆடிடலாம் நாம் கண்ணை பொத்தி,
புள்ளினம் போலே இறக்கை கட்டி ,
போய் வரலாம் நாம் விண்ணை முட்டி.
எந்தன் பூமகள் தேகம் நோவெடுத்தால் நான்,
ஊஞ்சலாய் சுமப்பேன் கையை கட்டி.
உந்தன் பொன்விழி தூக்கம் கண்டுவிட்டால்,
நான் மெத்தை செய்வேன் என் தோள்கள் தட்டி.

                                                                  (வானவில் தேரில்...)


வியாழன், 12 செப்டம்பர், 2013

V2 (Part 4/ பாகம் நான்கு - இறுதிப் பாகம் )

தூக்கம் கலையத் தொடங்கியது. ஆனால் கண்களைத் திறக்க தோன்ற வில்லை. விழித்த பின்பும் எத்தனை நேரம் கண்களை மூடியே இருப்பது. இத்தனை நேரம் சுகமாய் இருந்தது இப்போது சுமையாய்த் தெரிந்தது. மெல்ல கண்களை திறந்தேன். திறந்ததும் சிறிது அதிர்ந்து விட்டேன். நேற்று பார்த்த அந்த விகாரனைப் போல் இன்னொருவன், இன்னும் கொஞ்சம் பெரியதாய். "வணக்கம் நண்பரே!". ஆரம்பித்து விட்டார்கள் நல்லவர்கள். வணக்கம் சொல்லும் மன நிலையில் நான் இல்லை. இவர்களை சண்டை இட்டும் ஜெயிக்க முடியாது, அடங்கி போவதை விட வேறு வழியும் இல்லை. அந்த மாமிச மலை தொடர்ந்தது. "நண்பரே, உங்கள் குழப்பங்களை நானறிவேன். எங்களை மண்ணிக்க வேண்டும். நாம் எல்லாம் காலத்தின் கருவிகள். சரி, தவறு என்பதில் நமக்கு இருக்கும் முரண் தான் பல சமயம் நம் வாழ்க்கையை சுவாரசியம் ஆக்குகின்றன." நான் தத்துவம் கேட்கும் நிலையில் இல்லை, கேட்காமல் இருக்கும் இடத்திலும் இல்லை.

அவன் தொடர்ந்தான்."உங்கள் மனதுக்குள் நிறைய கேள்விகள் இருக்கும். என்னால் இயன்ற அளவு அதற்க்கான பதிலை கூறுகிறேன். பொறுமையாய் கேளுங்கள். நாங்கள் உங்கள் கிரஹத்தை கண்டு பிடித்தது உங்கள் மனிதர்களால் தான். அவர்கள் வேற்று கிரஹ ஆராய்ச்சிக்காக பல அலைவரிசையில் விண்வெளி நோக்கி செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். நாங்களும் அப்படி ஒரு ஆராய்ச்சியில் இருந்தோம். ஆனால் உங்களை விட நாங்கள் அறிவியலில் பல மடங்கு முன்னால் இருக்கிறோம். எங்களுடைய சக்தி வாய்ந்த கருவிகள் வெகு தூரத்திலேயே உங்களுடைய அலை வரிசைகளை கண்டு கொண்டது. உங்கள் கணக்குப் படி சுமார் 50 ஆண்டுகள் முன்னால் எங்கள் கிரஹவாசிகள் ஒரு குழுவோடு அங்கே வந்து சேர்ந்தனர். அன்று முதல் அங்கே பல விதமான ஆராய்சிகள் செய்து வருகிறோம்.  எங்கள் ஆராய்ச்சியும், ஆரம்பத்தில் நாங்கள் அறிந்து கொண்ட விஷயங்களே இத்தனை ஆண்டுகளாக உங்கள் இடத்தில் எங்கள் தேடல்கள் தொடர காரணம். நம் இருவரின் கிரஹங்களும் அதிசயிக்கும் வண்ணம் பல ஒற்றுமைகளை கொண்டது. இரண்டு இடத்தில் வாழும் உயிர்களுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. தாவரங்கள், நகரும் உயிர்வகைகள் , அவைகள் சுவாசிக்கும் விதம், ஏன், அவைகளின் செல்களின் மூலக் கூறுகள் கூட கிட்டத்தட்ட ஒன்று தான். ஆக்சிஜன், ஹைட்ரஜன், கார்பன், நீர் என்று நமது உயிரின் அடிப்படைகள் ஒரே மாதிரியானவை. இரண்டு கிரஹத்தின் பருவ மாற்றங்கள், இரவு பகல், காற்று மண்டலங்கள்  கூட ஒத்தே இருக்கிறது. இது அதிசய ஒற்றுமை. ஆனால், எங்களுக்கு மிகவும் தேவைப்பட்ட ஒற்றுமை. "

எனக்கு புரிந்தது போலவும் இருந்தது, புரியாதது போலவும் இருந்தது. இவனுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமையும் எனக்கு தெரியவில்லை. நான் அவனை குழப்பமாய் பார்த்தேன். அவனுக்கு நான் நினைத்தது என்ன புரிய போகிறது என்று நினைக்கையில் அவன் மீண்டும் பேசத் தொடங்கினான்.       "நண்பரே, நமக்குள் இருக்கும் வேற்றுமை பற்றி நீங்கள் நினைக்கலாம்.  ஆனால் அதெல்லாம் நாம் வாழும் இடங்களுக்குள் இருக்கும் சிறிய வேற்றுமைகளே. உங்கள் கிரஹத்தின் புவி ஈர்ப்பு எங்களுடையதை விட அதிகம், எங்கள் ஆய்வின் படி நமக்குள் உள்ள உயர வேறுபாட்டிற்கு அதுதான் முக்கிய காரணம். இந்த விண்கலத்தில் இந்த அறை மட்டும் உங்கள் கிரஹம் போல் இருப்பதற்காக செயற்கை ஈர்ப்பு விசை அமைத்துள்ளோம்.  நாம் இருவரும் ஆக்சிஜன் தான் சுவாசிக்கிறோம், ஆனால் எங்கள் கிரஹத்தில் கார்பன் டை ஆக்சைட்  மிகவும் அதிகம். அதனால் நாங்கள் எங்களை செயற்கையாய் மாற்றிக் கொண்டதே இந்த பச்சை நிற உடம்பு. எங்கள் தோல் தாவரங்கள் போல் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு அதிலிருந்து எங்களுக்கு வேண்டிய ஆக்சிஜனை  உற்பத்தி செய்து விடும். எங்கள் நாசிகளை  அதிகமாய் நாங்கள் பயன்படுத்துவது கிடையாது. உங்கள் கிரஹத்தில் ஆக்சிஜன் நிறைய இருப்பதால் நீங்கள் இயல்பாக நாசிகளில் சுவாசிக்கிறீர்கள்.  எங்கள் கிரஹத்தில் கதிர் வீச்சு அதிகம், அதனால் எங்கள் தோல் அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் கடினமாய் இருக்கிறது. நீங்கள் எங்கள் கிரஹத்தில் மாற்று உடை அணிய வேண்டி இருக்கும். உங்களுக்கு தரை இறங்கியதும் அதை தருகிறோம்."

எனக்கு எல்லாம் ஒரு கதை போல் இருந்தது. அவன் சொன்ன ஒற்றுமைகள் எனக்கு கொஞ்சம் பயமாகவும் இருந்தது. இப்போது என்னை வைத்து இவர்கள் என்ன செய்ய போகிறார்கள், இத்தனை நாளாய் என்ன செய்தார்கள் என்ற அச்சம் கண்களில் தெரிந்தது. நான் கேட்டு விட எத்தனித்தேன். 'இப்போது உங்களுக்கு நான் எதற்கு?' என்று தடுமாறிக் கொண்டே கேட்டு விட்டேன். அந்த பூதப் பாண்டியன் பொறுமையாய் பேசத் தொடங்கினான். " நண்பரே, நமக்குள் நிறைய ஒற்றுமை உண்டென்பதை சொன்னேனே. அதுதான் காரணம். உங்கள் உடலை சோதனை செய்து நாங்கள் உங்கள் கிரஹத்தில் வாழ முடியுமா என்று ஆராய்ச்சி செய்கிறோம்". எனக்கு தூக்கி வாரி போட்டது. இவர்கள் நமது கிரஹத்தை எடுத்துக் கொள்ள போகும் முயற்சி இது. அவன் தொடர்ந்தான். "நீங்கள் அஞ்ச வேண்டாம். உண்மையில் நாங்கள் உங்களோடு சேர்ந்தே வாழ முடியுமா என்பதே ஆராய்ந்துக் கொண்டு இருக்கிறோம். உங்கள் உயிரணுவோடு எங்கள் உயிரணுவை சேர்க்க கூட பார்த்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் கிரஹத்தில் எதையும் அழிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை." . இப்போது உண்மையிலேயே மிகவும் கனிவாய் பேசினான் அவன். "ஒரு விஷயம் சொன்னால் உங்களுக்கு இன்னும் தெளிவாய் புரியும். உங்கள் இனத்தோடு எங்களுக்கு இருக்கும் ஒற்றுமையை அறிந்ததில், நாங்கள் எங்கள் பழைய கோப்புகளை ஆராய்ந்தோம். சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் எங்கள் இனம் இன்று நீங்கள் இருப்பது போலவே இருந்திருக்கிறோம். உலகத்தை தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வருவதாக நினைத்த எங்கள் முன்னோர்கள் இயற்க்கைக்கு புறம்பாய் சென்றதில் கிட்டத்தட்ட அழிந்து போனார்கள். எஞ்சிய சிலர் அறிவின் துணை கொண்டு எப்படியோ வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எங்கள் உலகம் இன்னும் சில நூறு வருடங்களுக்கு மேல் உயிர் வாழ ஒத்துழைக்காது. அதனால் தான் புதிய வீடு தேடி உங்களை ஆராய்ந்து வருகிறோம். எங்கள் இணம் கற்றுக் கொண்ட  பாடங்கள் இனி எங்களை  இயற்க்கைக்கு எதிராய் எதையும் அழிக்க விடாது". அந்த உருவம் கொஞ்சம் உருக்கமாய் நடந்து ஜன்னலின் விசையை கீழே அழுத்தியது. ஜன்னல் வழியாக கொஞ்சம் தூரத்தில் சிகப்பு நிறத்தில் ஒரு கிரஹம் தெரிந்தது. "நண்பரே, அதோ தெரிகிறதே, அதுதான் எங்கள் கிரஹம். பூமி என்று அதனை அழைப்போம். ஹோமோ சேப்பியன்ஸ் என்று அழைக்க பட்ட இணத்தின் தொடர்ச்சி நாங்கள், க்லோரோ  சேப்பியன்ஸ்".

சிகப்பு பூமி சத்தமின்றி எங்களை வரவேற்றுக் கொண்டிருந்தது.

                                                                                                                                          முற்றும்

திங்கள், 9 செப்டம்பர், 2013

கூர் பார்வையாள்

நாவின்றி,
பாவின்றி,
மொழியின்றி
ஒலியின்றி,
பாடல் கேட்டேன்
உன் பார்வையிலே

நீ,
வெட்டிப் போட்ட நகத்தின் பிறைகள்,
கட்டி எறிந்த சாக்லேட் உறைகள்,
எட்டிக் கிழித்த இலையின் குறைகள்,
இத்தனை பொறுக்கியவர் பலரின் நடுவில்,
உன் பார்வை மட்டும் சேகரிப்பவன் நான்.

நிகரென்று நின்றாலே,
புவி ஈர்ப்பும் தோற்று போகுமே
தவிப்போடு நிலவும் தேயுமே,
கவி தேடி மொழியும் ஏங்குமே,
அவிக்கின்ற கதிரும் காயுமே,

மறுப்போடு தவிர்த்தாலும்,
வெறுப்போடு எரித்தாலும்,
உயிர் தைக்கும் வித்தையாலே,
என் உளம் தொட்ட பார்வையாளே !!!

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...