சனி, 31 ஆகஸ்ட், 2013

V2 (Part1 / பாகம் ஒன்று)

'இன்று எப்படியும் கண்டஹா காடு வரை ஓடி விட வேண்டும்' . என்னால் கண்டிப்பாக ஓட முடியும்.' ஒவ்வொரு நாளும் இப்படித்தான் தொடங்குகிறேன்.  தினமும் முண்ணேற்றம் தெரிகிறது.  ஆனால் இன்னும் நான் ஓட நினைத்த தூரம் ஓடவில்லை.  நிச்சயம் ரே யால் அவ்வளவு தூரம் ஓட முடியாது. நான் அவனை விட அதிக அதிக தூரம் ஓடிக் காட்டினால் அவள், என் மனதைக் கொள்ளைக் கொண்ட அவள் எனக்குக் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகும். எந்த வாய்ப்பையும் தவற விடுபவன் நானில்லை. 'பியா, கிளம்பு ஓடலாம்.' பியா எனது செல்லப்பிராணி மட்டும் அல்ல, என்னுடைய குழந்தை மாதிரி, என்னுடைய நல்ல தோழி கூட. நான் தினமும் அதிக நேரம் மனம் விட்டுப் பேசுவது அவளோடு தான். இருவரும் ஓட தயாரானோம். பியா என்னை விட வேகமாகவும் தூரமாகவும் ஓட முடிந்தால் கூட, என்றும் என்னைத் தாண்டி ஓடியது இல்லை. ஓடத் தொடங்கினோம். எண்ணங்கள் எங்கெங்கோ பறக்க தொடங்கியது. அவளை சேர்வது எப்படி என்ற எண்ணம் பல யோசனைகளை தந்தது.  அனால் முதல் படி, கண்டஹா தான். அந்த காடு வரை ஓடுவது தான் அவளோடு எனக்கான தூரத்தை குறைக்க போகும் முதல் அடி. அதற்கடுத்ததை அப்புறம் பார்க்கலாம்.

இப்போது நான் கண்டஹா வரை ஓடுவது யாருக்கும் தெரியாது. நண்பர்களுக்கு தெரிந்தால் கிண்டல் செய்வார்கள். வீட்டில் தெரிந்தால் அவ்வளவுதான். அவர்கள் ஏன் என்று கேட்பது எனக்கு பிரச்சனை இல்லை. அனால் கண்டஹா பற்றிய அவர்களின் பயத்தை என்னால் வெல்ல முடியாது. அங்கு ஏதோ அதீத சக்தி கொண்ட மிருகங்கள் இருப்பதாக நிறைய பேர் நம்புகிறார்கள். அவைகள் ஆபத்து நிறைந்தன எனவும், அங்கு யாரும் செல்ல கூடாது எனவும் ஊரில் பலரும் நம்புகிறார்கள். ஒரு சிலர் அங்கு வேற்று கிரஹ மனிதர்கள் வந்து போவதாக கூட சொல்கிறார்கள். ஏன், எனது தந்தை கூட அந்த பக்கம் விசித்திர பறக்கும் எந்திரங்களை பார்த்திருப்பதாக கதை சொல்லி இருக்கிறார். அது எதையும் நான் நம்பியது இல்லை. மற்றவரை பயமுடுத்துவதில் சிலருக்கு ஒரு சந்தோஷம். நாளடைவில் அந்த சந்தோஷம் குறைந்து போனாலும், பயம் மட்டும் சமூகத்தில் ஒட்டிக் கொள்கிறது. அதை பற்றியெல்லாம் கவலை பட இது நேரம் இல்லை. அவள் எனக்கு கிடைக்க வேண்டும், அது மட்டும் தான் இப்போது என்னுடைய இலக்கு. அதோ, அங்கு தெரியும் அந்த பெரிய மரம் தான் என்னுடைய இப்போதைய குறிக்கோள். இன்று என் எல்லையை தொட்டு விடுவேன் போலிருக்கிறது. அவள் என் அருகில் வந்து விட்டது போல் ஒரு உணர்ச்சி. எண்ணங்கள் என் மூச்சிரைப்பை விட வேகமாய் ஓடின. இதோ, தொட்டு விட்டேன் எனது முதல் வெற்றியை. உடல் முழுதும் வலி, அதை விட அதிகமாய் மகிழ்ச்சி. என் எண்ணம் ஈடேற போகிறது. குதித்தேன், கத்தினேன். எல்லா பக்கமும் பார்த்து பலமாய் சிரித்தேன்.

 பியாவும் என்னோடு இங்கும் அங்கும் குதித்துக் கொண்டிருந்தாள் . அவளை அள்ளி அணைக்க ஆவல் கொண்டு அருகில் சென்றேன். என்ன ஆனதோ தெரியவில்லை, பியா திடீரென்று எனக்கெதிராக திரும்பி அந்த புதருக்கு அப்பால் ஓடத் தொடங்கினாள் . என்ன ஆனது இவளுக்கு!! புரியாமல் அவளைப் பிடிக்க நானும் பின்னால் ஓடினேன். உடல் ஒத்துழைக்கவில்லை. ஆனால் பியா இல்லாமல் நான் எப்படி திரும்ப போவது? முடியாதென்றாலும் அவளை தொடர முயற்சி செய்தேன். வேகமாய் ஓட நினைத்த போது காலில் ஏதோ இடறியது. கீழே விழுந்து உருளத் தொடங்கினேன். தலையை ஏதோ கனமான ஒன்று உரசிச் சென்றது, உடலின் எல்லா பக்கமும் ஊசி துளைப்பது போல் உணர முடிந்தது. பியாவின் குரல் மெல்லமாய் கேட்டது . ஆனால் எதுவும் உண்மை போல் இல்லை. கண்கள் சொருகியது, எல்லாம் மறைவது போல் ஒரு மயக்கம். உடல் இப்போது அசையவில்லை, நான் உருள்வது நின்றிருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைந்தது, ஒவ்வொரு உணர்ச்சியாக மறைந்து கொண்டே போனது. கண்கள் முழுதுமாய் மூடினேன். அமைதியாய் இருந்தது. அவளுடைய முகம் ஒரு முறை நினைவில் வந்து போனது. அழகாய் இருக்கிறாள். அமைதி, மயான அமைதி...

                                                                                                                    பாகம் இரண்டு

சனி, 24 ஆகஸ்ட், 2013

என் குழந்தை ஒரு மேதாவி (My Child is a Prodigy)


அறிவென்பது வரமா சாபமா?
'எதை நோக்கி ஓடுகிறேன்?', 'நான் மகிழ்ச்சியாய் (அமைதியாய்) இருப்பது எப்போது?', 'எதில் நான் உண்மையில் நிறைவடைகிறேன்?' - இப்படி நாம் கேட்க மறந்த கேள்விகளில் ஒன்று தான் 'அறிவென்பது வரமா சாபமா?' என்பதும்  . எது அறிவென்பதில் கூட நம்மில் பலருக்கு சரியான விளக்கம் தெரியாதென்பதும் உண்மை. அனால் நம் குழந்தைகளை அறிவாளி ஆக்க வேண்டும் என்ற முனைப்பை நான் பலரிடமும் காண்கின்றேன், முக்கியமாக நடுத்தர வர்க்க மக்களிடம். நாம் பயணத்தின் சுகம் மறந்து இலக்கை தேடி ஓடுபவர்கள். பல முறை நமது இலக்குகள் தேவைக்கு அப்பாலும், பயணத்தையே சிதைப்பதுமாகவே இருப்பதுதான் வேதனை. எளிமையாய் சொல்ல வேண்டும் என்றால், 'பையனுக்கு குளிர் அதிகமானா காய்ச்சல் வரும், மலைப் பாதையில் பயணம் செய்தால் வாந்தி வரும். ஆனா, கோடை காலத்துல அவன் மலைப் பிரதேசம் போனாத் தான ஜாலி யா இருக்க முடியும். அவன் சந்தோசமா இருக்கணும்னு தான் போறோம் ' - இதுதான் நடுத்தர வர்க்கத்தில் பலரின் வாழ்கை. நமது குழந்தைகளின் கண்ணுக்கு தெரியாத ஜுரத்தையும் தலை சுற்றலையும் பலர் கண்டு கொள்வதே இல்லை.

அறிவென்பது இங்கே குருடர்களின் யானை போன்றது. அதனை நாம் சரியாக புரிந்து கொண்டது குறைவு. 'ஆறு வயது குழந்தை அத்தனை நாடுகளின் தலை நகரங்களையும் அழகாய் சொல்கிறது. என்ன அறிவு! ' என்று எவனாவது சொல்லி வியந்தால் நம் குழந்தைக்கு பிடிக்கும் சனி . ' இந்த வயசுலேயே என்னவா பாட்டு பாடுறா! என்னமா சுலோகம் எல்லாம்  சொல்றா!' அப்படின்னு எந்த குழந்தை பற்றி கேட்டாலும், இது பற்றி எதுவும் அறியாமல் மண்ணை அள்ளி தலையில் போட்டு விளையாடி கொண்டிருக்கும் நமது குழந்தையை பார்த்தால் வருமே ஒரு கோபம்! ஐந்து வயது குழந்தை மண்ணில் விளயாடமால் மார்ஸ்  க்கு ராக்கெட்டா அனுப்பும். மேதாவி என்ற பட்டதை வாங்க நூலும் வாலும் அறுபட்டு சுவற்றில் ஒட்டிக் கொண்டிருக்கும் பட்டங்கள் தான் நம் பிள்ளைகள்.

ஒரு வயதாகியும் நமது குழந்தை நடக்கா விட்டால் நமக்கு பகீர் என்று இருக்கிறது. அதுவும் பக்கத்து வீட்டு குழந்தை பதினோராவது மாதத்தில் நடந்து விட்டால் நமது குழந்தை பாடு பாவமாகிவிடும். இரண்டு மாதங்கள் கழித்து நடப்பதால் வாழ்க்கை மாறி விடாது என்பது கூட நாம் உணர்வதில்லை. என் நாலரை வயது மகள் வாரத்திற்கு நான்கு வகுப்புகள் போகிறாள். நடனம், ஸ்கேடிங், ஆங்கிலம், சைனீஸ் கற்றுக் கொள்ள. அவள் அறிவையும் வளர்ச்சியையும் கொல்ல முயற்சி செய்யும் குற்றத்திற்காக என்னையும் என் மனைவியையும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறைக்குள் அடைக்கலாம். வாரத்திற்கு அவளுக்கென்று இருப்பது மூன்று மாலைப்  பொழுதுகள் மட்டுமே ( ஸ்கேடிங் அவளுக்கு பிடிக்கும், அதனால் நான்கு மாலைகள் என்று வைத்துக் கொள்ளலாம்). மாலை முழுதும் விளையாட்டு என்று சொன்ன பாரதியின் பெயரை வைத்துக் கொண்டு நல்ல மாலை பொழுதுகளை எல்லாம் தொலைத்துக் கொண்டிருக்கிறாள் என் மகள். இரண்டு வயதில் விளையாட ஆசைப் பட்டு 5 மணிக்கெல்லாம் எழுந்து விடும் அவள், பள்ளி போகும் கடமையினால் எட்டு மணிக்கும் தூங்கி வழிகிறாள். அழகிய சிலை வடிப்பதாய் நினைத்துக் கொண்டு அவளது சிறகுகளை நான் செதுக்கிக்  கொண்டிருக்கிறேன். அவளது பிள்ளை பருவத்தை தங்கக் கழுவிலேற்றிக் கொண்டிருக்கின்றேன்.

எவனின் எதிர்காலமும் ஐந்து வயதிலோ பத்து வயதிலோ முடிவாவது இல்லை. வாழ்கை தினமும் புதிய பாடம் சொல்லித் தருகிறது. நாமோ கருவில் இருக்கும் குழந்தைக்காக பள்ளிகளின் வாசல்களில் நிற்கிறோம். மரத்திற்க்கு மேலுள்ள காக்கை குருவி எல்லாம், ' அங்கே பார் வேடிக்கை மனிதர்களை ' என்று நம்மை காட்டி அதன் குழந்தைகளுக்கு சோறூட்டிக்  கொண்டிருக்கும். நாமெல்லாம் முப்பது வருட வாழ்க்கைக்குப் பிறகும், எந்த காலத்தில் எதை உண்ணலாம், எப்படி உடுத்தலாம், எவ்வளவு உறங்கலாம் என்ற வாழ்வியல் சார்ந்த அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள். செய்யும் தொழிலாவது முழுமையாய் தெரியுமா என்றால், பட்டியிலே அடைப்பட்டிருக்கும் ஆடு மாடு போல் நமது வேலையை தவிர வேறெதும் உருப்படியாய் தெரியாது. ஆனால் குழந்தைகள் மட்டும் தேவையே இல்லை என்றாலும் எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதுவும் கற்று தரக் கூடாது என்பதில்லை என் வாதம். நாம் கற்று தருவது கொடிகள் படர கொம்புகள் நடுவது போல் அவர்கள் இயல்பு சார்ந்து இருக்க வேண்டும். ரோஜாச் செடியை காட்டில் நட்டு மரம் போல் வளர சொல்வதும், ஆலமரத்தை தொட்டியில் நட்டு பூக்கள் கேட்பதுமாய் இருக்க கூடாது. கல்வி என்பது குழந்தைகளுக்கு பாராமாகி விடக் கூடாது. ஆங்கிலத்தில் RAT RACE என்று சொல்லுவார்கள். இப்போது உள்ள  குழந்தைகள் பாவம் இரண்டு மூன்று வயதிலேயே இதில் தொலைந்து போகிறார்கள்.  பால்யம் நமக்கு சரியாய் ஞாபகம் இருப்பது இல்லை, அதனால் தான் கிறுக்கல்களில் இருக்கும் ஓவியங்கள் நமக்கு தெரிவதில்லை.

எனக்கு சிறு வயதில் நடனம், பாட்டு கற்றுக் கொள்ள ஆசை இருந்தது. நடுத்தர வர்க்க வரையரைகள் நான் ஹிந்தி கற்றுக் கொள்வதை தான் முன் நிறுத்தின. நன்றாக தான் படித்தேன். ஆனால் ஹிந்தியே படிக்காத என் அண்ணன் துபாய் க்கு சென்ற பிறகு சரளமாய் ஹிந்தியில் பேசுவதும் நான் கொஞ்சம் திணறுவதும் எங்கள் வாழ்க்கை கொடுத்த மாற்றங்கள். நாம் யார் என்று நாமே அறியும் பருவம் எல்லோருக்கும் வரும். அதற்குள் குழந்தைகளின் அடையாளங்களை நாம் மாற்றி விடக் கூடாது. ஐன்ஸ்டீன் ஆகட்டும், பில் கேட்ஸ் ஆகட்டும், நாராயண மூர்த்தி ஆகட்டும், யாரும் அற்புத மனிதர்கள் கிடையாது.  தங்களுக்கு பிடித்ததை செய்ய துணிந்த, செய்ய முடிந்த மக்கள். ஐன்ஸ்டீன் தனது தத்துவங்களை நிரூபிக்க கணித சமன்பாடுகள் எழுத முழுமையாய் தெரியாமல், பிறகே கற்றுக் கொண்டார், ஐந்து வயதிலோ பத்து வயதிலோ அல்ல. தான் என்ன ஆக வேண்டும் என்று சரியான பருவத்தில் முடிவு செய்து, அதையே செய்ய விளைபவர்கள் சந்தோசமாய் இருக்கிறார்கள். மற்றவர்கள் சூடு போட்டு கொண்டு புலியாய் ஆகப்  பார்க்கிறார்கள். 

எல்லா குழந்தைகளும் மேதாவிகள் தான், வேறு வேறு விதத்தில். ஒரு சிலர் இரண்டு வயதில் அதை வெளிப்படுத்தலாம், ஒரு சிலர் இருபது வயதில் வெளிப்படுத்தலாம். (வாழ்கையை சரியாய் அணுகாததால் நம்மில் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதே இல்லை எனபதும் சோகம்). பத்தாவது மாதம் நடந்தாலும் பதினைந்தாவது மாதம் நடந்தாலும் குழந்தைகள் இரண்டு கால்களில் தான் நடக்கின்றன. அவர்களை சீக்கிரம் எழுந்து நடக்க வைப்பதாய் நினைத்துக் கொண்டு கால்களை முறித்து விடக்  கூடாது. ஒரு வேலை ஒரு குழந்தை எந்த மேதாவித்தனமும் காட்டவில்லை என்றால் கூட பரவாயில்லை. அவர்களுக்கு சந்தோசமாய் வாழ சொல்லிக் கொடுங்கள், அதை விட சிறந்த அறிவு வேறெதும் இல்லை.  மரத்திற்கு மரம் தாவும் திறன் கொண்ட குரங்கை கூட்டி வந்து குட்டிக் கரணமும் , தோப்புக் கரணமும் போட சொல்லிக் குடுத்து 'ஆடுடா ராமா, ஆடுடா ராமா ' என்பதைப் போல் பிள்ளைங்களை ஆக்கி விட வேண்டாம். அவர்களின் இயல்பான குழந்தைப் பருவம் பின் நாளில் நல்ல மனிதர்களாய் வாழ அவர்களுக்கு உதவும். Let them have a normal childhood. They deserve it. 


புதன், 7 ஆகஸ்ட், 2013

உளறல் - மனம் போன போக்கிலே...


கடல் போல் வானம், எதன் மீதோ மோகம்,
உயிர் தேடும் வேகம், அடங்காத மனதின் தாகம்.
தொடாமல் தள்ளிப் போ, தனிமைக் குடத்தில் நீரை நிரப்பாதே,
எத்தனை தூரம் ஓடினாலும் காலடி பூமியும் கூடவே ஓடுதே!

தொலைந்தது, தேடினேன், அதிசயம்! கண்டுபிடித்தேன், தொலைந்தது நான்.
கூச்சல் சற்று குறையுங்களே...
வானம் இங்கு வெறித்து பார்ப்பது யாரை?
கரையிலே கிடக்கின்றேன், கடல் சேர்வது எப்போது?
கடல் சேர்ந்தாலும் நான் நிலைப்பது எப்போது?

உயரம் பறக்கும் பயணம். இது உலகமே மறக்கும் பயணம்!
நான் ஒன்றும் தேவதை இல்லை. 
எங்கு தேடினாலும் கிடைக்கவே இல்லை நான்.
கொஞ்சம் இரைச்சலை குறையுங்களே..

இன்னும் எத்தனை தூரம்? இதோ, கண்களோரம் கண்ணீர்!!
மரணம் வரை நானில்லை, மரித்த பின்பு நானே இல்லை. எங்கு கிடைப்பேன் நான்??
இந்த உடை களைய வேண்டும். பாரம் கூடிக் கொண்டே போகிறது.
சாத்தானே! தெய்வம் போல் நடிக்காதே..
தெய்வமே! நீதானே சாத்தான்..

உயிரின் கோடு தொடும் வரை மரணம் எப்படி விளங்கும்!
கொஞ்சமாய் நிழல் வேண்டும். இல்லை இல்லை, கொஞ்சம் தூங்க வேண்டும்.
பயணம் தந்த களைப்பிது!!
அட, பயணம் தொடரட்டும், இளைப்பாறினால் அசதி கூடும்!!
இரைச்சல் குறைகிறதே....

நான் ஒன்றும் பிசாசு இல்லை.
எதுவெல்லாம் இல்லை என்று தெரிந்தாலும், எது எது என்று எப்படி அறிவேன்?
ஆணவம் எப்படி வந்தது?
பசிதானே உயிரை சுமக்கிறது.

இலக்கே இல்லாத வானம்! அட, இது இல்லவே இல்லாத வானம்.
நீர் போல் தான் நானும். அழிவுதான் என் அழகு.
உயிர் என்பது எத்தனை போதை !!
இன்னும் தேடுகிறேன், கிடைக்கவில்லை.

இல்லாத வானத்தில் மேகங்கள் மிதக்கின்றன!
எத்தனை கூட்டினாலும் கணக்கு விளங்கவே இல்லை.
முகத்தை மூடியே எப்படி வாழ்வது!!
இதயம் பிழக்காதீர்கள். உள்ளே ஒரே கூச்சல்!!



வல்லமை தாராயோ


நத்தையாய் நான்  பிறந்திருக்கலாம்,
கூட்டில் நாணும் தத்தையாய் கூட பிறந்திருக்கலாம்,
அறிவொன்று அதிகம் கொண்டும் சொத்தையாய் போய் பிறந்தேனே !

பணமும் படையும் கைகள் கோற்றிட ,
தினமும் இங்கே தர்மம் தோற்றிட,
வேசி போல் நானும் வெட்கத்தை விற்றேனே !

தேர்தல் வரும் பொது தெய்வமாகவும் ,
தேவை வரும் பொது தெருப் பினமாகவும்,
உயிர் தொலைத்து நானும் எத்தனை நாள் வாழ்வேனோ!

தந்தை தன் விந்தோடு வீரத்தை சேர்த்திருக்கலாம்,
தாய் தன் பாலோடு தன்மானம் ஊட்டி இருக்கலாம்.
இரண்டும் இல்லா வெறுமை நான், கருவோடேன்னை கலைத்திருக்கலாம்.

அ ஃறினை போல் வளர்கின்றேன்,
அம்மணமாய் நான் உணர்கின்றேன்,
அண்டம் தாங்கும் ஆண்டவனே, ஆண்மை வரங்கொடு துதிக்கின்றேன்.. 

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...