புதன், 7 ஆகஸ்ட், 2013

உளறல் - மனம் போன போக்கிலே...


கடல் போல் வானம், எதன் மீதோ மோகம்,
உயிர் தேடும் வேகம், அடங்காத மனதின் தாகம்.
தொடாமல் தள்ளிப் போ, தனிமைக் குடத்தில் நீரை நிரப்பாதே,
எத்தனை தூரம் ஓடினாலும் காலடி பூமியும் கூடவே ஓடுதே!

தொலைந்தது, தேடினேன், அதிசயம்! கண்டுபிடித்தேன், தொலைந்தது நான்.
கூச்சல் சற்று குறையுங்களே...
வானம் இங்கு வெறித்து பார்ப்பது யாரை?
கரையிலே கிடக்கின்றேன், கடல் சேர்வது எப்போது?
கடல் சேர்ந்தாலும் நான் நிலைப்பது எப்போது?

உயரம் பறக்கும் பயணம். இது உலகமே மறக்கும் பயணம்!
நான் ஒன்றும் தேவதை இல்லை. 
எங்கு தேடினாலும் கிடைக்கவே இல்லை நான்.
கொஞ்சம் இரைச்சலை குறையுங்களே..

இன்னும் எத்தனை தூரம்? இதோ, கண்களோரம் கண்ணீர்!!
மரணம் வரை நானில்லை, மரித்த பின்பு நானே இல்லை. எங்கு கிடைப்பேன் நான்??
இந்த உடை களைய வேண்டும். பாரம் கூடிக் கொண்டே போகிறது.
சாத்தானே! தெய்வம் போல் நடிக்காதே..
தெய்வமே! நீதானே சாத்தான்..

உயிரின் கோடு தொடும் வரை மரணம் எப்படி விளங்கும்!
கொஞ்சமாய் நிழல் வேண்டும். இல்லை இல்லை, கொஞ்சம் தூங்க வேண்டும்.
பயணம் தந்த களைப்பிது!!
அட, பயணம் தொடரட்டும், இளைப்பாறினால் அசதி கூடும்!!
இரைச்சல் குறைகிறதே....

நான் ஒன்றும் பிசாசு இல்லை.
எதுவெல்லாம் இல்லை என்று தெரிந்தாலும், எது எது என்று எப்படி அறிவேன்?
ஆணவம் எப்படி வந்தது?
பசிதானே உயிரை சுமக்கிறது.

இலக்கே இல்லாத வானம்! அட, இது இல்லவே இல்லாத வானம்.
நீர் போல் தான் நானும். அழிவுதான் என் அழகு.
உயிர் என்பது எத்தனை போதை !!
இன்னும் தேடுகிறேன், கிடைக்கவில்லை.

இல்லாத வானத்தில் மேகங்கள் மிதக்கின்றன!
எத்தனை கூட்டினாலும் கணக்கு விளங்கவே இல்லை.
முகத்தை மூடியே எப்படி வாழ்வது!!
இதயம் பிழக்காதீர்கள். உள்ளே ஒரே கூச்சல்!!



கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...