சனி, 27 ஜூன், 2020

அன்பிற்கும் உண்டோ


இவன வளத்தது பத்தாது னு இந்த நாய கொண்டு வந்து விட்டுட்டு ஹாஸ்டல் போய்ட்டான், இத வாசல் தாண்டி உள்ள எல்லாம் விட மாட்டேன், சனியன் ஏதாச்சும் பண்ணினா யாரு வீட்ட சுத்தம் பண்ணிட்டே இருக்கது, வேளா வேளைக்கு சோறு போட்டு தொலைக்கிறேன் என்று வாசலிலேயே கட்டிப் போட்டு விட்டேன்.ஒரு வாரம் ஆகிடுச்சு, சோத்த தின்னுட்டு அது பாட்டுக்கு கெடந்துச்சு, இன்னைக்கு கொஞ்சம் மேலுக்கு முடியல, அதோட எதையோ சமச்சு அதுக்கு வச்சுட்டு அப்டியே அசந்து வாசல்ல உக்காந்துட்டேன், எப்பவும் வெடுக்கு வெடுக்குனு முழுங்குற நாயி இன்னைக்கு திங்காம என்னையே பாத்துட்டு இருந்துச்சு, மெல்ல பக்கத்துல வந்து என் மடில அப்டியும் இப்டியும் மூஞ்சிய முட்டிகிட்டு, ஏதோ என் வேதன புரிஞ்சா மாதிரி என் பக்கத்துல உக்காந்து என்னவே  உத்து பாத்துச்சு,  கருணை னு சொல்லுவாங்களே, அந்த மாதிரி,எனக்கு உள்ளுக்குள்ள என்னென்னவோ பண்ணுச்சு, அப்பா அம்மா ஞாபகம்  எல்லாம் வந்துடுச்சு, மெல்ல அதோட கயித்த அவுத்து விட்டேன், நான் எழுந்து உள்ள போக என் முந்தானைய புடிச்சிட்டடே ஒரு சின்ன உசுரு வீட்டுக்குள்ள வந்துச்சு...

நான் பெண்



கைப்பை,திறன்பேசி எல்லாம் பாலித்தீன் கவரில் போட்டுவிட்டு, மழையில் நனைந்து கொண்டே நடந்தேன், எவ்வளவு சுகம், மழையில் நனையாதே என்று அம்மா சொன்னதை மீறி நனைந்ததே முதல் விதிமீறல், எனக்கென்னவோ மழையில் நனையாதே என்று சொல்வது தான் விதிமீறலாய் தெரிந்தது. பரிட்சைக்கு படி என்றார்கள், பிடித்ததை படித்தேன்..இழுத்து மூடு என்றார்கள், கண்ணை மூடிக்கொள் என்றேன்..ஒருவனே கற்பென்றார்கள், பரிணாம வளர்ச்சி படி என்றேன்..புல்லானாலும் புருஷன் என்றார்கள், புல்லை வெளியே வை என்றேன்.. வாழாவெட்டி ஆவாய் என்றார்கள், வாழ்வை வெட்டியாய் ஆக்க விருப்பமில்லை என்றேன்.. துணையில்லாமல் வாழ முடியாது என்றார்கள், துணை தான் தேவை தலைவன் இல்லை என்றேன்.. திமிர் பிடித்தவள் தனியாக தான் இருக்க போகிறாய் என்றார்கள், இல்லை, இங்கே ஆண்கள் இன்னும் இருக்கிறார்கள், பெண்ணை சக மனுஷியாய் பார்க்கும் ஆண்கள் நிறைய இருக்கிறார்கள், அப்படி ஒருவனோடு வாழ்கிறேன், அப்படி ஒருவனை ஈன்றிருக்கிறேன், எனக்கான மழைத்துளிகளை எவரும் எனக்கு சொல்வதில்லை, எனக்கு தேவை இல்லாத குடைகளை எவரும் எனக்கு பிடிப்பதில்லை, விதிமீறல்களை மீறிக்கொண்டு என் ஆடை நனைத்த ஒவ்வொரு துளியையும் எண்ணிப் பார்த்து கொண்டே நடந்தேன்....

யாருப்பா அது கடவுளா




முட்டாள், நல்ல சான்ஸ விட்டுட்டியே, திரும்ப கிடைக்குமா? கடவுள சுத்தி வரவனுக்கு பிரசாதம் தான் கெடைக்கும், நேத்து திடு திப்புனு அந்த கடவுளே கண்ணு முன்னாடி வந்து நின்னானே, வந்து என்ன காசா கேட்டான், கொஞ்சம் ரெஸ்ட் வேணும், யாரும் கொஞ்ச நாளுக்கு பிரார்த்தன பண்ண வேணாம்னு மக்கள் கிட்ட தூதனா போய் சொல்லு னு சொன்னான், நான் முட்டாள் மாதிரி லீவ், லாஸ் ஆஃப் பே எல்லாம் யோசிச்சு முடிக்கிற முன்னாடி காணா போய்ட்டான். தூதனா போறேன், இத குடு அத குடு னு கேட்டு தொலைக்க தோணாம போச்சு, நைட் எல்லாம் உக்காந்து லிஸ்ட் போட்டு வச்சிருக்கேன், இனி எப்போ கடவுள் வந்தாலும் ஒழுங்கா டீல முடிக்கணும் னு நெனச்சுட்டு கடவுள சுத்தி வந்தேன், என்ன ஆச்சர்யம் கடவுள் ஹாயா உக்காந்துட்டு இருந்தாரு, கை கட்டி பவ்யமா கடவுளே நான் தூதனா போறேன் னு சொன்னேன், அவர் கல கல னு சிரிச்சாரு, தெய்வீக சிரிப்பு, சிரிச்சுப்புட்டு என் தலைல ஒரு இடிய போட்டு உடைச்சாரு, உடைச்சாரு என்ன உடைச்சாரு, உடைச்சான்..நான் லிஸ்ட் தான் போட்டேன், எவனோ மூளக்காரன் கடவுள் வேலைக்கே அப்ளிகேஷன் போட்டு கடவுளுக்கு ரெஸ்ட் குடுத்துட்டான். இந்தாளு இப்ப கடவுளே இல்ல, இவன சுத்தி என்ன பிரயோஜனம், போயான்னு வெளில வந்துட்டேன், இனி அந்த புது கடவுள எங்க போய் தேடுவேன்!

X அழகி

அவளை இத்தனை வருடம் கழித்து இப்படி பார்ப்பேன் என்று தெரியாது, கல்லூரியில் தேவதை போல் பார்த்தவள், ஒரு காலத்தில் என் மனதுக்குள் வாழ்ந்தவள்,  இன்று கடையில் பில் போட்டுக் கொண்டிருந்தாள், கண் முன் ஒரு நிமிடம் 'அழகி' பட நந்திதா தாஸ் வந்து போக,'உன் குத்தமா என் குத்தமா' என்று பார்த்திபன் போல் மனதுக்குள் பாடிக்கொண்டே,  எப்படியாவது அவளுக்கு உதவ வேண்டும் என்று இரவு பத்து மணிக்கு அவள்  வெளியே வரும் வரை காத்திருந்து அவளுக்கு உதவிக்கரம் நீட்டினேன், நல்ல வேளை, பக்கத்திலேயே 24 மணி நேர மருத்துவமணை இருந்தது, உணர்ச்சி வசத்தில் அவள் சூரியவம்சம் தேவயானி என்பதை கவனிக்காமல் விட்டுவிட்டேன், அவனும் சரத்குமார் மாதிரியே பல்கியாகத்தான் இருந்தான், இருந்தாலும் உதவிக்கரத்தை அவன் இப்படி உடைத்திருக்க கூடாது...

தேசபக்தி



தேசபக்தர் 1 - 'என்னங்க 20 ஜவான்கள கொன்றுக்கானுங்க, உள்ள விட்டு எல்லாரையும் காலி பண்ண வேணாம், இந்தியா என்ன சலச்சதா',
 தேசபக்தர் 2 - 'அப்படியெல்லாம் விடமாட்டாங்க, வேணா பாருங்க பதிலடிய',

1- 'நானும் அப்டி தான் நெனைக்கிறேன், இந்தியா னா யாருன்னு காட்டனுங்க'
2- 'ஆமாங்க, சரி, டாக்ஸ் கொஞ்சம் கம்மி பண்ணணும்னு சொன்னீங்களே, என்ன பண்ணீங்க'
1- 'வீடு வைஃப் பேர்லதான் இருக்கு, அவுங்களுக்கு ரென்ட் கட்ற மாதிரி ரெசிப்ட் போட்டாச்சுல, உங்க தம்பி லைசன்ஸ் என்னாச்சு?'
2- 'அதெல்லாம் குடுக்குறத குடுத்தா வந்துட்டு போவுது'

யந்திரமானேன்


'எப்ப வேனா தூங்கலாம், இப்பதான் உழைக்கிற வயசு, இப்பதான் சம்பாதிக்க முடியும், இப்ப கம்மியா தூங்கினா பரவா இல்ல' ஓடி ஓடி 25 ஆண்டுகள் ஓடிய பின், 'நைட் சரியா தூக்கமே வர மாட்டேங்குது டாக்டர், என்னேன்வோ செஞ்சு பாத்தாச்சு...'

சாகாது வாழும் சாதி



'இந்த நாட்டிற்கு வந்த நாளில் இருந்து இந்த நிறபேத இனவாதத்தை பார்த்திருக்கிறேன், அனுபவித்திருக்கிறேன்,  வளர்ந்த நாடான இங்கு கூட, இந்த காலத்திலும் இனவாத மூடர்கள் இருக்கிறார்கள், குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் எப்போது புரியும் இவர்களுக்கு', கோபத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு கொண்டிருக்கும் போதே ஊரில் இருந்து பெரியப்பா வாட்சாப்பில் அழைத்தார், 'பேசாதீங்க பெரியப்பா, அவன வெட்டி போட்ருக்க வேணாம் நீங்க, அந்த ஈன ___ சாதிப் புள்ளய கல்யாணம் பண்ணியிருக்கான் ராஸ்கல்'.....

கதவை திற காதல் வரட்டும்



கடந்த இரண்டு மாதங்களாக இதுவே வழக்கமாக மாறி இருந்தது,ரோட்டோரமாய் வளர்ந்திருந்த  இந்த சின்ன மரத்தின் கீழ்தான் அவனை முதல் முதல் சந்தித்தது, இங்குதான் காதல் சொன்னது, கூட்டம் மறைந்த அந்த அரை நிமிடத்தில் ஒரு முத்தம் கொடுத்தானே, அதுவும் இங்குதான், அன்றெல்லாம் இமை மூடாமல் மயங்கிக் கிடந்தேன், ஒரு நாள் ஊர் மாறிப்போகும் முன் இதே மரத்தடியில் என் மனமுடைந்து விட்டு போனான், அன்று கோபத்தில் ஒரு இலை பிடுங்கி கசக்கி எறிந்தேன், அன்று முதல் இதை கடக்கும் போதெல்லாம், எவனோ செய்த தவறுக்கு வெரும் சாட்சியாய் நின்ற இந்த மரத்தின் இலை பறித்து அதை தண்டித்துக் கொண்டிருந்தேன், ஆனால் பறிக்க பறிக்க எப்படி இலைகள் துளிர்க்கின்றன தெரியவில்லை.. 'எக்ஸ்க்யூஸ் மி', திரும்பினேன், சூப்பர் மேன் மாதிரி இல்லாமல் சுமாராக நின்றிருந்த அவனைப் ஏறிறங்கப் பார்த்தேன், ' சாரிங்க, நன் ஆஃப் மை பிசினஸ், ஆனா நெறைய டைம் உங்கள இந்த மரம் கீழ பாத்திருக்கேன், எல பறிக்கும் போது அதுக்கு வலிக்குமா தெரியல, ஆனா காரணமே இல்லாம  அதோட எலைய பறிக்கிறது சரி இல்லன்னு தோனுது', பதட்டமில்லாமல் கண்ணில் கருணை கொஞ்ச பேசியவன் இப்போது சுமாரிலிருந்து சூப்பராகவே தெரிந்தான், உதிர்ந்த பின்னும் இலைகள் அழகாக எப்படியோ துளிர்க்கின்றன.....

கொலையும் செய்வாள்



செக் லிஸ்ட்டை ஒரு முறை மனதுக்குள் சரிபார்த்துக் கொண்டேன், 1. காதலன் அனுப்பியது போன்று அவள் இன்பாக்ஸில்    மெயில்கள் - செக், 2. அதை அவள் படித்து பதில் அனுப்பியது போல்  நானே அவள் மெயிலில் இருந்து அனுப்பிய பதில் மெயில்கள் - செக், 3. ஓடிப்போனது போல செட் செய்ய பேஃக் செய்த நகை, ட்ரஸ் - செக் 4. அவசர தேவை என்று அவளையே  பாங்கில் இருந்து எடுத்து வர சொன்ன ரெண்டு லட்சம் - செக், 5. நகை, பணம் பதுக்கி வைக்க தனிப் பை - செக், அவள் உடம்பை மறைக்க ஒதுக்குபுறமான இடம் - செக், இன்று நான் மதுரைக்கு போக எடுத்து வைத்த லேட் நைட் பஸ் டிக்கெட் - செக் , முக்கியமான ஐடம், என் கல்லூரி லேப்பில் இருந்து யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்த சையனைட் - செக், எல்லாம் ரெடி , இனி மர்டர், பாடி டிஸ்போஸல், மதுரை ட்ராவல், பணம் நகை அங்கே மறைத்தல், 2 நாளாக மனைவி காணவில்லை என்ற கண்ணீர், போலிஸ் கம்ப்ளெயின்ட், மெயில் ஆதாரம் அவளை ஓடுகாலியாக காட்டுவது எல்லாம் பெர்பக்ட் என்று யோசிக்கும் போதே உள்ளே வந்தவள் , 'ஏங்க, பேங்க்ல என்  ஃப்ரண்ட் சசி ஃபோன் பண்ணா, இன்னைக்கு ஏதோ அங்க பெரிய ப்ரச்சனையாம், பணத்த திரும்ப எண்ணிப் பாத்துக்க சொன்னா' என்று அனத்த, பாவம்  கடைசி ஆசையை செய்து தொலைக்கலாம் என்று பணத்தை  எண்ணி வைக்கும் போது கண்கள் மங்கின, அவள் பேசத் தொடங்கினாள், ' எல்லாம் ஓ.கே தான,  நக்கி நக்கி எண்ணியே,அதுல ஒரே நோட்ல ஒரே ட்ராப் தாம்பா வெச்சேன் ஒன் சையனைட', எனக்கு மாரில் வலி இறங்கியது, 'நீ செத்ததும் போலிஸ் வரும், லேப்ல இருந்து சையனைட் திருட்னத கண்டுபிடிக்கும், அப்புறம் நான் அடிக்கடி செக் பண்ணாத என் மெயில புத்திசாலித்தனமா யூஸ் பண்ணியே, அதுல அட்லீஸ்ட் ரெண்டு தடவ நீ ரெஸ்பான்ட் பண்ண டைம்ல நான் பக்கத்துல சீசீடீவி இருக்குற சூப்பர் மார்க்கெட் ல இருந்தேன், நான் அத அணுப்பலன்னு ப்ரூவ் பண்ணிடலாம்,  அதுக்கப்புறம் இதெல்லாம் உன் வேலைன்னு கண்டுபுடிக்கிறது  அவ்ளோ கஷ்டம் இல்ல, என்ன கொஞ்சம் விசாரிப்பாங்க ,  சமாளிச்சிடுவேன், எப்டியுப்  உன் வேணி கூட நீ ஜாலியா ஊட்டில எடுத்தயே செல்ஃபி, அத சைலன்டா ரிலீஸ் பண்ணுவேன், அது போதும்,  நீ என்ன கொல்ல ப்ளான் பண்ணி, அதுக்குள்ள ஆக்ஸிடென்டலா ஒரு ட்ராப் எப்படியோ  கன்ச்யூம் பண்ணி செத்துட்டன்னு கேஸ முடிக்க',  அவள் சொல்வது புத்தி வரை போக தடுமாறின, தலையில் ஐந்து டண் பாரம், மூச்சு திணறியது, 'செக் மேட் மச்சி', உடலெல்லாம் வலி பரவ கண்கள் மூடிக் தொடங்கின....

இளையவனே

'கூட்டம் கம்மியா இருக்கும் போதே நெனச்சேன் மொக்க படமாத்தான் இருக்கும்னு,  அந்த பேய பாத்தா சிரிப்பு பேய் மாதிரி இருக்கு, அதுக்கே பயந்து பயந்து என் கைய பிடுச்சுக்கிறீங்க, இதுதான் ஒங்க ட்ரீட்டா சீனியர் , இதுக்கு பனிஷ்மன்டா நல்ல கடைக்கு போறோம், பிரியாணி நீங்கதான் ஸ்பான்சர், ஒ.கே வா', இவன எல்லாம் எவன் பெத்தது, வந்த கோபத்துல  'அறிவு கெட்ட தர்தி முன்டம்' னு அசிங்கமா திட்டிட்டு கெளம்பிட்டேன், அப்பவும் ஒன்னும் புரியாம பின்னாடியே வந்தான், அப்புறம் அப்டி இப்டி னு பிரியாணி எல்லாம் வாங்கி குடுத்து அவனுக்கு புரிய வச்சு கல்யாணம் பண்ணி இப்ப உனக்கு கத சொல்லிட்டு இருக்கேன், புரிந்ததோ புரியலையோ கண் அயர்ந்து அழகாய் தூங்கிக் கொண்டிருந்தாள், அப்டியே அவனோட கண்ணு, அவனோட மூக்கு, குனிந்து அவள் தலையில் ஈரம் பதித்து விட்டு சத்தமில்லாமல் பெட்ரூம் கதவை சாத்திவிட்டு, பால் காய்ச்சி கொண்டிருந்தவனின் பின்னால் சென்று அவன் வலிய முதுகில் தலை சாய்த்து கைகளால் அவன் இடை சுற்றித் தழுவிய படி ' பாப்பா தூங்கிட்டா, பெட்ரூம் போலாமா' என்றேன் காதோரமாய், 'ரெண்டு நிமிஷம்மா, பால் ஆத்தி தரேன், குடிச்சிட்டு படு, இப்பதான் உனக்கு ரொம்ப எனர்ஜி தேவ' , வந்த கோபத்துக்கு 'போடா தர்தி முன்டம்' னு திட்டிவிட்டு வந்துட்டேன், இப்பவும் புரியாமல் பால தூக்கிட்டே பாவமா பின்னாடியே வந்தான்,அப்புறம் அப்டி இப்டி னு பால குடிச்சிட்டு அவனுக்கு புரிய வச்சுட்டு அப்பறம்... ஹீ ஹீ ... '

நகரமாக்கல்


சொந்த ஊருக்கு போவது என்பது ஒரு விவரிக்க முடியாத அனுபவம்,
 பிறந்த குழந்தையின் குட்டி குட்டி விரல்களை பற்றும் போது ஈரமும் மிதவெப்பமும் கலந்து ஒரு உணர்வு கிடைக்குமே, மொழிகள் அற்றுப் போகும் அனுபவம், அது போல.. ஒவ்வொரு ஊரின் எல்லைக்கும் ஒரு தனி வாசம் உண்டு, காற்றின் வெப்பம் கொண்டே ஊர் சொல்பவர் கூட உண்டு,  ஊரின் சில அடையாளங்கள்  காலத்தை பின்னால் நகரச் செய்து பால்ய காற்றை மீண்டும் ஒரு முறை நுகர தருகின்றன,  மனோகரன் பால் கடையின் கல்கண்டு பால், பாலத்தின் கீழ் பேரே இல்லாத தள்ளுவண்டி கடை பஜ்ஜி, முறுக்குக்கடை பாட்டி, இவையெல்லாம் வெறும் வணிகம் அல்ல,நினைவுப் படுகைகளில் ஊரின் அடையாளங்களை பாதுகாக்கும்  சேகரங்கள், ஆசிட் ரெஃப்லெக்ஸ் என்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட நண்பனுக்கு தள்ளுவண்டி முட்டை போண்டா ஒன்றும் செய்யாதது அமெரிக்க மருத்துவர்களுக்கு ஆச்சரியம் தந்திருக்கலாம், தாய்ப்பால் மணம் ஞாபகமில்லை, ஆனால் மனோகர் பால்கடை ரோஸ் மில்க்  சுவை நாவின் அடிநாளங்களில் என்றும்  அப்படியே உறைந்து கிடக்கும், முறுக்கு பாட்டி அந்த காலத்து சிங்கிள் வுமன், தனிக்கட்டை, அவள் சரித்திரம் யாருக்கும் தெரியாது, ஆனால் எங்கள் எல்லார் சரித்திரத்திலும் அவளும் அவளுடைய வசவும் கண்டிப்பாக நிலைத்து இருக்கும், கல்லூரிக்காக ஊர் விட்டு போன காலத்தில் இருந்தே திரும்ப வரும் ஒவ்வொரு முறையும் மறைந்து போன என் வேர்களை இங்கே எல்லாம் வந்து தூசு தட்டிக் கொள்வது வழக்கமாகி இருந்தது, ஒன்றரை வருடம் கழித்து அதே ஆவலுடன் இன்றும் கடைவீதியில் நுழைந்தேன்..பூட்டிக்கிடந்த முறுக்கு பாட்டியின் கடை, கூட்டம் இல்லாத  மனோகர் பால் கடை, புதிதாய் முளைத்த இரண்டு சூப்பர் மார்க்கெட்கள் என்று கடைவீதி வேறு முகமாய்  தெரிந்தது.  சூப்பர் மார்க்கெட் உள்ளே பாக்கெட் செய்யப்பட்ட பல வகை நொறுக்குத்தீணிகள், ப்ளாஸ்டிக் பாட்டில்களில்  ரோஸ்மில்க் , இன்னும் என்னென்னவோ இருந்தன. ஒரு முறுக்கு பாக்கெட் வாங்கி அதன் பிசுபிசுத்த உறையை கிழித்து நுகர்ந்து பார்த்தேன், பாட்டியின் வாசமில்லா அந்த பாக்கெட் முறுக்கு பாட்டியின் கடையோடு ஊரின் அடையாளங்களையும் சத்தமில்லாமல் மாற்றிக்கொண்டிருந்தது...


ஏனோ நான்



எனக்கு இரண்டு விசயம் ரொம்ப பிடிக்கும், வானம் - கடல், இட் கிவ்ஸ் மீ எக்ஸ்டசி, ஒரு கவித சொல்லட்டுமா, 'கரை கொண்ட வானம்-கடல், முடிவில்லா கடல்-வானம்', நல்லா இருக்குல்ல, இந்த கடல் தண்ணில கால் படும் போது யோசிச்சு பாருங்களேன், நீங்க பூமி ஃபுல்லா பரவி இருக்க ஒரு தொடரிய தொட்ரீங்க, யூ நோ, யூ ஆர் டச்சிங் எ கண்டினுயம் , கரைல இருக்கும் போது அப்டியே ஒரு சுனாமி வந்து கூப்டு போனா எவ்லோ லிபரேட்டிங்கா இருக்கும், 'நீரில் கருவானேன், நீருக்குள் எருவாவேன்', நானும் அப்பப்ப போய் பாக்குறேன், ஒன்னும் வர மாட்டேங்குது, கடல்க்கு எம்மேல என்ன கோபமோ தெரில,  சரி விடுங்க, இந்த வானம் எவ்ளோ அழகு, தலைக்கு மேல ப்ரபஞ்சம் நெறஞ்சு வழியுது, நாமதான் பாக்குறதே இல்ல, வானம் ஃபுல்லா  நட்சத்திரம்  இரஞ்சு கெடக்குறத பாத்துருக்கீங்களா, இட்ஸ் எ ப்லிஸ், வானத்த பாத்துட்டே இருந்தாலே நாம ஒரு தூசி மாதிரி எவ்ளோ மினிஸ்க்யூல் னு புரியும், இந்த அகம்பாவம் எல்லாம் அழிஞ்சிடும், அதுனாலதானோ என்னவோ, என் அப்பா அம்மா அதெல்லாம் பாக்குறதே இல்ல, எவ்ளோ காசு இருந்தாலும் பத்தாம ஓடிட்டே இருக்காங்க, அவுங்கள விடுங்க, நீங்க பாத்துருக்கீங்களா?  ஊருக்குல்ல  நட்சத்திரம் நெறஞ்ச வானத்த எல்லாம் பாத்துருக்க மாட்டீங்க, ஐரனி இல்ல, அவ்ளோ கோடி நட்சத்திரத்த  நூறு ஸ்ட்ரீட்லைட்டும் காத்துல இருக்க கண்ணுக்கு தெரியாத குட்டி குட்டி தூசியும் சேந்து மறச்சிடுது, அதான் அடிக்கடி அடம்  புடிச்சு கடல் ஒட்டி இருக்க இந்த காட்டுக்கு வந்துடுவேன், இங்க  மனுஷங்க நெறைய இல்ல ,  அண்ட் நைட்ல சுத்தீல  லைட் இல்ல, நைட் ஃபுல்லா ஒக்காந்து ஒக்காந்து வானத்த பாத்துட்டே இருக்கலாம், ஆனா இன்னைக்கு நைட்ட இந்த மேகம் எல்லாம் சேந்து மறச்சு வச்சிருக்கு,  மேகத்த பாத்தா காமடியா இருக்கும், நெறைய பேருக்கு மேகம் ஒரு சைன் ஆஃப் ஃப்ரீடம், வானம் எல்லாம் அதுக்கு சொந்தம் மாதிரி தெரியும், அது ஏதோ சுதந்திரமா சுத்துர மாதிரி தெரியும், ஆனா ஆக்ட்சுவலா காத்து ஒதச்சு தல்ற எடத்துக்கு எல்லாம் போர பால் தான் மேகம், அதுக்கு தன்னிச்சைனு ஒன்னு கெடயாது, இட்ஸ் எ விக்டிம் ஆஃப் ஸம்ஒன் எல்ஸ் சாய்ஸ், கிட்டதட்ட என்ன மாதிரி, மே பீ உங்கள மாதிரி, ஒருபக்கம் எல்லையே இல்லாத வானம், இன்னொரு பக்கம் அலைக்கழிக்கிற  காத்து, வானத்த ஏக்கமா பாத்துட்டே காத்தோட நோக்கத்துக்கு நடந்து போய்ட்டே இருக்கும் பாவம் அந்த மேகம், என்ன மாதிரி, உங்கள மாதிரி......

அப்பாவின்...

'ஏம்பா, நான் வாங்கி குடுத்த வாட்ச் எங்க,  இந்த கீ குடுக்குற வாட்ச் யாராச்சும் கட்டுவாங்களா இன்னும், நைட்ல டிக்கு டிக்கு னு மண்டைல தட்ற மாதிரி இருக்கு, நல்ல வேள, செருப்பு வாங்கி குடுக்கல உங்க பொண்டாட்டி,இல்லாட்டி அத போட்டுட்டே தூங்கணும்னு சொல்லி இருப்பீங்க ', பத்து வருடம் முன்னால் அப்பாவை கிண்டலடித்து நேற்று போல் இருந்தது. இத்தனை வருடம் கழித்து பரண் மேல் இருந்த அந்த வாட்ச் கண்ணில் அகப்பட எடுத்து கீ கொடுத்தேன், இரவின் வெறுமையில் 'டிக் டிக் டிக்', கடிகார ஒலியில் ஏதோ அப்பா அருகில் இருப்பது போல் இருந்தது ,வெகு நாட்கள் பிறகு நிம்மதியாய் உறங்கிப்போனேன்....

போலி

ச, இவுங்க எல்லாம் மனுஷங்களா, ஒரு கர்பமான யானைய இப்டி கொன்னுருக்காங்க, ஃபேஸ்புக் கில் கண்ணீர் மல்க பதிவிட்டுக்கொண்டிருக்கும் போதே ஃபோன் அழைக்க, 'ஓ, சூப்பர், நல்லா எள ஆட்டு கறியா வாங்கிடுங்க, அப்டியே சிக்கன அங்கேயே உரிச்சு வாங்கிட்டு வந்துடுங்க' , அழைப்பை துண்டித்துவிட்டு , இறந்துபோன யானைக்கான என் சோகத்தையும் கோபத்தையும் இமோஜிக்களாய் மாற்றிக் கொண்டிருந்தேன்...

வலைதள கண்ணீர்

'இத்தனை நாள் எழுதிக் கொண்டிருந்த என் பேனாவிற்கும், என் சிந்தனைகளுக்கும் நிரந்தர ஓய்வு கொடுக்கிறேன், கல்லறை காற்று என் நுரையீரல் நிரைக்கட்டும்', இத்தனை நாள் நான் எழுதியதை சமூக வலைதளங்களில் எவரும் சீண்டாத  விரக்தியில் எனக்குள் இருந்த எழுத்தாளனின் மரண வாக்குமூலமாய் இதை பதிவு செய்து விட்டு அடுத்த நாள் பார்த்தால், அத்தனை ஷேர்கள், சிந்தனையாளனை நிராகரிக்கும் உலகம் என்று மொத்த உலகமும் இரங்கலையும் கோபத்தையும் பதிவு செய்திருந்தது, இதற்கு முந்தைய என் பதிவுகள் எல்லாம் இன்னும் அனாதையாகவே நின்றுகொண்டிருந்தன...

மொத தடவ


எதுவும் மொத தடவ தான்ங்க கஷ்டம், இந்த 'விழுமியம்'ன்றாங்களே, எது சரி எது தப்புனு சொல்றது, ஒவ்வொரு 'மொத தடவ' யும் நமக்குள்ள அத மாத்தி எழுதிடும். திருட்றது தப்புன்னு தான் நெனச்சிட்டிருந்தேன், மொத தடவ திருட்ற வரைக்கும், செயின அறுக்கும் போது அந்த பெரியம்மா கழுத்துல இரத்தம் வந்துச்சே, 'தேவப்பட்டா ரத்தம் பாக்கலாம்'னு மொத தடவ அப்பதான் தோனுச்சு, அப்புறம் பொம்பள வாசம், வெட்டுகுத்து,எல்லாம் பழகிடுச்சு. இந்த ஒடம்பெல்லாம் இழுத்துகிட்டு, கண்ணு வெளில வரும்போது அப்டியே அந்த உசுரு அந்த கண்ணு வழியா போகும் பாருங்க, மொத தடவ நடுங்கும், தூக்கம் வராது, அப்புறம் பழகிடும், அதும் தப்பில்லன்னு ஆய்டும். வெட்டு வாங்கிட்டு மொத தடவ நாய் மாதிரி ரோட்ல கெடந்தேனே, யாருனே தெரில, ரெண்டு மூனு பேரு, ஆம்புலன்ஸ் ல ஏத்துர வரைக்கும் கூடவே நின்னதுங்க,அவுங்க கண்ல தண்ணி, மொத தடவ மனசுன்னு ஏதோ முழுச்சுச்சு, டாக்டரா நர்ஸா வார்ட்பாயா தெரியல, உசுரு போறது பாத்து பழகியிருக்கேன், ஆனா ஒத்த உசுர கட்டிப்போட எத்தன பேரு, எத்தன ஓட்டம், 'தங்கச்சியா நெனச்சுக்கண்ணே' ன்னு கழுவி விட்டாளே, அவ தங்கச்சி இல்ல, தாயி, ஒரு மாசம் மேல இன்னைக்கு தான் எழுந்து ஒக்காந்தேன், 'சிக்கன் சாப்ட்டு ஒடம்ப தேத்து மச்சி', முன்னால இருந்த அந்த கறித் துண்ட பாக்கும் போது மொத தடவ உள்ள வலிச்சது, 'இட்லி சாப்டுக்குறேன் மாப்ள' என்றேன், உள்ள எங்கயோ என்னோட அந்த விழுமியம் மாறிக்கிட்டிருந்தது....


காதலிக்க நேரமில்லை

கேம்ப் முடியும் நாளுக்காக காத்திருந்து மிகவும் உற்சாகமாக வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தேன், எனக்கு விபரம் தெரிந்த நாள் முதலாய் ஆண் பிள்ளைகள் மட்டுமே நிறைந்திருந்த எதிர் வீட்டில், நான் கேம்ப் கிளம்பும் ஒரு நாள் முன்புதான், இரண்டு பட்டாம்பூச்சிகளோடு புதிதாக ஒரு குடும்பம் வந்திறங்கியது... ராம், பாலாஜி என்று நாராசமாய் பெயர்கள் வந்த எதிர் வீட்டு ஜன்னல் வழியே கோகிலா, மல்லிகா என்று சங்கீதம் போல் பெயர்கள் கேட்டன. நான் பார்க்க அவள் பார்க்க,   கண்ணோடு வந்த கண்ணா என்று அவள் கொஞ்ச, கண்ணாடி கண்ணா என்று நான் கவி எழுத, டும் டும் டும், பிள்ளைகள் என்று பல அடுக்குகளில் அந்த இரு அவள்களோடும்  கணவுகள் குடியேற, கேம்ப் முடித்து வீட்டிற்குள் நுழைந்தால், எல்லா பொருட்களும் பேக் செய்யப்பட்ட நிலையில் எனக்கு ஆயிரம் வாட்ஸ் அதிர்ச்சி தர, அந்த பக்கம் அம்மா  கலங்கிய கண்ணில் கோபமாய், 'இத்தன வயசுல ஒங்களுக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு', என்று கோபமாய் எதையோ போட்டுடைக்க, 'அந்த ராஜேஷீக்கு தான்டி பைத்தியம், உம்மேல, இல்லாட்டி அவன் பொண்ணுக்கு எதுக்குடி உம்பேரு வச்சான், நான் அவன் வீட்டுக்கு எதிர்ல இருக்க மாட்டேன்' அவர் பங்கிற்கு அவரும் கத்திவிட்டு என் நெஞ்சில் கத்தி விட்டுப் போக.. இப்போது மெல்ல புரிந்தது,  மை மம்மி வாணி என்ற கோகிலவாணி தான் எதிர் வீட்டு கோகிலாவின் பெயர் காரணம்! வொய் மம்மி வொய்!!!

மத அரசியல்

'அவுங்க நம்ம எடுத்த இடிச்சதில்லையா, நாம இடிச்சா தப்பா, நம்ம ஆளுங்க செத்ததில்லையா, அவுங்க ஆளுங்க செத்தா மட்டும் பாவமா, இது போர், அவர்கள் நம் நம்பிக்கைக்கும் நமக்கும் எதிரிகள்', ஆவேசமாய் முழங்கியதில் கூட்டம் கைத்ததட்டலில் அதிர்ந்தது, மைக்கை விட்டு இருக்கைக்கு வந்ததும் அருகில் இருந்தவன் காதோரமாய் ' பின்னிட்டீங்க ண்ணே, இந்த டிஸ்ரிக்ட் க்கு இன்னைக்கு பத்து மீம் அணுப்புறோம், பாருங்க எப்டி போகுதுன்னு', அவன் கைகளை பற்றி  குலுக்கிய போது இன்னும் அருகில் வந்து 'அப்புறம் அந்த காண்ட்ராக்ட் ல நமக்கு 10% தான் கெடைக்கும் ணே, 15% னா ஒரு பார்ட்டி இருக்காப்ல, ஆனா அது அவுங்க ஆளுக', என்றான். மக்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவனிடம் திரும்பி, ' ஏன், அவுங்க ஆளுக குடுத்தா காசு செல்லாதா? அவுங்க ஆளுக நம்ம ஆளுக ன்னு பேசாட்டி அரசியல் பண்ண முடியாது, அவுங்க ஆளுக நம்ம ஆளுக ன்னு பாத்தா வியாபாரம் பண்ண முடியாது, 15% முடிச்சிடு', மந்தைகளின் கரகோஷம் காதை பிளந்தது....

தாய்

எல்லார் கண்களிலும் என் மீது வெறுப்பு தெரிந்தது, 3 வாரமாய் வெளியில் வராத நான் இன்று என் மகனுக்கு பிடித்தது போல் சமைக்கவே கடைக்கு வந்தேன்,  ஒரே பிள்ளை, செல்லமாக வளர்ந்தவன், இந்த மூன்று வாரம்  ஜெயிலில் என்ன கொடுத்தார்களோ தெரியாது, மிகவும் பலவீனமாக இருந்தான் , நேற்றுதான் பெயிலில் அழைத்து வந்தேன், இன்று நன்றாய் சாப்பிட்டு கொஞ்சம் உடல் தேரட்டும், அவன் உடனே மயங்கவோ மறிக்கவோ கூடாது,  உயிருறுப்பில் ரத்தம் கசியும் வலியை அவன் சில மணி நேரமாவது முழு உணர்வோடு அனுபவிக்காவிட்டால் அந்த இரு பெண் பிள்ளைகள் அனுபவித்த கொடுமைக்கு நியாயம் எப்படி கிடைக்கும். காய் கறியோடு கத்தியும் கயிரும் வாங்கிக் கொண்டேன்....

ராஜ்தூத் ராஜு

ராஜ்தூத் ராஜு என்றுதான் ஊரே கூப்பிடும், ராஜு அண்ணன் மாநிறம், வலுவான உடல் கட்டு, நேர்த்தியான மீசை, கஞ்சி போட்ட வேஷ்டி சட்டை, அந்த ராஜ்தூத் மேல் அவர் வரும் போது நாட்டாமை  சரத்குமார் போல கம்பீரமாக இருக்கும். பல பெண்கள் ரகசியமாக ரசித்த பேரழகன், ஊரில் பெரிய பணக்காரர்களில் ஒருவர், வீட்டில் கார் இருந்தாலும் ராஜ்தூத் தவிர வேறு எதிலும் அவரை பார்த்ததில்லை..  இறந்து போன பிள்ளை, பிரிந்து போன மனைவி, பெரும்பாலும் வையின்ஷாப் வாசலிலேயே கிடந்த ராஜ்தூத், விற்கப்பட்ட சொத்துகள், 12 வருடத்தில் 50 வயது போல் ஆகிப்போனார் ராஜு அண்ணன். ஒரு காலத்தில் பெரும் உதவிகள் செய்தவர், ஆனாலும்  சும்மா காசு வாங்கக்கூடாது என்று நான் கொடுத்த காசுக்கு பதிலாக   ராஜ்தூத் சாவியை என் கையில் திணித்து விட்டு நகர்ந்தவர், திரும்ப வந்து ' எங்கயும் கோடு போட்றாத டா தம்பி' என்று சொல்லிவிட்டு அந்த ராஜ்தூத்தின் ஹேன்டில்பார் மீது கைகளை நகர்த்திக்கொண்டே இருந்த அந்த முப்பது விநாடிகள் எத்தனை சம்பாஷனைகள் அவர்கள் இருவருக்குள்ளும்  நடந்தன என்று யாருக்கும் தெரியாது.. 'நல்ல வண்டி, இல்ல' என்று சொல்லி விட்டு ஈரம் வற்றிய கண்களுடன் நகர்ந்து சென்றார் ராஜு அண்ணன், ஒரு பக்கம் தலை சாய்த்து சலனமின்றி நின்றிருந்தது ராஜ்தூத்...

மழையோடு நான்

ஒவ்வொரு மழைத்துளி மேலே விழும் போதும், ஐ ஃபீல் லிபரேட்டட், சிறு வயதில் இருந்து நான் கடந்து வந்த ஒவ்வொரு மழையிலும் ஒரு துளியாவது நனையாமல் இருந்ததில்லை, ஒரு முறை வந்த மழை வெள்ளத்தில் கூட 'துளியில் ஜனித்தது துளியில் கரையட்டுமே' என்று பரவச நிலையிலேயே மனம்  இருந்தது, நம்ப மாட்டீர்கள், என் ஜூன் மாத பிறந்தநாள் ஒன்றில் கூட மழை என்னை ஆசிர்வதிக்காமல் இருந்ததில்லை, இந்த   பிறந்தநாள் மட்டும் இரவாகியும் இன்னும்  மழை  வரவில்லை. நெஞ்சோரம் சிறியதாக உருவான வலி மேகம் போல் மெல்ல உடலெங்கும்  பரவிக்கொண்டிருக்க, தலைக்கு மேல் இடி சத்தம், ஆனந்தமாக  வான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, இமை மூட, விழும் எல்லா துளிகளோடும் இரண்டர கலந்து கொண்டிருந்தேன்,,, ஐ ஃபீல் லிபரேட்டட்...

இக்கரை அக்கரை

'ம், இந்த அப்பா மாதிரி எப்ப ஆறது, வீட்ல யாரும் சும்மா சும்மா திட்ட மாட்டாங்க, ஹோம் வொர்க் இல்ல, எக்ஸாம் இல்ல, பர்ஸ் ல காசு இருக்கு டெய்லி வேணாலும் பஃப்ஸ் வாங்கி சாப்டலாம்' , அப்பா வை பார்த்து சிரித்தேன்,  முப்பது வருடம் பின் மேனேஜரின் திட்டு, இ.எம்.ஐ, மனைவியின் கோபம், நம்பின சிலரின் துரோகம் என மனதில் ஏதேதோ ஓடிக் கொண்டிருக்க எதையோ யோசித்தவனாய் என் மகன் என்னை பார்த்து சிரித்தான்...

வளர்ச்சி

'பாரு, இருவது வருஷம் முன்னாடி எடுத்த ஃபோட்டோ, அதே எடம், அதே மரம், அதே ஆளுங்க, பகல்ல மாடு மாதிரி வேல செய்ய வேண்டியது, சாய்ந்தரம் ஊர் கத பேச வேண்டியது, ராத்திரி சாப்ட்டு தூங்க வேண்டியது,  அனிமல் லைஃப், ஏதாவது புதுசா செய்வோம், கொஞ்சம் ஸ்மார்ட்டா பணம் பண்ணுவோம்னு கெடையாது, அதான் இந்த பட்டிக்காட்லயே இருக்கானுங்க, நாம ஒலகம் பூரா சுத்திட்டு இருக்கோம்', அப்பா காமித்த ஃபோட்டோவில் இன்றைக்கு பார்த்த அத்தனை பேரும் கிட்டத்தட்ட அப்படியே இருந்தனர், கண்களில் கண்ணாடி இல்லாமல், அதன் கீழ் கருவளையம் இல்லாமல், முடி எல்லாம் அடர்த்தியாக, முகத்தில் இளமையோடு, சுருக்கம் இல்லாத நெற்றியோடு அ
ப்பா மட்டுமே வேறு மாதிரி இருந்தார்...

வளர்ப்பு

'எப்பவும் மாத்தி பேசக்கூடாது, புரிதா', சொல்லிக் கொண்டிருக்கும்  போதே ஃபோன் அடிக்க,  மாலதி ' கார்த்திக், ஹாய் எப்டி இருக்கீங்க?' என சொல்லிக்கொண்டே எனை பார்க்க, நான் சைகை செய்ய ,' அவர் குளிச்சிட்டு இருக்காரு, வந்ததும் சொல்லட்டுமா' என்றாள். குழந்தை எங்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தாள்...

காற்புள்ளி


'எனக்கு நீ முக்கியம், துண இல்லாம மனசும் உடம்பும் ஏன் வேதன அனுபவிக்கனும், நான் அவன்கிட்ட பேசிட்டேன்,, அவனுக்கு நீ ன்னா ரொம்ப இஷ்டம், உன் குழந்த மேல் அவ்ளோ அன்பு, உனக்கும் அவன பிடிக்கும்னு எனக்கு தெரியும்,  இந்த சாதி, மதம், சமுதாய பொடலங்காயெல்லாம் தூக்கி போடு, ஒரு அம்மா வா சொல்றேன், எம்பையன் செத்துட்டா நீ வாழ்க்கயெல்லாம் தனியாவே நிக்கனும்னு அவசியம் இல்ல'..

தோழி

'சத்தம் சுர்ருனு இருந்துச்சு, கை நல்லா செவந்துருக்கே, பின்ன ஹோம் வொர்க் செய்யலைன்னா  கொஞ்சுவாங்களா, நல்லா வாங்கு'..
 'பரவால்ல ஃப்ராக்ட்சர் இல்ல, ரத்தகாயந்தான்,     பெட்ரமாஸ் லைட்டேதான் வேணுமா, ஏன் உங்க சாதிலயே ஒரு பொண்ண லவ் பண்ண மாட்டீங்களோ, பின்ன கொஞ்சுவாய்ங்களா, நல்லா வாங்கு'..,
'ஒரு சண்டே என் புருஷனும் நானும் சந்தோசமா இருக்க முடிதா! சண்ட போட்டுட்டு வந்துட்டான், உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தவ, ஏதோ ஆசப்பட்டு கேட்டா செய்யேன், செய்யலன்னா பின்ன கொஞ்சுவாளா, நல்லா வாங்கு' .. தோழி...


பந்தயம்


கடைசி கேள்வி, 'உலகம் ஒரு ஓட்டப்பந்தயம் நடக்கும் இடம், விவரி', "மிஸ், 7 மார்க் தான் போட்ருக்கீங்க , புக் ல இருக்க மாதிரி கரக்டா தான் எழுதியிருக்கேன், இன்னும் 2 மார்க் குடுங்களேன்", இந்த ரெண்டு மார்க் வாங்கிட்டா நாந்தான் ஃபர்ஸ்ட்டு!!!!

வலி

'அப்பா இத விட்ருங்கப்பா',
ஸ்கெட்ச் போட்டாச்சு, அந்த ப்ரேமா பொண்ணு அவ ஸ்கூட்டில வர, மருது ஃபைக்க குறுக்க விட்டுட்டான்,
'இது பாவம் பா, நெறைய பேர் சாபம்',
கீழ விழுந்து ஹெல்மட்டோடே அவள இழுத்துக்கிட்டு வந்த வண்டிய பாத்து நானும் தாஸீம் ஓடுரோம், ' பொழைக்க ஆயிரம் வழி இருக்குப்பா', பக்கத்துல வந்ததும் சட்ட பின்னாடி வச்சிருந்த கத்திய உருவி நான் அவ கழுத்துக்கும் தாஸ் அவ நெஞ்சுக்கும் குறி வச்சோம், பணம் குடத்தவன் மிஸ்ஸே ஆக கூடாதுன்னு நெறைய காசு குடுத்துருக்கான், 'நீ நேத்து போட்டவருக்கு என்ன மாதிரி பொண்ணு இருக்குப்பா', தாஸின் கத்தி அவள் நெஞ்சிலிருந்து ஒரு அடி தூரமும் என்னுடையது ஒன்றரை அடியும் இருக்கும் நேரத்தில், 'நான்  செத்தாலாச்சும் இந்த பாவத்த விடுவியாப்பா',  கழுத்துக்கு  இன்னும் அரை அடி தூரம் என் கத்தி இருக்கும் போது கழுத்தில் இருந்த அது மின்னியது, குழம்பினேன், தாஸின் கத்தி இன்னும் ஒரு ஜான் தூரத்தில் இருந்த போது சட்டென மூளைக்கு பட்டது நான் பார்த்து பார்த்து என் ஆசை மகளுக்கு வாங்கிய தங்கசெயின் அது.., கழுத்துக்கு ஒரு ஜான் தூரத்தில் கை திசை மாற, வேணான்டா என்று நான் கத்த தொடங்குவதை உணராத தாஸின் கத்தி அவள் மார்பை ஊடுருவ, எனது கத்தி அவள் கழுத்தை தடவிக்கொண்டே நகர, நான் ஊட்டி ஊட்டி வளர்த்த சிறு சிறு உதிரத்துளிகள் என் முகம் நோக்கி வர, என் கால்களை இறுக்கி பிடித்த அந்த கைகள், பிஞ்சிலிருந்து என் கால்களை பிடித்து வளர்ந்த அந்த அழகான கைகள், 'ஆத்தாஆஆஆஆ'  தாஸின் கத்தி என் உயிரில் வலியை இறக்கி க் கொண்டிருக்க நான் செய்த பாவங்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு என் உயிர் பிரிந்து கொண்டிருந்தது....

காதல் ஒரே மதம்

' பேரு தான, என்ன இப்போ!'..

'லுசா நீ, அவுங்க தான் கட்சி கொடி மாதிரி கடவுள மாத்த சொல்றாங்கனா நீயுமா, எந்த கடவுளும் எந்த மதத்தையும் சொந்தம் கொண்டாடல, மதந்தான்  கடவுள சொந்தம் கொண்டாடுது, நீ நீயா இருக்க எங்க அம்மா அப்பா ஒத்துக்கும் போது கல்யாணம் பண்ணிக்கலாம்' இருக்கி அணைத்து அவன் தோளில் சாய்ந்தேன்...


கல்வி

எப்பவுமே ஃபர்ஸ்ட் 3 ரேங்க் ல வந்துடுவா, இந்த புத்தகத்துல எல்லாம் இருக்க எத பத்தி கேட்டாலும் சொல்லுவா, ' இந்த புக்கோட வெல என்ன கண்ணா', பதில் தெரியாமல் முழித்தாள்...


ரசிகன்



'ஒனக்கெல்லாம் வேற வேலையே இல்லியா',

'அதான் உன்ன ஃபாளோ பண்றேனே,   வேற வேல எதுக்கு,,ஹான்' ,

 'கட்ட்ட்... சிவா, பாடி லேங்குவேஜ் சூப்பர், அந்த 'ஹான்' னு சொன்னீங்களே,  பொறுப்பே இல்லாத  ஆள் மாதிரி  பெர்ஃபெக்ட், தியேட்டர்ல இந்த சீன்க்கு யூத் எல்லாம் விசில் கிழிச்சுடுவானுங்க,  ஆனா நைட் 3 மணி வரைக்கும் ஷூட் பண்ணிட்டு காலேல இவ்ளோ அருமையா ப்ரெஷ்ஷா  பண்றீங்க, இந்த ஹார்ட்வொர்க் அண்ட் டெடிகேஷன் உங்கள மேல கொண்டு போய்டும் சிவா.. '


வெற்றி - வெறுமை



சுட்டு போட்டாலும் உனக்கு சங்கீதம் வராது என்று சொன்னவரை பொய்யாக்க வெறித்தனமாய் பயின்றேன், 30 வருடமாய் பள்ளி கல்லூரி சென்றேன், பட்டம் பெற்றேன், மணம்  முடித்தேன், பிள்ளை பெற்றேன், ஆனால் இசையே இலக்காக நகர்ந்தேன்.  தனக்கு வேலை இருப்பதால் இந்த தேசிய விருது விழாவிற்கு வர முடியாது என்று நான் சொல்வது போலேயே பலர் கூறினர், என் மகள் உட்பட,  30 வருடத்தை திரும்பிப் பார்த்தால் இசை மட்டுமே நிறைந்திருந்த வாழ்க்கை முதன்முறையாக கொஞ்சம் வெறுமையாய் தெரிந்தது....

வன்முறை

அவள் கண்களில் இன்று நான் பார்த்தேன், ஓரிரு முறை பள்ளியிலும் அக்கம் பக்கத்திலேயும் சொன்ன போது சிறு பிள்ளை தானே என்று எதார்த்தமாக விட்டு விட்ட நான் இன்று நேரிலேயே பார்த்த போதே உணர்ந்தேன், வெளியில்  வெறும் வன்மமும் வெறியுமாய் தெரியும் அவளது அந்த  கோபத்திற்கு கீழே ஆறாத ரணமும் வலியும் நிறைய இருக்க வேண்டும். தந்தை இல்லாதவளாய் வளரக்கூடாது என்று அவளுக்காகவே உடலாலும் மனதாலும் அவர் கொடுத்த காயங்களை இத்தனை நாள் பொறுத்து கொண்டிருந்தது தவறென்று தோன்றுகிறது, ஒன்று இன்றோடு இது நிற்க வேண்டும் இல்லையேல் அம்மாவின் முழு அன்போடு மட்டும் அவள் வளரட்டும், இன்று அவரிடம் இது பற்றி பேச, இல்லை,  வாதிட எனக்கு பயமில்லை...

ஆட்டோகிராப்


6 வயதில் நான் - பெருசாகி சேகர் சார் தான் கல்யாணம் பண்ணிப்பேன்,
14 வயதில் நான் - என்னவோ தெரிலடி, அந்த சந்த்ரு பக்கத்துல இருந்தா உள்ளுக்குள்ள வயலின் வாசிக்கிற மாதிரியே ஒரு ஃபீல், 20 வயதில் நான் - அவினாஷ் கூட எனக்கிருக்குறது வெறும் பிரன்ட்ஷிப் மாதிரி தெரியல,  25 வயதில் நான் - இல்லடி, க்ரிஷ்ணா என் வாழ்க்கை க்கு செட் ஆக மாட்டான், 29 வயதில் நான் - முடிவு பண்ணிட்டேன், இவன்தான், 59  வயதில் நான்-   குமார் போனப்புறம் கொழந்தைகளே வாழ்க்கைனு இருந்த எனக்கு  இந்த ராம் சார் கூட இருந்தா ரொம்ப ஆறுதலா இருக்கு...


(பி.கு : இத்தன பேரான்னு  என்  கியாரக்டர ஜட்ஜ் பன்றவுங்களுக்கு மட்டும், இதே நான் ஆம்பளையா இருந்தா ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ன்னு ஆட்டோக்ராஃப் சேரன் மாதிரி ஃபீல் பண்ணி இருப்பீங்கள்ள, என்னோடதும் எல்லாம் ரொம்ப அழகான காதல்தான் பாஸ், ஆம்பளைங்களுக்கு மட்டும்தான் காதல் அணுக்கள் வேல செஞ்சா ஒலகத்துல வெறும் ஓரிண சேர்க்கை தான் இருந்திருக்கும்,சுபம்..)

காலம் கடந்து..




நான் வந்த காரியம் சரியாகவே முடிந்தது, இந்த முறை குடிக்க வந்த இடத்தில்  தெரியாமல் அந்த கிருஷ்ணா வை இடிக்கவில்லை, அவன் எனக்கு நண்பனாக மாட்டான், KK விற்கு அறிமுகம் செய்ய மாட்டான், நான் ஹெராயின் கடந்த மாட்டேன், போலிஸிடம் மாட்ட வைத்த அந்த பெண் மாலினியை கொல்ல மாட்டேன், சந்தோசத்தில் அந்த மெஷினில் அமர்ந்து நான் என்னவாகியிருப்பேன் என்று அறியாமலே கிளம்பிய நேரத்துக்கே திரும்பி, அந்த மெஷினின்  அதிர்வுகள் தாண்டி இன்றைக்கு வந்தால்,  ஆபிஸ் நேரம் ஆகிடிச்சு, அவசர அவசரமா கிளம்ப வெளியில் ஹாரன் சத்தம்,. சொல்லவில்லையே, அவள் தைரியமான பெண், யாரோ அவளை கொலை செய்ய வர நான் அவளை காப்பாற்ற அன்றிலிருந்து தொடங்கியது,  'வந்துட்டேன் மாலினி' , லேட்டா போனா அவ கோபப்படுவா, பை பை...

ஹீரோ



' சார் நீங்களா!!  நல்ல வேளை யாரும் பாக்கல, அடி பட்டவனும் மயக்கத்துல தான் இருக்கான், இங்க பக்கத்துல தியேட்டர் ல படம் பாத்துட்டு வந்தவனா இருப்பான், யாரும் வர்ரதுக்கு முன்னாடி நீங்க எடத்த விட்டு கெளம்புங்க', அவசரமாய் வண்டியில் இருந்த பத்தாயிரத்தை அவன் கையில் அழுத்திவிட்டு, பக்கத்தில் இருந்த அந்த தியேட்டர் வழியாக வண்டியை விட்டேன், எதிர்பார்த்த படி என் படம் தான், அத்தனை பெரிய கட் அவுட்டில் மாலை மரியாதையுடன் கம்பீரமாய் நான், கீழே   டைட்டிலுக்கு பூசணிக்காய் வைத்து சுற்றிக் கொண்டிருந்தனர் ரசிகர்கள், சூட வெளிச்சத்தில் ஜொலித்தது 'நாளைய தலைவன்'.....

இதுவும் காதலே

'அப்பா, உங்களுக்கு புரிலயா!! உங்கள கட்டாயபடுத்தி ஒரு ஆம்பளய கல்யாணம் பண்ணி வச்சிருந்தா ஒங்களுக்கு எவ்வளவு அருவருப்பா இருந்திருக்கும், உங்க கட்டாயத்துக்காக ஒரு பொண்ண கல்யாணம் பண்ணா எனக்கு அப்படிதான் இருக்கும், நான் இப்டிதான் பொறந்திருக்கேன், நான் பண்ண நெனைக்கிறது இயற்கைக்கு எதிரானது இல்ல, நீங்க பண்ண நெனைக்கிறது தான்', இடது கை ல எழுதுற குழந்தைய மனுஷங்க அடிச்சு மாத்தின காலமும் இருக்கு, இதையும் புரிஞ்சிக்கிற காலம் வரும் என்ற நம்பிக்கையோடு வீட்டை விட்டு வெளியேறினேன்..


நினைவில் நீ




'சாரிங்க, உங்கள டெய்லி இங்க பாக்குறேன், கண்ல எப்பவும் தாங்க முடியாத பாரம் தெரிது,  கூட யாரும் இருக்க மாதிரி தெரியல, உங்களுக்கு ஓ.கே ன்னா  ஒரு ஃப்ரண்டா நெனச்சு என்கிட்ட ஷேர் பண்ணலாம், இல்லைனாலும் ப்லீஸ், தைரியமா இருங்க, எல்லாம் சரி ஆகிடும்', யாரென்றே தெரியாத ஒருவருக்காக லேசாக கண்ணோரம் பணிக்கும் அந்த மனது, நான் உயிராக நேசித்த அந்த மனது,  தவறிய நினைவுகளை நிச்சயம் ஒரு நாள் பெறும் என்ற நம்பிக்கையோடு , நகர்ந்த அவனை நிறுத்தினேன், 'ஒரு காஃபி குடிச்சிட்டே பேசலாமா?'....

மறு மகனே

அப்பா அம்மா வ பையனும் மருமகளுந்தான் பாத்துகனுமா, பொண்ணும் மாப்பிள்ளையும் பாத்துக்க கூடாதா, ஒங்க பொண்ணு வீட்லயும் கொஞ்ச நாள் இருங்க', கோபத்தில் வெடித்து பிறகு கொஞ்சம்  தனிந்த குரலில் 'என் அப்பா அம்மாவ பாத்துக்குற மாதிரி உங்கள
 பாத்துக்குற பொறுப்பும் எனக்கு இருக்கு, வாங்க மாமா' என்று சொன்னவனின் கைகள் பற்றினேன், 'மறு மகனே'..

காருண்யம்



மலேசியா ல மாட்டிக் கிட்ட என் தம்பிய எப்டி கூப்டு வர்ரதுன்னு முழிச்சிட்டு, இப்பதான், ஜனங்க உதவனும்னு வீடியோ போட்டு இருக்கேன், இந்த நேரத்துல, சும்மாதான இருக்குன்னு , இங்க பொழப்பு தேடி வந்த ஊர் பேர் சாதி எதுவும் தெரியாதவனுக்கெல்லாம் எங்க மண்டபத்துல எடம் கேட்டா, அதுவும் சும்மா கேட்டா , எங்கள பாத்தா எப்டி தெரியுது!!!

சைக்கிள்



'எடுத்த அடைக்குது, வித்துட்டேன்' என்ற மகனிடம் எப்படி சொல்வது, அவன் விற்றது என் வாழ்வெல்லாம் என்னுடன் சுற்றி சுற்றி வந்த இரண்டு சக்கர நினைவுகளை என்று..

கொலைப்பக்கம்


'ஆறு மாசு உழைப்பு வீணா போல, நீ வாடி  Luvlygirl செல்லம்',  மணதுக்குள் விசிலடித்துக் கொண்டே ரகசிய கேமராக்களை படுக்கை அறையில் வழக்கம்போல அவன் சரி பார்த்து கொண்டிருந்த அதே நேரம், வேறொரு இடத்தில் , ' சார், செத்து போன எல்லாருக்கும் இருக்க காமனாலிட்டி womenising,  இன்டர்நெட் ல...'


துணை

 'நான் இல்லேன்னா நீ இருக்க மாட்டியா, சும்மா கத அடிக்காத, வேற பொண்ணோட நல்லாவே இருப்ப', சொன்ன மகராசி போய் சேந்து ஆறு வருஷமாச்சு, அவ சொன்ன மாதிரி நல்லா தான் இருக்கேன் இவளோட,அய்யய்யோ, ஜியாமெட்ரி பாக்ஸ் தேடனும், தோச ஊத்தனும், யூனிபார்ம் எடுத்து வைக்கனும், வேல நெறைய இருக்கு, வரேன், 'கண்ணம்மா, நேரம் ஆகிடுச்சு, சீக்கிரம் குளிச்சிட்டு வா'...


தராசு



'ஏன்டா, நம்பி வேலைக்கு வச்ச பெரியவர் வீட்லயே திருடுவியா',  கன்னத்தின் தோல் பிய்ந்து தொங்கும் அளவிற்கு அறைந்ததில் பெருமை கொண்ட கைகள், 1000 கோடி ஊழல் வழக்கில் சிக்காமல் இருக்கும் பெரியவருக்கு சல்யூட் அடிக்கும் போதும் அதே அளவு பெருமை கொண்டது....

விடியல் இரவு



'ஒவ்வொரு விடியலும் புது தொடக்கமே, காலை வணக்கம்', படிக்கும் போதே தன்னால் கண்கள் மூட தொடங்கின, நைட் ஷிப்ட் வேலை செய்த அயர்ச்சி.....

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...