தூக்கம் கலையத் தொடங்கியது. ஆனால் கண்களைத் திறக்க தோன்ற வில்லை. விழித்த பின்பும் எத்தனை நேரம் கண்களை மூடியே இருப்பது. இத்தனை நேரம் சுகமாய் இருந்தது இப்போது சுமையாய்த் தெரிந்தது. மெல்ல கண்களை திறந்தேன். திறந்ததும் சிறிது அதிர்ந்து விட்டேன். நேற்று பார்த்த அந்த விகாரனைப் போல் இன்னொருவன், இன்னும் கொஞ்சம் பெரியதாய். "வணக்கம் நண்பரே!". ஆரம்பித்து விட்டார்கள் நல்லவர்கள். வணக்கம் சொல்லும் மன நிலையில் நான் இல்லை. இவர்களை சண்டை இட்டும் ஜெயிக்க முடியாது, அடங்கி போவதை விட வேறு வழியும் இல்லை. அந்த மாமிச மலை தொடர்ந்தது. "நண்பரே, உங்கள் குழப்பங்களை நானறிவேன். எங்களை மண்ணிக்க வேண்டும். நாம் எல்லாம் காலத்தின் கருவிகள். சரி, தவறு என்பதில் நமக்கு இருக்கும் முரண் தான் பல சமயம் நம் வாழ்க்கையை சுவாரசியம் ஆக்குகின்றன." நான் தத்துவம் கேட்கும் நிலையில் இல்லை, கேட்காமல் இருக்கும் இடத்திலும் இல்லை.
அவன் தொடர்ந்தான்."உங்கள் மனதுக்குள் நிறைய கேள்விகள் இருக்கும். என்னால் இயன்ற அளவு அதற்க்கான பதிலை கூறுகிறேன். பொறுமையாய் கேளுங்கள். நாங்கள் உங்கள் கிரஹத்தை கண்டு பிடித்தது உங்கள் மனிதர்களால் தான். அவர்கள் வேற்று கிரஹ ஆராய்ச்சிக்காக பல அலைவரிசையில் விண்வெளி நோக்கி செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். நாங்களும் அப்படி ஒரு ஆராய்ச்சியில் இருந்தோம். ஆனால் உங்களை விட நாங்கள் அறிவியலில் பல மடங்கு முன்னால் இருக்கிறோம். எங்களுடைய சக்தி வாய்ந்த கருவிகள் வெகு தூரத்திலேயே உங்களுடைய அலை வரிசைகளை கண்டு கொண்டது. உங்கள் கணக்குப் படி சுமார் 50 ஆண்டுகள் முன்னால் எங்கள் கிரஹவாசிகள் ஒரு குழுவோடு அங்கே வந்து சேர்ந்தனர். அன்று முதல் அங்கே பல விதமான ஆராய்சிகள் செய்து வருகிறோம். எங்கள் ஆராய்ச்சியும், ஆரம்பத்தில் நாங்கள் அறிந்து கொண்ட விஷயங்களே இத்தனை ஆண்டுகளாக உங்கள் இடத்தில் எங்கள் தேடல்கள் தொடர காரணம். நம் இருவரின் கிரஹங்களும் அதிசயிக்கும் வண்ணம் பல ஒற்றுமைகளை கொண்டது. இரண்டு இடத்தில் வாழும் உயிர்களுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. தாவரங்கள், நகரும் உயிர்வகைகள் , அவைகள் சுவாசிக்கும் விதம், ஏன், அவைகளின் செல்களின் மூலக் கூறுகள் கூட கிட்டத்தட்ட ஒன்று தான். ஆக்சிஜன், ஹைட்ரஜன், கார்பன், நீர் என்று நமது உயிரின் அடிப்படைகள் ஒரே மாதிரியானவை. இரண்டு கிரஹத்தின் பருவ மாற்றங்கள், இரவு பகல், காற்று மண்டலங்கள் கூட ஒத்தே இருக்கிறது. இது அதிசய ஒற்றுமை. ஆனால், எங்களுக்கு மிகவும் தேவைப்பட்ட ஒற்றுமை. "
எனக்கு புரிந்தது போலவும் இருந்தது, புரியாதது போலவும் இருந்தது. இவனுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமையும் எனக்கு தெரியவில்லை. நான் அவனை குழப்பமாய் பார்த்தேன். அவனுக்கு நான் நினைத்தது என்ன புரிய போகிறது என்று நினைக்கையில் அவன் மீண்டும் பேசத் தொடங்கினான். "நண்பரே, நமக்குள் இருக்கும் வேற்றுமை பற்றி நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதெல்லாம் நாம் வாழும் இடங்களுக்குள் இருக்கும் சிறிய வேற்றுமைகளே. உங்கள் கிரஹத்தின் புவி ஈர்ப்பு எங்களுடையதை விட அதிகம், எங்கள் ஆய்வின் படி நமக்குள் உள்ள உயர வேறுபாட்டிற்கு அதுதான் முக்கிய காரணம். இந்த விண்கலத்தில் இந்த அறை மட்டும் உங்கள் கிரஹம் போல் இருப்பதற்காக செயற்கை ஈர்ப்பு விசை அமைத்துள்ளோம். நாம் இருவரும் ஆக்சிஜன் தான் சுவாசிக்கிறோம், ஆனால் எங்கள் கிரஹத்தில் கார்பன் டை ஆக்சைட் மிகவும் அதிகம். அதனால் நாங்கள் எங்களை செயற்கையாய் மாற்றிக் கொண்டதே இந்த பச்சை நிற உடம்பு. எங்கள் தோல் தாவரங்கள் போல் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு அதிலிருந்து எங்களுக்கு வேண்டிய ஆக்சிஜனை உற்பத்தி செய்து விடும். எங்கள் நாசிகளை அதிகமாய் நாங்கள் பயன்படுத்துவது கிடையாது. உங்கள் கிரஹத்தில் ஆக்சிஜன் நிறைய இருப்பதால் நீங்கள் இயல்பாக நாசிகளில் சுவாசிக்கிறீர்கள். எங்கள் கிரஹத்தில் கதிர் வீச்சு அதிகம், அதனால் எங்கள் தோல் அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் கடினமாய் இருக்கிறது. நீங்கள் எங்கள் கிரஹத்தில் மாற்று உடை அணிய வேண்டி இருக்கும். உங்களுக்கு தரை இறங்கியதும் அதை தருகிறோம்."
எனக்கு எல்லாம் ஒரு கதை போல் இருந்தது. அவன் சொன்ன ஒற்றுமைகள் எனக்கு கொஞ்சம் பயமாகவும் இருந்தது. இப்போது என்னை வைத்து இவர்கள் என்ன செய்ய போகிறார்கள், இத்தனை நாளாய் என்ன செய்தார்கள் என்ற அச்சம் கண்களில் தெரிந்தது. நான் கேட்டு விட எத்தனித்தேன். 'இப்போது உங்களுக்கு நான் எதற்கு?' என்று தடுமாறிக் கொண்டே கேட்டு விட்டேன். அந்த பூதப் பாண்டியன் பொறுமையாய் பேசத் தொடங்கினான். " நண்பரே, நமக்குள் நிறைய ஒற்றுமை உண்டென்பதை சொன்னேனே. அதுதான் காரணம். உங்கள் உடலை சோதனை செய்து நாங்கள் உங்கள் கிரஹத்தில் வாழ முடியுமா என்று ஆராய்ச்சி செய்கிறோம்". எனக்கு தூக்கி வாரி போட்டது. இவர்கள் நமது கிரஹத்தை எடுத்துக் கொள்ள போகும் முயற்சி இது. அவன் தொடர்ந்தான். "நீங்கள் அஞ்ச வேண்டாம். உண்மையில் நாங்கள் உங்களோடு சேர்ந்தே வாழ முடியுமா என்பதே ஆராய்ந்துக் கொண்டு இருக்கிறோம். உங்கள் உயிரணுவோடு எங்கள் உயிரணுவை சேர்க்க கூட பார்த்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் கிரஹத்தில் எதையும் அழிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை." . இப்போது உண்மையிலேயே மிகவும் கனிவாய் பேசினான் அவன். "ஒரு விஷயம் சொன்னால் உங்களுக்கு இன்னும் தெளிவாய் புரியும். உங்கள் இனத்தோடு எங்களுக்கு இருக்கும் ஒற்றுமையை அறிந்ததில், நாங்கள் எங்கள் பழைய கோப்புகளை ஆராய்ந்தோம். சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் எங்கள் இனம் இன்று நீங்கள் இருப்பது போலவே இருந்திருக்கிறோம். உலகத்தை தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வருவதாக நினைத்த எங்கள் முன்னோர்கள் இயற்க்கைக்கு புறம்பாய் சென்றதில் கிட்டத்தட்ட அழிந்து போனார்கள். எஞ்சிய சிலர் அறிவின் துணை கொண்டு எப்படியோ வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எங்கள் உலகம் இன்னும் சில நூறு வருடங்களுக்கு மேல் உயிர் வாழ ஒத்துழைக்காது. அதனால் தான் புதிய வீடு தேடி உங்களை ஆராய்ந்து வருகிறோம். எங்கள் இணம் கற்றுக் கொண்ட பாடங்கள் இனி எங்களை இயற்க்கைக்கு எதிராய் எதையும் அழிக்க விடாது". அந்த உருவம் கொஞ்சம் உருக்கமாய் நடந்து ஜன்னலின் விசையை கீழே அழுத்தியது. ஜன்னல் வழியாக கொஞ்சம் தூரத்தில் சிகப்பு நிறத்தில் ஒரு கிரஹம் தெரிந்தது. "நண்பரே, அதோ தெரிகிறதே, அதுதான் எங்கள் கிரஹம். பூமி என்று அதனை அழைப்போம். ஹோமோ சேப்பியன்ஸ் என்று அழைக்க பட்ட இணத்தின் தொடர்ச்சி நாங்கள், க்லோரோ சேப்பியன்ஸ்".
சிகப்பு பூமி சத்தமின்றி எங்களை வரவேற்றுக் கொண்டிருந்தது.
முற்றும்