நிஜமாகவே நடப்பது போல் கனவுகள் வருமே! இது அப்படி ஒன்றாக இருக்க வேண்டும். நான் கண்களை திறக்கும் போது எனது அறையில் , பியா வின் அருகில் இருக்க போகிறேன். தைரியம் நிறைய வரவழைத்து கண்களை திறந்து பார்த்தேன். இதயத்தின் ஓலங்கள் எல்லாம் தொண்டையில் வந்து அடைத்தன. நான் அதே விசித்திர அறையில் தான் இருக்கிறேன். அப்படியென்றால் நான் மயங்கியது, அதற்க்கு முன்னால் கேட்டது எல்லாமே நிஜம். ஒரு வேளை என்னோடு யாரவது விளையாடுகிறார்களோ? ரே யின் வேலையாய் கூட இருக்கலாம். ஆனால் என் உடல் உண்மையில் அல்லவா இளைத்திருக்கிறது. ஒரே நாளில் அதற்கு வாய்ப்பில்லையே. நான் நாள் கணக்கில் தான் இங்கே இருந்திருக்க வேண்டும். மீண்டும் அந்த எரிச்சலூட்டும் குரல். நான் விழிப்பதை எப்படி தெரிந்து கொள்கிறாளோ சதிகாரி. " நண்பரே, நலமாக உள்ளீர்களா? ". இப்போது அவளை கொல்ல வேண்டும் போல் இருந்தது. 'என்னை கொடுமைப் படுத்தாதீர்கள். என்னோடு விளையாட இது நேரமில்லை. நான் வீட்டிற்கு செல்ல வேண்டும். தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்.' என்னை அறியாமல் நான் அழுதிருந்தேன். "நண்பரே, மறுபடியும் மண்ணியுங்கள். நீங்கள் வீட்டிலிருந்து நினைத்து பார்க்க முடியாத தூரத்தில் இருக்கிறீர்கள். உங்களை தொந்தரவு செய்வதற்கு மண்ணிக்கவும். உங்களை உங்கள் வீட்டில் மறுபடியும் விட்டு விடுவோம். நம்புங்கள். ஆனால் , உடனே அதை செய்ய முடியாது. அது வரை உங்கள் ஒத்துழைப்பு எங்களுக்கு வேண்டும்.". குழப்பங்கள் அதிகமானாலும், மறுபடியும் வீட்டிற்கு போக முடியும் என்பது கொஞ்சம் நம்பிக்கையை தந்தது.
இப்போது நான் குழம்பிக் கொண்டிருந்தால் திரும்பிப் போவதை பற்றி யோசிக்க முடியாது. முதலில் நான் நிதானம் அடைய வேண்டும். பொறுமையாக இருந்தால் தான் உண்மைகள் அனைத்தும் அறிய முடியும். எதுவானாலும் அதை உண்மை இல்லை என்று மறுப்பதில் புண்ணியம் இல்லை. உண்மையை ஏற்று கொள்ளுவது தான் இப்போதைக்கு எனக்கான முதல் உதவி. கொஞ்சம் உறுதியோடு 'நீங்கள் சொல்லும் எதுவும் என்னால் நம்ப முடியவில்லை. இப்போது நான் எங்கிருக்கிறேன்? நீங்கள் யார்? நான் உங்களை பார்க்க வேண்டும்' என்று சொன்னேன். அந்த குரல் வழக்கமான பொறுமையுடன் "நீங்கள் எங்களைப் பார்க்கத்தான் போகிறீர்கள். இப்போது நான் சொல்வதை நம்பிக்கையோடு கவனமாய் கேளுங்கள். நாம் இப்போது இருப்பது ஒரு விண்வெளி விமானத்தில். நாம் ஒருவருக்கொருவர் வேற்று கிரஹவாசிகள் . உங்கள் கிரஹத்தில் இருந்து கிளம்பி உங்களின் கணக்குப்படி 260 நாட்களும், எங்களுடைய கணக்கின்படி 420 நாட்களும் ஆகின்றன. எங்களுடைய 2 நாட்களில், நாம் எங்களுடைய கிரஹத்தை அடைந்து விடுவோம். சில பரிசோதனைகளுக்காக தான் நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள். அதற்க்கு உதவும் பொருட்டே உங்களை மயக்கத்தில் வைத்திருந்தோம். நாங்கள் எங்கள் கிரஹத்தை அடையும் போது நீங்கள் விழித்து இருப்பது எங்கள் பரிசோதனைகளில் ஒன்று. அதற்காகவே இப்போது நீங்கள் மயக்கத்தில் இல்லை. எங்கள் குழுவின் தலைவர் உங்களை பார்க்க இன்னும் சில நேரத்தில் வர வேண்டும். அவரிடம் உங்களுடைய கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள். இப்போதைக்கு நீங்கள் என்னை நம்ப வேண்டுமென்றால், உங்கள் படுக்கைக்கு நேர் எதிரில் உள்ள அந்த விசையை கீழ் நோக்கி திருப்புங்கள். ஜன்னல் திறக்கும். ஆனால் அதனால் அண்ட வெளியின் கதிர் வீச்சு அபாயம் அதிகமாகும். ஜன்னல் கொஞ்ச நேரத்தில் தானாக மூடிக்கொள்ளும். இருந்தாலும் அங்கே ரொம்ப நேரம் நிற்க வேண்டாம். ". மந்திரம் போல் அனைத்தையும் கொட்டிவிட்டு நின்றுவிட்டது அந்தக் குரல்.
நான் இருப்பது வேறு ஒரு உலகத்தில் என்பதை நம்ப மறுக்கும் மனதிற்கு புரிய வைக்க முயற்சி செய்தேன். உண்மையை மறுப்பதில் பொய்யான சந்தோஷம் கிடைக்கலாம், நிலையான அமைதி கிடைக்காது. அவள் சொன்ன அந்த விசையை நோக்கி நடந்தேன். மெல்ல அதைத் திருப்ப முயற்சி செய்தேன். என் கைகளின் வலு எங்கே போனது? விசையை திருப்புவது மிகவும் சிரமமாக இருந்தது. உடலின் மொத்த வலுவும் தேவைப் பட்டது. விசை கீழிறங்கி, ஒரு திரை விலகுவது போல் அங்கே இருந்த சுவர் திறந்தது. கண்ணாடி வழியாக நான் பார்த்தது மிகப் பெரிய மாயை. எங்கும் திறந்த வெளி. கோடிக்கணக்கில் ஒளிக் கற்றைகள். கனவுலகம் என்று சொல்லுவார்களே. இதுவாகத்தான் இருக்க வேண்டும். இத்தனை குழப்பத்திலும் இந்த பிரமாண்டம் என் மனதில் இனம் புரியாத ஒரு அமைதியைத் தந்தது. அதற்குள் மேலே இருந்த விளக்கு மின்னத்தொடங்கியதும், ஜன்னல் மூடிக் கொண்டது. ஒன்று நிச்சயம். நான் வேறு கிரஹ மனிதர்களோடு எங்கோ போய் கொண்டிருக்கிறேன். இப்போது, என் வீட்டிற்கு செல்வதை விட, உயிரோடு இருப்பதே முக்கியமாய் பட்டது. ஏனோ பியாவும் என் காதலியும் இப்போது தூரத்துப் புள்ளியாய் ஆனார்கள். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான் இந்த நேரத்தில் எனது முதல் குறிக்கோள். ஆழமாய் ஆனால் வெறுமையாய் யோசித்துக் கொண்டிருக்கையில் சதிகாரி மீண்டும் அழைத்தாள்."நண்பரே, உங்கள் குழப்பங்கள் கொஞ்சம் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன். ". அவள் இப்போது ஆட்டி வைக்கும்இடத்திலும் நான் ஆடும் இடத்திலும் இருக்கிறோம். அவள் அதிகாரமாய் சொல்வதைக் கூட நான் அன்பாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். என்னுடைய பதிலுக்கு காத்திருக்காமல் அவள் தொடர்ந்தாள். "உங்கள் உடம்பிற்கு வேண்டிய உணவினை மருந்து வடிவில் கொடுத்திட எங்கள் விஞ்ஞானி ஒருவர் வருவார். தயவு செய்து ஒத்துழையுங்கள்.". அடிப் பாவி, தயவு செய்தா! எனக்கு வேறு வழி என்ன உள்ளது. நான் உயிரோடு இருப்பதற்காக தான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்ற எண்ணம் விசித்திரமாய் இருந்தது. அப்போது ஒரு பக்க சுவற்றில் இருந்து பிளவொன்று தோன்றியது. இந்த அறையின் கதவுகள் எல்லாமே சுவர் போலவே அமைத்திருக்கிறார்கள் 'நண்பர்கள்'.
மிகவும் உயரமான ஒரு உருவம் உள்ளே வந்தது. அதைப் பார்த்ததும் அனிச்சையாய் பயம் தொற்றிக் கொண்டது. இதற்கும் தலை, உடல், கால் அமைப்பே இருந்தது, ஆனால் மிகவும் விகாரமாக. பச்சை உடம்பு, பாறை போன்ற தோல், அங்கங்கே மயிரா கயிறா என்று அறிய முடியாத எதோ ஒன்று. உடலுக்கு பொருத்தமில்லாத சிறிய கண்கள், மூக்கை வேறு காணோம். இரண்டு துளைகள் மட்டும் இருந்தது. அதன் நடை வித்தியாசமாய் தெரிந்தது. உடம்பை கஷ்டப் பட்டு நகர்த்துவது போல் இருந்தது. கைகளும் விரல்களும் அமைப்பில் என்னுடையது போல் இருந்தாலும், மிகவும் பெரியதாய், உலோகம் போல் இருந்தது. "நண்பரே, உங்கள் படுக்கையில் படுங்கள்". உருவத்தை போலவே குரலும் விகாரமாய் இருந்தது. சதிகார சண்டாளர்கள், என்னை கடத்தி வந்ததில்லாமல் நண்பரே என்று சொல்லியே என்னைக் கொல்கிறார்கள். திடீரென்று என் செல்லப்பிராணி பியா நினைவுக்கு வந்து போனாள். ஒரு வேலை அவளும் என்னை இப்படித்தான் நினைத்திருக்கலாம். நான் அமைதியாய் படுக்கையில் சாய்ந்தேன். அதன் சொர சொர கைகளால் என் வாயை திறந்தது. அதன் முகத்தை என் அருகில் கொண்டு வந்தது. ஐயோ! அதன் வாயை என் வாயில் வைத்து விடுமோ! நினைக்கும் போதே குமட்டியது. நல்ல வேலை, பைப் போல் எதையோ என் வாயில் வைத்தது. ஒரு சிறிய பொத்தானை அழுத்தியதும், என் தொண்டைக்குழிக்குள் எதோ நகர்ந்து சென்றது. "முடிந்தது, நான் கிளம்புகிறேன். ஓய்வு எடுங்கள் நண்பரே! வருகிறேன்". விருந்தோம்பல் வேறு. எரிச்சலாய் வந்தது. பலமாய் கத்திக் கொண்டே அழ வேண்டும் போல் இருந்தது. ஆனால் அது கூட முடியவில்லை. என்னத்தை கொடுத்துத் தொலைத்தானோ, தூக்கம் கண்ணை சொருகிக் கொண்டு வந்தது. அப்படியே.........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக