சனி, 27 ஜூன், 2020

நகரமாக்கல்


சொந்த ஊருக்கு போவது என்பது ஒரு விவரிக்க முடியாத அனுபவம்,
 பிறந்த குழந்தையின் குட்டி குட்டி விரல்களை பற்றும் போது ஈரமும் மிதவெப்பமும் கலந்து ஒரு உணர்வு கிடைக்குமே, மொழிகள் அற்றுப் போகும் அனுபவம், அது போல.. ஒவ்வொரு ஊரின் எல்லைக்கும் ஒரு தனி வாசம் உண்டு, காற்றின் வெப்பம் கொண்டே ஊர் சொல்பவர் கூட உண்டு,  ஊரின் சில அடையாளங்கள்  காலத்தை பின்னால் நகரச் செய்து பால்ய காற்றை மீண்டும் ஒரு முறை நுகர தருகின்றன,  மனோகரன் பால் கடையின் கல்கண்டு பால், பாலத்தின் கீழ் பேரே இல்லாத தள்ளுவண்டி கடை பஜ்ஜி, முறுக்குக்கடை பாட்டி, இவையெல்லாம் வெறும் வணிகம் அல்ல,நினைவுப் படுகைகளில் ஊரின் அடையாளங்களை பாதுகாக்கும்  சேகரங்கள், ஆசிட் ரெஃப்லெக்ஸ் என்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட நண்பனுக்கு தள்ளுவண்டி முட்டை போண்டா ஒன்றும் செய்யாதது அமெரிக்க மருத்துவர்களுக்கு ஆச்சரியம் தந்திருக்கலாம், தாய்ப்பால் மணம் ஞாபகமில்லை, ஆனால் மனோகர் பால்கடை ரோஸ் மில்க்  சுவை நாவின் அடிநாளங்களில் என்றும்  அப்படியே உறைந்து கிடக்கும், முறுக்கு பாட்டி அந்த காலத்து சிங்கிள் வுமன், தனிக்கட்டை, அவள் சரித்திரம் யாருக்கும் தெரியாது, ஆனால் எங்கள் எல்லார் சரித்திரத்திலும் அவளும் அவளுடைய வசவும் கண்டிப்பாக நிலைத்து இருக்கும், கல்லூரிக்காக ஊர் விட்டு போன காலத்தில் இருந்தே திரும்ப வரும் ஒவ்வொரு முறையும் மறைந்து போன என் வேர்களை இங்கே எல்லாம் வந்து தூசு தட்டிக் கொள்வது வழக்கமாகி இருந்தது, ஒன்றரை வருடம் கழித்து அதே ஆவலுடன் இன்றும் கடைவீதியில் நுழைந்தேன்..பூட்டிக்கிடந்த முறுக்கு பாட்டியின் கடை, கூட்டம் இல்லாத  மனோகர் பால் கடை, புதிதாய் முளைத்த இரண்டு சூப்பர் மார்க்கெட்கள் என்று கடைவீதி வேறு முகமாய்  தெரிந்தது.  சூப்பர் மார்க்கெட் உள்ளே பாக்கெட் செய்யப்பட்ட பல வகை நொறுக்குத்தீணிகள், ப்ளாஸ்டிக் பாட்டில்களில்  ரோஸ்மில்க் , இன்னும் என்னென்னவோ இருந்தன. ஒரு முறுக்கு பாக்கெட் வாங்கி அதன் பிசுபிசுத்த உறையை கிழித்து நுகர்ந்து பார்த்தேன், பாட்டியின் வாசமில்லா அந்த பாக்கெட் முறுக்கு பாட்டியின் கடையோடு ஊரின் அடையாளங்களையும் சத்தமில்லாமல் மாற்றிக்கொண்டிருந்தது...


கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...