சனி, 12 ஜனவரி, 2013

நீர்ப்பறவை

 இது சினிமா விமர்சனம் அல்ல. வழக்கம் போல் என்னை பாதித்த ஒரு நிகழ்வின் பதிப்பு. ஒரே சினிமாவில் இத்தனை முறை என் கண்கள் பணித்தது எப்போது என்று நினைவில் இல்லை. நான் பார்த்தது படத்தை அல்ல, மனிதர்களை, அனுபவங்களை. என் வாழ்வில் நான் காணாத, காண முடியுமா என்று அறியாத அனுபவங்களை. மனிதர்களை ரசிப்பது நல்ல ஒரு கவிதையின் சுகம். இந்த படத்தில் ஏனோ தெரியாது, ஆனால் நிறைய ரசித்தேன். குடிகாரனாய், போரில் ஒரு நிராயுதபாணியாய், அவமான காயங்களுடன் வாழும் ஒருவன், பிள்ளை குடிகாரனாய் இருந்தாலும் உயிருடன் இருக்க விரும்பும் தாய், பிள்ளையை அளவில்லாமல் நேசிக்கும் ஒரு தந்தை, தான் சாராயம் விற்றாலும் மகனிடம் "இங்கெல்லாம் வர கூடாது ராசா' என்று சொல்லும் ஒருத்தி, கடல்தான் மாதா- இதுல என்ன சாதி என்று கேட்கும் ஒருவன் என்று படம் முழுக்க மனிதர்கள்!!!! 5 நிமிடம் வரும் ஒரு மருத்துவர் கூட குடிகாரனாய் நிற்கும் நாயகனை பற்றி 'பரவாயில்லையே, பையன் கெட்டிகாரனா இருக்கானே' என்று பாசிடிவாய் பேசுகிறார். 

படத்தில் நிறைய வசனங்கள் இல்லை, அனால் நிறைய நல்ல வசனங்கள்.       " மேரி மாதா கோவிலில் பொம்பள பேசாம யாரும் பேசுவா", " இந்த நாட்டுல மீனவன் எல்லாம் அநாதைங்க தான்", "உன்னோட  புருஷன் செத்தத அரசாங்கத்துகிட்ட சொல்லனும்ன்ல " என்று நீதிபதி கேட்கும் போது "சொல்லி இருந்த என்ன பண்ணி இருப்பேங்க?" என்று நாயகி சொல்வது, "அவுங்க சுட்டாங்க, ஆனா நான்தான் கொன்னேன்", "அவரு உடம்புதான் இங்க வந்துச்சு, உசுரு? ".. ஐயோ, இது அத்தனையும் மனதை அறுத்த வசனங்கள். படத்தில் முக்கிய வேடங்கள் தாங்கி நடித்த நாயகன், நாயகி, அப்பா, அம்மா நால்வரும் மட்டும் இன்றி, படத்தில் மிகவும் குறைவாய் வரும் டாக்டர், படகு செய்து தரும் பாய் , சாராயம் விற்கும் கிழவி, உப்பள சொந்தக்காரரின் தங்கை என்று அனைவரும் நெஞ்சை வருடுகிறார்கள்.

பிழைப்பிற்காக சாராயம் விற்கும் எபனேசர் தன் மகன் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனயில் இருக்கும் பொழுது நாயகனின் கைகளில் முத்தம் குடுக்கும் தருணம், குடிகார பிள்ளையை பெல்டால் துரத்தி துரத்தி அடிக்கும் அப்பா, அதே பிள்ளை குணமாகி வரும் போது முகத்தில் அதிகம் அலட்டி கொள்ளாமல் ஒரு பெரிய மீனை எடுத்து சென்று மருத்துவரின் முன்னால் வைத்து கை எடுத்து கும்பிடும் போதும், பிறகு படகு செய்யும் பாய் இடம் தன மகனுக்கு உதவ சொல்லி கேட்பதும், நானும் வல்லம் வாங்கி எங்க அப்பன் லூர்து சாமி பேர  போட்டு ஓட்டுவேன் என்று சொல்லும் மகனை  அழாத ஆம்பிளையாய்  பார்க்கும் நேரத்திலும், பிறகு அதே வல்லத்தில் தனது பெயரை தடவி பார்க்கும் பொழுதில், கடைசியாய் மகனின் சவத்தின் முன் அழும் பொழுதும் அந்த அப்பா என்னை அதிகமாகவே பாதித்து விட்டார். உண்மையில் சொன்னால் இந்த படத்தில் என்னை அதிகமாய் அழ வைத்தவர் அவரும், அவரின் உணர்சிக்கு உதவியாய் நின்ற இசை அமைப்பாளரும் தான். மகனுக்கு சரக்கு வாங்க காசு தரும் அம்மா வேடம் புதிதல்ல, அனால் எந்த பழக்கத்தையும் உடனே நிறுத்துவது ஆபத்தாகி விடுமோ என்ற பயத்தில் காசு  குடுப்பதில் மிகவும் யதார்த்தம். மேரியாய் வரும் நாயகனின் அம்மா பல இடங்களில் மனதில் அழகை நிற்கிறார். 

படம் முழுக்க என்னால் நடிகர்ளை பார்க்கவே முடியவில்லை. நான் பார்த்தது எல்லாம் அருளப்பசாமியும், எஸ்தரும், லூர்து சாமியும், மேரியும்  மற்ற மனிதர்களும் தான். பர பர பறவை பாடல் உள்ளத்தை அரித்துக்கொண்டே இருக்கிறது. எனக்கு கூட அழுவது பிடிக்காது, ஆனால் இந்த பாடலில் உருகாமல் இருக்க முடியவில்லை. நிறைய சொல்லதோன்றுகிறது , அனால் உணர்வுகளை வார்த்தைக்குள் கட்டி வைக்க முடியவில்லை. படம் பார்த்து முடித்த போது நான் உணர்ந்தது, கல்லூரி படிக்கும் போது வைரமுத்துவின் "ஒரு போர்க்களமும் இரு பூக்களும்" புத்தகம் படித்து முடித்த போது இருந்தது போலவே இருந்தது.(அப்போது இரண்டு நாள் ஒரு மாதிரியாகவே இருந்தேன், இந்த பதிப்பை முடித்த பிறகு என் மனம் கொஞ்சம் லேசாகும் என்று நம்புகிறேன் ).  இத்தனை அழகான ஒரு காவியத்தை கொடுத்த திரைக்கதையாளருக்கும் இயக்குனருக்கும் நன்றி. நீர்ப்பறவை - ஆழமான கடல், அழகான பறவை.

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...