வியாழன், 5 டிசம்பர், 2013

ஃபிரான்சிஸ் இந்து (Francis - Indhu)

11-Oct-2013
வீதி வரை மின்னலாய் வந்த பைக் பள்ளி வளாகத்தில் நுழைந்ததும் வேகம் குறைந்தது. நகரத்திற்கும் கிராமத்திற்கும் நடுவிலான ஒரு சிறிய ஊர் அது. ஐந்தாறு தொடக்க பள்ளிகள் மொத்தமாய் இருந்தாலும், அதில் இது மிகவும் பழமையானது. கட்டிடம் கூட ரொம்ப வருடமாய் அப்படியே தான் இருக்கிறது. 'ப' வடிவில் இரண்டு வரிசையாய் வகுப்பறைகள். நடுவில் திறந்த மைதானம். பைக்கை ஒரு ஓரமாய் நிறுத்தி விட்டு, அதில் அமர்ந்திருந்த காக்கி யூனிபார்ம், அநாயசமாய் கால்களை தூக்கி, விறைப்பாய் இறங்கியது. முகத்தில் சரியாய் ட்ரிம் செய்த மீசை, ஒரு நாள் வயதான தாடி மயிர்கள், திமிரான பார்வை, சட்டையை கிழித்து கொண்டிருந்த மார்பு மற்றும் கை தசைகள், முக்கியமாய் தொப்பை இல்லை. தனக்கு மிகவும் பழக்கமான இடம் போல் உள்ளே நடக்க தொடங்கினான். எதிர் வந்த பியூன் வயதில் முதியவராய் இருந்தாலும், தலை தாழ்த்தி 'வணக்கம் சார்' என்றார். 'அத்த ரூம் ல இருக்காங்களா?', கம்பீரமாய் கேட்டான். ' இருக்காங்க சார்', பணிவாய் பதில் வந்தது. உள் வரிசை அறைகளில் ஓரமாய் இருந்த ஹச்.எம். (H.M) அறை நோக்கி நடந்தான். அறை என்றால் சுவரால் தடுக்க பட்டது அல்ல, ஒரு பழைய கார்ட் போர்ட் வைத்து அடைக்க பட்ட அறை. கதவென்ற பெயரில் இருந்த தகரத்தை லேசாக தட்டி விட்டு, 'அத்த' என்றான். தலை நிமிர்ந்த ஹச்.எம் மிற்கு 50 வயது தாண்டி இருக்கும், தலை நரைக்காவிட்டாலும் முகத்தில் அனுபவ கோடுகள், இன்று கொஞ்சம் கவலை ரேகைகள் சேர்ந்து கொண்டது போல் இருந்தது.


'வாய்யா சௌந்தரு', பதட்டத்தில் இருப்பது போல் இருந்தாலும், குரலில் கொஞ்சம் பாசம் தெரிந்தது.
'உக்காருப்பா'

'மன்னிச்சிடுங்க அத்த, நீங்க போன் பண்ண போது கலெக்டர் மீட்டிங் ல இருந்தேன். எடுக்க முடியல. 5 மிஸ்டு கால் இருந்தது. ஏதோ அவசரம் போலன்னுட்டு மீட்டிங் முடிஞ்சதும் இங்க வந்துட்டேன். எதுவும் பிரச்சனையா அத்த, அந்த கடக்காரென் ஏதாவது மறுபடியும் கலாட்டா பண்ணானா?'

'அதெல்லாம் ஒன்னு இல்லையா, வேற விஷயம். பிரச்சனையான்னு தெரியல, அதான் உன்ன கூப்டேன்.'

'புரியல அத்த'

ஹச்.எம் சற்று குரலை தாழ்த்தி, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தொடங்கினார், 'நம்ம இந்து டீச்சர் இருக்காங்கள்ள.. '

'ஆமா, அந்த வடக்கு கோனார் தெருக் காரங்க தான?'

'ஆமாய்யா, அவுங்கதான். நாலு நாளா ஸ்கூல் க்கு வரல. ஒரு போன், லெட்டெர் எதுவும் இல்ல'

'யாரையாவது வீட்டுக்கு அனுப்ச்சு பாத்தீங்களா?'

'ஆமா, நம்ம கோமாரிய போய் பாக்க சொன்னேன். வீட்டு பக்கம் 2,3 நாளா ஆள காணோமாம்'

'அவுங்க புருஷன் இருக்காப்லயா?

'ஒனக்கு ஞாபகம் இல்லையா, அவன் சரியான தண்ணி வண்டி. எந்நேரமும் போத தான், அக்கம் பக்கத்து வீட்டுக் காரவுங்க தான் சொல்லி இருக்காங்க'.

'ஊருக்கு எதுவும் அவசரமா  போய்  இருப்பாங்க அத்த,'

'நானும் அப்டித்தான் நெனச்சேன், ஆனா, காலைல அவுங்க அப்பா ஸ்கூல் க்கு போன் பண்ணாரு, வீட்டு நம்பர் கிடைக்காம இங்க கால் பண்ணி இருந்தாரு. நான் அவர பயமுடுத்த வேண்டாமேன்னு, ஒரு ஸ்கூல் விஷயமா பக்கத்து ஊர் போய் இருக்காங்கன்னு சொல்லி வச்சேன்'

'ஒ, ஏதோ பிரச்சன மாதிரி தான் தெரியுது அத்த, சரி, கம்ப்ளைன்ட் எதுவும் பண்றீங்களா?'

'இல்லையா, அது ரொம்ப தங்கமான புள்ள.. பொம்பள புள்ள சமாச்சாரம், என்னன்னு தெரியாம பெருசு பண்ண வேண்டாம். நீ கொஞ்சம் அந்த பொண்ணு பத்தரமா இருக்கான்னு விசாரிச்சு பாருய்யா'

'புரியுது அத்த, நான் இப்பவே விசாரிச்சு பாக்குறேன் '

'சரிய்யா, இன்னொன்னு..' என்று இழுத்தார்.

'சொல்லுங்க அத்த,'

'இது என்னன்னு தெரியலையா, தப்பா எதுவும் இருக்க கூடாதுன்னு சாமிய வேண்டிக்கிறேன்', சற்று குரலை தாழ்த்தி, 'நம்ம ஸ்கூல் ல டெம்பரவரி ஸ்டாஃப் ஒரு டீச்சர் மூணு மாசமா இருக்காரு, அவரையும் நாலு நாளா காணல'

'ஒ.., அவரு வீட்ல போய் பாத்தீங்களா?'

'அவரு பக்கத்து டவுன் ல இருந்து வந்துட்டு இருந்தாரு, இன்னும் போய் பாக்கல, நான் அட்ரஸ் தரட்டுமாய்யா ?'

'குடுங்க அத்த, ரெண்டு பேரு ஒரே நேரத்துல காணோம் னு சொல்றீங்க, ஏதோ வெவகாரமா தெரியுது.'

'எதுவும் வெவகாரம் இருக்க கூடாதுய்யா, ரெண்டு பேரும் ரொம்ப நல்ல ஆளுங்க'

'சரி அத்த, நான் விசாரிச்சிட்டு சொல்றேன், அந்த இன்னொரு டீச்சர் பேரு என்ன?'

'பிரான்சிஸ்

                                             ______________________________
6-Oct-2010 (மூன்று வருடம் முன்னர்)

'இந்து,நல்லா யோசிச்சுதான் பேசுறியா?' கண்களில் நிரம்பிய நீர் வழிந்தோட தயாராய் இருந்தது.

'என்னால இதுக்கு மேல யோசிக்க முடியல பிரான்சிஸ்', அவளது விழிகளும் கண்ணீர் மொழியில் பேச தயாராயிருந்தது..

'என்ன பிரிஞ்சு உன்னால இருக்க முடியுமா இந்து?'

'தெரியாது பிரான்சிஸ், ஆனா, எங்கப்பாவ கொன்னுட்டு உங்கூட சந்தோசமா இருக்க முடியாதுன்னு கண்டிப்பா தெரியும்'

'உங்கப்பா மனசு மாறுற வரைக்கும் நான் காத்திருக்கேன்னு தான் சொல்றேனே! ', அவன் குரலில் இயலாமை நிறைந்திருந்தது..

'ஒனக்கு புரியலையா பிரான்சிஸ், இது நடக்காது!!', அவள் பிரசவிக்க மறுக்கும் வார்த்தைகளை, இதழ்கள் வெடிக்க, இதயம் கனக்க, வெளியே தள்ளி கொண்டிருந்தாள்... வார்த்தைகளின் வலியை கண்ணீர் கொண்டு கரைக்க முயற்சி செய்து கொண்டிருந்தன விழிகள் .

'நீ இல்லாட்டி நா செத்துடுவேன் இந்து '

'நீயும் எங்கப்பா மாதிரியே மெரட்டுரியே டா , முழுசா உயிர விடுற உரிம கூட இல்லாம கொஞ்சம் கொஞ்சமா நான் செத்துட்டு தான் இருக்கேன், அது உனக்கு தெரியலையா?! '

'எனக்கு தல வெடிக்குது இந்து, உன்ன நான் எப்டி மறக்க முடியும்'

'என்ன மறக்க சொல்ற அளவுக்கு நா கொடும காரி கெடயாது, என்னாலயும் உன்ன மறக்க முடியாது,, ஆனா நாம சேந்து வாழ இந்த உலகத்துல எடம் இல்ல டா '

'இருந்தாலும் செத்தாலும் ஒன்னா தான் இருப்போம்னு, நீதான இந்து சொன்ன', குழந்தை போல் அழுகை பீறிட்டு வந்தது..

அவளால் நீர் பிரவாகத்தை தடுக்க முடிய வில்லை, எதோ சொல்ல நினைத்தாள், ஆனால்  மொழியின் உதவி அற்றுப் போனது. அவள் மெல்ல குனிந்து அவன் நெற்றியில் முத்தம் பதித்தாள். அவள் கண்ணீரின் வெப்பம் அவன் தலை மயிரை கோதியது, வெடித்து அழ காத்திருந்த அவனது இதழ்களில் தனது இதழ் பதித்தாள்.  எத்தனையோ நாட்களில் காதலிலும், காமத்திலும் கூட தள்ளிப் போட்ட முத்தம், இன்று குளிர் வாடையில் நெருப்பு துண்டாய் அவன் அழுகைக்கு இதம் தந்தது. காமம் கொஞ்சம் கூட கலக்காத உயிர் முத்தம் அது. அனிச்சையாய் அவன் கைகள் அவள் கைகளோடு கோர்க்க, நிலை உணர்ந்தவளாய் அவன் கைகளை விலக்கி பின்னே நடந்தாள்.

'நான் வரேன் பிரான்சிஸ்', ஒலிக்கு உதவாமல் உதடுகள் அசைந்தன..

'மனச தொட்டு சொல்லு இந்து, என்ன விட்டு போக உன்னால முடியமா?' அவன் மனதுக்குள் முணுமுணுத்தது அவள் காதுகள் அறியாவிட்டாலும், காதல் அறிந்தது.  பதில் ஏதும் இல்லாமல் தொலை தூர மேகமாய் மறைந்து போனாள்.

                                     ___________________________________
11-Oct-2013

ஒரு குடம் தண்ணீர் ஊற்றியும் அவன் எந்த சலனமும் இல்லாமல் போதையில் கிடந்தான். சௌந்தர் எரிச்சலாய் 'இவென் எப்பவும் இப்டிதானா?' என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டான்.

'ஆமா சார், பகல் குடிகார பய சார்'

'ம்ம்..எத்தன வருஷமா இவுங்கள தெரியும்?'

'அது இருக்கும் சார் மூணு வருஷம். கல்யாணம் ஆனதுல இருந்து இங்க தான் இருக்காங்க, அந்த பொண்ணு இந்துவோட அப்பா வாங்கி குடுத்த வீடு சார் இது, இந்து தங்கமான பொண்ணு, இவந்தான் காலிப் பய'

'ம்ம்..எங்க, அந்த டீச்சர் இப்போ?'

'தெரியல சார், ஊர்க்கு போனா கூட எங்க வீட்ல சொல்லிட்டு தான் போகும். ரெண்டு மூணு நாளா காணோம், என்னான்னு தெரியல, இந்த பய தொல்ல தாங்க முடியாம எங்கயும் போய்டுச்சோன்னு பயமா இருக்கு சார். இல்ல இவென் எதுவும் எழவு பண்ணிட்டானான்னு வேற கவலயா இருக்கு '

'சரி, நீங்க போங்க, இவன நான் பாத்துக்குறேன். எதுவும் வேணும்னா கூப்ட்டு விடறேன்'

'சரிங்க சார்', அதற்க்கு மேல் அங்கு இருக்க முடியாதென அறிந்து, குழப்பமாக வெளியே போனார் பக்கத்துக்கு வீட்டுக்காரர்.

குடி போதையில் இருக்கும் இவனால் எதுவும் பிரோஜனம் இல்லை என்று புரிந்தது. அவன் மேல் சந்தேகம் படும் படியும் எதுவும் தெரியவில்லை, மெல்ல தட்டினால் சுருண்டு விழுந்து விடுவான். வீட்டை முழுசுமாய் அலசுவதென்று முடிவு செய்து, ஒவ்வொரு அறையாய் நுழைந்தான். கொஞ்ச நேரத்தில் எதுவும் கிடைக்காமல் சலிப்பாய் திரும்பிய போது, ஓரத்தில் ஒரு இரும்பு பீரோ இருந்தது. யோசிக்காமல் அதனை திறந்தான், அதுவும் எந்த எதிர்ப்பும் இன்றி திறந்து கொண்டது. உள்ளே, பெருசாய் எதுவும் இல்லை. கீழ் வரிசையில் பழைய சேலைகள், நைட்டிகள், உள்ளாடைகள். நடு வரிசையில், சில நல்ல சேலைகள். அதை அகற்றி பார்த்தான், சில ரசீது காகிதங்கள். எல்லாவற்றையும் நகர்த்தி உள்ளே பார்த்த போது, மஞ்சள் நிறமாய் மாறி இருந்த ஒரு பேப்பர். அதை மெல்ல எடுத்தான், கொஞ்சம் நைந்த நிலையில் இருந்த பேப்பரை, பக்குவமாய் திறந்து பார்த்தான். கீழே கையொப்பம் கண்ணை கவர்ந்தது. 'காதலுடன், உன் பிரான்சிஸ்' பக்கத்தில் ஒரு ஹார்ட்-இன் தொங்கிக் கொண்டிருந்தது. சட்டென திரும்பி, பைக் நோக்கி நகர்ந்தான்.  பைக் பிரான்சிஸ் வீடு தேடிப் பறந்தது.
                                         ________________________________________
8-Jul-2013(3 மாதம் முன்னால்)

இந்து வழக்கம் போல் அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். மதிய சாப்பாட்டை டிபன் பாக்ஸ்ஸில் போட்டு அடைத்துக் கொண்டாள். காலை உணவு, தினமும் சாப்பிடும் பழக்கம் மறந்து சில வருடங்கள் ஆகி விட்டன. இன்று லேசாய் பசிப்பது போல் இருந்தது. சட்டியில் மீதமிருந்த லெமன் ரைஸ் கொஞ்சம் எடுத்து தட்டில் போட்டு ஒரு வாய் எடுத்து வைக்கும் போது 'உவ்வேஏ' என்று கேவலமான சத்தத்துடன் அவள் புருஷன் வாந்தி எடுத்தான்.. திருமணமாகி இவள் வாந்தி எடுத்தாளோ இல்லையோ, அவன் தினமும் எடுத்துக் கொண்டிருந்தான். அவளுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பாத் ரூமில் எடுப்பான், சுத்தம் செய்வது எளிதாய் போகும். பல நாட்களில் அவள் அதிர்ஷ்டம் இல்லாதவளாகவே இருந்தாள். சத்தத்தில் கூட நாற்றம் இருப்பது பலருக்கு புரியாது. தட்டில் இருந்த சோறு அருவருப்பாய் பட்டது. அப்படியே குப்பையில் போட்டுவிட்டு நகர்ந்தாள்.

கண்ணாடியை கடந்த போது, நெற்றி வெற்றாய் இருந்தது தெரிந்தது. வேகமாய் பைக்குள் இருந்து நீள பொட்டை எடுத்து வைத்துக் கொண்டாள். அந்த நீள பொட்டை ரசிக்க சில வருடம் முன்பு இரண்டு கண்கள் இருந்தன. கண்கள் தொலைந்து போனாலும், அதன் பார்வைகளை திரும்ப தராத இரவல் போல் சேர்த்து வைத்திருந்தாள். நினைவுகள் இன்னும் இனித்தன.'பிரான்சிஸ், எத்தனை அழகாய் அவனோடு குடும்பம் நடத்தி இருக்கலாம்' அவனோடு சேர்ந்து வாழ்வது போன்ற கற்பனைகளை அவள் ஒதுக்கி வைத்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன,, இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் அன்று ஏனோ மேலெழும்பின..மறுபடியும் 'உவ்வே', அவள் அங்கிருந்து கிளம்பினாள்.

பள்ளிக்கூடம் வழக்கம் போல் அவளை வரவேற்த்தது. முட்கள் நிறைந்த அவள் வாழ்க்கையில் கொஞ்சம் மகரந்தம் தூவியது இந்த பள்ளிதான். கை எழுத்து போட ஹச்.எம். அறையில் நுழைந்தவள் சிலை போல் நின்றாள். கண்கள் சொல்வதை மூளை ஏற்றுக் கொள்ள வில்லை. இதயம் ராக்கெட் வேகத்தில் துடித்தது. அவனே தான், அவன் எப்படி இங்கே! இதழ்கள் மொழி மறக்க, கண்கள் பேச எத்தனித்தன. 
' என்ன இந்து, அப்டியே நின்னுடீங்க?' ஹச்.எம் அன்பாய் கேட்டார். 
'ஒன்னும் இல்ல மேடம், ஏதோ தூசி விழுந்துடுச்சு'.
'பாத்து வரதில்லையா, சரி, இவர் பிரான்சிஸ் சகாயதேவன், நம்ம சுந்தரம் சார் 6 மாசம் கழிச்சுதான் வருவார். இவர் அது வரைக்கும் டெம்பரவரி யா நாலாங் கிளாஸ் பாடம் எடுப்பார். பிரான்சிஸ், இது இந்து, மூனாங் கிளாஸ் டீச்சர்.' என்று அறிமுகம் செய்து வைத்தார். தன்னை தனக்கே அறிமுகம் செய்து வைத்த ஹச்.எம் ஐ வேடிக்கையாய் நினைத்து விட்டு, 'வணக்கம்' என்று பட்டும் படாமலும் சொல்லி வைத்தான். அவள் மெதுவாய் முனகி விட்டு அங்கிருந்து வேகமாய் நகர்ந்தாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை, அன்று எதுவும் புலப்பட வில்லை. பாடத்தில் கவனம் செல்ல வில்லை. எந்த சலனமும் இல்லாமல் அவன் பக்கத்து அறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தது அவளுக்கு கேட்டது. 2 நாட்கள் ஓடியது, விசை கொடுத்த பொம்மை போல் அவள் இயங்கிக் கொண்டிருந்தாள்.  அவனிடம் பேச அத்தனை  ஆசை,ஆனால் துணிவு வரவில்லை. 3 ஆவது நாள் உணவு நேரத்தில் அவனே பேச வந்தான். 
'இந்து', அவன் அழைத்தது அவள் வாழ்வில் மறைந்து போன இசை மீண்டும் வந்தது போல் இருந்தது. வினாடி பொழுது கண்கள் கலந்தன. குழந்தைகளின் இரைச்சல் அவளை நிலத்திற்கு அழைத்து வந்தது. சுதாரித்துக் கொண்டு, சுற்றும் முற்றும் யாரும் பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டாள். 'இன்னும் அடுத்தவங்களுக்கு பயந்து தான் வாழ்ந்துட்டு இருக்கியா இந்து?'. அவன் வார்த்தைகள் சட்டென சுட்டன. வலியை மறைத்துக்கொண்டு, 'எப்டி இருக்க பிரான்சிஸ், உன்ன பாத்ததும் எவ்வளவு சந்தோசம் தெரியுமா?' மறுபடியும் அனிச்சையாய் அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டாள். 'எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல தெரியுமா'.
'ஏன் இந்து, நான் வந்தது உனக்கு கஷ்டமா இருக்கா?', கிண்டலாய் சிரித்தான்.
'என்ன பேசுற பிரான்சிஸ்!' சில நொடிகள் அமைதியாய் கடந்தன. அவனாய் எதுவம் பேசவில்லை.
'அது சரி, வேற ஊருக்கு போய்டதா சொன்னாங்க??'
'ஆமா, கொடைகானல் போய்டோம் எல்லாரும். வேற ஊர், வேற உலகம். ' அமைதியாய் சொன்னான்.

'ம்ம்...அப்புறம் எப்டி இந்த பக்கம்?' சட்டென ஏதோ நினைத்தவளாய், 'சாமி, ஏன் வந்தன்னு கேட்கலப்பா' என்றாள். அவள் இப்படி பேசி பல காலம் ஆகி விட்டது.

அவன் அமைதியாய் பதில் சொன்னான் 'நம்ம மேல அன்பு இருக்குறவுங்க நம்மள நினைச்சா நமக்கு தெரியும்னு சொல்லுவாங்க. நீ என்ன பத்தி நினைச்சன்னு தோனுச்சு, அதான் உன்ன பாக்க வந்துட்டேன்.'. 

அவள் முகம் மாறியது. அதை உணர்ந்தவனாய் ' கிண்டலுக்கு சொன்னேன் இந்து, டீச்சர் வேல காலின்னு விளம்பரத்த பாத்து வந்தேன், உன்ன பாத்ததும் பயங்கர சந்தோசம்'.

மறுபடியும் என்ன பேசுவதென்று புரியாமல் போக, 'சரி, சாப்ட வா, ஸ்டாஃப் ரூம் போலாம்' என்றாள். 'நமக்கு வெளில தான் சாப்பாடு, நீ கிளம்பு' என்று சொல்லிவிட்டு பட்டும் படாமலும் கிளம்பினான்.

                         ________________________________________
7-Oct-2013(ஒரு வாரம் முன்பு)
பிரான்சிஸ் வந்த  பின்பு,கடந்த மூன்று மாதங்கள் இந்துவின் நாட்கள் சக்கரம் கட்டிக் கொண்டு பறந்தன. இப்போதெல்லாம் அவள் புருஷனின் 'உவ்வே' அவள் காதுகளில் விழுவதே இல்லை. நாளுக்கு மூணு வேளை சாப்பிட தொடங்கி இருந்தாள். புதிதாய் சில புடவைகள் கூட எடுத்தாள். வெறும் பொட்டு வைக்க மட்டும் பார்த்திருந்த கண்ணாடியுடன் கணிசமான நேரம் உரையாடினாள். பள்ளியில் அங்கும் இங்கும் இயல்பாய் சிரித்துக் கொண்டார்கள், நேரம் கிடைக்கும் போது விளையாட்டாய் பேசிக் கொண்டார்கள். விளையாட்டு பேச்சு, சமூகம் அவளுக்கு போட்டுள்ள கோட்டை லேசாக தொடும் போதெல்லாம் அவள் விலக முயன்றாள். இருந்தாலும் இந்த மாற்றங்கள் அவளுக்கு பிடித்திருந்தன. நடைபாதைகள் வானவில்லாயின, குழந்தைகள் தேவதை ஆனார்கள், காற்று வாசமானது, உடல் எடை இழந்து பறந்தது.

நாட்கள் நகர நகர காலெண்டர் காகிதம் போல் அவளது வரையறைகள் மறைய தொடங்கின. அதை அவள் உணரத் தொடங்கியதும் பயம் பற்றிக் கொண்டது. அவளது புதிய சிறகுகளை, உலகம் எச்சில் துப்பி சிதைத்து விடும் என்று எண்ண தொடங்கினாள். ஒரு பக்கம் அவன், ஒரு பக்கம் உலகம், நடுவில் இரண்டாய் பிரிந்து ரத்தம் கசிந்து கொண்டு அவள். அவளது நிலைபாட்டை அவன் உணராமல் இல்லை, ஆனால் அதற்க்கு அவன் கவலை படுவதாக அவளுக்கு தெரியவில்லை. இது சரி இல்லை என்று அவளுக்கு பட்டது. இன்று அவனுடன் பேசி இதை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தாள். முடிந்தால், அவனை உடனே ஊரை விட்டு போக சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அவனுடன் இதெல்லாம் பேச அவளுக்கு நேரம் தேவை பட்டது. ஸ்கூலில் பேச முடியாது, ஊருக்கு வெளியில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு இடத்தில அவனை மாலையில் சந்திப்பதென முடிவு செய்தாள்.

காற்று இதமாய் வீசியது, அவனும் அவளும் அங்கே நிசப்தத்தின் சங்கீதத்தை ரசித்து கொண்டிருந்தனர். நேரம் கடத்த முடியாது, அவள் தொடங்கினாள். 
'ஏன் பிரான்சிஸ் ஏன், எதுக்கு என்னோட எடத்துக்கு வந்த நீ?', ஆற்றாமை, இந்த முறை அவளுக்கு.

'கரெக்ட் இந்து, நான் எதுக்கு உன்னோட எடத்துக்கு வந்தேன். பேசாம என் கூட வா, என்னோட எடத்துக்கு போலாம், நம்ம எடத்துக்கு போலாம்'. அவன் சுற்றி வளைக்காமல் நேரடியாக பேசுவான் என அவள் எதிர் பார்க்கவில்லை. 

'என்ன பேசுற பிரான்சிஸ், நீ மொதல இங்க இருந்து போய்டு. நீ நெனைக்கிற எதுவும் நடக்காது!'

' எல்லாம் நடக்கும் இந்து, நான் நெனைக்கிறது தான் நீயும் நெனைக்கிற, ஊருக்கு பயந்தது போதும் இந்து.'

'நான் முடிஞ்சு போன ஒரு கத, என்ன விட்டுட்டு நீ ஒன்னோட வழிய பாரு', அவள் சொல்லி முடிக்கையில், அவள் இதழ்கள் அவன் இதழ்களால் சிறை பிடிக்க பட்டன. ஆண்மையின் ஆளுமையை முதன் முதலில் உணர்ந்தாள். இத்தனை காலத்தில் அவன் காதல் கொஞ்சமும் குறைய வில்லை என்பதை அந்த முத்தம் அவளுக்கு உணர்த்தியது. எங்கோ ஒரு இடி சத்தம்... சட்டென அவனை தள்ளி விட்டாள். அவளது புத்தி தடுமாறியது, 'உன்ன கெஞ்சி கேக்குறேன் பிரான்சிஸ், நீ போய்டு ' என்று கதறினாள். அவன் கண்கள் கோபத்தில் சிவந்தன. இத்தனை கோபமாய் அவனை அவள் பார்த்ததில்லை. பயத்தில் பின்னோக்கி நடந்தாள். அவன் விடாமல் முன்னேறினான், அந்த ஆண்மை அவளை பயத்திலும் சிலிர்க்க வைத்தது. அவள் அருகில் வந்து, அவள் கழுத்தை அழுத்தமாய் பற்றி, ஆவேசமாய் கேட்டான் ' மனச தொட்டு சொல்லு இந்து, என் கூட இருக்க உனக்கு இஷ்டம் இல்ல???'
                            __________________________________
12-Oct-2013
சனிக்கிழமை என்பதால் பள்ளியில் யாரும் இல்லை. ஹச்.எம் மை பள்ளிக்கு வர சொல்லி தானும் அங்கு வந்தான் சௌந்தர். 
'என்னய்யா, இந்து எங்க இருக்கான்னு தெரிஞ்சுடுச்சா?'

'இல்ல அத்த, ஆனா, அந்த ஆள் பிரான்சிஸ் குடுத்த அட்ரெஸ் போலி, அப்டி ஒரு எடம் இல்லவே இல்ல'

'என்னய்யா சொல்லற, அந்த பையன் ரொம்ப நல்லவனா இருந்தானே'

'அவென் எனக்கு சரியா படல அத்த, நான் ஸ்டேஷன் ல சொல்லி விசாரிக்க சொல்லி இருக்கேன். அந்த பொண்ணோட போட்டோ அவ வீட்ல இருந்து எடுத்தேன், அவனோட போட்டோ இருக்குதா ?'

'ஒரு நிமிஷம் யா, வேலைக்கு போட்ட அப்ளிகேஷன் ல இருக்கும்.', எழுந்து சென்று ஒரு கோப்பை புரட்டி பார்க்கையில்அதிர்ச்சியானார், ' சௌந்தரு, அந்த அப்ளிகேஷன் மட்டும் காணல யா'.

'நான் நெனச்சது சரியா இருக்கு அத்த, அந்த ஆளு எதோ பிளான் போட்டுதான் வந்து இருக்கான். அந்த பொண்ணுக்கும் அவனுக்கும் முன்னாடி பழக்கம் இருந்திருக்கு, அத பத்தி  அப்புறம் சொல்றேன் அத்த. வேற எதுவும் போட்டோ இருக்கா?'

'போன மாசம் ஈ.ஓ(E.O) வந்த போது ஒரு போட்டோ எடுத்தோம், ஒரு நிமிஷம்', என்று மறுபடியும் இன்னொரு கோப்பை எடுத்து புரட்டினார். இந்த முறை முகம் இன்னும் மிரண்டது, சட்டென சௌந்தர் அந்த கோப்பை வாங்கி பார்த்தான். ஒரு முகம் மட்டும், யாரோ உப்புக் கல்லால் தேய்த்தது போல் மறைந்திருந்தது. 

'அவென் கிரிமினலா வேல செஞ்சிருக்கான் அத்த, இந்த போட்டோ வையும் டேமேஜ் பண்ணி இருக்கான் அவன். இவ்வளவு வேல பண்ணவன்,  ஒன்னு அந்த பொண்ண ஏமாத்தி கூட்டிட்டு போயிருப்பான், இல்லாட்டி கடத்திட்டு கூட போயிருப்பான்.' 
சௌந்தர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய செல்லுலார் கனைத்தது. அதை காதிற்கு கொடுத்தவன், ' என்னது,.... எங்க???.... சரி, நான் 30 நிமிசத்துல வரேன் ' என்று சொல்லி அணைத்தான். முகத்தில் குழப்பமும் பதற்றமும் நன்றாய் தெரிந்தது. 

'அத்த, நீங்க என் கூட  அர மணி நேரம் ஒரு எடத்துக்கு வரீங்களா?'

'என்னய்யா, எதாவது பிரச்சனையா?' என்று பயத்துடன் கேட்டார்.

'ஒன்னும் இல்ல அத்த, நீங்க வாங்க' என்று சொல்லி இருவரும் கிளம்பினர்.

அரை மணி நேரத்தில், ஊருக்கு வெளியில் ஒரு தோப்புக்கு இருவரும்  வந்து சேர்ந்தனர். ஆறேழு ஆட்கள் கூடி பதட்டமாய் பேசிக் கொண்டிருந்தனர் , அவர்களை தாண்டி ஏதோ மூடி வைக்க பட்டிருந்தது. போலிஸ் ஒருவர் வேகமாய்  ஓடி வந்து, 'அந்த பொண்ணுதான்னு நெனைக்கிறேன் சார், மொகம் அவ்வளவு சரியா தெரியல, ஆனா உடம்புல எதுவும் ரத்த காயம் இருக்குற மாதிரி தெரியல. கண்ண மூடி அமைதியா தூங்கிட்டு இருக்குற மாதிரி இருக்கு' என்று ஒப்பித்தார்.

'அத்த , பயப்படாதீங்க, இது அந்த பொண்ணு இந்து வான்னு மட்டும் பாத்து சொல்லுங்க'. ஹச்.எம் முகத்தில் பயமும், பதட்டமும் வியர்வையாய் வழிந்தது. மெதுவாய் மூடி இருந்த துணியை விலக்கினார்கள். பார்த்ததும், ஹச்.எம் அப்படியே மயங்கி  விழுந்தார். சௌந்தர் அவரை தாங்கிப்பிடிக்க, இன்னொரு போலீஸ் வேகமாய் சென்று ஜீப்பில் இருந்து பாட்டில் ஒன்று எடுத்து  வந்தார். தண்ணீர் அடித்து அவரை எழுப்பியதும், லேசாய் கண் விழித்தவர் 'இந்து.....' என்று கதறி அழ தொடங்கினார்.
                       _____________________________________


அதே நாள், வேறொரு இடத்தில் 

அமைதியான காற்று சுகமாய் இருந்தது.
'இந்த ஒரு வாரம் போல நான் எப்பவும் சந்தோசமா இருந்ததில்ல பிரான்சிஸ்'

'இனி நம்மள பிரிக்க யாராலயும் முடியாது இந்து' . சந்தோசமாய் கண்ணடித்தான்.

'அது சரி, அன்னைக்கு அவ்வளவு கோபமா என் கூட வா ன்னு கூப்டயே, நா சரின்னு சொல்லாம முடியாதுன்னு சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்ப?'

'நீ அப்டி சொல்ல மாட்டன்னு எனக்கு தெரியும் இந்து. ஒரு வேல, நீ அப்டி சொல்லி இருந்தா, உன்ன தொந்தரவு பண்ணாம மறுபடியும் தனியா இங்க வந்திருப்பேன்'

'சரியான லூசுடா நீ, நான் போன தடவ பிரிஞ்சு போன போதே நீ என்ன தூக்கிட்டு போய் இருந்தா இவ்வளவு பிரச்சினையே இல்ல. பெரிய நல்லவனாட்டம் இந்த தடவையும் விட்டுட்டு வந்திருப்பானாம். நான் இப்ப எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா. இனி எப்பவும் உன் கூடத்தான்..'

இருவரும் சிரித்துக் கொண்டிருக்கையில் நட்சத்திரங்கள் அவர்களைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. இருவரும் பூப் போல் எழுந்து நடக்க தொடங்கினர். கல்லறைக்  காடு  அமைதியாய் ,ஆனந்தமாய் இசைத்துக் கொண்டிருந்தது. அவர்கள் அமர்ந்திருந்த கல்லில் அழகிய பூக்கள் சிதறிக் கிடந்தன. பூக்களுக்கு கீழே அழுத்தமாய் பதித்திருந்தது ' பிரான்சிஸ் சகாயதேவன், தோற்றம் : 5-Feb-1987, மறைவு : 6-Jan-2011'.



சனி, 14 செப்டம்பர், 2013

'ஆனந்த யாழ்' பாடல் எனது வரிகளில்

தங்க மீன்கள் திரைக்காவியத்தில் வரும்  'ஆனந்த யாழ்' மெட்டில் மனம் சுற்றிக் கொண்டே இருந்தது. நானும் பெண்ணை பெற்ற அப்பனானதால் அந்த மெட்டிற்கு ஒரு பாட்டெழுத தோன்றியது. முயற்சி செய்திருக்கிறேன்.

வானவில் தேரில் ஏற்றுகிறாய்,
எந்தன் வானத்தில் பேரொளி ஊற்றுகிறாய்.
காற்றினில் ஈரம் கூட்டுகிறாய்,
எந்தன் கால்களில் சிறகை பூட்டுகிறாய்.
ஒரு பாலை மணலில் பூக்களை நிரப்பி,
சோலைகள் பரப்பிய சாரலும் நீ.
எந்தன் ஆயுள் முழுக்க கண்ணுக்குள் சுமப்பேன்,
அன்னையுமாக்கினாய் என்னையே நீ.
இந்த பூமியில் எதுவும் தேவை இல்லை,
நம் கூட்டுக்குள்ளே  வரும் சொர்க்கமடி.
நம் வாழ்க்கைக்கு வேண்டிய செல்வம் எல்லாம்,
தினம் புன்னகையாலே தந்திடு நீ.

கண்களில் தெரியும் தென்றலடி,
என் கைகளில் கிடைத்த திங்களடி ,
வண்ணத்து பூச்சியின் வண்ணமடி,
வெண்பனி உந்தன் கன்னமடி.
தினம் பார்வைக்குள் புதைத்து, பாதங்கள் பதித்து,
மோட்சங்கள் கொடுக்கும் தெய்வமடி.
உன் தாமரை விழியின் தாள் திறக்க பல சூரியன்கள் தினம் பூக்குமடி.

                                                                      (வானவில் தேரில்...)

மேகத்தின் மேலொரு வீடு கட்டி,
ஆடிடலாம் நாம் கண்ணை பொத்தி,
புள்ளினம் போலே இறக்கை கட்டி ,
போய் வரலாம் நாம் விண்ணை முட்டி.
எந்தன் பூமகள் தேகம் நோவெடுத்தால் நான்,
ஊஞ்சலாய் சுமப்பேன் கையை கட்டி.
உந்தன் பொன்விழி தூக்கம் கண்டுவிட்டால்,
நான் மெத்தை செய்வேன் என் தோள்கள் தட்டி.

                                                                  (வானவில் தேரில்...)


வியாழன், 12 செப்டம்பர், 2013

V2 (Part 4/ பாகம் நான்கு - இறுதிப் பாகம் )

தூக்கம் கலையத் தொடங்கியது. ஆனால் கண்களைத் திறக்க தோன்ற வில்லை. விழித்த பின்பும் எத்தனை நேரம் கண்களை மூடியே இருப்பது. இத்தனை நேரம் சுகமாய் இருந்தது இப்போது சுமையாய்த் தெரிந்தது. மெல்ல கண்களை திறந்தேன். திறந்ததும் சிறிது அதிர்ந்து விட்டேன். நேற்று பார்த்த அந்த விகாரனைப் போல் இன்னொருவன், இன்னும் கொஞ்சம் பெரியதாய். "வணக்கம் நண்பரே!". ஆரம்பித்து விட்டார்கள் நல்லவர்கள். வணக்கம் சொல்லும் மன நிலையில் நான் இல்லை. இவர்களை சண்டை இட்டும் ஜெயிக்க முடியாது, அடங்கி போவதை விட வேறு வழியும் இல்லை. அந்த மாமிச மலை தொடர்ந்தது. "நண்பரே, உங்கள் குழப்பங்களை நானறிவேன். எங்களை மண்ணிக்க வேண்டும். நாம் எல்லாம் காலத்தின் கருவிகள். சரி, தவறு என்பதில் நமக்கு இருக்கும் முரண் தான் பல சமயம் நம் வாழ்க்கையை சுவாரசியம் ஆக்குகின்றன." நான் தத்துவம் கேட்கும் நிலையில் இல்லை, கேட்காமல் இருக்கும் இடத்திலும் இல்லை.

அவன் தொடர்ந்தான்."உங்கள் மனதுக்குள் நிறைய கேள்விகள் இருக்கும். என்னால் இயன்ற அளவு அதற்க்கான பதிலை கூறுகிறேன். பொறுமையாய் கேளுங்கள். நாங்கள் உங்கள் கிரஹத்தை கண்டு பிடித்தது உங்கள் மனிதர்களால் தான். அவர்கள் வேற்று கிரஹ ஆராய்ச்சிக்காக பல அலைவரிசையில் விண்வெளி நோக்கி செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். நாங்களும் அப்படி ஒரு ஆராய்ச்சியில் இருந்தோம். ஆனால் உங்களை விட நாங்கள் அறிவியலில் பல மடங்கு முன்னால் இருக்கிறோம். எங்களுடைய சக்தி வாய்ந்த கருவிகள் வெகு தூரத்திலேயே உங்களுடைய அலை வரிசைகளை கண்டு கொண்டது. உங்கள் கணக்குப் படி சுமார் 50 ஆண்டுகள் முன்னால் எங்கள் கிரஹவாசிகள் ஒரு குழுவோடு அங்கே வந்து சேர்ந்தனர். அன்று முதல் அங்கே பல விதமான ஆராய்சிகள் செய்து வருகிறோம்.  எங்கள் ஆராய்ச்சியும், ஆரம்பத்தில் நாங்கள் அறிந்து கொண்ட விஷயங்களே இத்தனை ஆண்டுகளாக உங்கள் இடத்தில் எங்கள் தேடல்கள் தொடர காரணம். நம் இருவரின் கிரஹங்களும் அதிசயிக்கும் வண்ணம் பல ஒற்றுமைகளை கொண்டது. இரண்டு இடத்தில் வாழும் உயிர்களுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. தாவரங்கள், நகரும் உயிர்வகைகள் , அவைகள் சுவாசிக்கும் விதம், ஏன், அவைகளின் செல்களின் மூலக் கூறுகள் கூட கிட்டத்தட்ட ஒன்று தான். ஆக்சிஜன், ஹைட்ரஜன், கார்பன், நீர் என்று நமது உயிரின் அடிப்படைகள் ஒரே மாதிரியானவை. இரண்டு கிரஹத்தின் பருவ மாற்றங்கள், இரவு பகல், காற்று மண்டலங்கள்  கூட ஒத்தே இருக்கிறது. இது அதிசய ஒற்றுமை. ஆனால், எங்களுக்கு மிகவும் தேவைப்பட்ட ஒற்றுமை. "

எனக்கு புரிந்தது போலவும் இருந்தது, புரியாதது போலவும் இருந்தது. இவனுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமையும் எனக்கு தெரியவில்லை. நான் அவனை குழப்பமாய் பார்த்தேன். அவனுக்கு நான் நினைத்தது என்ன புரிய போகிறது என்று நினைக்கையில் அவன் மீண்டும் பேசத் தொடங்கினான்.       "நண்பரே, நமக்குள் இருக்கும் வேற்றுமை பற்றி நீங்கள் நினைக்கலாம்.  ஆனால் அதெல்லாம் நாம் வாழும் இடங்களுக்குள் இருக்கும் சிறிய வேற்றுமைகளே. உங்கள் கிரஹத்தின் புவி ஈர்ப்பு எங்களுடையதை விட அதிகம், எங்கள் ஆய்வின் படி நமக்குள் உள்ள உயர வேறுபாட்டிற்கு அதுதான் முக்கிய காரணம். இந்த விண்கலத்தில் இந்த அறை மட்டும் உங்கள் கிரஹம் போல் இருப்பதற்காக செயற்கை ஈர்ப்பு விசை அமைத்துள்ளோம்.  நாம் இருவரும் ஆக்சிஜன் தான் சுவாசிக்கிறோம், ஆனால் எங்கள் கிரஹத்தில் கார்பன் டை ஆக்சைட்  மிகவும் அதிகம். அதனால் நாங்கள் எங்களை செயற்கையாய் மாற்றிக் கொண்டதே இந்த பச்சை நிற உடம்பு. எங்கள் தோல் தாவரங்கள் போல் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு அதிலிருந்து எங்களுக்கு வேண்டிய ஆக்சிஜனை  உற்பத்தி செய்து விடும். எங்கள் நாசிகளை  அதிகமாய் நாங்கள் பயன்படுத்துவது கிடையாது. உங்கள் கிரஹத்தில் ஆக்சிஜன் நிறைய இருப்பதால் நீங்கள் இயல்பாக நாசிகளில் சுவாசிக்கிறீர்கள்.  எங்கள் கிரஹத்தில் கதிர் வீச்சு அதிகம், அதனால் எங்கள் தோல் அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் கடினமாய் இருக்கிறது. நீங்கள் எங்கள் கிரஹத்தில் மாற்று உடை அணிய வேண்டி இருக்கும். உங்களுக்கு தரை இறங்கியதும் அதை தருகிறோம்."

எனக்கு எல்லாம் ஒரு கதை போல் இருந்தது. அவன் சொன்ன ஒற்றுமைகள் எனக்கு கொஞ்சம் பயமாகவும் இருந்தது. இப்போது என்னை வைத்து இவர்கள் என்ன செய்ய போகிறார்கள், இத்தனை நாளாய் என்ன செய்தார்கள் என்ற அச்சம் கண்களில் தெரிந்தது. நான் கேட்டு விட எத்தனித்தேன். 'இப்போது உங்களுக்கு நான் எதற்கு?' என்று தடுமாறிக் கொண்டே கேட்டு விட்டேன். அந்த பூதப் பாண்டியன் பொறுமையாய் பேசத் தொடங்கினான். " நண்பரே, நமக்குள் நிறைய ஒற்றுமை உண்டென்பதை சொன்னேனே. அதுதான் காரணம். உங்கள் உடலை சோதனை செய்து நாங்கள் உங்கள் கிரஹத்தில் வாழ முடியுமா என்று ஆராய்ச்சி செய்கிறோம்". எனக்கு தூக்கி வாரி போட்டது. இவர்கள் நமது கிரஹத்தை எடுத்துக் கொள்ள போகும் முயற்சி இது. அவன் தொடர்ந்தான். "நீங்கள் அஞ்ச வேண்டாம். உண்மையில் நாங்கள் உங்களோடு சேர்ந்தே வாழ முடியுமா என்பதே ஆராய்ந்துக் கொண்டு இருக்கிறோம். உங்கள் உயிரணுவோடு எங்கள் உயிரணுவை சேர்க்க கூட பார்த்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் கிரஹத்தில் எதையும் அழிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை." . இப்போது உண்மையிலேயே மிகவும் கனிவாய் பேசினான் அவன். "ஒரு விஷயம் சொன்னால் உங்களுக்கு இன்னும் தெளிவாய் புரியும். உங்கள் இனத்தோடு எங்களுக்கு இருக்கும் ஒற்றுமையை அறிந்ததில், நாங்கள் எங்கள் பழைய கோப்புகளை ஆராய்ந்தோம். சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் எங்கள் இனம் இன்று நீங்கள் இருப்பது போலவே இருந்திருக்கிறோம். உலகத்தை தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வருவதாக நினைத்த எங்கள் முன்னோர்கள் இயற்க்கைக்கு புறம்பாய் சென்றதில் கிட்டத்தட்ட அழிந்து போனார்கள். எஞ்சிய சிலர் அறிவின் துணை கொண்டு எப்படியோ வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எங்கள் உலகம் இன்னும் சில நூறு வருடங்களுக்கு மேல் உயிர் வாழ ஒத்துழைக்காது. அதனால் தான் புதிய வீடு தேடி உங்களை ஆராய்ந்து வருகிறோம். எங்கள் இணம் கற்றுக் கொண்ட  பாடங்கள் இனி எங்களை  இயற்க்கைக்கு எதிராய் எதையும் அழிக்க விடாது". அந்த உருவம் கொஞ்சம் உருக்கமாய் நடந்து ஜன்னலின் விசையை கீழே அழுத்தியது. ஜன்னல் வழியாக கொஞ்சம் தூரத்தில் சிகப்பு நிறத்தில் ஒரு கிரஹம் தெரிந்தது. "நண்பரே, அதோ தெரிகிறதே, அதுதான் எங்கள் கிரஹம். பூமி என்று அதனை அழைப்போம். ஹோமோ சேப்பியன்ஸ் என்று அழைக்க பட்ட இணத்தின் தொடர்ச்சி நாங்கள், க்லோரோ  சேப்பியன்ஸ்".

சிகப்பு பூமி சத்தமின்றி எங்களை வரவேற்றுக் கொண்டிருந்தது.

                                                                                                                                          முற்றும்

திங்கள், 9 செப்டம்பர், 2013

கூர் பார்வையாள்

நாவின்றி,
பாவின்றி,
மொழியின்றி
ஒலியின்றி,
பாடல் கேட்டேன்
உன் பார்வையிலே

நீ,
வெட்டிப் போட்ட நகத்தின் பிறைகள்,
கட்டி எறிந்த சாக்லேட் உறைகள்,
எட்டிக் கிழித்த இலையின் குறைகள்,
இத்தனை பொறுக்கியவர் பலரின் நடுவில்,
உன் பார்வை மட்டும் சேகரிப்பவன் நான்.

நிகரென்று நின்றாலே,
புவி ஈர்ப்பும் தோற்று போகுமே
தவிப்போடு நிலவும் தேயுமே,
கவி தேடி மொழியும் ஏங்குமே,
அவிக்கின்ற கதிரும் காயுமே,

மறுப்போடு தவிர்த்தாலும்,
வெறுப்போடு எரித்தாலும்,
உயிர் தைக்கும் வித்தையாலே,
என் உளம் தொட்ட பார்வையாளே !!!

திங்கள், 2 செப்டம்பர், 2013

V2 ( Part 3 / பாகம் மூன்று )

நிஜமாகவே நடப்பது போல் கனவுகள் வருமே! இது அப்படி ஒன்றாக இருக்க வேண்டும். நான் கண்களை திறக்கும் போது எனது அறையில் , பியா வின் அருகில் இருக்க போகிறேன். தைரியம் நிறைய வரவழைத்து கண்களை திறந்து பார்த்தேன். இதயத்தின் ஓலங்கள் எல்லாம் தொண்டையில் வந்து அடைத்தன. நான் அதே விசித்திர அறையில் தான் இருக்கிறேன். அப்படியென்றால் நான் மயங்கியது, அதற்க்கு முன்னால் கேட்டது எல்லாமே நிஜம். ஒரு வேளை என்னோடு யாரவது விளையாடுகிறார்களோ? ரே யின் வேலையாய் கூட இருக்கலாம். ஆனால் என் உடல் உண்மையில் அல்லவா இளைத்திருக்கிறது. ஒரே நாளில் அதற்கு வாய்ப்பில்லையே. நான் நாள் கணக்கில் தான்  இங்கே இருந்திருக்க வேண்டும். மீண்டும் அந்த எரிச்சலூட்டும் குரல். நான் விழிப்பதை எப்படி தெரிந்து கொள்கிறாளோ சதிகாரி. " நண்பரே, நலமாக உள்ளீர்களா? ". இப்போது அவளை கொல்ல வேண்டும் போல் இருந்தது. 'என்னை கொடுமைப் படுத்தாதீர்கள். என்னோடு விளையாட இது நேரமில்லை. நான் வீட்டிற்கு செல்ல வேண்டும். தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்.' என்னை அறியாமல் நான் அழுதிருந்தேன். "நண்பரே, மறுபடியும் மண்ணியுங்கள். நீங்கள் வீட்டிலிருந்து நினைத்து பார்க்க முடியாத தூரத்தில் இருக்கிறீர்கள். உங்களை தொந்தரவு செய்வதற்கு மண்ணிக்கவும். உங்களை உங்கள் வீட்டில் மறுபடியும் விட்டு விடுவோம். நம்புங்கள். ஆனால் , உடனே அதை செய்ய முடியாது. அது வரை உங்கள் ஒத்துழைப்பு எங்களுக்கு வேண்டும்.".  குழப்பங்கள் அதிகமானாலும், மறுபடியும் வீட்டிற்கு போக முடியும் என்பது கொஞ்சம் நம்பிக்கையை தந்தது.


இப்போது நான் குழம்பிக் கொண்டிருந்தால் திரும்பிப் போவதை பற்றி யோசிக்க முடியாது. முதலில் நான் நிதானம் அடைய வேண்டும். பொறுமையாக இருந்தால் தான் உண்மைகள் அனைத்தும் அறிய முடியும். எதுவானாலும் அதை உண்மை இல்லை என்று மறுப்பதில் புண்ணியம் இல்லை. உண்மையை ஏற்று கொள்ளுவது தான் இப்போதைக்கு எனக்கான முதல் உதவி. கொஞ்சம் உறுதியோடு 'நீங்கள் சொல்லும் எதுவும் என்னால் நம்ப முடியவில்லை. இப்போது நான் எங்கிருக்கிறேன்? நீங்கள் யார்? நான் உங்களை பார்க்க வேண்டும்' என்று சொன்னேன். அந்த குரல் வழக்கமான பொறுமையுடன் "நீங்கள் எங்களைப் பார்க்கத்தான் போகிறீர்கள். இப்போது நான் சொல்வதை நம்பிக்கையோடு கவனமாய் கேளுங்கள். நாம் இப்போது இருப்பது ஒரு விண்வெளி விமானத்தில். நாம் ஒருவருக்கொருவர் வேற்று கிரஹவாசிகள் . உங்கள் கிரஹத்தில் இருந்து கிளம்பி உங்களின் கணக்குப்படி 260 நாட்களும், எங்களுடைய கணக்கின்படி 420 நாட்களும் ஆகின்றன. எங்களுடைய 2 நாட்களில், நாம் எங்களுடைய கிரஹத்தை அடைந்து விடுவோம். சில பரிசோதனைகளுக்காக தான் நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள். அதற்க்கு உதவும் பொருட்டே உங்களை மயக்கத்தில் வைத்திருந்தோம்.  நாங்கள் எங்கள் கிரஹத்தை அடையும் போது நீங்கள் விழித்து இருப்பது எங்கள் பரிசோதனைகளில் ஒன்று. அதற்காகவே இப்போது நீங்கள் மயக்கத்தில் இல்லை. எங்கள் குழுவின் தலைவர் உங்களை பார்க்க இன்னும் சில நேரத்தில் வர வேண்டும்.  அவரிடம் உங்களுடைய கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள். இப்போதைக்கு நீங்கள் என்னை நம்ப வேண்டுமென்றால், உங்கள் படுக்கைக்கு நேர் எதிரில் உள்ள அந்த விசையை கீழ் நோக்கி திருப்புங்கள். ஜன்னல் திறக்கும். ஆனால் அதனால் அண்ட வெளியின்  கதிர் வீச்சு அபாயம் அதிகமாகும். ஜன்னல் கொஞ்ச நேரத்தில் தானாக மூடிக்கொள்ளும். இருந்தாலும் அங்கே ரொம்ப நேரம் நிற்க வேண்டாம். ". மந்திரம் போல் அனைத்தையும் கொட்டிவிட்டு நின்றுவிட்டது அந்தக் குரல். 

நான் இருப்பது வேறு ஒரு உலகத்தில் என்பதை நம்ப மறுக்கும் மனதிற்கு புரிய வைக்க முயற்சி செய்தேன். உண்மையை மறுப்பதில் பொய்யான சந்தோஷம் கிடைக்கலாம், நிலையான அமைதி கிடைக்காது. அவள் சொன்ன அந்த விசையை நோக்கி நடந்தேன். மெல்ல அதைத் திருப்ப முயற்சி செய்தேன். என் கைகளின் வலு எங்கே போனது? விசையை திருப்புவது மிகவும் சிரமமாக இருந்தது. உடலின் மொத்த வலுவும் தேவைப் பட்டது. விசை கீழிறங்கி, ஒரு திரை விலகுவது போல் அங்கே இருந்த சுவர் திறந்தது. கண்ணாடி வழியாக நான் பார்த்தது மிகப் பெரிய மாயை. எங்கும் திறந்த வெளி. கோடிக்கணக்கில் ஒளிக் கற்றைகள். கனவுலகம் என்று சொல்லுவார்களே. இதுவாகத்தான் இருக்க வேண்டும். இத்தனை குழப்பத்திலும் இந்த பிரமாண்டம் என் மனதில் இனம் புரியாத ஒரு அமைதியைத் தந்தது. அதற்குள் மேலே இருந்த விளக்கு மின்னத்தொடங்கியதும், ஜன்னல் மூடிக் கொண்டது. ஒன்று நிச்சயம். நான் வேறு கிரஹ மனிதர்களோடு எங்கோ போய் கொண்டிருக்கிறேன். இப்போது, என் வீட்டிற்கு செல்வதை விட, உயிரோடு இருப்பதே முக்கியமாய் பட்டது. ஏனோ பியாவும் என் காதலியும் இப்போது தூரத்துப் புள்ளியாய் ஆனார்கள். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான் இந்த நேரத்தில் எனது முதல் குறிக்கோள். ஆழமாய் ஆனால் வெறுமையாய் யோசித்துக் கொண்டிருக்கையில் சதிகாரி மீண்டும் அழைத்தாள்."நண்பரே, உங்கள் குழப்பங்கள் கொஞ்சம் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன். ". அவள் இப்போது ஆட்டி வைக்கும்இடத்திலும் நான் ஆடும் இடத்திலும் இருக்கிறோம். அவள் அதிகாரமாய் சொல்வதைக் கூட நான் அன்பாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். என்னுடைய பதிலுக்கு காத்திருக்காமல் அவள் தொடர்ந்தாள்.  "உங்கள் உடம்பிற்கு வேண்டிய உணவினை மருந்து வடிவில் கொடுத்திட எங்கள் விஞ்ஞானி ஒருவர் வருவார். தயவு செய்து ஒத்துழையுங்கள்.". அடிப் பாவி, தயவு செய்தா! எனக்கு வேறு வழி என்ன உள்ளது. நான் உயிரோடு இருப்பதற்காக தான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்ற எண்ணம் விசித்திரமாய் இருந்தது. அப்போது ஒரு பக்க சுவற்றில் இருந்து பிளவொன்று தோன்றியது.  இந்த அறையின் கதவுகள் எல்லாமே சுவர் போலவே அமைத்திருக்கிறார்கள் 'நண்பர்கள்'. 

மிகவும் உயரமான ஒரு உருவம் உள்ளே வந்தது. அதைப் பார்த்ததும் அனிச்சையாய் பயம் தொற்றிக் கொண்டது. இதற்கும் தலை, உடல், கால் அமைப்பே இருந்தது, ஆனால் மிகவும் விகாரமாக. பச்சை உடம்பு, பாறை போன்ற தோல், அங்கங்கே மயிரா கயிறா என்று அறிய முடியாத எதோ ஒன்று. உடலுக்கு பொருத்தமில்லாத சிறிய கண்கள், மூக்கை வேறு காணோம். இரண்டு துளைகள் மட்டும் இருந்தது. அதன் நடை வித்தியாசமாய் தெரிந்தது. உடம்பை கஷ்டப் பட்டு நகர்த்துவது போல் இருந்தது. கைகளும் விரல்களும் அமைப்பில் என்னுடையது போல் இருந்தாலும், மிகவும் பெரியதாய், உலோகம் போல் இருந்தது. "நண்பரே, உங்கள் படுக்கையில் படுங்கள்".  உருவத்தை போலவே குரலும் விகாரமாய் இருந்தது. சதிகார சண்டாளர்கள், என்னை கடத்தி வந்ததில்லாமல் நண்பரே என்று சொல்லியே என்னைக் கொல்கிறார்கள். திடீரென்று என் செல்லப்பிராணி பியா நினைவுக்கு வந்து போனாள். ஒரு வேலை அவளும் என்னை இப்படித்தான் நினைத்திருக்கலாம். நான் அமைதியாய் படுக்கையில் சாய்ந்தேன். அதன் சொர சொர கைகளால் என் வாயை திறந்தது. அதன் முகத்தை என் அருகில் கொண்டு வந்தது. ஐயோ! அதன் வாயை என் வாயில் வைத்து விடுமோ! நினைக்கும் போதே குமட்டியது. நல்ல வேலை, பைப் போல் எதையோ என் வாயில் வைத்தது. ஒரு சிறிய பொத்தானை அழுத்தியதும், என் தொண்டைக்குழிக்குள் எதோ நகர்ந்து சென்றது. "முடிந்தது, நான் கிளம்புகிறேன். ஓய்வு எடுங்கள் நண்பரே! வருகிறேன்". விருந்தோம்பல் வேறு. எரிச்சலாய் வந்தது. பலமாய் கத்திக் கொண்டே அழ வேண்டும் போல் இருந்தது. ஆனால் அது கூட முடியவில்லை. என்னத்தை கொடுத்துத்  தொலைத்தானோ, தூக்கம் கண்ணை சொருகிக் கொண்டு வந்தது. அப்படியே.........


                                                                                                                  பாகம் நான்கு

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

V2 ( Part 2 / பாகம் இரண்டு )

தலை முழுதும் பாரமாய் இருந்தது. உடல் எங்கும் சோர்வு. என்னை சுற்றி எதோ 'விஷ்ஷ் ' என்ற சத்தம் கேட்டுக் கொண்டே இருப்பது போல் இருந்தது. இது வரை கேட்டிடாட ஒரு சத்தம். அனால், நான் இப்போது கண்டஹவில் அல்லவா இருக்க வேண்டும். பியா!! எங்கே போனாள்? நான் ஒரு வேளை மயங்கி இருக்க வேண்டும். அவள் என் பக்கத்தில் தானாகவே வந்திருப்பாள். கண்கள் திறந்து பார்க்க எத்தனிக்கிறேன். முடியவில்லை. வேறு வழி இல்லை. நான் கண்களை திறந்துதான் ஆக வேண்டும். பியாவை கூட்டிக் கொண்டு சீக்கிரம் வீட்டிற்கு செல்ல வேண்டும். ரே யோடு சவால் வேறு விட வேண்டும். நேரம் இல்லை, சீக்கிரம் விழிக்க வேண்டும். ஒரு வேலை ரொம்ப நேரம் ஆகி இருந்தால் வீட்டில் வேறு பதட்டம் ஆகி இருப்பார்கள். என்னால் முடியும். 'கண்களே, உதவி செய்யுங்கள்'. உள்ளுக்குள் கெஞ்சினேன்.கொஞ்சமாய் கண்கள் திறந்தன, ஆனால் பார்வைக்கு எதுவும் சரியாய் புலப் படவில்லை. வெளிச்சம் மிகவும் குறைவாய் இருந்தது. ஐயோ!! இரவாகி விட்டதா? கண்களை அகலத் திறந்தேன். சுற்றிலும் மெல்லிய வெளிச்சம். கண்களுக்கு மேலே வானம் அல்லவா தெரிய வேண்டும். எட்டும் தூரத்தில் வானம் இருக்க வாய்ப்பில்லையே. இது காடில்லை. ஏதோ மெத்தை மேல் இருக்கிறேன். இது ஒரு வீடாய் இருக்க வேண்டும். யாரேனும் என்னைக் கண்டெடுத்து இங்கே அழைத்து வந்திருக்க வேண்டும். பியா வும் இங்கு தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு சீக்கிரம் கிளம்ப வேண்டும்.


உடலை அசைப்பது கடினமாய் இருந்தது. இத்தனை சோர்வு எப்பொழுதும் இருந்தது கிடையாது. தலையை தூக்கிப் பார்த்தேன். ஏதோ வீட்டின் அறை போல் இருந்தது. ஆனால் மிகவும் எளிமையாய் இருந்தது. அறைக்குள் வேறு எதுவும்  பெரிதாய் இல்லை. கால்களை அசைக்க முடிந்தது. எழுந்து நிற்க முயன்றேன். உடலின் மொத்த சக்தியையும் ஒன்று சேர்த்தேன். எழுந்து நின்றேன். இவை என்னுடைய கால்களா? கொஞ்சம் மெலிவாய் தெரிந்தன. அட, என் கைகள், உடல் எல்லாம் காலையை விட மெலிவாய் தெரிகின்றது. ஒரு நாளில் இதெப்படி சாத்தியம்? குழப்பம் கொஞ்சம் கொஞ்சமாய் என்னில் படரத் தொடங்கியது. எதுவும் யோசிக்க முடியவில்லை. அந்த நேரம் அறைக்குள் ஒரு இனிய குரல். "வணக்கம் நண்பரே. நன்றாக இருக்கிறீர்களா?". குரல் வந்த திசையில் யாரும் இல்லை. அது ஒலிப்பெருக்கி. நான் எழுந்தவுடன் எப்படி என்னுடன் பேசுகிறார்கள். இங்கே கேமராக்கள் இருக்க வேண்டும். ஆனால் என்னை எதற்கு கண்காணிக்க வேண்டும்! பதற்றத்தை மறைத்துக் கொண்டு "என்னை காட்டில் இருந்து அழைத்து வந்ததற்கு நன்றி. என்னுடைய பியா இங்கு இருக்கிறாளா? என்னுடைய வீட்டில் என்னை தேடிக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் உதவ முடியுமா?". இதை கேட்டதும் அந்தக் குரல் சிரிக்க தொடங்கியது. ஏனோ, இப்போது எனக்கு அது இனிமையாய் இல்லை.


என் முக மாற்றத்தை கவனித்திருக்க வேண்டும். "மண்ணியுங்கள் நண்பரே. உங்கள் பியா பத்திரமாக இருக்கிறாள். ஆனால், உங்கள் வீட்டிற்கு நீங்கள் தொடர்பு கொள்ள எங்களால் இப்போது உதவி செய்ய முடியாது என்று நினைக்கிறேன் ". எனக்கு கோபம் அதிகமானது. எங்கிருந்தோ பேசும் அவள் கையில் கிடைத்தால் அவளை அறைந்து விடுவேன். 'உங்கள் உதவி இதற்கு மேல் எனக்கு தேவை இல்லை. என்னை காப்பாற்றியதற்கு நன்றி. நான் கிளம்புகிறேன். எங்கே எனது பியா?'  என்று கோபத்தில் கத்திய பிறகு தான் கவனித்தேன். இந்த அறையில் கதவுகளே காணவில்லை! எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னை யாரோ காப்பாற்றியது போல் இல்லை! அடைத்து வைத்திருப்பது போல் தோன்றியது. குழப்பமும் கோபமும் சேர்ந்து எரிச்சல் அடைந்தேன். 'நான் வெளியே போக வேண்டும். எனக்கு நேரமாகிறது. எவ்வளவு நேரம் இங்கே நான் இருக்கிறேன்!' என்றேன் ஆத்திரமாய். அந்த குரல் எந்த பதட்டமும் இன்றி "நண்பரே, உண்மையில் நேரம் இல்லை, நீங்கள் இங்கு வந்து நாட்கள் ஆகிறது." என்றது. எனக்கு மயக்கமே வந்து விடும் போலிருந்தது. சில நாட்களாய் இருக்கிறேனா!! அதனால் தான் உடல் இளைதிருக்கிறதா!! அனிச்சையாய், 'எத்தனை நாட்கள்?' என்றேன். அந்தக் குரல் "என் பதிலை கேட்டு நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். உங்கள் கிரஹ கணக்கின் படி நீங்கள் இங்கு வந்து 157 நாட்கள் ஆகின்றது. '157 நாட்களா!!!' எனக்கு உயிர் நின்று விடும் போல் இருந்தது. அதென்ன 'உங்கள் கிரஹ கணக்கு' என்று அவள் சொன்னாள்!! அப்படி என்றால் அவள் யார்? நான் எங்கே இருக்கிறேன்? '. ஒரே நேரத்தில் ஆயிரம் கேள்விகள் என்னை வருத்தி எடுத்தன. நான் அனைத்தையும் நம்ப மறுத்தேன். "உங்கள் கிரஹ கணக்கு" அவள் சொன்னது மட்டுமே எனக்கு கேட்டுக் கொண்டே இருந்தது. அவள் வேற்று கிரஹ வாசியா!!! கண்கள் சுழன்றன. மீண்டும் மயான அமைதி.......

                                                                                                             பாகம் மூன்று

சனி, 31 ஆகஸ்ட், 2013

V2 (Part1 / பாகம் ஒன்று)

'இன்று எப்படியும் கண்டஹா காடு வரை ஓடி விட வேண்டும்' . என்னால் கண்டிப்பாக ஓட முடியும்.' ஒவ்வொரு நாளும் இப்படித்தான் தொடங்குகிறேன்.  தினமும் முண்ணேற்றம் தெரிகிறது.  ஆனால் இன்னும் நான் ஓட நினைத்த தூரம் ஓடவில்லை.  நிச்சயம் ரே யால் அவ்வளவு தூரம் ஓட முடியாது. நான் அவனை விட அதிக அதிக தூரம் ஓடிக் காட்டினால் அவள், என் மனதைக் கொள்ளைக் கொண்ட அவள் எனக்குக் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகும். எந்த வாய்ப்பையும் தவற விடுபவன் நானில்லை. 'பியா, கிளம்பு ஓடலாம்.' பியா எனது செல்லப்பிராணி மட்டும் அல்ல, என்னுடைய குழந்தை மாதிரி, என்னுடைய நல்ல தோழி கூட. நான் தினமும் அதிக நேரம் மனம் விட்டுப் பேசுவது அவளோடு தான். இருவரும் ஓட தயாரானோம். பியா என்னை விட வேகமாகவும் தூரமாகவும் ஓட முடிந்தால் கூட, என்றும் என்னைத் தாண்டி ஓடியது இல்லை. ஓடத் தொடங்கினோம். எண்ணங்கள் எங்கெங்கோ பறக்க தொடங்கியது. அவளை சேர்வது எப்படி என்ற எண்ணம் பல யோசனைகளை தந்தது.  அனால் முதல் படி, கண்டஹா தான். அந்த காடு வரை ஓடுவது தான் அவளோடு எனக்கான தூரத்தை குறைக்க போகும் முதல் அடி. அதற்கடுத்ததை அப்புறம் பார்க்கலாம்.

இப்போது நான் கண்டஹா வரை ஓடுவது யாருக்கும் தெரியாது. நண்பர்களுக்கு தெரிந்தால் கிண்டல் செய்வார்கள். வீட்டில் தெரிந்தால் அவ்வளவுதான். அவர்கள் ஏன் என்று கேட்பது எனக்கு பிரச்சனை இல்லை. அனால் கண்டஹா பற்றிய அவர்களின் பயத்தை என்னால் வெல்ல முடியாது. அங்கு ஏதோ அதீத சக்தி கொண்ட மிருகங்கள் இருப்பதாக நிறைய பேர் நம்புகிறார்கள். அவைகள் ஆபத்து நிறைந்தன எனவும், அங்கு யாரும் செல்ல கூடாது எனவும் ஊரில் பலரும் நம்புகிறார்கள். ஒரு சிலர் அங்கு வேற்று கிரஹ மனிதர்கள் வந்து போவதாக கூட சொல்கிறார்கள். ஏன், எனது தந்தை கூட அந்த பக்கம் விசித்திர பறக்கும் எந்திரங்களை பார்த்திருப்பதாக கதை சொல்லி இருக்கிறார். அது எதையும் நான் நம்பியது இல்லை. மற்றவரை பயமுடுத்துவதில் சிலருக்கு ஒரு சந்தோஷம். நாளடைவில் அந்த சந்தோஷம் குறைந்து போனாலும், பயம் மட்டும் சமூகத்தில் ஒட்டிக் கொள்கிறது. அதை பற்றியெல்லாம் கவலை பட இது நேரம் இல்லை. அவள் எனக்கு கிடைக்க வேண்டும், அது மட்டும் தான் இப்போது என்னுடைய இலக்கு. அதோ, அங்கு தெரியும் அந்த பெரிய மரம் தான் என்னுடைய இப்போதைய குறிக்கோள். இன்று என் எல்லையை தொட்டு விடுவேன் போலிருக்கிறது. அவள் என் அருகில் வந்து விட்டது போல் ஒரு உணர்ச்சி. எண்ணங்கள் என் மூச்சிரைப்பை விட வேகமாய் ஓடின. இதோ, தொட்டு விட்டேன் எனது முதல் வெற்றியை. உடல் முழுதும் வலி, அதை விட அதிகமாய் மகிழ்ச்சி. என் எண்ணம் ஈடேற போகிறது. குதித்தேன், கத்தினேன். எல்லா பக்கமும் பார்த்து பலமாய் சிரித்தேன்.

 பியாவும் என்னோடு இங்கும் அங்கும் குதித்துக் கொண்டிருந்தாள் . அவளை அள்ளி அணைக்க ஆவல் கொண்டு அருகில் சென்றேன். என்ன ஆனதோ தெரியவில்லை, பியா திடீரென்று எனக்கெதிராக திரும்பி அந்த புதருக்கு அப்பால் ஓடத் தொடங்கினாள் . என்ன ஆனது இவளுக்கு!! புரியாமல் அவளைப் பிடிக்க நானும் பின்னால் ஓடினேன். உடல் ஒத்துழைக்கவில்லை. ஆனால் பியா இல்லாமல் நான் எப்படி திரும்ப போவது? முடியாதென்றாலும் அவளை தொடர முயற்சி செய்தேன். வேகமாய் ஓட நினைத்த போது காலில் ஏதோ இடறியது. கீழே விழுந்து உருளத் தொடங்கினேன். தலையை ஏதோ கனமான ஒன்று உரசிச் சென்றது, உடலின் எல்லா பக்கமும் ஊசி துளைப்பது போல் உணர முடிந்தது. பியாவின் குரல் மெல்லமாய் கேட்டது . ஆனால் எதுவும் உண்மை போல் இல்லை. கண்கள் சொருகியது, எல்லாம் மறைவது போல் ஒரு மயக்கம். உடல் இப்போது அசையவில்லை, நான் உருள்வது நின்றிருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைந்தது, ஒவ்வொரு உணர்ச்சியாக மறைந்து கொண்டே போனது. கண்கள் முழுதுமாய் மூடினேன். அமைதியாய் இருந்தது. அவளுடைய முகம் ஒரு முறை நினைவில் வந்து போனது. அழகாய் இருக்கிறாள். அமைதி, மயான அமைதி...

                                                                                                                    பாகம் இரண்டு

சனி, 24 ஆகஸ்ட், 2013

என் குழந்தை ஒரு மேதாவி (My Child is a Prodigy)


அறிவென்பது வரமா சாபமா?
'எதை நோக்கி ஓடுகிறேன்?', 'நான் மகிழ்ச்சியாய் (அமைதியாய்) இருப்பது எப்போது?', 'எதில் நான் உண்மையில் நிறைவடைகிறேன்?' - இப்படி நாம் கேட்க மறந்த கேள்விகளில் ஒன்று தான் 'அறிவென்பது வரமா சாபமா?' என்பதும்  . எது அறிவென்பதில் கூட நம்மில் பலருக்கு சரியான விளக்கம் தெரியாதென்பதும் உண்மை. அனால் நம் குழந்தைகளை அறிவாளி ஆக்க வேண்டும் என்ற முனைப்பை நான் பலரிடமும் காண்கின்றேன், முக்கியமாக நடுத்தர வர்க்க மக்களிடம். நாம் பயணத்தின் சுகம் மறந்து இலக்கை தேடி ஓடுபவர்கள். பல முறை நமது இலக்குகள் தேவைக்கு அப்பாலும், பயணத்தையே சிதைப்பதுமாகவே இருப்பதுதான் வேதனை. எளிமையாய் சொல்ல வேண்டும் என்றால், 'பையனுக்கு குளிர் அதிகமானா காய்ச்சல் வரும், மலைப் பாதையில் பயணம் செய்தால் வாந்தி வரும். ஆனா, கோடை காலத்துல அவன் மலைப் பிரதேசம் போனாத் தான ஜாலி யா இருக்க முடியும். அவன் சந்தோசமா இருக்கணும்னு தான் போறோம் ' - இதுதான் நடுத்தர வர்க்கத்தில் பலரின் வாழ்கை. நமது குழந்தைகளின் கண்ணுக்கு தெரியாத ஜுரத்தையும் தலை சுற்றலையும் பலர் கண்டு கொள்வதே இல்லை.

அறிவென்பது இங்கே குருடர்களின் யானை போன்றது. அதனை நாம் சரியாக புரிந்து கொண்டது குறைவு. 'ஆறு வயது குழந்தை அத்தனை நாடுகளின் தலை நகரங்களையும் அழகாய் சொல்கிறது. என்ன அறிவு! ' என்று எவனாவது சொல்லி வியந்தால் நம் குழந்தைக்கு பிடிக்கும் சனி . ' இந்த வயசுலேயே என்னவா பாட்டு பாடுறா! என்னமா சுலோகம் எல்லாம்  சொல்றா!' அப்படின்னு எந்த குழந்தை பற்றி கேட்டாலும், இது பற்றி எதுவும் அறியாமல் மண்ணை அள்ளி தலையில் போட்டு விளையாடி கொண்டிருக்கும் நமது குழந்தையை பார்த்தால் வருமே ஒரு கோபம்! ஐந்து வயது குழந்தை மண்ணில் விளயாடமால் மார்ஸ்  க்கு ராக்கெட்டா அனுப்பும். மேதாவி என்ற பட்டதை வாங்க நூலும் வாலும் அறுபட்டு சுவற்றில் ஒட்டிக் கொண்டிருக்கும் பட்டங்கள் தான் நம் பிள்ளைகள்.

ஒரு வயதாகியும் நமது குழந்தை நடக்கா விட்டால் நமக்கு பகீர் என்று இருக்கிறது. அதுவும் பக்கத்து வீட்டு குழந்தை பதினோராவது மாதத்தில் நடந்து விட்டால் நமது குழந்தை பாடு பாவமாகிவிடும். இரண்டு மாதங்கள் கழித்து நடப்பதால் வாழ்க்கை மாறி விடாது என்பது கூட நாம் உணர்வதில்லை. என் நாலரை வயது மகள் வாரத்திற்கு நான்கு வகுப்புகள் போகிறாள். நடனம், ஸ்கேடிங், ஆங்கிலம், சைனீஸ் கற்றுக் கொள்ள. அவள் அறிவையும் வளர்ச்சியையும் கொல்ல முயற்சி செய்யும் குற்றத்திற்காக என்னையும் என் மனைவியையும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறைக்குள் அடைக்கலாம். வாரத்திற்கு அவளுக்கென்று இருப்பது மூன்று மாலைப்  பொழுதுகள் மட்டுமே ( ஸ்கேடிங் அவளுக்கு பிடிக்கும், அதனால் நான்கு மாலைகள் என்று வைத்துக் கொள்ளலாம்). மாலை முழுதும் விளையாட்டு என்று சொன்ன பாரதியின் பெயரை வைத்துக் கொண்டு நல்ல மாலை பொழுதுகளை எல்லாம் தொலைத்துக் கொண்டிருக்கிறாள் என் மகள். இரண்டு வயதில் விளையாட ஆசைப் பட்டு 5 மணிக்கெல்லாம் எழுந்து விடும் அவள், பள்ளி போகும் கடமையினால் எட்டு மணிக்கும் தூங்கி வழிகிறாள். அழகிய சிலை வடிப்பதாய் நினைத்துக் கொண்டு அவளது சிறகுகளை நான் செதுக்கிக்  கொண்டிருக்கிறேன். அவளது பிள்ளை பருவத்தை தங்கக் கழுவிலேற்றிக் கொண்டிருக்கின்றேன்.

எவனின் எதிர்காலமும் ஐந்து வயதிலோ பத்து வயதிலோ முடிவாவது இல்லை. வாழ்கை தினமும் புதிய பாடம் சொல்லித் தருகிறது. நாமோ கருவில் இருக்கும் குழந்தைக்காக பள்ளிகளின் வாசல்களில் நிற்கிறோம். மரத்திற்க்கு மேலுள்ள காக்கை குருவி எல்லாம், ' அங்கே பார் வேடிக்கை மனிதர்களை ' என்று நம்மை காட்டி அதன் குழந்தைகளுக்கு சோறூட்டிக்  கொண்டிருக்கும். நாமெல்லாம் முப்பது வருட வாழ்க்கைக்குப் பிறகும், எந்த காலத்தில் எதை உண்ணலாம், எப்படி உடுத்தலாம், எவ்வளவு உறங்கலாம் என்ற வாழ்வியல் சார்ந்த அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள். செய்யும் தொழிலாவது முழுமையாய் தெரியுமா என்றால், பட்டியிலே அடைப்பட்டிருக்கும் ஆடு மாடு போல் நமது வேலையை தவிர வேறெதும் உருப்படியாய் தெரியாது. ஆனால் குழந்தைகள் மட்டும் தேவையே இல்லை என்றாலும் எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதுவும் கற்று தரக் கூடாது என்பதில்லை என் வாதம். நாம் கற்று தருவது கொடிகள் படர கொம்புகள் நடுவது போல் அவர்கள் இயல்பு சார்ந்து இருக்க வேண்டும். ரோஜாச் செடியை காட்டில் நட்டு மரம் போல் வளர சொல்வதும், ஆலமரத்தை தொட்டியில் நட்டு பூக்கள் கேட்பதுமாய் இருக்க கூடாது. கல்வி என்பது குழந்தைகளுக்கு பாராமாகி விடக் கூடாது. ஆங்கிலத்தில் RAT RACE என்று சொல்லுவார்கள். இப்போது உள்ள  குழந்தைகள் பாவம் இரண்டு மூன்று வயதிலேயே இதில் தொலைந்து போகிறார்கள்.  பால்யம் நமக்கு சரியாய் ஞாபகம் இருப்பது இல்லை, அதனால் தான் கிறுக்கல்களில் இருக்கும் ஓவியங்கள் நமக்கு தெரிவதில்லை.

எனக்கு சிறு வயதில் நடனம், பாட்டு கற்றுக் கொள்ள ஆசை இருந்தது. நடுத்தர வர்க்க வரையரைகள் நான் ஹிந்தி கற்றுக் கொள்வதை தான் முன் நிறுத்தின. நன்றாக தான் படித்தேன். ஆனால் ஹிந்தியே படிக்காத என் அண்ணன் துபாய் க்கு சென்ற பிறகு சரளமாய் ஹிந்தியில் பேசுவதும் நான் கொஞ்சம் திணறுவதும் எங்கள் வாழ்க்கை கொடுத்த மாற்றங்கள். நாம் யார் என்று நாமே அறியும் பருவம் எல்லோருக்கும் வரும். அதற்குள் குழந்தைகளின் அடையாளங்களை நாம் மாற்றி விடக் கூடாது. ஐன்ஸ்டீன் ஆகட்டும், பில் கேட்ஸ் ஆகட்டும், நாராயண மூர்த்தி ஆகட்டும், யாரும் அற்புத மனிதர்கள் கிடையாது.  தங்களுக்கு பிடித்ததை செய்ய துணிந்த, செய்ய முடிந்த மக்கள். ஐன்ஸ்டீன் தனது தத்துவங்களை நிரூபிக்க கணித சமன்பாடுகள் எழுத முழுமையாய் தெரியாமல், பிறகே கற்றுக் கொண்டார், ஐந்து வயதிலோ பத்து வயதிலோ அல்ல. தான் என்ன ஆக வேண்டும் என்று சரியான பருவத்தில் முடிவு செய்து, அதையே செய்ய விளைபவர்கள் சந்தோசமாய் இருக்கிறார்கள். மற்றவர்கள் சூடு போட்டு கொண்டு புலியாய் ஆகப்  பார்க்கிறார்கள். 

எல்லா குழந்தைகளும் மேதாவிகள் தான், வேறு வேறு விதத்தில். ஒரு சிலர் இரண்டு வயதில் அதை வெளிப்படுத்தலாம், ஒரு சிலர் இருபது வயதில் வெளிப்படுத்தலாம். (வாழ்கையை சரியாய் அணுகாததால் நம்மில் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதே இல்லை எனபதும் சோகம்). பத்தாவது மாதம் நடந்தாலும் பதினைந்தாவது மாதம் நடந்தாலும் குழந்தைகள் இரண்டு கால்களில் தான் நடக்கின்றன. அவர்களை சீக்கிரம் எழுந்து நடக்க வைப்பதாய் நினைத்துக் கொண்டு கால்களை முறித்து விடக்  கூடாது. ஒரு வேலை ஒரு குழந்தை எந்த மேதாவித்தனமும் காட்டவில்லை என்றால் கூட பரவாயில்லை. அவர்களுக்கு சந்தோசமாய் வாழ சொல்லிக் கொடுங்கள், அதை விட சிறந்த அறிவு வேறெதும் இல்லை.  மரத்திற்கு மரம் தாவும் திறன் கொண்ட குரங்கை கூட்டி வந்து குட்டிக் கரணமும் , தோப்புக் கரணமும் போட சொல்லிக் குடுத்து 'ஆடுடா ராமா, ஆடுடா ராமா ' என்பதைப் போல் பிள்ளைங்களை ஆக்கி விட வேண்டாம். அவர்களின் இயல்பான குழந்தைப் பருவம் பின் நாளில் நல்ல மனிதர்களாய் வாழ அவர்களுக்கு உதவும். Let them have a normal childhood. They deserve it. 


புதன், 7 ஆகஸ்ட், 2013

உளறல் - மனம் போன போக்கிலே...


கடல் போல் வானம், எதன் மீதோ மோகம்,
உயிர் தேடும் வேகம், அடங்காத மனதின் தாகம்.
தொடாமல் தள்ளிப் போ, தனிமைக் குடத்தில் நீரை நிரப்பாதே,
எத்தனை தூரம் ஓடினாலும் காலடி பூமியும் கூடவே ஓடுதே!

தொலைந்தது, தேடினேன், அதிசயம்! கண்டுபிடித்தேன், தொலைந்தது நான்.
கூச்சல் சற்று குறையுங்களே...
வானம் இங்கு வெறித்து பார்ப்பது யாரை?
கரையிலே கிடக்கின்றேன், கடல் சேர்வது எப்போது?
கடல் சேர்ந்தாலும் நான் நிலைப்பது எப்போது?

உயரம் பறக்கும் பயணம். இது உலகமே மறக்கும் பயணம்!
நான் ஒன்றும் தேவதை இல்லை. 
எங்கு தேடினாலும் கிடைக்கவே இல்லை நான்.
கொஞ்சம் இரைச்சலை குறையுங்களே..

இன்னும் எத்தனை தூரம்? இதோ, கண்களோரம் கண்ணீர்!!
மரணம் வரை நானில்லை, மரித்த பின்பு நானே இல்லை. எங்கு கிடைப்பேன் நான்??
இந்த உடை களைய வேண்டும். பாரம் கூடிக் கொண்டே போகிறது.
சாத்தானே! தெய்வம் போல் நடிக்காதே..
தெய்வமே! நீதானே சாத்தான்..

உயிரின் கோடு தொடும் வரை மரணம் எப்படி விளங்கும்!
கொஞ்சமாய் நிழல் வேண்டும். இல்லை இல்லை, கொஞ்சம் தூங்க வேண்டும்.
பயணம் தந்த களைப்பிது!!
அட, பயணம் தொடரட்டும், இளைப்பாறினால் அசதி கூடும்!!
இரைச்சல் குறைகிறதே....

நான் ஒன்றும் பிசாசு இல்லை.
எதுவெல்லாம் இல்லை என்று தெரிந்தாலும், எது எது என்று எப்படி அறிவேன்?
ஆணவம் எப்படி வந்தது?
பசிதானே உயிரை சுமக்கிறது.

இலக்கே இல்லாத வானம்! அட, இது இல்லவே இல்லாத வானம்.
நீர் போல் தான் நானும். அழிவுதான் என் அழகு.
உயிர் என்பது எத்தனை போதை !!
இன்னும் தேடுகிறேன், கிடைக்கவில்லை.

இல்லாத வானத்தில் மேகங்கள் மிதக்கின்றன!
எத்தனை கூட்டினாலும் கணக்கு விளங்கவே இல்லை.
முகத்தை மூடியே எப்படி வாழ்வது!!
இதயம் பிழக்காதீர்கள். உள்ளே ஒரே கூச்சல்!!



வல்லமை தாராயோ


நத்தையாய் நான்  பிறந்திருக்கலாம்,
கூட்டில் நாணும் தத்தையாய் கூட பிறந்திருக்கலாம்,
அறிவொன்று அதிகம் கொண்டும் சொத்தையாய் போய் பிறந்தேனே !

பணமும் படையும் கைகள் கோற்றிட ,
தினமும் இங்கே தர்மம் தோற்றிட,
வேசி போல் நானும் வெட்கத்தை விற்றேனே !

தேர்தல் வரும் பொது தெய்வமாகவும் ,
தேவை வரும் பொது தெருப் பினமாகவும்,
உயிர் தொலைத்து நானும் எத்தனை நாள் வாழ்வேனோ!

தந்தை தன் விந்தோடு வீரத்தை சேர்த்திருக்கலாம்,
தாய் தன் பாலோடு தன்மானம் ஊட்டி இருக்கலாம்.
இரண்டும் இல்லா வெறுமை நான், கருவோடேன்னை கலைத்திருக்கலாம்.

அ ஃறினை போல் வளர்கின்றேன்,
அம்மணமாய் நான் உணர்கின்றேன்,
அண்டம் தாங்கும் ஆண்டவனே, ஆண்மை வரங்கொடு துதிக்கின்றேன்.. 

வெள்ளி, 7 ஜூன், 2013

மழை


மழை 

காற்றின் காமம்,
எரியும் மேகம்,
வியர்வைத் துளியாய் கொட்டிடும் வானம்.

அண்டவெளியில் 
ஓர் அற்புத அரங்கம்,
வெள்ளி கற்களை வெட்டிடும் சுரங்கம்.

விண் கூடும் ,
பின் மண் சேரும் ,
கற்பு தாண்டிய காதல் ஞானம் .

பூமிப் பந்தின் சுத்தம்,
இது வாழும் உயிர்களின் ரத்தம்,
கோடிக் கணக்கில் முட்டினாலும், காதில் இனிக்கின்ற சத்தம்.

காற்று கட்டிய வின் கழிகள்,
நிறைந்து வழிந்திடும் தேன் துளிகள்,
அனாதை மரங்களை குளிப்பாட்ட, வீதி வந்த தேவதைகள்.

வர்ணம் பார்க்காத இலவச தாய்ப் பால்,
தலைகள் கொய்யாத அழகிய கூர்வாள்
ஆவதும் உண்டு அழிவதும் உண்டு, உண்மையில் மழையே நீயொரு பெண்பால்.

Bol Na Halke Halke - My Own Tamil Lyrics


My own Tamil Lyrics for the tune of ‘Bol Na Halke Halke’ song from Jhoom Bharabar Jhoom


காதலன்  :

மேகம் போல பார்வை வீசி போகும் பாவையே,

தாகம் கொண்ட வேர் நான், உந்தன் தீண்டல் தேவையே..

 
காதலி :

உனை சேர நானே, மழை ஆகினேனே, உன் 

மடி சேர்ந்த பின்னே உயிர் பூக்கிறேனே .
 

காதலன்  :

கண்ணில் கண்டேன் கண்டேன், காதல் கண்டேன் கண்டேன் 

உந்தன் ஜீவன் கண்டேன், என் தேடல் கண்டேன்.  

                                                                     (மேகம் )

-------------------------------------------------------------------------------

காதலன்  :

இரவோடு நான்விழி மூடினால்,

கனவோடு நீ, உறவாடினாய்...

 

காதலி :

கனவோடு நீ, உயிர் கூடி பின்,

ஏறி மீன்கள் போல், மறைந்தோடினாய்...

 

காதலன்  :

தொலை தூரம் போனால், வாழ்வேனோ நானே,

உன் நிழல் மஞ்சம் வேண்டும், இடம் கொஞ்சம் தாயேன்.

 

இருவரும் :

கண்ணில் கண்டேன் கண்டேன், காதல் கண்டேன் கண்டேன் 

உந்தன் ஜீவன் கண்டேன், என் தேடல் கண்டேன்.  

                                                                     (மேகம் )

 -----------------------------------------------------

 

காதலன்  :

ஒரு சூரியன், போதும் கண்ணே,

இமை மூடிடு, வெயில் தாளுமே ...

 

காதலி :

ஒரு சந்திரன், போதும் கண்ணா,

அணைக்காமல் நில், குளிர் போகுமே,

 

காதலன்  :

உனை தீண்டும் காற்றில் , உயிர் வாழ்கிறேன் நான்,

நீ அணைக்காத போது, அனைகின்றேன் நானே.

இருவரும் :

கண்ணில் கண்டேன் கண்டேன், காதல் கண்டேன் கண்டேன் 

உந்தன் ஜீவன் கண்டேன், என் தேடல் கண்டேன்.  

                                                                     (மேகம் )

---------------------------------------------------- 

 

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...