சனி, 24 ஆகஸ்ட், 2013

என் குழந்தை ஒரு மேதாவி (My Child is a Prodigy)


அறிவென்பது வரமா சாபமா?
'எதை நோக்கி ஓடுகிறேன்?', 'நான் மகிழ்ச்சியாய் (அமைதியாய்) இருப்பது எப்போது?', 'எதில் நான் உண்மையில் நிறைவடைகிறேன்?' - இப்படி நாம் கேட்க மறந்த கேள்விகளில் ஒன்று தான் 'அறிவென்பது வரமா சாபமா?' என்பதும்  . எது அறிவென்பதில் கூட நம்மில் பலருக்கு சரியான விளக்கம் தெரியாதென்பதும் உண்மை. அனால் நம் குழந்தைகளை அறிவாளி ஆக்க வேண்டும் என்ற முனைப்பை நான் பலரிடமும் காண்கின்றேன், முக்கியமாக நடுத்தர வர்க்க மக்களிடம். நாம் பயணத்தின் சுகம் மறந்து இலக்கை தேடி ஓடுபவர்கள். பல முறை நமது இலக்குகள் தேவைக்கு அப்பாலும், பயணத்தையே சிதைப்பதுமாகவே இருப்பதுதான் வேதனை. எளிமையாய் சொல்ல வேண்டும் என்றால், 'பையனுக்கு குளிர் அதிகமானா காய்ச்சல் வரும், மலைப் பாதையில் பயணம் செய்தால் வாந்தி வரும். ஆனா, கோடை காலத்துல அவன் மலைப் பிரதேசம் போனாத் தான ஜாலி யா இருக்க முடியும். அவன் சந்தோசமா இருக்கணும்னு தான் போறோம் ' - இதுதான் நடுத்தர வர்க்கத்தில் பலரின் வாழ்கை. நமது குழந்தைகளின் கண்ணுக்கு தெரியாத ஜுரத்தையும் தலை சுற்றலையும் பலர் கண்டு கொள்வதே இல்லை.

அறிவென்பது இங்கே குருடர்களின் யானை போன்றது. அதனை நாம் சரியாக புரிந்து கொண்டது குறைவு. 'ஆறு வயது குழந்தை அத்தனை நாடுகளின் தலை நகரங்களையும் அழகாய் சொல்கிறது. என்ன அறிவு! ' என்று எவனாவது சொல்லி வியந்தால் நம் குழந்தைக்கு பிடிக்கும் சனி . ' இந்த வயசுலேயே என்னவா பாட்டு பாடுறா! என்னமா சுலோகம் எல்லாம்  சொல்றா!' அப்படின்னு எந்த குழந்தை பற்றி கேட்டாலும், இது பற்றி எதுவும் அறியாமல் மண்ணை அள்ளி தலையில் போட்டு விளையாடி கொண்டிருக்கும் நமது குழந்தையை பார்த்தால் வருமே ஒரு கோபம்! ஐந்து வயது குழந்தை மண்ணில் விளயாடமால் மார்ஸ்  க்கு ராக்கெட்டா அனுப்பும். மேதாவி என்ற பட்டதை வாங்க நூலும் வாலும் அறுபட்டு சுவற்றில் ஒட்டிக் கொண்டிருக்கும் பட்டங்கள் தான் நம் பிள்ளைகள்.

ஒரு வயதாகியும் நமது குழந்தை நடக்கா விட்டால் நமக்கு பகீர் என்று இருக்கிறது. அதுவும் பக்கத்து வீட்டு குழந்தை பதினோராவது மாதத்தில் நடந்து விட்டால் நமது குழந்தை பாடு பாவமாகிவிடும். இரண்டு மாதங்கள் கழித்து நடப்பதால் வாழ்க்கை மாறி விடாது என்பது கூட நாம் உணர்வதில்லை. என் நாலரை வயது மகள் வாரத்திற்கு நான்கு வகுப்புகள் போகிறாள். நடனம், ஸ்கேடிங், ஆங்கிலம், சைனீஸ் கற்றுக் கொள்ள. அவள் அறிவையும் வளர்ச்சியையும் கொல்ல முயற்சி செய்யும் குற்றத்திற்காக என்னையும் என் மனைவியையும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறைக்குள் அடைக்கலாம். வாரத்திற்கு அவளுக்கென்று இருப்பது மூன்று மாலைப்  பொழுதுகள் மட்டுமே ( ஸ்கேடிங் அவளுக்கு பிடிக்கும், அதனால் நான்கு மாலைகள் என்று வைத்துக் கொள்ளலாம்). மாலை முழுதும் விளையாட்டு என்று சொன்ன பாரதியின் பெயரை வைத்துக் கொண்டு நல்ல மாலை பொழுதுகளை எல்லாம் தொலைத்துக் கொண்டிருக்கிறாள் என் மகள். இரண்டு வயதில் விளையாட ஆசைப் பட்டு 5 மணிக்கெல்லாம் எழுந்து விடும் அவள், பள்ளி போகும் கடமையினால் எட்டு மணிக்கும் தூங்கி வழிகிறாள். அழகிய சிலை வடிப்பதாய் நினைத்துக் கொண்டு அவளது சிறகுகளை நான் செதுக்கிக்  கொண்டிருக்கிறேன். அவளது பிள்ளை பருவத்தை தங்கக் கழுவிலேற்றிக் கொண்டிருக்கின்றேன்.

எவனின் எதிர்காலமும் ஐந்து வயதிலோ பத்து வயதிலோ முடிவாவது இல்லை. வாழ்கை தினமும் புதிய பாடம் சொல்லித் தருகிறது. நாமோ கருவில் இருக்கும் குழந்தைக்காக பள்ளிகளின் வாசல்களில் நிற்கிறோம். மரத்திற்க்கு மேலுள்ள காக்கை குருவி எல்லாம், ' அங்கே பார் வேடிக்கை மனிதர்களை ' என்று நம்மை காட்டி அதன் குழந்தைகளுக்கு சோறூட்டிக்  கொண்டிருக்கும். நாமெல்லாம் முப்பது வருட வாழ்க்கைக்குப் பிறகும், எந்த காலத்தில் எதை உண்ணலாம், எப்படி உடுத்தலாம், எவ்வளவு உறங்கலாம் என்ற வாழ்வியல் சார்ந்த அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள். செய்யும் தொழிலாவது முழுமையாய் தெரியுமா என்றால், பட்டியிலே அடைப்பட்டிருக்கும் ஆடு மாடு போல் நமது வேலையை தவிர வேறெதும் உருப்படியாய் தெரியாது. ஆனால் குழந்தைகள் மட்டும் தேவையே இல்லை என்றாலும் எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதுவும் கற்று தரக் கூடாது என்பதில்லை என் வாதம். நாம் கற்று தருவது கொடிகள் படர கொம்புகள் நடுவது போல் அவர்கள் இயல்பு சார்ந்து இருக்க வேண்டும். ரோஜாச் செடியை காட்டில் நட்டு மரம் போல் வளர சொல்வதும், ஆலமரத்தை தொட்டியில் நட்டு பூக்கள் கேட்பதுமாய் இருக்க கூடாது. கல்வி என்பது குழந்தைகளுக்கு பாராமாகி விடக் கூடாது. ஆங்கிலத்தில் RAT RACE என்று சொல்லுவார்கள். இப்போது உள்ள  குழந்தைகள் பாவம் இரண்டு மூன்று வயதிலேயே இதில் தொலைந்து போகிறார்கள்.  பால்யம் நமக்கு சரியாய் ஞாபகம் இருப்பது இல்லை, அதனால் தான் கிறுக்கல்களில் இருக்கும் ஓவியங்கள் நமக்கு தெரிவதில்லை.

எனக்கு சிறு வயதில் நடனம், பாட்டு கற்றுக் கொள்ள ஆசை இருந்தது. நடுத்தர வர்க்க வரையரைகள் நான் ஹிந்தி கற்றுக் கொள்வதை தான் முன் நிறுத்தின. நன்றாக தான் படித்தேன். ஆனால் ஹிந்தியே படிக்காத என் அண்ணன் துபாய் க்கு சென்ற பிறகு சரளமாய் ஹிந்தியில் பேசுவதும் நான் கொஞ்சம் திணறுவதும் எங்கள் வாழ்க்கை கொடுத்த மாற்றங்கள். நாம் யார் என்று நாமே அறியும் பருவம் எல்லோருக்கும் வரும். அதற்குள் குழந்தைகளின் அடையாளங்களை நாம் மாற்றி விடக் கூடாது. ஐன்ஸ்டீன் ஆகட்டும், பில் கேட்ஸ் ஆகட்டும், நாராயண மூர்த்தி ஆகட்டும், யாரும் அற்புத மனிதர்கள் கிடையாது.  தங்களுக்கு பிடித்ததை செய்ய துணிந்த, செய்ய முடிந்த மக்கள். ஐன்ஸ்டீன் தனது தத்துவங்களை நிரூபிக்க கணித சமன்பாடுகள் எழுத முழுமையாய் தெரியாமல், பிறகே கற்றுக் கொண்டார், ஐந்து வயதிலோ பத்து வயதிலோ அல்ல. தான் என்ன ஆக வேண்டும் என்று சரியான பருவத்தில் முடிவு செய்து, அதையே செய்ய விளைபவர்கள் சந்தோசமாய் இருக்கிறார்கள். மற்றவர்கள் சூடு போட்டு கொண்டு புலியாய் ஆகப்  பார்க்கிறார்கள். 

எல்லா குழந்தைகளும் மேதாவிகள் தான், வேறு வேறு விதத்தில். ஒரு சிலர் இரண்டு வயதில் அதை வெளிப்படுத்தலாம், ஒரு சிலர் இருபது வயதில் வெளிப்படுத்தலாம். (வாழ்கையை சரியாய் அணுகாததால் நம்மில் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதே இல்லை எனபதும் சோகம்). பத்தாவது மாதம் நடந்தாலும் பதினைந்தாவது மாதம் நடந்தாலும் குழந்தைகள் இரண்டு கால்களில் தான் நடக்கின்றன. அவர்களை சீக்கிரம் எழுந்து நடக்க வைப்பதாய் நினைத்துக் கொண்டு கால்களை முறித்து விடக்  கூடாது. ஒரு வேலை ஒரு குழந்தை எந்த மேதாவித்தனமும் காட்டவில்லை என்றால் கூட பரவாயில்லை. அவர்களுக்கு சந்தோசமாய் வாழ சொல்லிக் கொடுங்கள், அதை விட சிறந்த அறிவு வேறெதும் இல்லை.  மரத்திற்கு மரம் தாவும் திறன் கொண்ட குரங்கை கூட்டி வந்து குட்டிக் கரணமும் , தோப்புக் கரணமும் போட சொல்லிக் குடுத்து 'ஆடுடா ராமா, ஆடுடா ராமா ' என்பதைப் போல் பிள்ளைங்களை ஆக்கி விட வேண்டாம். அவர்களின் இயல்பான குழந்தைப் பருவம் பின் நாளில் நல்ல மனிதர்களாய் வாழ அவர்களுக்கு உதவும். Let them have a normal childhood. They deserve it. 


2 கருத்துகள்:

Mahaashok சொன்னது…

Super! Nethiyadi!! Korangu eg Sema supernga..na exp paninadhey neinga eluthu vadivama koduthuta madhiri irukkunga.
.indha madhiri kids skills se compare panravanga ( padicha muttala/nagariga komaligala) partha enakku sirippu /sila samayam kovam eruchal varudhunga...
kolandhaya markku vangra machine madhiri,prgm panni vecha robo madhiri Nalla padikanum,padanum,aadanum,pesanum nu avian gala torture panni identity a kolram...
Ippadi oru society la valromnu thalaila aduchikren...Vera ennanga panradhu

Parthiban சொன்னது…

It just needs some clarity Maha... but unfortunately most of us are confused with misplaced priorities :(

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...